Published:Updated:

கொரோனா தாக்கம்... சிட்டியை விட்டு சிறு நகரங்களில் வீடு கட்டும் இளைஞர்கள்!

கடன் வாங்கிக் கட்டுவது சரியா..? - R E A L E S T A T E

பிரீமியம் ஸ்டோரி

முன்பெல்லாம் சொந்த வீடுகளை, வேலை செய்யும் சென்னை, பெங்களூரு மாதிரியான பெரு நகரங் களில் வாங்கிவந்த மக்கள், தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வீட்டுக் கடன் மூலம் சொந்த வீடு கட்டி குடியேறத் தொடங்கியிருக்கிறார்கள் என வங்கிக் கடன் ஆய்வு நிறுவனமான சி.ஆர்.ஐ.எஃப் (CRIF) தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம், ஊரடங்கு, வீட்டிலிருந்தே பணி செய்வது மற்றும் சுற்றுச்சூழலியல் மாற்றம் போன்ற பல்வேறு காரணங் களுக்காக மெட்ரோ சிட்டிகளிலிருந்து, நகரங்களுக்கு இளைஞர்கள் குடியேறுவது ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதன் உண்மை நிலையை அறியவும், நகர் மற்றும் கிராமப் புறங்களில் வீடு வாங்கும் போக்கு தற்போது எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் மற்றும் நகர்மற்றும் கிராமப்புறங்களில் வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்தும் வங்கித்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

வீட்டுக் கடன் கொடுப்பது அதிகரித்துள்ளது...

வீட்டுக் கடன் வழங்கும் முன்னணித் தனியார் வங்கி அதிகாரி யான மணியன் கலியமூர்த்தியுடன் இது குறித்து முதலில் பேசினோம். “சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்டிவிட வேண்டும் என்கிற கனவு மக்களுக்கு என்றைக்குமே இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாக வீட்டுக் கடன் வாங்கி, வீடு வாங்குகிறவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கு, அனைவருக்கும் சொந்த வீடு அவசியம் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக, இதுவரை சொந்த வீடு இல்லாதவர்கள் வீடு வாங்க முயற்சி செய்கிறார்கள்; சிலர் வீட்டைச் சொந்த மாக்கியிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டின் இரண்டாம் பாதியில், குறிப்பாக அக்டோபர் முதல் நடப்பு ஆண்டின் மார்ச் மாதம் வரையிலும் வீட்டுக் கடன் கேட்டு வங்கிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக, ஐ.டி துறை சார்ந்த இளைஞர்களுக்கு மெட்ரோ சிட்டிகளிலிருந்து, சொந்த ஊருக்குச் சென்று ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் வேலை பார்க்கும் சூழ்நிலை உருவானதால், அவர்களின் வீடு வாங்கும் அல்லது கட்டும் கனவு சிறுநகரங்களில் நிறைவேறி இருக்கிறது.

தற்போதும் இதே நிலை தொடர்கிறது. மேலும், பெருநகரங்களில் இருக்கும் வீடுகளின் விலையைவிட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை குறைவு; அல்லது கட்டுமானத்துக்கு ஆகும் செலவும் குறைவாகவே உள்ளது. இதனால், பெரும்பாலானவர்களின் தற்போதைய சாய்ஸ் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களும் அதை ஒட்டியுள்ள கிராமங் களுமாகத்தான் இருக்கிறது.

கொரோனா தாக்கம்... சிட்டியை விட்டு சிறு நகரங்களில் வீடு கட்டும் இளைஞர்கள்!

வீட்டுக் கடன் வட்டிக் குறைவு...

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சொந்தக் காசில் வீடு வாங்குபவர் களைவிட, வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். இந்தப் போக்கு நல்லதுதான். வங்கிக்கு வருமானம் கிடைக்கும் என்பதற்காக நான் இதைச் சொல்ல வில்லை. வங்கித்துறை வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்திலும் அதிகபட்சம் 7 - 8 சதவிகிதத் தில் வீட்டுக் கடனை வாங்கிவிட முடியும். இந்த வட்டி விகிதம் சில ஆண்டுகளுக்கு முன்பு 12 - 15% வரை இருந்தது குறிப்பிடத் தக்கது’’ என்றவர், சொந்த ஊரில் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கும்போது கவனத்தில் வைத்திருக்க வேண்டிய விஷயங் கள் பற்றியும் சொன்னார்.

மணியன் கலியமூர்த்தி
மணியன் கலியமூர்த்தி

‘‘வீட்டுக் கடன் வாங்கி சொந்த ஊர்களில் வீடு வாங்க நினைப் பவர்கள், அங்குள்ள நிலம் மற்றும் கட்டப்பட்ட வீடுகளின் விவரங்கள் மற்றும் அதுசார்ந்த ஆவணங் களைத் தெளிவாக வைத்திருப்பது முக்கியம். அப்போது தான் வங்கிகள் எளிதாகக் கடன் கொடுக்கும்.

வங்கிகளை கடனுக்காக அணுகும் முன், இதற்கான முன்னேற் பாடுகளைச் செய்துகொள்வது நல்லது. அதே போல, பல ஆண்டு களுக்கு முன்பு வாங்கி வைத்த நிலத்தில் வீடு கட்டுபவர்கள், அந்த நிலம் சார்ந்த பட்டா, சிட்டா, நில வரி, அப்ரூவ்டு சர்டிஃபிகேட் போன்ற விஷயங் களையும் முன்பே தயார் செய்து வைத்திருப்பது அவசியம்” என்றார் தெளிவாக.

ஆர்.குமார்
ஆர்.குமார்

கடன் மூலம் வீடு வாங்குவது புத்திசாலித்தனம்...

ரியல் எஸ்டேட் நிறுவனமான நவீன்ஸ் குழுமத்தின் நிறுவனர் ஆர்.குமாரிடம் இது குறித்துப் பேசினோம். “சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக ஜி.எஸ்.டி மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களாக ஏழு ஆண்டுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் துறை தத்தளித்து வருகிறது. கொரோனா காரண மாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதாலும், மக்களிடையே நிதி நெருக்கடி ஏற்பட்டதாலும் வீடு விற்பனை முடங்கியது.தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்த பின் இயல்பு நிலை திரும்பி, வீடு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிரான்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்திய நகரங்களில் வீடு விற்பனை 44% வளர்ச்சி கண்டுள்ளது.

தற்போது நிலவும் அச்சம் காரண மாகவும், ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையாலும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்குப் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் காரணமாக அங்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள் கிறார்கள். இது நல்ல விஷயம்தான். இருப்பினும், கொரோனா தொற்று இன்று இருப்பது போலவே என்றைக்கும் இருக்காது. தடுப்பூசி செலுத்துவது அதிகரித்திருக்கிறது. கொரோனாவிலிருந்து மீண்டு வருவதற்கான அரசின் நடவடிக்கை கள் வேகமெடுத்திருக்கின்றன. நாம் அனைவரும் இந்த அச்சமூட்டும் சூழ்நிலையைத் தைரியமாக எதிர்கொண்டு சீக்கிரமாகவே வெற்றி காண்போம். எல்லாம் சரியான பிறகு, மெட்ரோ சிட்டிகளை நோக்கி மக்கள் மீண்டும் வரவே செய்வார்கள்.

அதற்காக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சொத்துகளை வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. வரலாறு காணாத வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் சரிவால் உண்டாகியிருக்கும் வீடுகளின் விலை வீழ்ச்சி போன்ற காரணிகளைப் பயன்படுத்திக் கொண்டு, சொந்த ஊரில் அல்லது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் நகரங்களில் வீடு வாங்குவதைவிட புத்திசாலித்தனம் வேறெதுவுமில்லை. ஆனால், கையில் இருக்கும் சேமிப்புப் பணத்தைக் கொண்டு, சொந்த ஊர்களில் வீடு வாங்கும் தவற்றை செய்யாதீர்கள். குறைவான வீட்டுக் கடன் வட்டி விகிதம் மற்றும் குறைவான ரியல் எஸ்டேட் விலை மீண்டும் எப்போது கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே, வேண்டும் என்கிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார் அவர்.

