கொரோனா பரவலில் பரபரப்பான கட்டத்தை தமிழ்நாடு எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதிக பரவல் உள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவருக்கேனும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர் மளிகைப்பொருள்கள், காய்கறிகள் வாங்கிய கடை உரிமையாளரின் குடும்பத்தினரையே தனிமைப்படுத்தும்படி நிலவரம் உள்ளது.

அதுமட்டுமன்றி, அப்பகுதியில் திறந்திருக்கும் பலசரக்குக்கடைகள் அனைத்தும் அடைக்கும்படி உத்தரவிடப்படுகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், அத்தியாவசியப் பொருள்களின் வரத்து எப்படி இருக்கிறது, விலையேற்றம், பொருள்களுக்கான பற்றாக்குறைக்கு என்ன காரணம்? விசாரித்தோம்.
கே.எஸ்.எம்.கார்த்திகேயன், மாநில துணைப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை
"தற்போது ஊரடங்கு காரணமாக, குடும்பத்திலுள்ள அனைவரும் வீட்டிலேயே இருப்பதால், வருமானத்துக்குப் பெரிதும் பாதிப்பில்லாத குடும்பங்களில், வழக்கத்தைவிட அதிகமாகவே உணவுப்பொருள்கள் செலவாகின்றன. எனவே, மக்களிடையே தேவை அதிகமாகவும், இருப்பு குறைவாகவும் இருப்பதாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. மற்றபடி, வியாபாரிகளின் வழக்கமான விற்பனையே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பதுக்குவதற்கான வாய்ப்பு இல்லை. விலையேற்றத்தைப் பொறுத்தவரை, தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் விலையில் சிறிது அதிகரித்திருக்கிறது.

விலையேற்றமானது, விளைச்சல் குறைந்த காலகட்டத்தில் ஏற்படும் கடும்விலையேற்றம்போல இல்லாமல் ஒரு வரம்புக்குள்ளேயேதான் இருக்கிறது. எனவே, விலை பெருமளவு உயருமென்று அச்சப்படத்தேவையில்லை.
அதேபோல, விநியோகஸ்தர்களும் விலையைச் சற்று ஏற்றியுள்ளார்கள். இதன் பாதிப்புதான் சில்லறை விற்பனையிலும் வெளிப்படுகிறது. சில்லறை விற்பனைக்கடைகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கென இருக்கும் லாப வரம்பில்தான் பொருள்களை விற்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கும் சில பேக்கிங் பொருள்களில் மொத்த விலையே எம்.ஆர்.பி அளவில் இருக்கும்போது, அதைவிடக் கூடுதல் விலையில் விற்கவேண்டிய கட்டாயம். ஆனால் இந்த விலையேற்றமானது, விளைச்சல் குறைந்த காலகட்டத்தில் ஏற்படும் கடும்விலையேற்றம்போல இல்லாமல் ஒரு வரம்புக்குள்ளேயேதான் இருக்கிறது. எனவே, விலை பெருமளவு உயருமென்று அச்சப்படத்தேவையில்லை.
சரக்கு வாகனங்களில் பொருள்களை ஏற்றிச்செல்லும்போது பெரிதும் பிரச்னையில்லை. ஆனால், சரக்குகளை இறக்கியபின் காலியாக வாகனம் வரும்போது காவல்துறையின் கெடுபிடி இருக்கிறது. காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை, வியாபாரிகளின் வாகனங்களாகவே உள்ளன. அதேபோல, கடைகளின் முன்பாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும் கடைக்காரர்களுக்கு சிக்கலாகிறது" என்றார் கே.எஸ்.எம்.கார்த்திகேயன்.
முன்பெல்லாம் சில்லறை விற்பனைக் கடைகளைத் தேடி டீலர்கள் வந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது அவர்களின் வாகனங்களுக்கு பாஸ் இல்லாததால் கடைக்காரர்களே அவர்களைத் தேடிச்செல்லும் சூழல்.
பேக்கிங் செய்யப்பட்ட பிராண்டட் பொருள்கள் அனைத்துக்கும் மண்டலவாரியாக தமிழ்நாடு முழுவதும் விற்பனை ஏஜென்டுகள் இருப்பார்கள். ஒருவரின் எல்லைக்குள் இன்னொருவர் விற்பனை செய்யமாட்டார். இந்த நிலையில், ஏஜென்டுகளுக்கு கிடைக்கும் சப்ளையே குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சில்லறை விற்பனையாளர்களுக்கு முழுமையாகப் பொருள்களை வழங்க முடிவதில்லை. இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில், காவல்துறையினர் மிகவும் கடுமையாகப் பணியாற்றிவருகிறார்கள். அதேவேளை, ஆங்காங்கே வியாபாரிகளிடம் காவல்துறையினர் கெடுபிடி செய்வதாகவும் புகார்கள் வருகின்றன.
கடை முன்பாகக் கூட்டம் சேர்கிறது என்றோ, வேறு சில காரணங்களைக் கூறியோ, சில சுகாதாரத்துறை அதிகாரிகள், சில காவலர்கள், சில அரசியல்வாதிகள் மிரட்டி பண வசூலில் ஈடுபடுகிறார்கள்.வியாபாரிகள்
இப்படிச்செலவாகும் பணத்தை ஈடுகட்ட, பொருள்களின் விலையேற்றம் நடக்கிறது. சில கடை உரிமையாளர்கள், இதற்குப் பயந்து கடையே திறப்பதில்லை.

ஏ.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
"நுகர்பொருள்களின் உற்பத்தி வழக்கம்போலவே இருக்கின்றன. ஆனால், ஊரடங்கு நீடிக்குமென்ற பீதி காரணமாக பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை வாங்குவது 2, 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல, தயாரிப்பு நிறுவனங்களுக்கான கச்சாப்பொருள்கள், பிரின்டிங் பேக்கிங்குகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. விநியோகஸ்தர்கள், டீலர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு சப்ளை செய்வதற்கான பாஸ் இன்னமும் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி கூறுகிறார்கள். ஆனால், அப்படி விண்ணப்பிக்கும்போது ஓரிருவருக்கு மட்டுமே ஆன்லைனில் ஒப்புதல் கிடைக்கிறது. எனவே, முழுமையாக விநியோகம் செய்ய இயலவில்லை. இந்த நிலை மாறுவதற்கு மேலும் ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும்.
உணவுப்பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உற்பத்தி பாதிப்பு இருப்பதால் அதைச்சரிக்கட்டுவதற்காக, தள்ளுபடி விற்பனையைப் பெரும்பாலான நிறுவனங்கள் கைவிட்டுவிட்டன. லாப வரம்பையும் குறைத்துவிட்டார்கள். இதனால், லாப வரம்பு குறைவாகவுள்ள பொருள்களை வாங்குவதைக் கடைக்காரர்கள் தவிர்க்கிறார்கள். இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில், தொழிலாளர்கள் பற்றாக்குறையால், முழுவேகத்தில் டிஸ்ட்ரிபியூட்டர்களால் செயல்பட முடிவதில்லை. இப்படியான டிஸ்ட்ரிபியூட்டர்களை மாற்றும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதனால், டிஸ்ட்ரிபியூட்டர்கள் பாதிப்பதோடு வேலையிழப்பும் அதிகரிக்கக் கூடும். எனவே, இதில் அரசு தலையிட்டு, டிஸ்ட்ரிபியூட்டர்களைக் காக்க வேண்டும்" என்றார்.
நுகர்பொருள் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களுக்கு சரக்குகளை விநியோகிப்பதற்கான பாஸ் வழங்குவதைத் துரிதப்படுத்த வேண்டும்.
முன்பெல்லாம் சில்லறை விற்பனைக் கடைகளைத் தேடி டீலர்கள் வந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது அவர்களின் வாகனங்களுக்கு பாஸ் இல்லாததால் கடைக்காரர்களே அவர்களைத் தேடிச்செல்லும் சூழல். கடைக்காரர்களுக்கு மினி டெம்போ வாகனத்தின் வாடகை, 500 ரூபாய் என்றிருந்த கட்டணம், தற்போது 1,500 ரூபாய் அளவுக்கு அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு டீலர்களாகத் தேடிச்செல்ல முடியாத சூழலில், கோயம்பேடு போன்ற இடங்களில் மொத்த வியாபாரிகளிடம் பொருள்களை வாங்குகிறார்கள். அங்கே வழக்கமான விலையைவிடச் சற்று கூடுதல் சதவிகிதத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதேபோல அரிசி மூட்டைகளில் அனைத்து ரகங்களும் தடையின்றி கிடைத்தாலும்கூட அவற்றை வாகனத்தில் தூக்கிவருவதால் கூடுதல் செலவு ஆகிறது. அதற்கான நேரமும் வியாபாரிகளுக்கு இழப்புதான். இதன்காரணமாக விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
ஏ.எஸ்.வி.ஏ.மாதவன், தலைவர், மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்
"எங்களுக்கு நுகர்பொருள்கள் போதுமான அளவு கிடைக்கின்றன. ஆனால், விநியோகஸ்தர்களுக்கான அனுமதி சரிவர கிடைக்காததால் விநியோகிப்பதில் சிக்கல் நீடிக்கிறது" என்கிறார் மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.வி.ஏ.மாதவன். அவர் மேலும் கூறுகையில், "மதுரை மண்டலத்தைச் சேர்ந்த நுகர்பொருள்கள் விநியோகஸ்தர்களுக்கு மே 6-ம் தேதிக்குப் பின்னர்தான் போக்குவரத்துக்கான பாஸ் கிடைக்குமென்று கூறியிருக்கிறார்கள். அதேபோல, கடைகளைத் திறந்துவைத்திருக்கும் நேரத்தைப் பொறுத்தவரை தெளிவான அறிவிப்புகள் இல்லாததால் குழப்பம் ஏற்படுகிறது. இதன்காரணமாக எவ்வளவுதான் கட்டுப்பாட்டோடு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தாலும், சில நேரங்களில் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. விநியோகஸ்தர்களுக்கு உரிய அனுமதிகள் கிடைத்தபின்புதான் கடைகளுக்கு விநியோகம் சீராக இருக்கும். பொருள்களுக்கான தட்டுப்பாடு நீங்கும்" என்றார்.

கடந்த சில நாள்களாக கோயம்பேட்டில் சரக்குகளை வாங்கியவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இது வியாபாரிகளுக்கு விழுந்த மற்றொரு அடி எனலாம். தற்போது, கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். இதனால் வியாபாரிகளுக்கு போக்குவரத்துச்செலவு மேலும் அதிகரிக்கும். இத்தகைய சிக்கல்களைக் களைவதற்கு, நுகர்பொருள் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களுக்கு சரக்குகளை விநியோகிப்பதற்கான பாஸ் வழங்குவதைத் துரிதப்படுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு மின் கட்டணம், ஜி.எஸ்.டி போன்றவற்றைச் செலுத்துவதில் 6 மாத காலத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். வியாபாரிகளும் மக்கள் நலப்பணியாளர்களே என்பதை மனதில்கொண்டு இவர்களிடம் கெடுபிடி காட்டப்படுவதைக் குறைத்துக்கொண்டு, வியாபாரிகளின் நலன்காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.