பிரீமியம் ஸ்டோரி

ஜி.கணேஷ், கட்டடவியல் வல்லுநர், ஆர்.ஜி அசோசியேட்ஸ், கோயம்புத்தூர்.

சொந்த வீடு என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் கனவாக இருக்கிறது. நீங்களே பொருள்களை வாங்கித் தந்து வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை வாங்குவதாக இருந்தாலும் சரி, அதில் அரசின் விதிமுறைகள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்பட்டு கட்டப்பட்டுள்ளதா என்பதை அனுபவம் வாய்ந்த பொறியாளர் ஒருவரை நியமித்து வாங்கினால்தான், எதிர்காலத்தில் பிரச்னை வராமல் பாதுகாப்பாக இருக்கும். அல்லது கட்டடப் பொறியாளர் கட்டிய வீட்டில் அரசின் விதிமுறைகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவதே சிறந்தது.

ஜி.கணேஷ், 
கட்டடவியல் வல்லுநர்,
ஆர்.ஜி அசோசியேட்ஸ், கோயம்புத்தூர்.
ஜி.கணேஷ், கட்டடவியல் வல்லுநர், ஆர்.ஜி அசோசியேட்ஸ், கோயம்புத்தூர்.

ஏனென்றால், தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட TNCBR 2019 (Tamil Nadu Combined Building Rules 2019) கட்டடம் கட்ட கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை களைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டடமும் கட்டி முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமே பொறியாளரால் கட்டட நிறைவுச் சான்றிதழ் (complete certificate) வழங்க முடியும். மேலும், கட்டடத்துக்கு மின்சார இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, சொத்து வரி விதிப்பு செய்ய இயலும். எனவே, இனிவரும் காலங்களில் கட்டடம் கட்டத் திட்டமிடும்போதும், மனை வாங்கும் முன்பும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட சட்டங்கள் 2019 பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டியது வீட்டின் உரிமையாளரின் கடமையாகும்.

வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!

எங்கு அனுமதி வாங்க வேண்டும்?

கட்டடம் கட்ட வரைபட அனுமதி வாங்க மாநகராட்சியிலோ, உள்ளூர்த் திட்ட குழுமத்திலோ வரைபடம் வரைய அனுமதி பெற்ற பொறியாளர்களை அணுகுவது நல்லது.

Registered Engineer (RE), Registered construction Engineer(RCE), Registered structural Engineer (RSE), Registered geotechnical engineer(RGTE) எனப் பதிவு செய்யப்பட்ட பொறியாளர்களே வரைபட அனுமதிக்கு கையெழுத்திட முடியும். அவர்களின் மூலம் வரைபட அனுமதி பெற்று மேற்கூறிய வர்களின் மேற்பார்வையிலேயே வீடு, கட்டடம் கட்டுவதால் மட்டுமே கட்டட நிறைவுச் சான்றிதழ் பெற்று பின்னர் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சொத்து வரி நிர்ணயம் ஆகியவை பெற முடியும்.

வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!

வீடு கட்டும்போது விட வேண்டிய இடங்கள்...

உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்ற பிளானில் உள்ளபடி, சதுர அடிப் பரப்பு, கட்டட உயரம், பக்கத் திறவிடம் ஆகியவற்றை மாற்றமின்றிக் கட்டுவதுதான் நல்லது. அதைவிடக் கூடுதல் சதுர அடியில் வீடு கட்டுவது, மாடித் தளங்களின் எண்ணிக்கை கூடுதலாகக் கட்டுவது, கட்டடத்தைச் சுற்றி விடப்படும் பக்கத் திறவிடத்தைக் குறைப்பது போன்றவை குற்றமாகும்.

அணுகுசாலையின் அகலத்தைப் பொறுத்து பக்கத்திறவிடம் விட வேண்டும். அல்லது கட்டடத்தின் உயரத்துக்கு ஏற்ப பக்கத்திறவிடம் விடப்பட வேண்டும். நமது மனை அமைந்துள்ள இடம் தொடர் கட்டடம் இருக்கும் பகுதி, பொருளாதாரத்தில் நலிந்த பகுதி, மற்ற பகுதிகள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப கட்டடங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மனையின் அளவு 1,000 சதுர அடி எனில், 2000 சதுர அடிக்கு மட்டுமே வீடு / கட்டடம் கட்ட முடியும். இதைத் தரை இடக்குறியீடு (F.S.I -Floor Space Index) எனக் குறிப்பிடுகிறார்கள்.

18.30 மீட்டர் வரை உயரம் கொண்ட கட்டடம் ‘உயரம் குறைவான கட்டடம்’ (Non - high rise building) ஆகும். அதற்கு மேல் உயரம் உள்ள கட்டடங்கள் ‘உயரமான கட்டடம்’ (High Rise Building) வகையைச் சார்ந்தது. அதாவது, 18.30 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டுபவை என்பதாகும்.

மேற்கூறிய TNCBR கட்டட விதிமுறைகள், துணை விதிமுறை களாகச் சில திருத்தங்கள் செய்து அரசு ஆண்டு எண் 16, 31.01.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தமிழ்நாடு அரசு நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணையதளத்தில் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என எந்த இடத்தில் வீடு அல்லது வணிக வளாகம் அல்லது கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் மேற்கூறிய கட்டட விதிமுறைகள் 100% பின்பற்றியே வரைபட அனுமதி பெறமுடியும்.

அதேபோல், வரைபட அனுமதி பெற்றபடியே கட்டடம் கட்டுவது ஒவ்வொருவரின் கடமையாகும். விதிமுறையை மீறி கட்டடம் கட்டுவதை அரசுத் துறையினரும், அங்கீகாரம் பெற்ற பொறியாளர்களும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சாதாரணக் குடியிருப்பு மட்டும் அல்லாமல், மனைப் பிரிவு (Layout) அமைப்பது, தொழிற்சாலை மனை அமைப்பது, பூங்கா/ வணிக மனைப் பிரிவு அமைப்பது, சிறப்புப் பொருளாதார மண்டல மனைப் பிரிவு அமைப்பது, சிறப்பு மற்றும் ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழிற் சாலைகள் மனைப்பிரிவு அமைப்பது, திறந்தவெளி இடம் மற்றும் பொழுதுபோக்கு பயன் பாட்டு இடம் அமைப்பது, விவசாயப் பணிக்கான அமைவிடம் அமைப்பது என அனைத்து வகை யிலான மனைப் பிரிவு அமைப் பதற்கான சட்ட விதிமுறைகள் இந்த TNCBR 2019-ல் இடம் பெற்றுள்ளன.

வரைபடம்  1 
எஃப்.எஸ்.ஐ  தரை இட குறியீடு 2.0 ஆகும். 40 அடி அணுகுசாலைக்கு பக்கத் திறவிடம் அமையப் பெறுவது என 2,400 சதுர அடி மனையில் 4,800 சதுர அடி கட்டடம் கட்டலாம். 

வரைப் படம் 2  
இது ஒவ்வொரு பயன்பாட்டு பகுதிக்கும் மாறுபடும். தரைத்தளம் முழுவதும் வாகனம் நிறுத்துமிடம் அமையப் பெற்றால் அந்த தளம் சதுரடி எஃப்.எஃஸ்.ஐ கணக்கில் சேராது;
வரைபடம் 1 எஃப்.எஸ்.ஐ தரை இட குறியீடு 2.0 ஆகும். 40 அடி அணுகுசாலைக்கு பக்கத் திறவிடம் அமையப் பெறுவது என 2,400 சதுர அடி மனையில் 4,800 சதுர அடி கட்டடம் கட்டலாம். வரைப் படம் 2 இது ஒவ்வொரு பயன்பாட்டு பகுதிக்கும் மாறுபடும். தரைத்தளம் முழுவதும் வாகனம் நிறுத்துமிடம் அமையப் பெற்றால் அந்த தளம் சதுரடி எஃப்.எஃஸ்.ஐ கணக்கில் சேராது;

எப்படி வீடு கட்டலாம்?

எடுத்துக்காட்டாக, ஒரு கிரவுண்ட் மனையில் (5.5 சென்ட்) 40அடி அணுகுசாலையில் அமைந்திருந்தால், அதில் எப்படி வீடு கட்டலாம் என்று பார்ப்போம்.

முன்பக்கத் திறவிடம் 3 மீட்டர் (10 அடி) ஆகும் பின் பக்கத் திறவிடம் 1.50 மீட்டர் (5 அடி) ஆகும். பக்கத்திறவிடம் இருபுறமும் 1.5 மீட்டர் விடப்பட வேண்டும் எனில், பக்கத் திறவிடம் விட்டது போக, ஒரு தளம் 1,350 சதுர அடிக்குக் கட்டலாம் எனில், மூன்று தளங்கள் 1,350 சதுர அடியிலும் மீதி ஒரு தளம் 750 சதுர அடியிலும் என 4,800 சதுர அடிக்கு கட்டடம் கட்ட முடியும். (பார்க்க அட்டவணை 1 மற்றும் வரைபடம் 1)அதற்கான வரைபட அனுமதி உரிய உள்ளாட்சி அமைப்பிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நான்காம் தளத்துக்கு அதிகமான உயரம் கட்டுவதோ,4,800 சதுர அடிக்கு கூடுதலாகக் கட்டுவதோ, பக்கத் திறவிடம் 1.5 மீட்டருக்கு குறைவாகவோ முன்பக்கத்திறவிடம் 3 மீட்டருக்கு குறைவாகவோ விட்டு கட்டடம் கட்டுவதோ குற்றமாகும்.

கட்டடம் கட்ட பதிவுபெற்ற பொறியாளரை அணுகி னால் மட்டுமே இதுபோன்ற கட்டட அனுமதி வரைபடம் பெற முடியும். அனுமதி பெற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து கட்டடம் கட்டுவதே எதிர்காலத்தில் வரும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து கட்டடத்தைக் காக்க முடியும்.

TNCBR 2019 மற்றும் அதன் மாற்றியமைக்கப்பட்ட துணை விதிமுறைகளை ஒவ்வொரு சாமானியரும் தெரிந்துகொள்வது விழிப்புணர்வாகும். கஷ்டப்பட்டுச் சேர்த்த சேமிப்பு பணத்தில் அங்கீகாரம் பெற்ற மனைப் பிரிவிலேயே இடம் வாங்க வேண்டும். வாங்கிய இடத்தில் விதிமுறைகளின்படி, கட்டடம் கட்டப்பட வேண்டும்.

சமீப காலங்களில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு சீல் வைப்பதும், இடிக்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே. எனவே, வீடு கட்டும்முன் உஷாராக இருப்பதே சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு