பிரீமியம் ஸ்டோரி

சொந்த வீடு அந்தஸ்து என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது. ஒருவரின் நிதித் தேவைகளுக்கு, அதாவது பெரிய மருத்துவச் செலவு, கடனை அடைக்க, மகள் திருமணம், ஊர் மாறிப் போவது உள்ளிட்ட பல காரணங்களுக்கு வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படி விற்கும் சூழ்நிலை வருகிறபோது சில விஷயங்களைச் செய்தால், வீட்டை நல்ல விலைக்கு விற்க முடியும்.

சௌ.சிவகுமார் 
நிறுவனர், 
www.bestservice
realty.in
சௌ.சிவகுமார் நிறுவனர், www.bestservice realty.in

தெளிவான ஆவணங்கள்...

சொத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் தெளிவாக, தொகுப்பாக இருப்பது அவசியம். பல நேரங்களில் சொந்தப் பணத்தைப் போட்டு, வீடு வாங்கியிருப்போம் அல்லது மனை சொந்தமாக இருந்து வீட்டுக் கடன் வாங்கி, வீடு கட்டும்போது முந்தைய உரிமையாளரின் பெயரில் இருக்கும் பட்டாவின் அடிப்படையில் கடன் வாங்கி இருப்போம். 2000-ம் ஆண்டுகளில் இப்படிக் கடன் வழங்கப்பட்டிருக்கின்றன. அப்படி இருக்கும்பட்சத்தில், இப்போது உங்கள் பெயருக்கு பட்டா மாற்றுவது அவசியம். வீட்டை விற்கத் திட்டமிடும்போது, உங்கள் பெயரில் பட்டா வாங்கி வைத்துவிடுவது நல்லது. அப்படி இல்லாமல் கடைசி நேரத்தில் முயற்சி செய்யும்போது தேவை இல்லாமல் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.

வீடு அல்லது மனை ஒருவரிடமிருந்து அப்படியே கைமாறியிருக்கும்பட்சத்தில், பட்டா பெயர் மாற்றினால் போதும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மனை விற்கப்பட்டிருக்கும்பட்சத்தில், சப்-டிவிஷன் பிரித்து பட்டா வாங்கிக்கொள்வது அவசியம்.

இதே போல், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்றவையும் உங்கள் பெயரில் இருப்பது நல்லது. கிரயப் பத்திரம், தாய்ப்பத்திரம், பட்டா, அப்ரூவல் பிளான் தொடங்கி அனைத்து ஆவணங்களையும் ஒரு ஸ்பைரல் பைண்டிங் போட்டு வைத்துக் கொண்டால், எந்த ஆவணமும் காணாமல் போகாது. வீட்டை வாங்க வருபவருக்கு மொத்த ஆவணங்களையும் சுலபமாகக் கொடுத்துவிடலாம். மனை பற்றிய வழக்கறிஞர் கருத்து (Legal opinion) இருந்தால், அதன் நகலையும் வீடு வாங்குபவரிடம் கொடுப்பது மூலம் வீட்டை விரைந்து விற்க முடியும்.

வீடு விற்பனை...
வீடு விற்பனை...

சரியான காரணம் வேண்டும்...

வீட்டை விற்பதற்கான காரணம் சரியாக இருக்க வேண்டும். வீட்டை விற்பதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதை வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரிதான் சொல்ல வேண்டும். இந்தக் காரணத்தை எதேச்சையாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் சொல்லி வைக்க வேண்டும். அப்போதுதான், வீடு வாங்குபவர் விசாரித்தாலும் சிக்கல் வராது.

கட்டண பாக்கி எதுவும் இருக்கக் கூடாது...

மின்சாரக் கட்டணத்தில் பாக்கி எதுவும் வைத்திருக்கக் கூடாது. கெடு தேதி முடிந்ததும் மின் இணைப்பைத் துண்டித்துவிடுவார்கள் என்பதால், அனைவரும் சரியாகக் கட்டிவிடுவோம். பலரும் சொத்து வரியில் பல ஆண்டுகளாகப் பாக்கி வைத்திருப்பார்கள். வீட்டை விற்கும் முடிவை எடுத்தவுடன் சொத்து வரி பாக்கி எதுவும் இருந்தால், அதைக் கட்டி விடவும். இது சொத்து மீதான நம்பத்தன்மையை அதிகரித்து, நல்ல விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அடுக்குமாடிக் குடி யிருப்பாக இருக்கும்பட்சத்தில், பில்டிங் மெயின்டனன்ஸ் சார்ஜ் நிலுவையில் இல்லாமல் சரி செய்து வைக்கவும்.

சொத்து மீது அடமானம், வில்லங்கம் கூடாது...

வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன் இருக்கும் பட்சத்தில் அதைக் கட்டி முடித்து விட்டு, வீட்டை விற்க முயற்சி செய்வது நல்லது. கடன் தொகை அதிகமாக இருக்கிறது; வீட்டை விற்றுத்தான் அதைக் கட்ட வேண்டும் எனில், கூச்சப்படாமல் அந்த விஷயத்தை முன்கூட்டியே வீட்டை வாங்கப் போகிறவரிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.

பழுது நீக்கி வீட்டை பளிச் என்று வையுங்கள்...

பாத்ரூம், கதவு, ஜன்னல், தரை, சுவர், தண்ணீர் செல்லும் குழாய் களில் ஏதாவது பாதிப்பு, பழுது இருந்தால், அவற்றை நீக்கி பளீச் சென்று வையுங்கள். அது வீட்டின் மீதான மதிப்பை கூட்டிக் கொடுக் கும். நீங்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், இந்தச் சின்ன வேலைகளைச் செய்பவர் களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கும். குறைந்த செலவில் இவற்றைச் சரிசெய்துவிட முடியும். பழுதுடன் வீட்டைக் காட்டினால், ‘வெளியில் தெரிந்தே இவ்வளவு குறைபாடுகள் இருக்கிறதே, தெரியாமல் எவ்வளவு இருக்குமோ’ என வீடு வாங்குவதைத் தவிர்க்கலாம். அல்லது விலை குறைத்து கேட்க வாய்ப்புண்டு. தேவைப்பட்டால் வெள்ளை, பெயின்ட் அடித்து வீட்டைக் கூடுதல் அழகாக்கிக் காட்டலாம்.

காலி வீடு: விரைவில் விற்கும்; கூடுதல் விலை கிடைக்கும்..!

வீட்டை விற்கப் போகிறீர்கள் எனில், அந்த வீட்டைக் காலியாக வைத்திருந்தால் நல்ல விலை கிடைக்கக்கூடும். விற்பனைக்கு இருக்கும் வீட்டில் வாடகைதாரர் இருந்தால், வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சரியான விகிதத்தில் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். ஆகவே, நீங்கள் உடனடியாக வீட்டை விற்பனை செய்ய நினைத்தால், காலியாக வீட்டை வைப்பது விற்பனையை அதிகப் படுத்துவதுடன், விலையும் அதிகமாகக் கிடைக்கும்.

வீட்டில் கட்டில், பீரோ இதர பொருள்கள் வீட்டை அடைத்துக் கொண்டு சிறிய வீடாகக் காட்டும். மேலும், வீட்டில் ஆள்கள் இருக்கும்பட்சத்தில், வீட்டை விரிவாகச் சுற்றிப் பார்க்க முடியாது. விற்பனை செய்கிற வீட்டை காலியாக வைத்திருப்பது 80% விற்பனையை அதிகப் படுத்துகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். வீட்டை விற்கும் சூழலில், வீட்டின் உரிமையாளருக்கு வேறு சொந்த வீடு இல்லாதபட்சத்தில், அவர் வாடகை வீட்டுக்கு மாறிக்கொண்டு வீட்டை விற்பது மூலம் கூடுதல் தொகை கிடைக்கக் கூடும்.

வீட்டு விற்பனை முகவர் உதவி..!

வீட்டை விரைவாகவும் நியாயமான விலைக்கும் விற்க இதற்கென இருக்கும் முகவர்களை நாடலாம். அவர்களிடம் அவர்களுக்கான கமிஷன் எவ்வளவு என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டின் விலையை இறுதி செய்யும்போது, நீங்கள் அந்த இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வீடு உண்மையில் என்ன விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு