Published:Updated:

நீங்கள் விரும்பியபடி சொத்துகளைப் பகிர்ந்தளிக்க எஸ்டேட் பிளானிங்! கோவிட் கால உயில் ஆலோசனை..

எஸ்டேட் பிளானிங்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்டேட் பிளானிங்

E S T A T E P L A N N I NG

நீங்கள் விரும்பியபடி சொத்துகளைப் பகிர்ந்தளிக்க எஸ்டேட் பிளானிங்! கோவிட் கால உயில் ஆலோசனை..

E S T A T E P L A N N I NG

Published:Updated:
எஸ்டேட் பிளானிங்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்டேட் பிளானிங்

எஸ்.சரவணன், சர்டிஃபைட் டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in

இதுவரை கற்றுக்கொள்ளாத பாடங்களை எல்லாம் நமக்குக் கற்றுத் தந்துவிட்டது கோவிட் பெருந்தொற்று. அதில், ஒன்று அனைவரும் எஸ்டேட் பிளானிங் செய்ய வேண்டும் என்பது.

அது என்ன எஸ்டேட் பிளானிங்? இதற்கும் ரியல் எஸ்டேட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவரின் சொத்துகளை அடுத்த தலைமுறைக்குத் தன் விருப்பப்படி பிரித்து வழங்கும் வழிமுறைகளைக் கையாள்வதுதான் எஸ்டேட் பிளானிங் என்கிறார்கள்.இந்த எஸ்டேட் பிளானிங் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

எஸ்.சரவணன் 
சர்டிஃபைட் 
டிரஸ்ட் & 
எஸ்டேட் பிளானர், 
Purplepond.in
எஸ்.சரவணன் சர்டிஃபைட் டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in

சொத்துகள் என்பவை...

முதலில், சொத்துகள் என்றால் என்ன என்று பார்ப்போம். அசையா சொத்துகளான நிலம், வீடு, தங்கம்; அசையும் சொத்துகளான வங்கிக் கணக்கில் உள்ள பணம், ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள், நிறுவனப் பங்குகள்; டிஜிட்டல் சொத்துகளான இ - மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், வெப்சைட், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் யூசர் நேம், பாஸ்வேர்டு, தொட்டுணர முடியாத சொத்துகளான காப்பிரைட், பேடன்ஸ், ராயல்டி போன்றவை ஒருவருடைய சொத்துகள் என்று வகைப்படுத்தப்படுகிறது.

எஸ்டேட் பிளானிங்...

எஸ்டேட் பிளானிங்கில் உயில் எழுதுவது (Will) ஒரே ஒரு அம்சம்தான்; அறக்கட்டளை அமைப்பது (Trust), அங்கீகாரப் பத்திரம் (Power of Attorney), பராமரிப்பு விருப்ப ஆவணம் (Living Will), உயிர் காப்பீடு (Life Insurance) என இந்த எஸ்டேட் பிளானிங் ஐந்து அம்சங்கள் உள்ளன. இவற்றைத் தனியாகவோ, மற்றவற்றுடன் சேர்த்தோ தன் விருப்பத்துக்கேற்ப தன் சொத்து களைப் பகிர்ந்தளிக்க ஒருவர் திட்டமிடலாம். இப்படித் திட்ட மிடும்போதும், நடைமுறைப்படுத்தும் போதும் கையாளும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

நீங்கள் விரும்பியபடி சொத்துகளைப் பகிர்ந்தளிக்க எஸ்டேட் பிளானிங்! கோவிட் கால உயில் ஆலோசனை..

உயில் என்பது...

ஒருவருடைய இறப்புக்குப் பிறகு, உயிர் பெறும் ஆவணம் உயில். சமமாகப் பிரித்துக் கொடுப்பது சரியாக இருக்க வேண்டும் என்பது நியதியல்ல. உங்கள் குடும்பத்தாரின் தற்போதைய நிதி நிலையைக் கருத்தில்கொண்டு உங்கள் சொத்துகளை யாருக்கு, எவ்வளவு எனப் பிரித்துத் தரலாம். உங்கள் சொத்துகள் எப்படி, யாருக்கு, எவ்வளவு, எப்போது சென்று சேர வேண்டும் என்பதை நீங்களே உங்கள் உயிலின் மூலம் தீர்மானிக்க முடியும்.

உயில் - கவனிக்க வேண்டியவை...

 கைப்பட எழுதிய ஆவணமாக இருந்தாலே உயில் சட்டப்படி செல்லும். இருந்தாலும் உயிலைப் பதிவு செய்வது கூடுதல் பலம் பெறும்.

 உயிலை எழுதி உங்கள் கையொப்பம் இட்டபின் இரண்டு பேர் சாட்சிக் கையொப்பமிட வேண்டும். இரு சாட்சியங்களில் எவரும் இந்த உயிலின் பயனாளியாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

 உயிலை நடைமுறைப்படுத்த உங்களுக்கு நம்பிக்கையான நபரையோ, குடும்ப உறுப்பினர்களையோ நியமிக்க வேண்டும்.

 எழுதிய உயிலை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். உங்களின் கடைசி உயிலே நிறைவேற்றத் தகுதியானவை.

 பதிவு செய்த உயிலை லாக்கர் அல்லது வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அதை உங்கள் நம்பிக்கைக்குரிய நபரிடம் தெரிவித்து வைத் திருப்பது அவசியம். இது உங்கள் காலத்துக்குப் பிறகு, உயில் எழுதி இருக்கிறீர்களா இல்லையா என்ற குழப்பத்தைத் தவிர்க்கும்

 வயது 60-க்கு மேல் உள்ளவர்கள் அல்லது அதிக சொத்து வைத்திருப்பவர்கள்தாம் உயில் எழுத வேண்டும் என்ற எண்ணம் தவறானது. எப்போது உங்கள் பெயரில் ஒரு சொத்து பதிவாகிறதோ, அன்றே நீங்கள் உயில் எழுதலாம்.

 அசையா சொத்துகள் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகிய நகரங்களில் இருப்பின் அந்த உயிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, விருப்ப உறுதி சான்றிதழ் (Probate) பெறுவது அவசியம்.

உயிலின் அவசியம்...

 முதல் சட்ட வாரிசு பட்டியலில் (Class I Legal Heir) தந்தை இடம்பெற மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வயதான அப்பா (மனைவி இல்லாத நிலையில்) தன் மகனை நம்பி வாழும்பட்சத்தில் மகன் இறக்க நேரிட்டால் மகனின் சொத்துகள் அனைத்தும் அவர் மனைவி மற்றும் குழந்தைகளையே சாரும்; வயதான அப்பாவுக்கு எதுவும் கிடைக்காது.

 ஒரு விபத்து ஏற்பட்டு, பெற்றோர்களை இழந்த சிறு குழந்தைகள் (18 வயதுக்கு உட்பட) இருக்கும்போது, யார் அந்தக் குழந்தைகளை அதிகார பூர்வ மாகக் கவனிக்கும் உரிமையைப் பெறுவார்கள் எனில், அம்மா வழி, அப்பா வழி, சொந்தங்கள் யாரும் சட்டபூர்வ பாதுகாவல ராகப் பொறுப்பேற்க முடியாது. ஒருவேளை, அந்தப் பெற்றோர்கள் ‘லெட்டர் ஆஃப் கார்டியன்ஷிப்’ (Letter of Guardianship) தயார் செய்து வைத்திருந்தால், அவர்கள் கூறிய நபரிடம் குழந்தைகளைப் பாதுகாக்கும் உரிமையை நீதிமன்றம் வழங்கும். இந்த ஏற்பாட்டைப் பெற்றோர்கள் செய்யாமல் இருந்திருந்தால், அந்தக் குழந்தைகளை யார் கவனிப்பது என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். நீதிமன்றம் தனிநபரை நியமிக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் பாது காக்க உத்தரவு பிறப்பிக்கலாம். ஆதலால், ‘லெட்டர் ஆஃப் கார்டியன்ஷிப்’ முக்கியம் என்பதை மனதில்கொண்டு செயல்படுதல் மிகவும் சிறந்தது.

