
பிசினஸ் - ஏற்றுமதி
தேங்காய் சாகுபடியில், இந்திய அளவில் பொள்ளாச்சிதான் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி தென்னை மரங்களில் 3.5 கோடி மரங்கள் பொள்ளாச்சி யில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொள் ளாச்சி இளநீரின் வர்த்தகம் மிகப்பெரியது. இதை உணர்ந்துகொண்டு இளநீரை பாட்டிலில் அடைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த காமராஜ். பொள்ளாச்சியில் உள்ள அவரின் சக்தி கோ-கோ புராடக்ட்ஸ் தொழிற் சாலைக் குச் சென்றோம்.
தொழிற்சாலையை சுற்றிக் காண்பித்துக்கொண்டே பேசினார் காமராஜ். “என் சொந்த ஊர் பொள்ளாச்சி தான். கடந்த 25 ஆண்டு களுக்கும் மேலாகத் தென்னைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஆரம் பத்தில் தென்னை நார்க் கழிவுகளைக் கட்டிகளாக மாற்றி ஏற்றுமதி செய்து வந்தோம். பிறகு, தென்னை மட்டை ஏற்றுமதி செய்தோம். ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவது புதிய முயற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக் கிறோம். அதன்படி தேங்காய் பொடி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்தோம். அந்த வகையில் இளநீரை எப்படி பதப்படுத்தி, பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம் என்பதை நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வந்தோம். 2002-ம் ஆண்டே அதற்கான முயற்சியை தொடங் கினாலும், 2010-ம் ஆண்டில் இருந்துதான் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம்.

தொடக்கத்தில் பதப் படுத்தும் தொழில்நுட்பம் கைகூடாததால் நிறைய தோல்விகளைச் சந்தித்தோம். இடைவிடாது முயற்சி செய்து இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து தெரிந்துகொண்டோம். வேதிப்பொருள்கள் இல்லா மல், இயற்கை முறையில் பதப்படுத்தி வருகிறோம்.
நான் கொச்சியில் உள்ள மத்திய தென்னை வளர்ச்சிக் கழகத்தில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வருகிறேன். அதன் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் சந்தைப் படுத்துதல் குறித்து நேரடியாக ஆய்வு செய்தோம். 5,000 சதுர அடியில் 20 ஊழியர்களுடன் தொழிற்சாலையைத் தொடங்கினோம். படிப்படியாகக் கிடைத்த வளர்ச்சியால் இப்போது 25,000 சதுர அடியில் விரிவுபடுத்தியிருக்கிறோம்.
பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ சுற்றுவட்டாரங்களில் இருந்துதான் இளநீரை கொள்முதல் செய்கிறோம். சொந்தமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் சுமார் 1,200 ஏக்கரில் இருந்து இளநீர் கொள்முதல் செய்து வருகிறோம். தென்னந்தோப்புகளில் இருந்து பறித்த 24 மணி நேரத்துக்குள், இளநீரை கொண்டு வந்து தண்ணீரில் சுத்தம் செய்து ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் வெட்டிவிடுவோம். உடனடியாக அந்தத் தண்ணீரை, ஒரு தொட்டியில் 5 டிகிரி குளுமைப் படுத்துவோம். பிறகு, பாட்டிலில் அடைத்து சீல் செய்து, பிறகு 98.5 டிகிரி வெப்பத்தில் சூடுபடுத்துவோம். இறுதி வடிவத்துக்கு முன்பு தொடர்ந்து 3 - 4 நாள்கள், இளநீர் மற்றும் பாட்டிலில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா எனக் கண்காணிப்போம். மாற்றம் இருந்தால் அதை எடுத்துவிடுவோம். எந்த மாற்றமும் இல்லாவிடின் அதை அட்டைப் பெட்டியில் பேக்கிங் செய்து அனுப்பிவிடுவோம்.

இந்தத் தொழில்நுட்பத்தால் இளநீர் ஓராண்டு வரை கெடாமல் இருக்கிறது. எங்களுடைய சொந்த நிறுவனத்தின் பெயரிலும் கொடுக்கிறோம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, அவர்களின் பெயரிலும் உற்பத்தி செய்து கொடுக்கிறோம். வட இந்தியாவில் சுமார் 10 மாநிலங்களில் எங்களுக்கான டிஸ்ட்ரிபியூட்டர்கள் உள்ளனர். துபாய், சவூதி அரேபியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் நேரடியாக சந்தைப்படுத்துகிறோம். 200 மில்லியில் தொடங்கி 1 லிட்டர் வரை பல்வேறு வடிவங்களில் பேக்கிங் செய்கிறோம். அடுத்தகட்டமாகத் தென் இந்தியாவிலும் சந்தைப்படுத்துதலைத் தொடங்க உள்ளோம்.
கோடைக்கால சீஸனில் தினசரி 1 லட்சம் இளநீர் பாட்டில்களை உற்பத்தி செய்வோம். சீஸன் இல்லாத மற்ற காலகட்டத்தில் 15 சதவிகிதம்தான் உற்பத்தி செய்வோம். அதாவது தினசரி 50,000 இளநீரை வெட்டி, அவற்றில் இருந்து தினசரி 10,000 பாட்டில்கள் அளவுக்கு உற்பத்தி செய்வோம். இந்தக் காலகட்டத்தில் தென்னையில் உள்ள மற்றப் பொருள்களில்தான் கவனம் செலுத்துவோம்.
தென்னை விவசாயிகளே எங்களுக்கு தேங்காய் சர்க்கரை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். 4 கிராம் தொடங்கி 1 கிலோ பாக்கெட் வரை பல்வேறு வடிவங்களில் விற்கிறோம். தேங்காய் பாலில் இருந்து விர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறோம். இது மிகவும் மருத்துவக் குணம் நிறைந்தது. சமையலுக்குத் தேவைப்படும் தேங்காய் பால் எடுத்து பேக்கிங் செய்து விற்கிறோம். தேங்காய் மூலம் ஆரஞ்சு, மா, லிச்சி எனப் பல்வேறு சுவைகளில் தயாரித்த ஒரு புதிய பானத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். பிஸ்கட் உற்பத்திக்குத் தேவைப்படும் தேங்காய் பவுடரையும் பேக்கிங் செய்து விற்கிறோம்.
‘பலர் ஓராண்டு வரை கெடாது என்கிறீர்கள், ஆரோக்கியம் சுவை எல்லாம் கேள்விக்குறிதானே...’ எனக் கேட்கிறார்கள். எங்கள் பொருள்களை நாங்களும், மத்திய அரசின் பரிசோதனைக்கூடங்களிலும் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்து கிறோம். எங்களுடைய தொழில் நுட்பம் மிகவும் எளிமையானது. இளநீரை சூடுபடுத்துகிறோம். அவ்வளவுதான். அதன் காரண மாக, பச்சை தண்ணீர், சுடு தண்ணீருக்கு உள்ள வித்தியாசம் போல சுவையில் 5 சதவிகிதம் வரை மாற்றம் இருக்கும். மற்றபடி வைட்டமின், சோடியம், பொட்டாசியம், இரும்புசத்து ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்பது பரிசோதனை யில் தெரியவந்துள்ளது.

எங்கள் தொழிற்சாலையி லேயே ஒரு பரிசோதனைக் கூடம் உள்ளது. நாங்கள் தயாரிக்கும் பொருள்களில் ஒவ்வொரு பேட்சில் இருந்தும், மாதிரிகளை எடுத்து வந்து பரிசோதனை செய்வார்கள். பரிசோதனையில் நல்லபடியாக இருந்தால் மட்டுமே பேக்கிங் செய்வோம். தொடக்கத்தில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.80 லட்சத்துக்குதான் வர்த்தகம் செய்தோம். கடந்த 5 ஆண்டு களாக சராசரி யாக ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு வர்த்தகம் செய்கிறோம். தேங்கா யில் உள்ள மோனோ லாரின், லாரிக் ஆசிட் ஆகியவை மூலம் தயாரிக்கப்படும் மருந்து எப்பேற் பட்ட புண்ணாக இருந்தாலும் சரியாக்கிவிடும். விரைவில் அந்த மருந்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இப்படி தென்னையில் ஏராள மான வாய்ப்புகள் உள்ளன. கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சிக் கழகத்தை அணு கினாலே, நான் கூறிய அனைத்துப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், இயந்திரம், அதற்கான மானியம் வரை அனைத்து விவரங்களையும் கொடுத்து விடுவார்கள்” என்றார்.