Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : அம்புஜா சிமென்ட்ஸ்!

கம்பெனி ஸ்கேன் : அம்புஜா சிமென்ட்ஸ்!

பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் நாம் ஸ்கேனிங் பகுதியில் அலசுவதற்கு எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் ஹோலிசிம் குழுமத்தின் அங்கமான அம்புஜா சிமென்ட்ஸ் கம்பெனி. அம்புஜா சிமென்ட்ஸ் இந்தியாவில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிமென்ட் தயாரித்து விற்பனை செய்துவரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். 1983-ம் ஆண்டு குஜராத் அம்புஜா சிமென்ட்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், ஹோலிசிம் நிறுவனத்தினரால் 2006-ம் ஆண்டு வாங்கப்பட்டு, அதன் ஓர் அங்கமாக இணைத்துக்கொள்ளப் பட்டது. ஹோலிசிம் நிறுவனம் சுவிட்சர்லாந்தில் 1912-ம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டு, உலகளாவிய அளவில் ஏறக்குறைய எழுபது நாடுகளில் 80,000 பணியாளர்களைக் கொண்டு சிமென்ட் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஹோலிசிம் நிறுவனம் சிமென்ட் உற்பத்தி மற்றும் டிஸ்ட்ரிப்யூஷனையும் செய்துவருகிறது. தவிர, சிமென்ட் துறை யில் உலகளாவிய அளவில் கன்சல்டிங், ரிசர்ச், டிரேடிங், இன்ஜினீயரிங் மற்றும் ஏனைய உதிரிவகைச் சேவைகளையும் வழங்கி வருகிறது.

‘என்னால் முடியும்’ (ஐ-கேன்) என்ற தன்னம்பிக்கை மிக்கதொரு வாசகத்தைக் கொண்டு சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் பல ஆண்டுகளாகப் பெரும் சாதனைகளைச் செய்துவரும் இந்த நிறுவனம், சாதாரண போர்ட் லேண்ட் சிமென்ட் மற்றும் போஸொ லோனா போர்ட்லேண்ட் என்ற இரண்டு வகை சிமென்ட் தயாரிப்பிலும் இந்தியாவில் முன்னணியில் இருக்கிறது. தனது தயாரிப்புகளை மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. தனிநபர் வீடு கட்டுவதானாலும்,  உலகளாவிய கட்டடக்கலை நிறுவனங்களின் புராஜெக்ட்டுகளானாலும்  இந்த நிறுவனத்தின் சிமென்ட் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

கடந்த இருபது வருடங்களில் கணிசமான உற்பத்தித் திறனை வளர்த்துக்கொண்டுள்ள இந்த நிறுவனம், தற்சமயம் ஆண்டொன்றுக்கு 27.25 மில்லியன் டன் சிமென்ட்டை உற்பத்தி செய்யும் வசதியினைக் கொண்டுள்ளது. தயாரித்த சிமென்ட்டை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து வாடிக்கையாள ருக்குத் தேவைப்படும் இடத்துக்குத் துரிதமாகவும், குறைந்த செலவிலும் சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவில் இடையூறு செய்யும் அளவிலும் எடுத்துச் செல்வதற்கு வசதியாக, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் நான்கு துறைமுக டெர்மினல்களைச் சொந்தமாக வைத்திருக்கும் பெருமையைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேன் : அம்புஜா சிமென்ட்ஸ்!

தொழில் எப்படி?

பொதுவாக, இந்தியாவில் சிமென்ட் துறையின் வளர்ச்சி ஏறக்குறைய எட்டு சதவிகித அளவில் இருந்து வருகிறது. 2011-லிருந்துஅடுத்துவந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் பாதியளவாக மாறியது. இருப்பினும் சீனாவைத் தவிர்த்து, ஏனைய உலக நாடுகளைச் சேர்த்து அளவீடு செய்தால், தனிமனித பயன் பாட்டின் அளவு ஏறக்குறைய 365 கிலோவாக இருக்கிறது. தற்சமயம் இந்த அளவு இந்தியாவைப் பொறுத்தவரையில், ஏறக்குறைய 191 கிலோவாக இருக்கிறது. இதுவே, இந்தியாவில் சிமென்ட் விற்பனைக்கு உண்டான வாய்ப்பைக் காட்டுவதாக இருக்கிறது. மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்புத் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கும் சூழ்நிலையில் சிமென்ட்டின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும்.