அறக்கட்டளை (Trust)

ஒருவர் தன் சொத்துகளை விற்காமல் அறக்கட்டளை அமைத்து அதன் மூலமன வருமானத்தை மட்டும் பயனாளர்களுக்குக் கொடுப்பது. ஒருவர் தான் இருக்கும் காலத்தில் சொத்துகள் முழுவதையும் வாரிசுகளுக்கு பிரித்துத் தராமல் அறக்கட்டளை மூலம் வரும் வருமானத்தை மட்டும் அவர் நினைப்பவர்களுக்குத் தரலாம். இதனால் அவர் இருக்கும் காலம் வரையிலும் சொத்துகளை விற்காமல், அவர் இல்லாத காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் அறக் கட்டளையின் ஆவணத்தில் குறிப்பிடலாம்.

அங்கீகாரப் பத்திரம் (Power of Attorney)

ஒருவர் தம் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு ‘பவர் ஆஃப் அட்டார்னி’ (POA) எழுதி வைத்திருந்தால், அவருக்கு உடல் ரீதியாகச் செயல்பட முடியாத நிலை ஏற்படும்பட்சத்தில் அந்த பவர் வைத்திருக்கும் நபர், பவர் கொடுத்த நபரின் இடத்திலிருந்து அனைத்து முடிவு களையும் எடுக்க முடியும். இதில் வங்கி கணக்குகளைக் கையாள்வதிலிருந்து அனைத்து விதமான முடிவுகளையும் எடுக்க முடியும்.

பராமரிப்பு விருப்ப ஆவணம் (Living Will)

ஒருவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் தனக்கு எதுவரை மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு செய்ய வேண்டும் என்பதையும், அதை யார் முடிவெடுக்க வேண்டும் என்பதையும் எழுதி வைப்பதுதான் பராமரிப்பு விருப்ப ஆவணம் (Living Will). உதாரணத்துக்கு மூளைச் சாவு அடைந்த ஒருவர், தனக்கு உயிர் காக்கும் கருவி மூலம் மாதக்கணக்கில் உயிரை மட்டும் நீட்டிக்க வேண்டாம் என்பதை, அவர் நலமுடன் இருக்கும் போதே ‘லிவ்விங் வில்’ எழுதி வைத்தி ருந்தால், அதை அவர் குடும்பத்தினர் மருத்துவரிடம் காண்பித்து அதற்கான வழியைத் தேர்ந்தெடுக்கலாம். இது அதிக பணவிரயத்தைத் தவிர்க்கும்.

உயிர் காப்பீடு (Life Insurance)

உயிர் காப்பீடும் எஸ்டேட் திட்ட மிடலின் ஒரு வழிமுறைதான். ஒருவர் வருமானம் ஈட்டும் காலத்தில் உயிர் காப்பீடு எடுத்திருந்து, அதற்கான தொகையைத் தொடர்ந்து செலுத்தி வந்திருந்தால், அவரின் இறப்புக்குப் பின் அந்த காப்பீட்டுத் தொகை (வருமான வரி இல்லாமல்) பரிந்துரைக் கப்பட்டவருக்கு (Nominee) கிடைக்கும். இந்தத் திட்டமிடல் அவருடைய இழப்பைச் சந்திக்கும் அவருடைய குடும்பம் வருமான இழப்பையும் சந்திக்காமல் இருப்பதற்கு வழி வகுக்கும்.

எஸ்டேட் திட்டமிடல் இல்லை எனில், உங்கள் சொத்துகள் சட்டப்படி உங்கள் வாரிசுகளுக்கு சமமாகப் பிரித்து அளிக்கப்படும். அது உங்கள் விருப்பத்துக்கு மாறாகக்கூட இருக்கலாம். நீங்கள் இந்துவாக இருந்தால் இந்து வாரிசு இறங்குரிமை (Hindu Succession Act 1956) சட்டப் படியும், இஸ்லாமியராக இருந்தால் முஸ்லிம் வாரிசு இறங்குரிமை (Muslim Succession Act 1937) சட்டப்படியும் கிறிஸ்துவராக இருந்தால், இந்திய வாரிசு இறங்குரிமை (Indian Succession Act 1925) சட்டப்படி பகிர்ந்து அளிக்கப்படும்.

பல குடும்பங்களில் உடன்பிறந்தவர் களிடையே ஏற்படும் மனக் கசப்புக்குக் காரணம் சொத்து பிரித்தலில் ஏற்படும் பிரச்னைதான். பிரச்னைகளைத் தவிர்த்து உறவுகள் பலப்பட எஸ்டேட் திட்டமிடல் அவசியம்.

ஏற்கெனவே கொடுக்கப்பட்டதையும் குறிப்பிடுங்கள்..!

உயில் எழுதும்போது, குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது ஏற்கெனவே சொத்துகள் பிரித்துக் கொடுக்கப் பட்டிருந்தால் அந்த விவரத்தையும் விரிவாகக் குறிப்பிடுவது அவசியம். அப்போதுதான் பின்னர், அந்த உறுப்பினர் தனக்கு அதிக பங்கு வேண்டும் எனக் குடும்ப உறுப்பினர்களிடம் தகராறு செய்யாமல் இருக்கும் சூழ்நிலை உருவாகும்.

 கே.அழகுராமன்
கே.அழகுராமன்

உயிலின் முக்கியத்துவமும் வலிமையும்!

உயில் எழுதுவதன் முக்கியத்துவத்தையும், அதன் வலிமையையும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் உதராணங்களுடன் விளக்கினார். “சென்னையைச் சேர்ந்த கதிர் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) பெட்ரோல் பங்க்குகளை நடத்திவந்தார். அதன் லைசென்ஸை மட்டும் தன் அப்பாவின் பெயரில் வாங்கியிருந்தார். பெட்ரோல் பங்க் மூலம் வந்த வருமானத்தில் பல சொத்துகளை வருமான வரியினங்களை மனதில் கொண்டு, அவரின் அப்பா பெயரிலேயே வாங்கினார். தன் இரண்டு தம்பிகளையும் அதே தொழில் மூலமாக வருமானத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தார். மொத்த உழைப்பும் முதலீடும் கதிர் ஒருவருடையதுதான். ஆனால், கதிரின் அப்பா மறைவுக்குப் பிறகு, மொத்த சொத்தையும் மூன்றாகப் பிரிக்க வேண்டிய நிலை உருவானது. தம்பிகள் இருவரும் சண்டை போட்டு சொத்தில் பங்கு வாங்கிக்கொண்டார்கள். நீதிமன்றம் சென்றும் கதிருக்கு சாதகமான சூழல் ஏற்படவில்லை. கதிரின், அப்பா தெளிவான ஓர் உயிலை எழுதி வைத்திருந்தால் கதிருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

கோவையைச் சேர்ந்த பூரணிக்கு (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) நான்கு மகன்கள், ஒரு மகள். மகன்களின் சம்பாத்தியத்தில் பிரமாண்ட வீட்டைக் கட்டினார் அவர். பூரணி, மகளுடன் வசித்தார். திடீரென அவர் இறந்துவிட, ‘புதிய வீட்டை அம்மா எனக்குத்தான் எழுதி வைத்துள்ளார்’ எனச் சொல்லி பூரணியால் எழுதப்பட்டு, இரு சாட்சிகள் கையொப்பமிட்ட உயிலைக் கொண்டு மெய்பித்து வீட்டை தன் வசப்படுத்திக்கொண்டார் பூரணியின் மகள். வீடு கட்ட பணம் போட்ட நான்கு மகன்களுக்கும் சொத்து கிடைக்காமல் போய்விட்டது.

உயிலில் அவசியம், அதன் வலிமை, அது ஏற்படுத்தும் தாக்கங்களைப் புரிந்துகொண்டு உரிய பாதுகாப்புடன் செயல்படுவதன் மூலம், தன் வாரிசுகளுக்குள் சிக்கல்கள் இல்லாமல் தன் எண்ணப்படி சொத்துகளைக் கொண்டு சேர்க்க முடியும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism