Published:Updated:

`அன்று மாதம் ரூ.450, இன்று ஆண்டுக்கு ரூ.5 கோடி...' வெற்றி ரகசியங்களைப் பகிரும் நெல்லை தொழிலதிபர்!

பிசினஸ் வெற்றி
News
பிசினஸ் வெற்றி

நமக்கான தொழிலில் நமக்கு இருக்கும் கண்ணோட்டமும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்வதும் ரொம்பவே முக்கியம். எல்லா தோல்வியும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் என்ற கண்ணோட்டம் நமக்கிருந்தால், நமக்கு வணிகத்தில் முன்னேற்றமே!

`அன்று மாதம் ரூ.450, இன்று ஆண்டுக்கு ரூ.5 கோடி...' வெற்றி ரகசியங்களைப் பகிரும் நெல்லை தொழிலதிபர்!

நமக்கான தொழிலில் நமக்கு இருக்கும் கண்ணோட்டமும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்வதும் ரொம்பவே முக்கியம். எல்லா தோல்வியும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் என்ற கண்ணோட்டம் நமக்கிருந்தால், நமக்கு வணிகத்தில் முன்னேற்றமே!

Published:Updated:
பிசினஸ் வெற்றி
News
பிசினஸ் வெற்றி

+2 முடித்த கையோடு கேரளாவில் ஒரு மொத்தக் கடையில் மாதம் 450 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர், இன்று வருடத்துக்கு ரூ.5 கோடிக்கு வியாபாரம் செய்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்தானே! திருநெல்வேலியில் கடலை மிட்டாயைத் தயார் செய்து, விற்பனை செய்துவரும் கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். பிசினஸ் செய்ய நினைத்து, அதில் குதிக்கத் தயாராக இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

கோபாலகிருஷணன்
கோபாலகிருஷணன்

உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்...

ஒரு தொழிலைத் தொடங்கும் முன் நாம் எதற்காக பிசினஸ் என்பதைத் தேர்ந்தெடுத்தோம் என்ற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தக் கேள்வியை பலமுறை நமக்கு நாமே  கேட்டுக்கொண்டே இருந்தால்தான் தெளிவு கிடைக்கும். அந்தத் தெளிவு கிடைத்தாலே நமக்கு பிசினஸ் செட் ஆகுமா, நாம் என்ன மாதிரியான தொழில் தொடங்கப்போகிறோம், அதில் உள்ள சவால்கள் என்னென்ன, அதை எப்படியெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று நமக்கே தெரிந்துவிடும். 

திருமணமும் பிசினஸும் ஒன்று...

என்னைப் பொறுத்தவரை, தொழிலும் வீட்டில் நிச்சயிக்கப்படும் திருமணமும் ஒன்றுதான். கணவன்/மனைவி என்பவர் நம் வாழ்க்கை முழுவதும் சரிபாதியாக நம்முடன் இருக்கப் போகிறவர். நல்லது, கெட்டது என நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நம்முடன் சேர்ந்து அவருக்கும் அதில் பங்கு உண்டு. இப்படி நம் வாழ்க்கை துணையையே 10 நிமிடத்துக்கும் குறைவான ஒரு பார்வையிலும் சிறு உரையாடலிலும் நாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் ஆசைப்பட்டு பல முயற்சிகளையும் தியாகங்களையும் செய்து முழு உழைப்பை போடும் இந்தத் தொழிலையும் நாம் எந்த அளவுக்கு நம்புகிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு வெற்றியே!

பிசினஸ்
பிசினஸ்

தியாகங்களைச் செய்ய வேண்டும்...

தொழிலில் முன்னேற முயற்சி, உழைப்பு, கற்றல், தியாகம் இந்த நான்கும் இருந்தால், நாம் செய்யும் தொழிலில் நாம் முன்னேறி விடலாம். தொழிலைத் தொடங்குவதற்கு முதலில் நமக்கான தியாகங்களை நாம் செய்தே ஆக வேண்டும். ``வாரத்தில் ஐந்து நாள்கள் காலை 9 மணி முதல் மாலை 5 வரை வேலை; இரண்டு நாள் ரெஸ்ட்” என்பதில்லை பிசினஸ். தொழில் தொடங்கினால் வாரத்தின் எல்லா நாள்களிலும் எல்லா நேரங்களிலும் பிசினஸை பற்றிதான் சிந்தனை இருக்கும். இதற்காக குடும்பம் முதல் நமக்கான ஓய்வு நேரம் வரை நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். தொழில் தொடங்கும் முன்னும் பின்னும் நாம் எந்தளவுக்கு உண்மையாக முயற்சி செய்து அந்த முயற்சிக்கேற்ற உழைப்பை போடுகிறோமோ, அந்த அளவுக்கு நாம் தொழிலில் முன்னேறலாம். 

கண்ணோட்டம் அவசியம்...

