மற்ற எபிசோடுகள்
Published:Updated:

90 ஆண்டுகள்... நான்கு தலைமுறைகள்... மணமணக்கும் ஆர்.கே.ஜி..! - 10

அரவிந்
பிரீமியம் ஸ்டோரி
News
அரவிந்

வெற்றித் தலைமுறை - 10

இந்திய நாடு சுதந்திரம் அடையும்முன், இன்று திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார், கிருஷ்ணப்ப செட்டியார் மற்றும் கணபதி செட்டியார் ஆகியோர் ஒன்றாக இணைந்து நெய் வியாபாரத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வியாபாரம் தொடங்கியது 1932-ம் ஆண்டு. நெய் உற்பத்தி செய்து இந்தியா முழுக்க விற்பனை செய்தனர். ‘ஆர்.கே.ஜி’ என்று தங்களின் நெய் வியாபாரத்துக்குப் பெயர் வைத்தனர். விறகு அடுப்பில் வெண்ணெய் உருக்கி, நெய் தயார் செய்து தகர டப்பாக்களில் அடைத்து தினந்தோறும் சில லிட்டர் நெய் என்று விற்றுவந்த ஆர்.கே.ஜி நிறுவனம், அடுத்தடுத்த தலைமுறையினர் முயற்சியால் நாள் ஒன்றுக்கு 30 டன் நெய் தயாரித்து இந்தியா முழுவதும் நெய் விற்பனை செய்யும் நிறுவனமாக உருவாகியுள்ளது. தலைமுறை வெற்றி குறித்த தகவல்களைப் பகிர்கிறார் அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர்களில் ஒருவரான அரவிந்.

“எங்கள் தாத்தாக்கள் மூவர் சேர்ந்து தொடங்கிய பிசினஸ் இது. அவர்கள் காலம் முழுக்க ஒற்றுமையாக இருந்து நடத்திய நிறுவனம் இது. அந்த ஒற்றுமைதான் நாங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம். அதில் எந்த விரிசலும் பாகுபாடும் இல்லாமல் அடுத்தடுத்த தலைமுறையினராகிய நாங்கள் பாதுகாக்கிறோம்.

எங்கள் பிசினஸில் நான் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவன். தற்போது 22 பேர் நிர்வாகப் பணிகளில் இருக்கிறோம். முதல் தலைமுறையினர் தொழில் செய்த காலத்தில் நாங்கள் இல்லை. அவர்கள் கற்றுக்கொடுத்த தொழில் பாடங்களை அடுத்த தலைமுறையினர் எங்களுக்குக் கற்றுத் தந்தனர். அந்தப் பாடங்களை நாங்கள் இப்போது எங்களின் அடுத்த தலைமுறையினருக்கு சொல்லித் தருகிறோம்.

அரவிந்
அரவிந்

எங்களின் தாத்தாக்கள் தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே அவர்கள் தயாரித்த நெய்யை ஒரு பிராண்டாக மாற்றி, மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும் என்கிற இலக்குடன் இருந்திருக்கிறார்கள். வீட்டில் வைத்து, சிறிய அளவில் நெய் தயாரித்த காலத்திலேயே நிறுவனத்துக்கென்று ஒரு பெயர், லோகோ டிசைன் எல்லாம் செய்திருக்கிறார்கள். ஆனால், உற்பத்தியை அதிகரிப்பது பற்றி அவர்கள் யோசிக்கவில்லை.

1954-ம் ஆண்டு இரண்டாம் தலைமுறையினர் தொழிலில் இணைந்திருக்கிறார்கள். உற்பத்தியை அதிகரிப்பது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவை இரண்டாம் தலைமுறையினரின் இலக்காக இருந்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, உணவுப் பொருள்களுக்கு வழங்கப்பட்ட அக்மார்க் முத்திரை தரச்சான்று பெற்று அக்மார்க் நெய்யை மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறார்கள். அந்தத் தரச்சான்று மக்களுக்கு எங்கள் மீதான கூடுதல் நம்பிக்கையாக மாறியது.

அப்போது இருந்து இப்போது வரை தரத்தில் தான் எங்களின் முதல் கவனம். உற்பத்திக்கான இடுபொருள்களைத் தனியாக சோதனை செய்து எங்களுடைய நிறுவனத்தில் இருக்கும் முந்தைய தலைமுறையினரிடம் கொடுத்து குவாலிட்டிசெக் செய்யச் சொல்வார்கள். அவர்கள் திருப்தி அடைந்த பிறகுதான் டன் கணக்கில் நெய் தயாரிக்கும் பணிகளைத் தொடங்குவோம். தரத்தில் எந்த சமரசமும் செய்வது கிடையாது.

அதே போல, ஒரு நிறுவனத் துக்கு விளம்பரம் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்கள் எங்களுக்கு எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள். ஆரம்ப காலங் களில் இப்போது இருப்பது போன்று சிறிய வகை பாக்கெட் டுகள் எல்லாம் கிடையாது. 16 கிலோ, 4 கிலோ எனப் பெரிய டின்கள்தான் இருந்தது. அந்த டின்களில் எங்களுடைய நிறுவனத்தின் பெயரை வண்ணங்கள் கொண்டு கையால் எழுதியிருக்கிறார்கள். அதே தோற்றத்திலான எழுத்து வடிவத்தைதான் இப்போதும் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் பாக்கெட்டுகள், பாட்டில்கள் மற்றும் விளம்பரங்களில் பயன் படுத்துகிறோம்.

எங்கள் தாத்தாக்கள் கையால் பெயர் எழுதப்பட்ட டின்களை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக வியாபாரம் செய்யச் செல் வார்களாம். அவர்கள் செல்லும் பகுதியில் உள்ள மக்களை ஈர்க்க கூத்து நடத்துவார்களாம்; அந்தக் கூத்தின் முடிவில் நெய் வியாபாரம் செய்வார்களாம். இப்படி விளம்பரமே இல்லாத அந்தக் காலத்தில் வித்தியாசமான வியாபார உத்தியைப் பின்பற்றியிருக்கிறார்கள்.

மேலும், ஒரு ஊரில் இருக்கும் பெரிய கடை அல்லது முக்கிய நபர்கள் மூலம் வியாபாரம் செய்திருக்கிறார்கள். அதனால் அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை பல மொத்த வியாபாரிகள் எங்களுடன் கைகோத்து இருக்கிறார்கள்.

இரண்டாம் தலைமுறையினர் செய்த மற்றொரு மாற்றம் கேஸ் அடுப்புகளை பிசினஸில் அறிமுகம் செய்தது. 1980 வரை விறகு அடுப்புகள், கறி அடுப்புகளை வைத்துதான் நெய் தயாரிப்பு பணிகள் நடந்தது. அதனால் உற்பத்தி நேரம் அதிகமாக இருந்த தோடு, பணியாட்களுக்கு பாதுகாப் பற்ற சூழலும் இருந்தது.

இதில் மாற்றத்தை ஏற்படுத்த காங்கேயம் பகுதியில் கேஸ் அடுப்புகள் அறிமுகம் ஆனவுடன், பல சவால்களைக் கடந்து கேஸ் அடுப்புகள் பயன்படுத்த லைசென்ஸ் வாங்கி நிர்வாகத்தில் அதைப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கிறார்கள். அதனால் உற்பத் தித்திறன் அதிகரித்தது.

