Published:Updated:

நிலத்துக்கு அடையாள எண் சாத்தியமா..? சிக்கல்களும் நன்மைகளும்

மனை...
பிரீமியம் ஸ்டோரி
மனை...

L A N D R E G I S T R A T I O N

நிலத்துக்கு அடையாள எண் சாத்தியமா..? சிக்கல்களும் நன்மைகளும்

L A N D R E G I S T R A T I O N

Published:Updated:
மனை...
பிரீமியம் ஸ்டோரி
மனை...

ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் கூடுதல் தலைவர், பதிவுத்துறை.

மத்திய அரசின் சமீபத்திய தகவலின்படி, 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து நிலங்களுக்கும் 14 இலக்கங்கள் கொண்ட அடையாள எண் (நில ஆதார் எண்) வழங்கப்பட்டு இந்த எண் நீதிமன்றம், பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் வங்கிகளின் தகவல்தொடர்பில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.ஆறுமுக 
நயினார், 
வழக்கறிஞர், 
சென்னை 
உயர்நீதிமன்றம், 
முன்னாள் 
கூடுதல் 
தலைவர், 
பதிவுத்துறை.
ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் கூடுதல் தலைவர், பதிவுத்துறை.

இது என்ன திட்டம்..?

இந்த எண்ணானது விருப்ப அடிப்படையில் தனிமனிதர்களின் ஆதார் எண்ணுடனும் இணைக்கப் படும் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இது டிஜிட்டல் இந்தியா நிலப்பதிவேடுகள் நவீனமயமாக்கல் செயல் திட்டத்தின் கீழ் (Digital India Land Records Modernization Programme - DILRMP) 2008-ல் தொடங்கப்பட்டதாகவும் இதன்படி ஏற்கெனவே 10 மாநிலங்களில் தனிப்பட்ட நிலப்பதிவு அடையாள எண் (Unique Land Parcel Identification Number (ULPIN) வழங்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருவ தாகவும் இது 2022 மார்ச் மாதத்துக்குள் இந்தியா முழுமைக்கும் செயலாக்கம் பெறும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் அடிப்படையில் நிலப்பத்திரப்பதிவும் பெருமளவு மாற்றமடையக்கூடும். இதற்குத் தேசிய தனி ஆவணப்பதிவு முறைமை (National Generic Document Registration System - என்.ஜி.டி.ஆர்.எஸ்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்கீழ் தனியார் வசம் உள்ள நிலங்கள், நிலப்பொதிகள், கம்பெனி, டிரஸ்ட், சங்கங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள் மட்டுமன்றி, அரசின் வசம் உள்ள பட்டா நிலங்கள் கணக்கில் சேராத புறம்போக்கு, நத்தம், உள்ளாட்சிகளின் வசம் உள்ள நிலங்கள் அனைத்தும் துணைக்கோள் ஜி.பி.ஆர்.எஸ் மேப்பிங் அப்ளி கேஷன்கள் மூலமாகத் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு, மத்திய அரசினுடைய கணினியில் சேமிக்கப்படும்.

சிக்கலான இடங்களில் நிலக் குறியீடுகள் புள்ளிகள் சந்திகளைத் தரையிலிருந்து துணைக்கோளுக்கு டிவி சிக்னல்போல அனுப்பி நிலத்தின் துல்லியமான அமைப்பை மின்னணு வடிவாக்கம் (டிஜிட்டலைஸ்) செய்து நிரந்தரமாக சேமிக்கலாம்.

சவாலான திட்டம்...

இந்தத் திட்டம் கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இந்தியா போன்ற மக்கள் தொகை நெருக்கடி மிகுந்த நாடுகளில் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஏற்கெனவே இந்திய அரசு 2000-ம் ஆண்டுவாக்கில் இப்போது நாட்டில் 1908-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வரும் ஆவணப்பதிவு முறையை டாகுமென்ட் வெரிஃபிகேஷன் (document registration) கைவிட்டு, நில உரிமைச் சான்று மாற்றுப்பதிவு முறை (title certificate transfer registration) என்ற ‘டாரன்ஸ் (Torrens) சிஸ்டம்’ முறையை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது.

இது குறித்த மாநில பதிவு வருவாய் உயர் அதிகாரிகளின் கருத்தாய்வு மாநாடு 2008-ம் ஆண்டு புது டெல்லி யில் மத்திய நிலப் பதிவேடுகள் ஆளுமைத்துறை ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பாக பதிவுத் துறையின் மூத்த அதிகாரி என்ற முறையில் நான் கலந்துகொண்டு எனது கருத்துகளைப் பதிவு செய்தேன்.

இந்த ‘டாரன்ஸ்’ திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில், நிச்சயத் தன்மையில்லாத சொத்துரிமை ஆவணப் பதிவு முறையைத் தூக்கிக் கடாசிவிட்டு, நிச்சயத்தன்மை உள்ள நில உரிமைச் சான்று’ தரும் பதிவு முறையைப் புகுத்துவதுதான். ஒருவேளை, மத்திய அரசு இதற்காகத்தான் நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் நில ஆதார் எண் முறையைக் கொண்டு வருகிறதோ என்னவோ?

மனை...
மனை...

இது நிலத்துக்கான ஆதாரா..?

ஆனால், தனிமனித ஆதாருக்கும் நில ஆதாருக்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. மனிதன் பிறந்த உடன் வழங்கப்படும் ஆதார் எண் 70, 80, 90 ஆண்டுகள் அப்படியே இருக்கும். ஆனால், நில ஆதார் எப்போது வேண்டு மானாலும் மாற்றப்படலாம். இந்திய நில உடைமையின் பெரும் தலைவலியே நில உட்பிரிவு , நிலச்சிதறல் (sub -division and fragmentation of land holdings) ஆகியவை தான். ஐரோப்பிய நாடுகளில் தலைச்சன் பிள்ளைக்குத்தான் அப்பாவின் மொத்த சொத்தும் என்ற (law of primogeniture) வாரிசு உரிமை உள்ளதால், 1000 ஆண்டு களுக்கு முன்பு ஒருவர் பெயரில் இருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இப்போதும் பிரிக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு தந்தைக்கு மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன் நூறு ஏக்கர் நிலம் இருந்திருந்தால் இப்போது பேரன், கொள்ளுப்பேரன் என்றும், எள்ளுப் பேரன்கள் என்று அந்த நிலம் துண்டுத் துண்டாக சிதறிக்கிடக்கும். எனவே, நில ஆதார் நிலைக்கும் என்ற நிச்சயத்தன்மை இல்லாததால், இதற்கு மத்திய அரசு என்ன ஏற்பாடு வைத்துள்ளது என்பது முக்கிய கேள்வி.

இந்தப் பிரச்னைக்கு வருவாய்த் துறையில் எண் வாரியாக ஆங்கில எழுத்து வாரியாக புது சர்வே எண் வழங்குவார்கள். அதாவது, 101 என்ற முழு சர்வே எண் 101/1, 101/1A,1B,1C என்று பிரிக்கப்படும். 101/201 என்றுகூட புதிய எண் தரப்படும். ‘ஹைட்ரா’ என்ற உயிரினம் குட்டி போடாது. அதன் உடலிலிருந்து புதிய புதிய குட்டிகள் தனியே பிரிந்து சென்றுவிடும். அதுபோலத்தான் இது. ஆனால், நில ஆதாருக்கு கிளை எண் தர முடியாது. புதிய எண்தான் தர வேண்டும். அதற்கு என்று மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, பகுதி, ஊர், கிராம வாரியாக அடையாளம் காணக்கூடிய தனித்தனி சங்கேதக் குறியீடுகளுடனும் நில ஆதார் எண் உருவாக்கப்படுமா அல்லது வேறு சிறப்பு அடையாள முறை கையாளப்படுமா என்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. ஆனால், ஆதார் அட்டை போல நில உரிமையாளர் களுக்கு ஸ்மார்ட் அட்டையோ, பார்கோடுடன்கூடிய அட்டையோ வழங்கப்படலாம். இதை ஸ்கேனரில் வைத்தவுடன் நில விவரம் உரிமையாளர் விவரம் டிஸ்ப்ளே ஆவதுபோல உருவாக்கப்படும் என்பது மட்டும் உறுதி.

என்னென்ன நன்மை ஏற்படும்..?

இனி நில ஆதார் எண் வழங்கப் பட்டுவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அது ஏற்படுத்தப்போகும் பல சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்வோம்.

1. ஆதார் எண் வழங்கப்பட்டு ரேஷன் கார்டு உடன் இணைக்கப் பட்டவுடன் போலி ரேஷன் கார்டு வைத்திருந்த லட்சக் கணக்கான நபர்கள் ஒரே இரவில் மாயமாய் மறைந்தார்கள். போலி நபரைக் காட்டி இலவசம் பெற்று வந்த லட்சக்கணக்கானவர்களும் காணாமல் போனார்கள். பள்ளிக் கூடங்கள் போன்றவற்றில் ஸ்காலர்ஷிப் பெற்றுவந்த ஏராளமான மாணவர்கள் பணத்தைப் பெற வரவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் போன்றவற்றில் ஒரே நபரை 10 பேராகக் காட்டி பணத்தைக் கொள்ளையடித்தது நின்றது. இவற்றால் அரசுக்குப் பல்லாயிரம் கோடிகள் பணம் மிச்சம்.