இன்னும் சிலர், நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறி புறநகர்களில் வீடு கட்டி செட்டில் ஆகும் முயற்சி யையும் மேற்கொண்டு வருகிறார்கள். இதன்மூலம் கொரோனா நோய்த் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிவதுடன், வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள மெட்ரோ சிட்டிகளில் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் முடியும். எதிர்காலத்தில் கொரோனா நோய் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் அலுவலகத்துக்குச் செல்லும் நிலை உருவானால், புறநகரில் இருந்து எளிதாக வந்து சென்றுவிட முடியும் என நினைக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் வளர்ச்சி காணுமா..?

தமிழகம் முழுக்கவே ரியல் எஸ்டேட் கடந்த சில ஆண்டுகளாக மந்தகதியில்தான் இருக்கிறது. சில பகுதிகளில் மட்டும் மனைகளின் விலை உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலையைவிட கொஞ்ச மாகவே உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் விலை உயருமா என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உருவாகியுள்ளது.

மேலும், சிமென்ட், ஜல்லி, ஸ்டீல், மணல் மாதிரியான கட்டுமானப் பொருள்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்கு கட்டுமானச் செலவு கணிசமாக அதிகரித்திருக்கிறது. கட்டி முடித்த வீட்டை வாங்குபவர்கள் அதிக விலை கொடுத்து வீடுகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள். எனவே, தற்போது கிடைத் துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்வதே சரி எனப் பலரும் சொல்கின்றனர்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது!

முதலீட்டு ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பனுடன் இது குறித்துப் பேசினோம். “பல ஆண்டுகளாக, மக்கள் நகரம் மற்றும் தங்களின் கிராமங்களை விட்டு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி என மெட்ரோ சிட்டிகளுக்கு வேலைக்காகவும், வியாபார நோக்கத்துக்காகவும் படையெடுத்தனர். சொத்துகளை உருவாக்கிக்கொண்டு, அங்கேயே தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

ஆனால், தற்போதைய நிலை இதற்குத் தலைகீழாக இருக்கிறது. பெருநகரங்களில் இருந்து மக்கள் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் நகர ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கு சொந்தமாக வீடுகளை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, ‘மில்லியனல்கள்’ என்று சொல்லப்படுகிற 25 முதல் 40 வயது வரை உள்ளவர்களில் வீடு வாங்கும் போக்கு நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களை மையப்படுத்தி இருக்கிறது. இது முற்றிலும் வரவேற்கத்தக்க விஷயம்.

கொரோனா அச்சமூட்டக்கூடிய தீங்குகளை அரங்கேற்றி வந்தாலும், எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மை விளைவிக்கக்கூடிய பல விஷயங்களையும் கூடவே செய்துவருகிறது. அதில் இந்த இடம்பெயர்தலும் ஒன்று. சென்னை, மும்பை மாதிரியான மெட்ரோ சிட்டிகளில் மட்டுமே இயங்கி வந்த அனைத்துத்துறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நடவடிக்கைகள், இந்த ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கலாசாரம் மூலம் பரவலாக்கப்படும். இது நகர் மற்றும் கிராமப்புறங்களில் பொருளாதாரத்தை, உள்கட்டமைப்பை, அங்கிருக்கும் வசதிவாய்ப்புகளை நிச்சயமாக அதிகப்படுத்தும். உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும்.

கிராமப்புற மற்றும் நகர்புற வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இதற்கு சில சலுகைகளை வழங்குவது நல்லது. சொத்து பத்திரப்பதிவு விஷயங்களுக்காக செலவினங்கள் தற்போதைய நிலையில் கூடுதல் சுமை மக்களுக்கு உள்ளது. இதற்கும் மத்திய, மாநில அரசாங்கங்கள் நல்ல தீர்வை விரைவில் காண வேண்டும். மேலும், கிராம மற்றும் நகர்புறங்களுக்கான மின்சார இணைப்பு, சுகாதாரக் கட்டமைப்பு, சாலை வசதி போன்றவற்றையும் முறையாகச் செய்து கொடுக்கும்போது வளர்ச்சியானது ஓரிடத்தில் மட்டும் குவியாமல் பரந்துபட்டு இருக்கும். இதனால் அரசுக்கும் மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு