தங்கம் கடத்தல்! - இந்தச் செய்தியை நாம் வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது செய்தித் தாள்களில் அல்லது செய்தியில் பார்த்திருப்போம்; கடந்திருப்போம். இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அறிக்கையின்படி, இந்தியாவில் 2021-22 நிதியாண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 833 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி இந்தியாவில் சில ஆண்டுகளாகத் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு முறை தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்போதும் தங்கம் கடத்தலும் அதிகரிக்கிறது. இதனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் இறக்குமதிக்கும் தங்கக் கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்றும் தங்கக் கடத்தல் பாட்டர்னையும் (pattern) கண்டுபிடிக்குமாறு சுங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தங்கக் கடத்தல் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்துமாறும் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் தங்கம் அதிகம் கடத்தப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் கேரளா மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அறிக்கைபடி, இந்தியாவில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 73% தங்கம் மியான்மர் மற்றும் வங்காள தேசத்திலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டது ஆகும். 2022 நிதியாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 37% தங்கம் மியான்மரில் இருந்தும், 20% தங்கம் மேற்கு ஆசியாவில் இருந்தும் கடத்திக் கொண்டுவரப்பட்ட தங்கம் ஆகும்.
உலக தங்க கவுன்சிலின்படி, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்கம் நுகரும் நாடாக இருக்கிறது. சீனா ஒவ்வோர் ஆண்டும் சுமார் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா 797.3 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக அளவு தங்கம் ஆகும்.

இந்தியாவில் 2021-22 நிதியாண்டில் சுமார் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கமும், 2020-21 நிதியாண்டில் ரூ.2.51 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக தங்க கடத்தலுக்கான காரணங்கள்:
2012-ம் ஆண்டு, 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.28,067-ஆக இருந்தது. இது 2020-ம் ஆண்டில் ரூ.59,000-ஆக கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டது. தற்போது இதன் விலை ரூ.54,000 ஆகும்.
இந்தியாவில் தங்கம் தேவை அதிகம் இருந்தாலும், தங்கத்தின் இறக்குமதி வரி அதிகம் ஆகும்.
தங்கத்தை வரி கட்டாமல் இறக்குமதி செய்வதன்மூலம், குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் மிச்சப்படுத்த முடியும்.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை சொந்த நாட்டுக்கு கொண்டுவருவது போன்றவற்றுக்கு தங்கம்தான் சிறந்த வழியாகும்.
தங்கம் கடத்தி வருபவருக்கு இலவச விமான டிக்கெட், தங்கும் வசதி, லஞ்சம் அல்லது பிடிபட்டால் அபராதம் செலுத்தினால்கூட, தங்கக் கடத்தலில் சுமார் 12% லாபம் பார்க்கலாம்.
சர்வதேச சந்தையை இந்திய சந்தையோடு ஒப்பிடும்போது, தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கிறது. அதனால் இந்தியாவுக்கு சிறிது அளவு தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்டாலும், தேவையான அளவு லாபம் பெறமுடியும்.
கொரோனா பெருந்தொற்றால் வேலையிழந்த பலர், குறைந்த கூலிக்கு தங்கக் கடத்தல் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள்.

தங்கக் கடத்தல் குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் கூறியதாவது, ``2021-2022 நிதியாண்டில் இந்தியா சுமார் 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இப்படி இறக்குமதி அதிகரிக்கும்போது தங்கக் கடத்தலும் அதிகமாகத்தான் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் நலிவடைந்து பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதனால் பணம் ஈட்ட சுலபமான வழி தங்கக் கடத்தல் என்று இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
வெளிநாட்டு சந்தை மற்றும் இந்திய சந்தையின் தங்க விலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிக வித்தியாசம் இருப்பதாலும், கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற தங்கம் சிறந்த வழி என்பதாலும், தங்கம் இறக்குமதி வரி மற்றும் வரி அதிகமாக இருப்பதாலும் அதிக அளவு தங்கக் கடத்தல் இந்தியாவில் நடக்கிறது. தங்கக் கடத்தலுக்கு முக்கிய காரணமே இந்தியாவில் குறிப்பாக, தென்னிந்தியாவில் தங்கத்துக்கு உள்ள அதிக ஈர்ப்பு என்றுகூட சொல்லலாம்.

தங்கக் கடத்தல் என்பது சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகம் என்பதால் அரசுக்கு வர வேண்டிய வரி மற்றும் வருமானம் வெகுவாகக் குறைகிறது. மேலும், இது இந்திய ரூபாயின் மதிப்பைக்கூட பாதிக்கிறது. இதற்கு மத்திய நிதியமைச்சர் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.