பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கரிசல்காட்டு கடலை... கரும்பு வெல்லம்... இனிக்கும் கோவில்பட்டி கடலை மிட்டாய்!

கோவில்பட்டி கடலை மிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
News
கோவில்பட்டி கடலை மிட்டாய்

ஜி.ஐ பிசினஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்றாலே ‘கடலை மிட்டாய்’தான் சட்டென நினைவுக்கு வரும். கோவில் பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மானாவாரி கரிசல் நிலத்தில் விளையும் நிலக் கடலையின் சுவையுடன், கலப்படமில்லாத கரும்பு வெல்லப்பாகு கலந்து செய்யப் படுவதால்தான் கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரசித்திபெற்று இருக்கக் காரணம் என்கிறார்கள் இங்குள்ள வியாபாரிகள்.

‘கரிசல்’ என்ற சொல்லுக்கு ‘கறுப்பு நிறம் கொண்ட மானாவாரி புஞ்சை பிரதேசம்’ என கரிசல்காட்டில் பிறந்து மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பொருள் சொல்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை, கரிசல்மண்தான் அதிகமான பரப்பளவில் பரவிக் கிடக்கிறது.

கரிசல்காட்டு கடலை... கரும்பு வெல்லம்... இனிக்கும் கோவில்பட்டி கடலை மிட்டாய்!

தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் முழுமையாகவும், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளும் தான் மானாவாரி விவசாயம் நடைபெறும் பகுதிகள். கரிசல் மண்ணுக்கான தண்ணீரைச் சேமித்து வைக்கும் தன்மையைப்போல, வேறெந்த மண்ணுக்கும் கிடையாது.

கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவரான வரதராஜனிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டரப் பகுதிகளில் மானாவாரியாக சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவிலும், இறைவைப் பாசனத்தில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவிலும் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மழைநீர் நேரடியாகக் கிடைப்பதால் செம்மண் நிலத்தில் விளையும் நிலக்கடலையைவிட கரிசல் மண்ணில் விளையும் கடலைக்குத்தான் சுவை அதிகம்.

கோவில்பட்டி கடலை மிட்டாய்த் தயாரிக் கும் உற்பத்தியாளர்கள் அதிகம் விரும்புவது கரிசல்மண் கடலையைத்தான். மானாவாரி நிலக்கடலை சாகுபடியைப் பொறுத்தவரை, இந்தப் பகுதிகளில் ஆடிப் பட்டத்தில்தான் கடலையை விதைப்போம். கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதி கடலைக்கு பல பகுதிகளிலும் எப்போதும் தேவை உண்டு” என்றார்.

கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் தயாரிப் பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம்.

வரதராஜன், கண்ணன்
வரதராஜன், கண்ணன்

‘‘கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் கரிசக்காட்டு கடலையும், தேனி, மதுரை, சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கரும்பு வெல்லமும், தாமிரபரணி தண்ணீரும்தான் கடலை மிட்டாயின் சுவைக்கு முக்கியமான காரணங்களாகும். கடலை மிட்டாய் தயாரிப்புக்குக் கரிசல்காட்டு கடலையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிப்புத் தொழிலில் 300-க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள், 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீண்ட நாள் இருப்பு வைக்கப்பட்ட கடலையுடன் கழிவுப்பாகு கலந்து, கலப்படம் செய்து சரியான பக்குவம் இல்லாமல் கோவில் பட்டி கடலை மிட்டாய் என்ற பெயரில் பல பகுதிகளில் தயாரித்து விற்பனை செய்து வந்ததால், உண்மையான உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால்தான் 2014-ம் ஆண்டு கோவில் பட்டி சப்கலெக்ட ராகப் பணிபுரிந்த டாக்டர் விஜய கார்த்தி கேயனிடம் கடலை மிட்டாய் உற்பத்தி யாளர்கள் சார்பாக புவிசார் குறியீட்டுக்கான கோரிக்கையை முன்வைத்தோம்.

அவரது பெயரிலேயே புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்தார். பின்னர், ‘சங்கத்தின் மூலம்தான் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்’ என மத்திய அரசு அறிவுறுத்தியதால், கோவில்பட்டியில் உள்ள கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஒருங்கிணைத்து, `கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை ஏற்படுத்தி, பின்னர் 2017-ல் மீண்டும் சங்கம் மூலம் விண்ணப்பித்தோம்.

1940-ம் ஆண்டு முதல் கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரித்து வந்ததற்கான ஆவணங்களை இணைத்தோம். கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்னம்பல நாடார்தான் கடலை மிட்டாயை உற்பத்தி செய்தார். இது போன்ற பல ஆவணங்களையும் தனித்தன்மை வாய்ந்த செயல்முறைகளையும் விரிவாக எடுத்துச் சொன்ன பின், கடந்த 2020-ம் ஆண்டுதான் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

நிலக்கடலைகளை ஆற்றுமணலுடன் சேர்த்து வறுத்து, அதன் தோலை நீக்கிய பின்னர், கம்பிப் பதத்திலான வெல்லப்பாகுடன் கலந்து, தட்டையாக்கி சதுரம், அரைச் சதுர வடிவில் வெட்டி எடுக்கின்றனர். இதே பதத்தில், உருண்டை பிடித்து கடலை உருண்டையும் செய்வார்கள். ஆனால், கோவில்பட்டியைப் பொறுத்தவரை, கடலை மிட்டாய்தான் பிரபலம்.

இந்த கடலை மிட்டாய்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு பண்டல்களாக அடுக்கி வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது கடலை மிட்டாய் ஆன்லைன் விற்பனை வரை சென்றதற்கும் இதன் சுவையும், தரமுமே காரணம்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி நகருக்குள் எந்தத் தெருவுக்குள் சென்றாலும் நிலக்கடலை வறுக்கும் மணமும், கடலை யுடன் வெல்லப்பாகு கலக்கும் மணத்தையும் நுகராமல் வெளியே வர முடியாது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் திருமணங்களின் தாம்பூலப் பைகளில் கடலை மிட்டாய்தான் போட்டுக் கொடுப்பார்கள். இந்தப் பகுதியில் திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மகளுக்கு புதுப் பானையில் சீனி, பூந்தி, லட்டு போன்ற இனிப்புப் பண்டங்களுக்குப் பதிலாக கடலை மிட்டாயைத்தான் போட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலையில் இனிப்புத் தன்மை அதிகமாகவும், எண்ணெ யின் அடர்த்தி குறைவாகவும் இருக்கும். இதுதான் கடலை மிட்டாய் தயாரிப்புக்கு ஏற்றது. மற்ற மண்ணில் விளையும் கடலையில் எண்ணெயின் அடர்த்திதான் அதிகமாக இருக்கும்.

இரும்பு கடாயில் ஆற்று மணலில் முழு நிலக்கடலை யைப் பக்குவமாக வறுத்தெடுக்க வேண்டும். நன்கு ஆறவிட்டு, இரண்டாக உடைக்க வேண்டும். மரப்பலகையில் நிலக்கடலையை பரப்பிவிட்டு கையால் தேய்த்தாலே கடலை இரண்டாக உடைந்து விடும். தற்போது வறுப்பதற்கும் உடைப்பதற்கும் மெஷின் வந்து விட்டது. ஆனால், பாரம்பர்ய முறைப்படி, வறுத்து உடைப்பது தான் சுவையைக் கூட்டும்.

கரிசல்காட்டு கடலை... கரும்பு வெல்லம்... இனிக்கும் கோவில்பட்டி கடலை மிட்டாய்!

உடைத்த கடலையை நன்கு சலித்துவிட்டு, கம்பி பதத்தில் காய்ச்சி இறக்கி வைக்கப்பட்ட வெல்லப்பாகுவில் போட்டு கிளறி மரச்சட்டத்தில் ஊற்றி சதுரம், அரைச்சதுரம், டைமண்ட் என விரும்பும் வடிவத்தில் வெட்டி எடுத்து பேக்கிங் செய்யப்படுகிறது. இதே பதத்தில் உருண்டை பிடித்து கடலை உருண்டையாகவும் தயார் செய்வோம்.

கடலை மிட்டாயில் புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளிட்ட அனைத்து சத்துகளும் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப் படும் கடலை மிட்டாய், இந்தியா முழுமைக்குமுள்ள மாநிலங் களுக்கு ஏற்றுமதியாகிறது. மலேசியா, அமெரிக்கா, துபாய், பக்ரைன், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 30,000 கிலோ கடலை மிட்டாய் உற்பத்தியாகிறது. 200 கிராம், 250 கிராம், 500 கிராம், 1 கிலோ பாக்கெட்டுகளாக விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.140 முதல் ரூ.160 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தவிர, 2 ரூபாய் முதல் 40 ரூபாய் பாக்கெட்டு களாகவும் விற்பனை செய்கிறோம். மாதத்தில் 35 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலும் கடலை மிட்டாய் விற்பனை ஆகின்றன.

மற்ற ஊர்களில் யாரும் எங்க ஊர்ப் பெயரை பயன்படுத்தி கடலை மிட்டாய் தயாரிக்க முடியாது என்பது எங்களுக்குப் பெருமையாக இருந்தாலும் தரமில்லாத, நீண்டநாள் இருப்பு வைக்கப்பட்ட நிலக்கடலை, கழிவு வெல்லப்பாகு கலந்தும் கடலை மிட்டாய் செய்யப்பட்டு, இதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் வருத்தமானதாக இருக்கிறது.

கோவில்பட்டிக்குச் சொந்த வேலையாக வந்தவர்கள், அலுவல் காரணமாக வந்தவர்கள், இருக்கண்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் எனப் பலதரப்பினரும் கடலை மிட்டாயை மறக்காமல் வாங்கிக் கொண்டு செல்வார்கள். கோவில்பட்டியைக் கடந்து செல்லும் பஸ்களிலும் ரயில்களிலும் கடலை மிட்டாயைப் பலரும் விற்கின்றனர். இவர்கள் மூலமும் தமிழகத்தின் பல பகுதி மக்களுக்கு கடலை மிட்டாய் போய்ச் சேருகிறது.

கடலை மிட்டாய்க்கு மக்கள் மத்தியில் தேவையும், வரவேற்பும் இருப்பதைப் பயன்படுத்தி, தரமற்ற கடலை மிட்டாயும் விற்பனையும் செய்யப்படுவது வேதனையாக உள்ளது. இதைக் கண்காணித்து வருகிறோம். அதேநேரத்தில் கடலை மிட்டாய்க்குப் புவிசார் குறியீடு கிடைத்த பிறகு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் கடலை மிட்டாய் உற்பத்தியை முறையாகத் தெரிந்துகொண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது ஆறுதலாக உள்ளது. இதனால், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரித்துள்ளது” என்றார் பெருமிதத்துடன்.

வட்டாரத் தொழில்களுக்கு சிறப்பான வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்பதற்கு கோவில்பட்டியும் ஓர் உதாரணம்!