1994-ம் ஆண்டு, வெளிநாடுகளுக்கு நெய் ஏற்றுமதி செய்வதை எங்கள் நிறுவனம் தொடங்கியது. இப்படி எங்களுக்கு முந்தைய தலைமுறை யினர் பிசினஸில் எடுத்த ஒவ்வொரு முயற்சியுமே எங்கள் பிசினஸில் ஒரு மைல்கல்லாக இருந்தது” என்ற அரவிந், மூன்றாம் தலைமுறையினர் செய்த மாற்றங்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

90 ஆண்டுகள்... நான்கு தலைமுறைகள்... மணமணக்கும் ஆர்.கே.ஜி..! - 10

``2000-ம் ஆண்டுகளில் மூன்றாம் தலைமுறையினர் பிசினஸில் இணைந்தோம். நாங்கள் பிசினஸுக் குள் வந்தபிறகு, எங்களுடைய பிராண்டுக்கு என்று டீலர்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களை நிர்ணயித்து வியாபாரத்தைப் பெருக்கினோம். பெரிய பெரிய டின்களை சுருக்கி, 50 மில்லி லிட்டர் முதல் ஒரு கிலோ பாக்கெட்டுகள் வரை நெய் பவுச்கள் அறிமுகம் செய்தோம். அதனால் எளிய மக்களிடமும் எங்களால் சென்றடைய முடிந்தது.

2000-ம் ஆண்டு எங்களிடம் மூன்று யூனிட்டுகள் இருந்தன. ஒரு யூனிட்டில் ஒரு நாளைக்கு இரண்டு டன் நெய் உற்பத்தி செய்யலாம். நெய்யின் உற்பத்திச் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பது எங்கள் இலக்காக இருந்தது. அதனால் பாயிலர் முறையை அறிமுகம் செய்தோம்.

2005-ம் ஆண்டு புதியதாக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட தொழிற்சாலையைத் தொடங்கி, ஒரு நாளைக்கு 12 டன் நெய் தயாரிக்கும் நிலைக்கு முன்னேறினோம்.

நெய் தயாரிப்பின் அளவு அதிகரித்ததால் விற்பனை அளவையும் அதிகரிக்க வேண்டியிருந்தது. அதனால் எங்கள் விளம்பர உத்தியை மாற்றினோம். மீடியாக்களில் அதிக அளவில் விளம்பரம் செய்தோம். இதனால் விற்பனையும் அதிகரித்தது.

தொழிலில் மாற்றங்கள் நிகழும்போது, சில கருத்துகளைப் பெரியவர்களுக்குப் புரியவைப்பதில் சில சிரமங்கள் இருந்தன. ஆனால், எவ்விதத்திலும் லாபம் குறையாது என்ற நம்பிக்கையை மட்டும் அவர்களுக்குக் கொடுத்து தொடர்ந்து மாற்றங்களைச் செய்தோம். 2009-ம் ஆண்டுக்குள் உற்பத்தியில் ஒரு நிலைத்தன்மையை அடைந்தோம்.

நெய் தயாரிப்பில் மூலப்பொருள் மிக முக்கியமான ஒன்று. அதனால், விலை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு வியாபாரிகளுக்கு சரியான விலையைக் கொடுத்தோம். அதனால் இடுபொருள்கள் எங்களுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. மேலும் டீலர்கள், மொத்த வியாபாரிகளிடம் நல்ல ரிலேஷன்ஷிப் கையாள்வதால் விற்பனையில் சிக்கல் இல்லாமல் இருக்கிறது.

இப்போது இந்தியாவில் பல மாநிலங்களில் எங்களின் நெய்யைக் கிடைக்கச் செய்துள்ளோம். மொத்தம் 14 நாடுகளுக்கு நெய் ஏற்றுமதி செய்கிறோம். இப்போது நாள் ஒன்றுக்கு 30 டன் நெய் தயாரித்து வருகிறோம். இன்னும் மூன்று மாதங்களில் 60 டன் நெய் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க உள்ளோம். இணையம் மூலம் விற்பனை போன்ற விளம்பர உத்திகளையும் புகுத்தி யிருக்கிறோம்.

இப்போது எங்களுடன், நான்காம் தலைமுறையினர் இணையத் தொடங்கியிருக்கிறார்கள். உற்பத்தியை அதிகரித்து, விற்பனையை அதிகரிப்பது உள்ளிட்ட புது மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் அவர்களின் இலக்காக இருக்கிறது. ஆர்.கே.ஜி பிராண்டைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதே அடுத்த தலைமுறையினரின் திட்டம்” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.