இதுபோல, நில ஆதார் எண் வழங்கப்பட்டால் வருவாய்த் துறை பதிவேடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள போலிப் பதிவுகள் நீக்கப்பட்டு, இந்த நிலங்கள் உபரி நிலங்களாக இருந்தால், உச்சவரம்பு சட்டத்தின்கீழ் நிலமற்ற விவசாயிகள், ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படும். அதற்குமேல் இவை அநாமத்து நிலங்கள் (மீட்க ஆளில்லாதவை) என்று தெரியவந்தால், அரசு அவற்றை விற்பதன் மூலம், அரசின் நலத் திட்டங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இதனால் மக்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும்

2. தனிநபருக்கு இந்தியாவில் எங்கெங்கு எவ்வளவு நிலம் உள்ளது என்ற தகவல் நில ஆதார், தனிநபர் ஆதார் இணைப் பின் மூலம் தெரியவரும். இதில் அவருக்கு இருப்பது தனி உரிமையா, கூட்டு உரிமையா, வாரிசு உரிமையா என்ற தகவல் களையும் தெரிந்துகொள்ள முடியும். இதனால் சொத்து உரிமைகள் தெளிவாக்கப்படும்.

3. ஒரு நிலம் அதன் பரப்பளவு நான்கு எல்லைகளின் நீள அகலங்கள், எல்லைக்கோடு வளைந்து நெளிந்து செல்வதால் அதன் பரப்பளவை கணக்கிடுவதில் உள்ள சிரமங்கள் தற்போது பட்டாவில் உள்ள அளவுக்கும் நிலத்தின் உண்மையான பரப்பளவுக்கும் காணப்படும் வித்தியாசங்கள் சரிசெய்யப்படும். மலைப்பாங்கான எஸ்டேட் நிலங்கள் ஆகியன மேடுபள்ளமாக இருப்பதால் நில அளவையில் ஏற்படும் தவறுகள் களையப்படும்.

4. நில ஆதார் எண் அடிப்படையில் பத்திரப்பதிவை மேற்கொண்டால், நில மோசடிகள் ரியல் எஸ்டேட் குற்றங்கள் அறவே ஒழிக்கப்படும் சூழ்நிலையும் வரக்கூடும். ஏனெனில், இப்போது உள்ளதுபோல ஒரு நிலத்துக்கு பலர் பத்திரம் வைத்து இருப்பது தடுக்கப்படும். ஒருவர் அடுத்தவர் நிலத்தை சர்வே நம்பரை, எல்லையை மாற்றிப் பதிவு செய்து ஏமாற்றுவது நடக்காது. சுருக்கமாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதுபோல, ஒரு ஆதாருக்கு ஒரு நிலம் என்று நிலத்தின் கற்புக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

5. இவை அனைத்துக்கும் மேலாக, தற்போது பல நாடுகளில் பத்திரப்பதிவு முழுவதும் ஆன்லைனிலேயே நடக்கிறது. அட்டர்னி எனப்படும் வழக்கறிஞர் அலுவலகத்தில் நிலத்தை விற்பவரும் வாங்குபவரும் வந்து அரசின் நிலப் பதிவேடு துறை கணினி புலத்தில் (ஆன்லைன்) நுழைந்து கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தி நில உரிமையை மாற்றிக்கொள்ளலாம்.

இப்போது உள்ளதுபோல, சார் பதிவாளர் அலுவலகத்துக்கு படை யெடுப்பு நிகழ்த்தி நாள் முழுவதும் காத்துக் கிடந்து பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு ஆன்லைன் பதிவு முறையை நில ஆதார் முறை கொண்டுவரும் என்று நம்புகிறேன்.

இது குறித்து எனது யூகத்தை எனது முதல் சட்ட நூலான 2010-ம் ஆண்டு வெளியான ‘பதிவுச் சட்டம் 1908’ என்ற நூலின் முகவுரையில் கூறியிருந்தேன். அது விரைவில் நடக்கலாம். சுருக்கமாக, நிலத்துக்கு தனி எண் வருவது மிகச் சிறந்த சீர்திருத்தமாக இருக்கும்!

பிட்ஸ்

2019-20-ம் நிதி ஆண்டைவிட 2020-21-ம் நிதி ஆண்டில் விவசாய விளைபொருள் களின் ஏற்றுமதி 14.5 பில்லியன் டாலரிலிருந்து 17.5 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித் திருக்கிறது!