நடப்பு
Published:Updated:

எம்ஓஐஎல்!

எம்ஓஐஎல்!

இந்த வாரம் நாம்  ஸ்கேன்  செய்ய  எடுத்துக் கொண்ட கம்பெனி மத்திய அரசு நிறுவனமான எம்ஓஐஎல் லிமிடெட் நிறுவனம்.

1896-ம் ஆண்டு சென்ட்ரல் ப்ராவின்ஸ் ப்ராஸ்பெக்டிங் சிண்டிகேட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962-ம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் நிறுவனமாக இங்கிலாந்தில்  சென்ட்ரல் ப்ராவின்ஸ் மேங்கனீஸ் கம்பெனி லிமிடெட் என பதிவு செய்யப்பட்டது. இந்திய மற்றும் பிரிட்டிஷ் அரசுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், இந்திய அரசுக்குச் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டு இந்த நிறுவனம் இந்திய அரசின் கீழ் வந்து சேர்ந்தது.

1977-ம் ஆண்டு இறுதியாக பங்குகள் இந்திய அரசின் வசம் வந்து சேர்ந்தபின்னர் இந்த நிறுவனம் ஒரு முழுமையான இந்திய அரசு நிறுவனமாக ஸ்டீல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் மினி ரத்னா அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

தற்சமயம் மஹாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் பந்த்ரா மாவட்டங்களில் ஆறு சுரங்கங்களையும், மத்தியப் பிரதேசத்தில் பால்காட் மாவட்டத்தில் நான்கு சுரங்கங்களையும் சேர்த்து பத்து சுரங்கங்களை தன்வசம் கொண்டுள்ளது எம்ஓஐஎல். இந்த சுரங்கங்கள் எல்லாம் ஏறக்குறைய நூறாண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதில் பால்காட் சுரங்கம் இந்த  நிறுவனத்தின் சுரங்கங்களிலேயே மிகப் பெரிய ஒன்றாகும்.

எம்ஓஐஎல்!

கம்பெனி எப்படி?

இந்த  நிறுவனம் இந்தியாவில் மேங்கனீஸ் தாதுப்பொருளைத்  தோண்டி எடுத்து விற்பனை செய்யும் ஒரு மிகப் பெரிய நிறுவனமாகும். கடந்த நிதியாண்டில் ஏறக்குறைய 1.1 மில்லியன் டன் அளவிலான மேங்கனீஸ் தாது உற்பத்தியை செய்தது இந்த நிறுவனம். இந்திய சந்தையில் சுமார் 50 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

ஸ்டீல் தொழிலும் மேங்கனீஸ் தொழிலும் ஒன்றையொன்று  பெரிய அளவில் சார்ந்துள்ளது. ஸ்டீலில் இருந்து கந்தகத்தைப் பிரித்தெடுக்கவும், ஸ்டீலுக்கு வலுச் சேர்க்கவும்  மேங்கனீஸ் முக்கியமாக உதவுகிறது.

கடந்த நிதியாண்டில் சுமார் 80 மில்லியன் டன் அளவில் இருந்த இந்திய ஸ்டீல் உற்பத்தி 2016-17-ம் ஆண்டில் சுமார் 150 டன் வரையிலும் செல்லலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிறுவனம் சுரங்கங்களில் இருக்கும் தாதுக்களின் இருப்பு இந்த அளவு தேவைகளை ஈடுகட்டுவதாகவே இருக்கிறது.
 
ஸ்டீல் உற்பத்தியின் அளவு அதிகமாக அதிகமாக மேங்கனீஸின் தேவையும் அதிகரிக்கவே செய்யும். பால்காட் மற்றும் கும்கான் சுரங்கங்களில் உயர் ரக மேங்கனீஸ் தாதுப் பொருள்கள் கிடைக்கின்றன. தற்சமயம் செய்யப்பட்டுவரும்  விரிவாக்கப் பணிகளின் மூலம் இந்த உயர் ரக மேங்கனீஸ் தாதுப்பொருள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 
இந்த வகை மேங்கனீஸ் தாதுக்களின் இந்தியத் தேவை இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இறக்குமதிக்கு மாற்றாக இந்தியாவிலேயே இந்த உயர்ரக வகைத் தாதுப்பொருள்கள் கிடைக்கும்போது விற்பனைக்குப் பஞ்சம் இருக்காது. அப்படி விற்பனை அதிகரித்தால் லாபமும் அதிகரிக்கும்.

எம்ஓஐஎல்!

கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனம்  சுமார் 1.1 மில்லியன் டன் அளவிலான மேங்கனீஸ் தாதுப்பொருளை சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுத்து விற்பனை செய்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த அளவினை 2 மில்லியன் டன் அளவாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. பால்காட் மற்றும் கும்கான் சுரங்கங்களில் ஏற்கெனவே இந்த விரிவாக்கத் திட்டங்கள் ஆரம்பித்து விட்டன. பிற இடங்களில் இருக்கும் சுரங்கங்களிலும் இந்த விரிவாக்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

எம்ஓஐஎல்!

இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு அதன் குறைந்த செலவு. குறைந்த செலவில் அதிக அளவிலான தாதுப் பொருள்களைக் கொண்டிருக்கும் சுரங்கங்களுமே இந்த நிறுவனத்தின் லாபத்துக்குப் பெரிய அளவில் வழிவகுப்பதாக அமைகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் சுரங்கங்கள் அனைத்துமே நல்ல சாலைவழிப் போக்குவரத்துடன் அமைந்துள்ளன.  இதனால், ஸ்டீல் போன்ற கமாடிட்டி களின் விலை நன்றாகக் குறையும் போதுகூட பெரிய அளவில் லாபக் குறைவை இந்த நிறுவனம் சந்திப்ப தில்லை. மேலும், இந்த நிறுவனம், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிட் மற்றும் ராஷ்டிரியா இஸ்பாட் நிகாம் லிமிடெட் போன்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து பெரோ அலாய் மற்றும் சிலிகோ மேங்கனீஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளது.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் சுமார் இரண்டு மில்லியன் டன் அளவிலான தாதுப்பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவில் எடுக்கப்படும் தாதுப்பொருளின் தரம் சற்று குறைவாக இருக்கிறபடியால் அதிகத் தரம் கொண்ட மேங்கனீஸ் தாதுப்பொருளை ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனங்கள் இறக்குமதி செய்துகொள்ள முயலலாம். உலக கமாடிட்டி சந்தையில் மேங்கனீஸ் தாதுப்பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் தருணத்தில் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதியையே விரும்பிச் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் இந்த நிறுவனத்தின்  லாபம் குறைய வாய்ப்புள்ளது.

எம்ஓஐஎல்!

ஏற்கெனவே நீண்ட நாட்களாகச் செயல்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள் என்பதால் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, உற்பத்திச் செலவும் அதிகரிக்கலாம். இதன் வசம் இருக்கும் சுரங்கங்களில் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பின் மட்டத்திலேயே மேங்கனீஸ் தாதுப்பொருள்கள் கொண்டவை யாகவும், மூன்றில் இரண்டு பகுதி நிலத்தின் அடியில் மேங்கனீஸ் தாதுப்பொருளை கொண்டவையாகவும் இருக்கின்றன. இந்த நிலைமையும் உற்பத்தி செலவு அதிகரிப்ப தற்கான வாய்ப்பு அதிகம் என்பதையே காட்டுகிறது. 

சுரங்கத் தொழில் என்பது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட  விஷயம். எனவே, அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைத்தேயாக வேண்டும். தவிர, சுரங்கத் தொழிலுக்கே உண்டான அதிகபட்ச தொழிலாளர் பிரச்னையும் உண்டு.

ரிஸ்க்குகள் பல இருக்கின்ற போதிலும் நீண்ட தொழில் அனுபவத்தையும், நல்லதொரு சந்தைப் பங்களிப்பையும் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் சிறிய எண்ணிக்கையில் வாங்கி நீண்ட கால முதலீட்டுக்காக வைத்துக் கொள்ளலாம்.

- நாணயம் ஸ்கேனர்
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே  வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்)