குறைந்துவரும் கச்சா எண்ணெய்யின் விலை இரண்டு விதத்தில் இந்தத் தொழிலுக்கு உதவும் எனலாம். ஒன்று, கச்சா எண்ணெய் விலை குறைவதால், பணவீக்கமும் குறைந்து அதன்மூலம் வட்டி விகிதங்களும் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வட்டி விகிதங்கள் குறையும்போது வீட்டு வசதிக் கடன் பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள் ளது. அதனால் வீடுகள் கட்டப்படும் எண்ணிக்கை அதிகரித்து, அதன்மூலம் சிமென்ட்டின் டிமாண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டா வதாக, உற்பத்தி செய்த சிமென்ட்டை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல அதிக அளவில் லாரிகள் பயன்படுத்தப்படு கின்றன. மேலும், சிமென்ட் தயாரிப்புக்கு மின்சாரம் அதிக அளவில் தேவைப்படு கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு என்பது தயாரிப்பு மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் என்ற இந்த இரண்டு செயல்பாடுகளிலுமே சிமென்ட் துறைக்கு லாபத்தை அதிகரிப்பதாக இருக்கும்.

கம்பெனி ஸ்கேன் : அம்புஜா சிமென்ட்ஸ்!

கம்பெனி எப்படி?

எல்லா சிமென்ட்டும் ஒரேமாதிரி யானதுதானே! இதில் என்ன வித்தியாசம் என்று சிமென்ட் ஒரு பொதுவான பொருளாக இருந்தது ஒருகாலத்தில். சிமென்ட் என்ற கமாடிட்டியை ஒரு பிராண்டாக மாற்றுவதற்கு முனைப்புடன் முதன்முதலில் முன்னோடியாகச் செயல்பட்ட நிறுவனம் இதுதான். பல்க் சிமென்ட் விற்பனையில் பெரிய அளவில் பிராண்டிங் என்பது அம்புஜா சிமென்ட்டுக்கு உதவியது.

பிராண்டிங் என்பது அதிக லாபம் தரும் ரீடெயில் சேல்ஸில் நல்லதொரு நிலையை அம்புஜா சிமென்ட்டுக்குத் தந்தது என்றால், டீலர்கள் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் நியமனம் செய்யும் போதும் பெரிய அளவிலான வெற்றியைத் தர உதவியது. பெரிய அளவிலான டீலர் நெட்வொர்க்கும் பாப்புலரான நம்பிக்கைக்குரிய பிராண்ட் இமேஜும்தான் அம்புஜா சிமென்ட்ஸுக்கு நல்ல லாபத்தைத் தருகிற இரண்டு முக்கியமான தூண்களாக இருந்துவருகின்றது.

கம்பெனி ஸ்கேன் : அம்புஜா சிமென்ட்ஸ்!

அம்புஜா சிமென்ட்ஸ் நிர்வாகம் உற்பத்தித்திறன் அதிகரிப்பு மற்றும் செலவுக் குறைப்பு என்ற இரண்டு விஷயங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, கண்ணும் கருத்துமாய்ச் செயல்பட்டு வருகிறது. சிமென்ட் என்பது எடை அதிகமும் குறைந்த விலையும் கொண்ட பொருளாகும். இதைத் தயாரிக்க உதவும் மூலப்பொருட் களுமே இதே குணாதிசயத்தைக் கொண்டவை. சிமென்ட் உற்பத்தி ஆலைகள் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்துக்கு அருகே இருந்தால், மூலப்பொருட்களுக்கான போக்குவரத்துச் செலவு குறையும். மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்துக்கு அருகே இருக்கிறேன் பேர்வழி என்று தொழிற்சாலைகளை நிறுவினால் சிமென்ட் தேவைப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களுக்கு சிமென்ட்டை கொண்டு செல்லும் செலவினம் அதிகமாகிவிட லாம். இந்த இரண்டையும் சமன் செய்வதில்தான் சிமென்ட் நிறுவனத்தின் செலவுக் குறைப்புக்கான வழி இருக்கிறது. செலவுக்குறைப்பில் முழுக்கவனம் செலுத்தும் அம்புஜா சிமென்ட்ஸ் தன்னுடைய உற்பத்தி வசதிகளை மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களுக்கு வெகு அருகிலேயே நிறுவியது.

இரண்டாவதாக, சுலபமாகக் குறைந்த செலவில் சிமென்ட்டை பல்க்காகச் சந்தைப்படுத்துதலுக்குக் கொண்டு செல்வதற்கு கடல் மார்க்கமே சிறந்தது என்பதைக் கண்டுகொண்ட அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம், தன்னுடைய தயாரிப்புகளைக் கொண்டுசெல்வதற்காக மட்டுமே சொந்தமாகத் துறைமுக டெர்மினல்களை உருவாக்கிக் கொண்டது. இதன்மூலமே சுலபத்தில் தன்னுடைய சிமென்ட் தயாரிப்பை மிகவும் டிமாண்ட் இருக்கின்ற சந்தையான மும்பை சந்தையில் இந்த நிறுவனத்தால் பெரிய அளவில் சந்தைப்படுத்த முடிந்தது. 

மேலும், தன்னுடைய சிமென்ட் உற்பத்திக்குத் தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துக்கொண்டதும் இந்த நிறுவனமேயாகும். இதனாலேயே போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் நல்லதொரு லாப அளவையும், உற்பத்தியாகும் பொருளை பயன்படுத்திக்கொள்ளும் திறனையும் கொண்டுள்ளது. ஏசிசி நிறுவனத்தில் கணிசமான பங்குகளைத் தன்வசத்தே அம்புஜா சிமென்ட்ஸ் வைத்திருப்பதும் ஒரு தனிச்சிறப்பு. நல்ல செயல்பாட்டுடனும், நல்ல நிதி நிலையுடனும் இருந்துவரும் சிறப்பான சிமென்ட் கம்பெனி இது.

கம்பெனி ஸ்கேன் : அம்புஜா சிமென்ட்ஸ்!

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

சிமென்ட் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப வியாபாரம் அதிகரிக்கவும், குறையவும் செய்யும் ஒரு பொருள். பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் தேக்கமடையும்பட்சத்தில் லாபக்கணக்குகள் பாதிக்கப்படு வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வீடு, கமர்ஷியல் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமானங்களின் வளர்ச்சியின் அளவே பெரிய அளவில் சிமென்ட் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக இருக்கும். பொருளாதாரம் சுணங்கினால் சிமென்ட் துறையில் வளர்ச்சி அவ்வள வாக இல்லாது போகலாம். கடந்த மூன்று வருடத்தில் சிமென்ட் துறையின் வளர்ச்சி தடைப்பட்டது இதனால்தான் என்பது கண்கூடாகத் தெரிகின்ற ஒரு விஷயம். அதேபோல, மூலப்பொருட் களைத் தோண்டியெடுக்கும் பணி என்பது அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு நடக்கவேண்டிய ஒரு விஷயமாகும். இதிலும் ஓரளவு ரிஸ்க் இருக்கவே செய்கின்றது.

இப்படி தடைகள் பல இருந்த போதிலும், மத்திய அரசின் உள்கட்ட மைப்புத் துறையிலிருக்கும் சிறப்புக் கவனமும் வளர்ச்சி குறித்த திட்டங்களும் நிச்சயமாக சிமென்ட் துறைக்கு நிறைய நல்ல விஷயங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என்றே நம்பலாம்.  மேலும், நீண்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம், இக்கட்டான சூழல்களைச் சமாளிக்கும் திறமைதனையும் பெற்றுள்ளது. அதனால், முதலீட்டாளர்கள் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை நீண்ட நாள் முதலீட்டுக்காக வாங்க ட்ராக் செய்யலாம்.

- நாணயம் ஸ்கேனர்
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே  வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்.)

உள்நாட்டில் கார்களின் விற்பனை குறைவு!

கடந்த அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு கார்களின் விற்பனை 2.55% குறைந்து 1,59,036 யூனிட்களாக இருக்கிறது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,63,199 யூனிட்களாக இருந்தது. மோட்டார் சைக்கிள் விற்பனையும் 8.73% குறைந்து 10,08,761 யூனிட்களாக இருக்கிறது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11,05,269 யூனிட்களாக இருந்தது. மொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை 3.61% குறைந்து 14,61,712 யூனிட்களாக இருக்கிறது. வர்த்தக வாகனங்களின் விற்பனையும் 2.97% குறைந்து 51,965 யூனிட்களாக இருக்கின்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு