Published:Updated:

அப்பார்ட்மென்ட் பிரச்னை... `ரெரா’ சட்டம் சொல்வது என்ன?!

தெ.சு.கவுதமன்

அப்பார்ட்மென்டில் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பில்டர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அதன்பின் அவற்றை குடியிருப்போர் சங்கத்தின் வசம் ஒப்படைக்க வேண்டுமென `ரெரா’ சட்டம் தெரிவிக்கிறது.

Apartment
Apartment

கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் கட்டமைப்பே முற்றிலும் மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் விண்ணைமுட்டும் அப்பார்ட்மென்ட்கள் வளர்ந்துவிட்டன. நெருக்கடியான சென்னைக்குள் பணி நிமித்தமாக வசித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தோடு இருப்பவர்களுக்கு அப்பார்ட்மென்ட்கள்தான் வாய்ப்பாக அமைகின்றன. வெறும் பத்து வீடுகளில் தொடங்கி, நூற்றுக்கணக்கான வீடுகளைக் கொண்ட அப்பார்ட்மென்ட்கள் வரை பெருகியுள்ளன. `கேட்டேட் கம்யூனிட்டி' எனப்படும் ஒரு வாழ்க்கை முறையே இந்த அப்பார்ட்மென்ட்களால் உருவாகியுள்ளது.

Apartment
Apartment

அப்பார்ட்மென்ட்களை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களோடு ஒப்பிடலாம். ஒரு வீட்டின் உரிமையாளருக்கு அவரது வீட்டுச்சுவர், பக்கத்து வீட்டுக்காரருக்கும் பொதுச்சுவராக இருக்கும். சுவர் மட்டுமல்ல, தண்ணீர்க்குழாய், மின் இணைப்பு, கழிவுநீர்க்குழாய் என அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் மற்ற வீடுகளோடு இணைந்து செயல்படுபவையாக இருக்கின்றன.

இந்தச் சூழலில் இவற்றில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். இதற்காகவே அப்பார்ட்மென்ட்களில் குடியிருப்போர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன்மூலம் பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. அப்பார்ட்மென்டில் அனைவரும் குடியேறும்வரை பில்டர்களே அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த பில்டர்களுக்கும், குடியிருப்போருக்கும் இடையே தகராறுகள் சமீபகாலமாகப் பெருகிவருகின்றன. அடிதடிச் சண்டையாகி காவல்துறை புகார், கைது வரை நீள்கிறது.

பில்டர்களுக்கும், குடியிருப்போருக்கும் இடையே என்னமாதிரியான பிரச்னைகள் எழக்கூடும் என்பதைப் பார்க்கலாம். பொதுவாக அப்பார்ட்மென்ட் கட்டிமுடித்ததும் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது வரை அனைத்தையும் கட்டுமான நிறுவனமே பார்த்துக்கொள்ளும். அப்பார்ட்மென்டில் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பில்டர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அதன்பின் அவற்றை குடியிருப்போர் சங்கத்தின் வசம் ஒப்படைக்க வேண்டுமென `ரெரா’ சட்டம் தெரிவிக்கிறது.

Apartment
Apartment

அதன்படி பில்டர்கள் ஒரு குழுவின்மூலம் அப்பார்ட்மென்டை நிர்வகிக்கத் தொடங்குகிறார்கள். முதலில் கார்ப்பஸ் என்ற முன்பணம் ஒன்றை அனைத்து வீடுகளுக்கும் வசூலிக்கிறார்கள். அபார்ட்மென்டில் செக்யூரிட்டி, மின் இணைப்பு, குடிநீர், கழிவு நீர்க் குழாய்கள் பராமரிப்பு, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பார்க்கிங் ஏரியா, பூங்கா, மின் தூக்கிப் பயன்பாடு, டிடிஎச் தொலைக்காட்சி இணைப்பு என இவர்களின் சேவை மிக நீளமானது. அனைத்துக்கும் ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி கட்டணம் வசூலித்துவிடுவார்கள். இதில் சிலர், சில வசதிகளை வேண்டாமென ஒப்பந்தத்தின்போது மறுப்பார்கள். ஆனால் அதன்பின்னர் ஒப்பந்தத்தை மீறிப் பயன்படுத்த முனையும்போது பிரச்னை உருவாகிறது.

பராமரிப்புக்கட்டணத்தைச் செலுத்தத் தாமதமாகும்போது மின்தூக்கி போன்ற வசதிகளைப் பயன்படுத்த முடியாதபடி பில்டர் தரப்பில் தடுக்கிறார்கள். அனைத்துக்கும் அக்சஸ் கார்டு சிஸ்டம் வந்துவிட்டதால், இப்படித் தடுப்பது எளிது.

அந்தச் சூழலில் ஏற்கெனவே கொடுத்திருந்த கார்ப்பஸ் தொகையைப் பற்றி எடுத்துக்கூறி, அந்தப் பணம் இருக்கும்போது இந்தத் தாமதத்துக்காக பயன்பாட்டைத் தடுப்பது தவறு என வாதிடுவார்கள். குடியிருப்போர் சங்கங்களில் தேர்தல் நடத்தும்போது தகராறு நடப்பது சகஜமாகிவிட்டது.

அப்பார்ட்மென்ட் உரிமையாளர்கள் வீட்டை வாடகைக்கு விடும்போது ஒப்பந்தங்களை மீறுவதும் உண்டு. குறிப்பாக, சில அப்பார்ட்மென்ட்களில் பேச்சிலர்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது, வணிகப் பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. ஆனால், அவற்றை மீறி வாடகைக்கு விடுகிறார்கள். இதன்காரணமாக குடியிருப்போருக்குள் முரண்பாடுகள் எழுகின்றன. குடிநீருக்கான கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மட்டும் குடிநீர் அளவைக் குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பில்டர்களும் உண்டு. ரெரா சட்டத்துக்குப் புறம்பாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகவும், அப்பார்ட்மென்டின் பொறுப்பை நிர்வகிக்கும் பில்டர்களும் உண்டு. இதனாலும் பிரச்னைகள் எழுகின்றன.

வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ்
வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ்

பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்துவது, வெளியே எடுப்பது, மொட்டை மாடியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பொதுப்பயன்பாடுகளிலும் அடிக்கடி பிரச்னைகள் எழுகின்றன. இந்தப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டோம்.

``அப்பார்ட்மென்டில் குடியிருப்போருக்கு பொறுமை அவசியம். அருகிலுள்ள வீட்டினரோடு இணக்கமான போக்கோடும், புரிந்துணர்வோடும் வசிப்பது அவசியம். சொந்த வீடாக இருப்பதால் அருகருகே வசிப்பவர்களைப் பகைத்துக்கொண்டு வாழ்வது கசப்பானதாக இருக்கும்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்னர், அந்த அப்பார்ட்மென்ட்டில் உங்களுக்கான வசதிகள் குறித்து தெளிவாகக் கேட்டுத்தெரிந்து, உடன்பாடிருந்தால் மட்டுமே கையொப்பமிட வேண்டும். உதாரணத்துக்கு, நீச்சல் குளத்தைப் பயன்படுத்த அனுமதி பெற்றிருந்தால் அதற்கான பயன்பாட்டுக்காலம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்னை வந்தால், அவர்களிடமே எடுத்துக்கூறி புரியவைக்க வேண்டும். நேரடித் தீர்வு கிடைக்காவிட்டால், குடியிருப்போர் சங்கத்தை அணுகலாம். அவர்களின் மூலமாகவும் தீர்க்க முடியாவிட்டால், அந்த அப்பார்ட்மென்டுக்காக இருக்கும் ஆர்பிட்ரேசன் அமைப்பிடம் கொண்டுசெல்ல வேண்டும். அந்த அமைப்பின்மூலம், நீதிமன்றத்துக்குச் செல்லாமலேயே பிரச்னைக்கு உரிய தீர்வைப் பெறலாம். அதிலும் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தில் முறையிடலாம்" என்றார்.

அப்பார்ட்மென்ட்
அப்பார்ட்மென்ட்

அப்பார்ட்மென்ட் என்பது ஒரு கிராமம் போன்றது. அங்கே பலதரப்பட்ட மக்களும் வசிப்பார்கள். பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, மொழி எனப் பல முரண்பாடுகள் இருக்கக்கூடும். எனவே, அங்கே எழக்கூடிய எந்தவொரு பிரச்னையிலும், உடனடியாக முன்முடிவுக்கு வராமல் நிதானமாக செயல்பட வேண்டும்.