நமக்கான தொழிலில் நமக்கு இருக்கும் கண்ணோட்டமும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்வதும் ரொம்பவே முக்கியம். எல்லா தோல்வியும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்ற கண்ணோட்டம் நமக்கிருந்தால், நமக்கு வணிகத்தில் முன்னேற்றமே! சரியான கண்ணோட்டத்துடன் அந்த இடத்தில் சரியாக நாம் எடுக்கும் முடிவும் தொழிலில் அவசியமானது. இது தோல்வி என்று நாம் கருதும் இடத்தில் நாம் எடுக்கும்‌ முடிவுதான் அது உண்மையாகவே தோல்வியா, இல்லை, இது அனுபவமா என்று தெரியவரும்.

Startup பிசினஸ்
Startup பிசினஸ்

ஒரு இழப்பு ஏற்பட்டால் அதைத் தாங்கிக்கொண்டு, எதனால் அந்த இழப்பு ஏற்பட்டது என்ற காரணத்தை ஒருமுறைக்கு பலமுறை அலசி ஆராய்ந்து தொடர்ந்து வியாபாரத்தை மேற்கொண்டால் அது தோல்வியாக இருக்காது. நாம் வியாபாரத்தில் கடந்து வந்த மோசமான அனுபவமாக மட்டுமே அது மாறும். வியாபாரம் எனில், எதிர்பாராத இடங்களில் லாபமும் இழப்பும் நிறையவே வரும். நாம் அந்தந்த நேரத்தில் சரியான கண்ணோட்டத்தில் அதைப் பார்த்தால் அது நமக்கு முன்னேற்றமாகவே அமையும்.

நான்‌ உப்பு விற்பனை தொடங்கி அப்பள வியாபாரம் வரை ஏறத்தாழ நான்கு தொழில்கள் செய்தேன்; ஆனால், இந்த நான்குமே ஒவ்வொரு விதத்தில் எனக்கு கைகொடுக்கவில்லை. அதனால் நான் செய்த வியாபாரத்தைதான் விட்டேனே தவிர, மொத்தமாக எனக்கிருந்த வியாபார எண்ணத்தை விடவில்லை‌. எல்லா தொழிலிலும் நான் நிறைய யுக்திகளைக் கற்றுக்கொண்டேன். எந்த தோல்வியையும் நாம் நமக்கான பாடமாக ஏற்றுக்கொண்டு நாம் அடுத்து செய்யும் தொழிலில் அதைச் செய்யாதிருந்தால் பிசினஸில் நம்மைவிட முன்னேறியவர்கள் யாருமில்லை.

வாடிக்கையாளர் திருப்தி...

வணிகத்தில் வாடிக்கையாளர் திருப்தி மிகவும் முக்கியமானது. அதற்கு நாணயமும் நன்றியும் நம்மிடம் இருக்க வேண்டும். சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் அவர்களுக்கு வேண்டிய வற்றை நாம் கொடுத்துவிட‌ வேண்டும். அந்த இடத்தில்தான் வாடிக்கையாளருக்கு நம் மீதான நம்பிக்கை என்பது உயரும். அவர்களிடமிருந்து உரிய நேரத்தில் நமக்கான பணம் வரவில்லை என்றாலும், அவர்கள் சூழ்நிலை அறிந்து கொஞ்சம் காத்திருப்பது நல்லது. நமக்கு உதவி செய்தவர்களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் நன்றி மறவாது இருந்தாலே நமக்கு பாதி வெற்றிதான்!

பிசினஸ்
பிசினஸ்
Business

முழுநேரமாகச் செய்யுங்கள்...

தொழில் தொடங்குவது என்று ஆரம்பித்தால், முழு நேரமாய் தொழில் செய்வதில் ஈடுபடுங்கள். வேலை செய்துகொண்டே சைடு பிசினஸ் என்று இறங்கினால், அதில் கவனம் செலுத்த முடியாமல் போகும். கடைசியில் அந்தத் தொழில் நமக்கான களமாக இருக்காது.

மேலும், பிசினஸ் நம் வாழ்க்கையின் அங்கமாகவே இருக்க வேண்டும். ஒருவர் வேலைக்குச் சென்றால், அந்த வேலையில் ஏதாவதொரு பிரச்னை வந்து அந்த வேலை பறிபோனால் என்ன செய்வது? என்று யாரும் வேலைக்குச் செல்லும்முன் யோசிப்பதில்லை; அந்த வேலையில் படிப்படியாய் முன்னேறி பெரிய பதவிகளை அடைய வேண்டும் என்ற நோக்கமே எல்லாரிடமும் இருக்கும்.

தோல்விக்கு அஞ்சாதீர்கள்...

அதேபோல்தான், பிசினஸும்; தொழிலை தொடங்கும் முன் தோல்வியில் முடியுமோ என்ற பயத்துடன் தொடங்கக் கூடாது. அந்தக் கேள்வியை நம்மிடம் யாராவது கேட்டாலும் அதைப் பற்றி நாம் யோசிக்கவே வேண்டாம். முதலில் தொழில் தொடங்கி அது தோல்வியில் முடிந்தால் என்ன செய்வது என்ற கேள்வியே தவறு. அப்படி யாராவது நம்மிடம் கேட்டால் அவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது.

நாம் ஆரம்பித்த தொழில் தோல்வியில் முடிந்தாலும் நாம் வேறு தொழில் செய்யலாம். அந்தத் தொழிலும் கைகொடுக்க வில்லையென்றால் இன்னொரு தொழில்கூட செய்யலாம். பிசினஸ் மீது தீராத வேட்கை இருந்தால் வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்காது; அதுவும் நாம் செய்யும் தொழிலில் ஒரு படிக்கல்லாக மாறும். அது வெற்றி என்றால் நாம் உழைத்ததற்கு சன்மானம். தோல்வி என்றால் அது நமக்கான அனுபவம். அந்த அனுபவம் நமக்கு என்ன சொல்லுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் நாம் செய்யும் தொழிலில் நாம் முன்னேறலாம். வெற்றி என்றோ தோல்வி என்றோ பாராமல் அதுவும் நமக்கு ஒரு அனுபவம் என்ற பக்குவம் வர வேண்டும். தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டுமே போதாது; அதற்கான உழைப்பை நாம் கண்டிப்பாகப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

பிசினஸ் ரகசியங்கள்
பிசினஸ் ரகசியங்கள்

குடும்பத்திரை வென்றெடுங்கள்...

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் உள்ளவர்கள் பிசினஸ் என்ற பேச்சை எடுத்தாலே அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அந்த எதிர்ப்பை மீறி தொழில் தொடங்க வேண்டும் எனில், நம் குடும்பத்தினருக்கு, ``இவன் எப்படியும் பிசினஸில் கண்டிப்பாக முன்னேறி வெற்றி பெறுவான்” என்ற நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு நமக்கு பிசினஸ் மீதான நம் ஆசையை வெளிப்படுத்த வேண்டும். நான் தொழில் தொடங்கும் முன் என் குடும்பத்தினரும் முதலில் எதிர்க்கத்தான் செய்தார்கள். ஆனால், தொழில் தொடங்குவதில் எனக்கு இருந்த ஆர்வமும் அதற்காக ஆரம்ப காலங்களில் நான் போட்ட உழைப்பும் என் குடும்பத்தினரை என் தொழிலுக்காக சம்மதிக்க வைத்தது.

கடன் வேண்டாம்...

முடிந்த வரையில் கடனைக் குறைப்பது நல்லது. தொழில் தொடங்குவதற்குமுன் அதற்கேற்றவாறு பர்சனல் லோன், ஹோம் லோன் போன்ற எந்தக் கடனும் இல்லாமல் இருந்தால் நல்லது. முதலீட்டுக்குத் தேவையான பணத்தை நம்மிடம் சொந்தமாக இருந்தால் நல்லது. அதனால் பணம் இருந்தால்தான் தொழில் தொடங்க முடியும் என்பதில்லை; நம்மிடம் எவ்வளவு பணம் உள்ளதோ, அதை வைத்து தாராளமாய் நம்ம பிசினஸைத் தொடங்கலாம். தவிர்க்க முடியாதபட்சத்தில் கடன் வாங்குவதும் அவசியமானது.

பிசினஸ்
பிசினஸ்

வேலையைவிட பிசினஸ் செய்வது மகிழ்ச்சி...

இதை எல்லாம் தாண்டி பிசினஸ் செய்யத் தயார் எனில், அதில் முழுமையாக இறங்கி செய்யுங்கள். உங்களுக்கு பிசினஸ் மீதான வேட்கையைக் காண்பியுங்கள். அதுவே உங்களை முன்னேற்ற பாதைக்கு இழுத்துச் செல்லும்.

யாரோ ஒருத்தருக்கு நம் உழைப்பைக் கொடுப்பதைவிட, நமக்காக நாம் உழைக்கும்போது அதில் வரும் பணம் ஒரு தனி சந்தோஷம்தான். வியாபாராம் என்பதும் ஒரு வகையான தனிக் கலை. ஆனால், அது ஓர் அனுபவக் கலை. எந்த பிசினஸ் செய்தாலும் அதை அனுபவித்து நிதானமாய் நமக்கு நாமே தட்டிக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேறுவது என்னைப் பொறுத்தவரை தனித்துவமான முன்னேற்றம்...’’ என்று பேசி முடித்தார்.

பிசினஸ் செய்ய நினைப்பவர்கள் இந்த யோசனைகளை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் நல்லது!

- கோமதி சங்கர்