Published:Updated:

உங்கள் கனவு இல்லத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..!

சொந்த வீடு

பிரீமியம் ஸ்டோரி

நம்மவர்களைப் பொறுத்தவரை, சொந்த வீடு வாங்குவது வாழ்நாள் கனவாக இருக்கிறது. இதர நிதி இலக்குகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட சொந்த வீடு வாங்க அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ‘நான் ஐந்தாண்டுகளுக்கு முன் இவ்வளவு தொகை செலவு செய்து வீடு வாங்கினேன். ஆனால், அதே அளவு தொகையை என் நண்பன் வேறு முதலீடுகளில் போட்டான். அவன் முதலீடு இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனால், வீட்டின் மதிப்பு அந்த அளவுக்கு உயரவில்லையே’ என்பது என்னைச் சந்திக்கும் பல முதலீட்டாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது. வீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.

த.ராஜன் 
நிதி ஆலோசகர், 
Holisticinvestment.in
த.ராஜன் நிதி ஆலோசகர், Holisticinvestment.in

1. எங்கு சொந்த வீடு வாங்க விரும்புகிறீர்கள்?

வீடு வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய காரணி, வீடு அமைந்திருக்கும் இடம் (Location). நீங்கள் எங்கு வசிக்க விரும்புகிறீர்கள், நகரத்துக் குள்ளா, புற நகரிலா அல்லது கிராமப்புறத்திலா என்பதை முடிவு செய்யுங்கள். எதிலெல்லாம் உங்களால் சமரசம் செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.

உதாரணமாக, உங்கள் பிள்ளைகள் உங்கள் புதிய வீட்டுக்கு அருகிலிருக்கும் புகழ்பெற்ற பள்ளிக்கூடத்தில் படிக்கப்போகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதே சமயம், நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் புது வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. உங்கள் புதிய வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவது நிறுவனத்துக்கு உங்கள் வேலையை மாற்ற முடியுமா அல்லது உங்கள் வேலைக்காக அதிக தூரம் பயணிக்கத் தயாரா?

உங்கள் அலுவலகம் நகருக்குள் இருக்கிறது. அதற்கு அருகில் வீடு வாங்குவது என்பது அதிக செலவு வைப்பதாக இருக்கும். மற்றும் அது உங்கள் பட்ஜெட்டுக்குள் வராமல் இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் புறநகர்களில்தான் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடுகளைத்தான் வாங்க முடியும். அப்போது, உங்கள் வீட்டிலிருந்து அலுவலகத் துக்கு பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து வசதி எப்படி இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அடுத்து, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மிகவும் முக்கியமானது. வீட்டின் அருகில் மருத்துவமனைகள், மருந்து விற்பனைக் கடைகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்ற பொதுப் பயன்பாட்டு வசதிகள் இருக்கின்றனவா எனக் கவனிக்கவும். இதனால், எந்த அவசரக் காலத்திலும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.

உங்கள் கனவு இல்லத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..!

2. நீங்கள் வாங்க விரும்பும் வீட்டின் மொத்த விலை, உண்மை விலை தெரியுமா?

நம் அன்றாட வாழ்க்கையில் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. புதிய வீடு வாங்க நீங்கள் செலவிட விரும்பும் தொகை அல்லது எவ்வளவு தொகைக்கு வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக் கவும். வீடு வாங்கும்போது வீட்டின் விலை தவிர்த்து, பத்திரப் பதிவு செலவு, குடிநீர் இணைப்புக் கட்டணம், மின்சார இணைப்புக் கட்டணம் எனப் பல செலவுகள் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்ததுதான் வீட்டுக்கான மொத்த விலை. அதை அறிந்து, அதற்கேற்ப செயல்படுவது மூலம் தேவை இல்லாமல் அதிக வட்டிக்கு தனிநபர் கடன், தங்க நகை அடமானக் கடன் போன்றவற்றை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவது குறையும். வீட்டுக் கடனுக்கான தவணையுடன் இதர கடனுக்கான தவணைகளையும் சேர்த்துக் கட்டும்போது இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

வீடு வாங்குவதால், நீங்கள் இப்போது வைத்திருக்கும் சேமிப்புத் தொகை மற்றும் ஒவ்வொரு மாதமும் நீங்கள் செய்யும் இதர செலவுகள் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கத்தை நீங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும். 15, 20 ஆண்டுகளுக்கு முன், வீட்டு வாடகைக்கும் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைக்குமான வித்தியாசம் குறைவாக இருந்தது. இப்போது, வீட்டு வாடகையைப் போல் சில மடங்குகள் அதிகமாக வீட்டுக் கடன் மாதத் தவணை இருக்கிறது. எனவே, வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும்பட்சத்தில் வேறு சில செலவுகளைக் குறைத்தால் அல்லது தவிர்த்தால் மட்டுமே மாதத் தவணையைச் சரியாகக் கட்ட முடியும்.

வீடு வாங்க பட்ஜெட் போடும்போது உங்கள் வேலை அல்லது சம்பாதிக்கும் திறனைக் கருத்தில்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் வேலை நிரந்தரமானதாகவும், தொடர்ந்து நிலையான வருமானம் வருவதாகவும் இருக்கும்பட்சத்தில் மட்டுமே வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்கு நீங்கள் சீராகச் சம்பாதிக்கவில்லை எனில், வீட்டைக் கடனில் வாங்குவது சரியான செயல் கிடையாது. பொதுவாக, நாம் வீட்டின் விலையை மொத்த விலையாக நினைக்கிறோம். கடன் மூலம் வீடு வாங்கும் போது, வீடு வாங்குவதற்கான முன்பணம் (Down payment), பத்திரப் பதிவு செலவு, தரகர் கட்டணம் எல்லாம் சேர்ந்தது தான் வீட்டின் மொத்த விலை. வீட்டுக் கடன் வாங்கும்போதே மாதத் தவணை எவ்வளவு, எத்தனை ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும் எனத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், நீங்கள் வீடு வாங்கும் விலை அதாவது, நீங்கள் தரும் விலை சரியானதுதானா என அக்கம்பக்கத்தில் விசாரிப்பது நல்லது. காரணம், ரியல் எஸ்டேட் விலையில் வெளிப்படைத் தன்மை சிறிதும் கிடையாது. நீங்கள் சந்தை விலையைவிட மிக அதிக விலை தந்து வாங்கி னால், பின்னால் விற்கும்போது வாங்கிய விலை அளவுக்கு அல்லது அதைவிடக் குறைவான விலைக்கு விற்கும் நிலை ஏற்படும்.

உதாரணமாக, ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன், சென்னை புறநகரில் 4 சென்ட் நிலத்துடன் 500 சதுர அடி வீட்டை (4 சென்ட் விலை 4X4 = ரூ.16 லட்சம், வீடு ரூ.6 லட்சம்) ரூ.22 லட்சத்துக்குத் தரகர் ஒருவர் மூலம் வாங்கினார். ஆனால், அன்றைக்கு அந்தப் பகுதியில் ஒரு சென்ட் மனையின் உண்மை யான சந்தை விலை ரூ.2 லட்சம் மட்டுமே. இப்போதுதான் அதன் விலை ரூ. 4 லட்சமாக அதிகரித் திருக்கிறது. இப்போது அந்த வீட்டை அவரால் ரூ.22 லட்சத்துக்குதான் விற்க முடிந்திருக்கிறது. எனவே, சந்தை விலையைத் தீவிரமாக விசாரித்து, அதன் பின்பே வீட்டை வாங்குவது லாபகரமாக இருக்கும்.

உங்கள் கனவு இல்லத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..!

3. எந்த வகையான வீட்டை வாங்க விரும்புகிறீர்கள்?

சொந்தத் தோட்டம் மற்றும் தனிமையான தனி வீடு, வில்லா வீடுகள் நிச்சயமாக ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும்தான். அதே நேரத்தில், இது போன்ற பண்ணை வீடு, தனி வீட்டில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகம். பராமரிப்பது, பழுது பார்க்கும் பணிகள் உள்ளிட்ட பொறுப்பு களை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார், உங்களுக்கு நிறையவே ஓய்வு நேரம் இருக்கிறது எனில், தோட்டத்துடன்கூடிய தனி வீடு, பண்ணை வீடு, வில்லா வீடு ஓகேதான். இல்லையெனில், அதிக பராமரிப்பு தேவைப்படாத அடுக்குமாடி வீடுதான் ஏற்றதாகும்.

அடுக்குமாடிக் குடியிருப்பு என்கிறபோது, வீட்டைத் தவிர வேறு பகுதிகள் அனைவருக்கும் பொதுப் பயன்பாட்டுக்கானதாக இருக்கும். அடுக்குமாடிக் குடியிருப்பின் பொதுப் பகுதிகளை நிர்வகிக்க வீட்டு உரிமையாளர்கள் சங்கம் இருக்கும். பராமரிப்பு செலவுகளை அனைத்து வீட்டினரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அனுமதி இல்லாமல் உங்கள் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. இந்த விஷயங்களை எல்லாம் மனதில் கொண்டு அடுக்கு மாடி வீட்டைத் தேர்வு செய்வது நல்லது.

செக்லிஸ்ட்டைக் கவனியுங்கள்...

உங்கள் கனவு இல்லத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் சரிபார்ப்புப் பட்டியலில் (Checklist) சேர்க்க வேண்டிய முக்கியமான கேள்விகள்...

1. வீட்டிலிருந்து அலுவலகம், பள்ளிக்கூடம், மருத்துமனை உள்ளிட்டவை அருகில் இருக்கிறதா?

2. இந்த வீட்டை என்னால் அதிக பணக் கஷ்டம் இல்லாமல் வாங்க முடியுமா?

3. எனக்குப் பண்ணை வீடு, வில்லா தேவையா?

4. வில்லா வீட்டை வைத்திருப்பதில் எனக்கு என்ன குறைபாடுகள் உள்ளன?

5. வீடு வாங்கிய பிறகு, பணப் பிரச்னை இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியுமா?

6. பண்ணை வீடு, தனி வீடு எனில், வீடு மற்றும் தோட்டத்தை முறையாகப் பராமரிக்க முடியுமா?

7. வீட்டுப் பராமரிப்புக் கட்டணங்கள் என்னென்ன?

8. வீட்டுக்கடன் தவணையைக் கட்டியபிறகு, வழக்கமான மாதாந்தரச் செலவுகளுக்குப் பணம் ஒதுக்கமுடியுமா?

இந்தக் கேள்விகளை உங்கள் கனவு வீட்டை வாங்கும் முன் ஒன்றுக்கு பத்து முறை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!

கேட்டட் கம்யூனிட்டி வீடுகள்... உஷார், உஷார்!

இப்போதெல்லாம் பிரபல பில்டர்களால் கட்டப்பட்ட வில்லாக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கேட்டட் கம்யூனிட்டிகளாக (gated communities) உள்ளன. இவற்றில், மாதாந்தரப் பராமரிப்புக் கட்டணம் ரூ.3,000 அல்லது ரூ.5,000 என்பது போல் இருக்கும். இதை முன்கூட்டியே கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. இல்லை எனில், கடன் மாதத் தவணையுடன் இந்தச் சுமையும் சேர்ந்துகொள்ளும்.

சில சமயங்களில், ஒட்டுமொத்த கேட்டட் கம்யூனிட்டிஸ் பாதுகாப்பையும் பராமரிக்க நீங்கள் அவ்வப்போது பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் செலவுகளை உங்களால் சமாளிக்க முடியுமா என்பதை வீடு வாங்கும் முன் பலமுறை சிந்தியுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு