Published:Updated:

கம்பெனி ஸ்கேன்!

டாபர் இந்தியா லிமிடெட்

கம்பெனி ஸ்கேன்!

டாபர் இந்தியா லிமிடெட்

Published:Updated:

இந்த வாரம் நாம் ஸ்கேனிங் பகுதியில் ஆய்வு செய்யப் போகிற நிறுவனம் 1884-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய 130 வருட பாரம்பர்யம் கொண்டுள்ள ஆயுர்வேதிக் மற்றும் நேச்சுரல் ஹெல்த் கேர் பொருட்களை வழங்கிவரும் எஃப்எம்சிஜி நிறுவனமான டாபர் இந்தியா லிமிடெட். 
உலகளாவிய அளவில் ஏறக்குறைய 250 தயாரிப்புகளை தன்வசத்தே கொண்டு ஹெர்பல் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பில் பெரியதொரு நிறுவனமாக முன்னணி வகிக்கிறது இந்த நிறுவனம். இது தனது தயாரிப்புகளை ஐந்து விதமான பிராண்டுகளின் மூலம் சந்தைப்படுத்துகிறது. தற்சமயம் கேசப் பராமரிப்பு, உடல் பராமரிப்பு, தோல் பராமரிப்பு, வீடுகள் பராமரிப்பு மற்றும் உணவு போன்ற துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

டாபர் என்ற மாஸ்டர் பிராண்ட் மூலமாக நேச்சுரல் ஹெல்த் கேர் தயாரிப்புகளையும், வாட்டிகா என்ற பிராண்டின் மூலம் பிரீமியம் ஹெல்த் கேர் தயாரிப்புகளையும், ஹஜ்மோலா என்ற பிராண்டின் மூலம் மனிதனுக்கு ஜீரணத்துக்கு உதவும் தயாரிப்புகளையும், ரியல் என்ற பிராண்டின் மூலம் பழச்சாறு மற்றும் குளிர்பான தயாரிப்புகளையும், ஃபெம் என்ற பிராண்டின் மூலம்  முக அழகு மற்றும் ஏனைய அழகு சாதனங்களையும் சந்தைப் படுத்தி வருகிறது.

இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் பெரிய அளவிலான எஃப்எம்சிஜி நிறுவனம் இது.  அதேபோல், குடும்ப உறுப்பினர் கள் நடத்தும் பிசினஸ் என்ற நிலையிலிருந்து புரபஷனல்கள் நடத்தும் பிசினஸாக வெற்றிகர மாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. 1884ல் ஆரம்பிக்கப்பட்டு 1940-ல் ஆயுர்வேதா மூலம் பெர்சனல் கேர் தயாரிப்புகளில் இறங்கி, 1994-ல் பொதுமக்களுக்கு பங்கு வெளியிட்ட இந்த நிறுவனம், 2012-ம் ஆண்டு பில்லியன் டாலர் விற்பனை இலக்கை கடந்தது.

கம்பெனி ஸ்கேன்!

தொழில் எப்படி?

எஃப்எம்சிஜியா, அது போட்டி நிறைந்த தொழிலாயிற்றே என்று அனைவரும் கேட்பீர்கள். போட்டிகள் நிறைந்த எஃப்எம்சிஜி  துறையிலுமே இந்த நிறுவனம் தன்னை ஆயுர்வேத மற்றும் மூலிகை சார்ந்த பொருட்களைத் தயாரித்து விற்கும் நிறுவனம் என வேறுபடுத்திக்காட்டி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதிலும், இந்த வேறுபட்ட  தொழிலில் நல்லதொரு பிராண்ட் என்ற அபிமானத்தைப் பெற்றிருப்பதால், பிராண்ட்கள் ஒரு மிகப் பெரிய தூணாக இந்த நிறுவனத்துக்கு இருந்து வருகிறது. தனது தயாரிப்புகள் இருக்கும் ஒவ்வொரு துறையிலும்  தனித்தன்மையுடன் விளங்குகிறது.

உதாரணத்துக்கு, பழச்சாறு சந்தையில் டாபரின் தயாரிப்பான ரியல் ஏறக்குறைய 50 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஆக்டிவ்,  அம்லா ஹேர் ஆயில்,  ச்யவன்ப்ரகாஷ், பபூல் டூத்பேஸ்ட், டாபர் ரெட் டூத் பேஸ்ட்,  குளூகோஸ்-டி, கிரைப் வாட்டர், ஹஜ்மோலா, டாபர் ஹனி, ஓடோமாஸ், ஓடோனில், ப்ராமிஸ் டூத் பேஸ்ட்,  சூப்பர் தண்டா ஆயில்,  வாட்டிகா டான் –ட்ரப் கன்ட்ரோல் ஷாம்பூ, வாட்டிகா ஹேர் ஆயில் போன்றவற்றை உள்ளடக்கிய பல பாப்புலரான பிராண்டுகளை தன்வசத்தே கொண்டுள்ள டாபர், அந்தத் துறைகளில் மிகவும் பிரபலமாகவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றதாகவும் இருக்கிறது.

நீண்ட நாட்களாக தொழிலில் இருப்பதால், எஃப்எம்சிஜி துறைக்கு மிக மிக முக்கியமான டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க்கை மிகவும் நேர்த்தியான அளவில் வைத்துக்கொண்டுள்ளது. உற்பத்திக்காக இந்தியாவில் பட்டீ (ஹிமாச்சல பிரதேசம்) மற்றும் பண்ட்நகர் (உத்தராஞ்சல்) என்ற இரண்டு இடங்களில் இருக்கும் இரண்டு பெரிய தொழிற்சாலைகளையும் சேர்த்து 11 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் நைஜீரியா, எகிப்து, துபாய், துருக்கி, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலும் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 5.3 மில்லியன் கடைகளின் மூலம் தன்னுடைய பொருட்களை விற்றுவரு கின்றது இந்த நிறுவனம். மொத்த விற்பனையில் இந்தியாவில் விற்பனை 68 சதவிகிதத்தையும், அயல்நாடுகளில் விற்பனையானது 32 சதவிகித பங்களிப்பையும் கொண்டுள்ளது.  இந்திய விற்பனையில் ஹேர் கேர் தயாரிப்புகள் 23 சதவிகிதமும், உணவுப் பொருட்கள் 18 சதவிகிதமும், ஹெல்த் சப்ளிமென்ட்ஸ் 18 சதவிகிதமும், ஓரல் கேர் 14 சதவிகிதமும் விற்பனைப் பங்களிப்பைக் கொண்டு உள்ளன.

போட்டி எப்படி?

எஃப்எம்சிஜி துறை போட்டிக்கு பெயர்போன துறையாகும். இந்தத் துறையில் முன்னணி நிலையில் இருக்கும் இந்த நிறுவனத்தின் ஹெல்த் சப்ளிமென்ட் பிராண்டில் ஆயுர்வேதிக் தயாரிப்பில் ச்யவன்பிராஷ் முதலிடத்திலும், டாபர் ஹனி பிராண்டட் தேன் விற்பனை பிராண்டில் முதலிடத்திலும், டாபர் குளூக்கோஸ்-டி குளூக்கோஸ் சந்தையில் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. டைஜஸ்டிவ் சந்தையில் ஹஜ்மோலா மற்றும் புதின் ஹாரா  பிராண்டட் ஹெர்பல் டைஜஸ்டிவ் விற்பனையில் முதலிடத்தில் இருக்கின்றன.

கம்பெனி ஸ்கேன்!

இருமல் மருந்து, கிரைப்வாட்டர் போன்ற வற்றில் ஆயுர்வேதிக் தயாரிப்பில் டாபரின் பிராண்டுகள் முதலிடத்தில் இருக்கின்றன. ஹேர் ஆயில் சந்தையில் வாட்டிகா ஹேர் ஆயில் பிராண்ட் இரண்டாம் இடத்திலும், வாட்டிகா ஷாம்பூ நான்காம் இடத்திலும் இடம்பெறும் பிராண்டுகளாக திகழ்கின்றது. ஓரல் கேர் தயாரிப்புகளில் டாபர் ரெட் தயாரிப்புகள் சந்தையில் மூன்றாவது இடத்தையும். பற்பொடி சந்தையில் டாபர் ரெட் இரண்டாவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஹோம் கேர் பிரிவில் ஓடோனில் முதலிடத்தை யும், ஓடோமாஸ் எனும் கொசுவுக்கான க்ரீம் முதலாவது இடத்தையும், சானி ப்ரஷ் டாய்லெட் கிளீனர்கள் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. அதேபோல், ஸ்கின் கேர் ப்ளீச்சுகளில் நம்பர் ஒன் பிராண்டாக டாபரின் தயாரிப்புகள் திகழ்கிறது. பழச்சாறு பிரிவில் இதன் பிராண்டான ரியல் ப்ரூட் ஜூஸ் முதலிடத்தில் இருக்கும் பிராண்டாக திகழ்கிறது. போட்டிகள் நிறைந்திருந்தாலும் பல்வேறு தயாரிப்புகளிலும் டாபர் முன்னணி வகிப்பது நல்ல லாபம் பார்க்க ஏதுவாக இருக்கும் என்று சொல்லலாம். 

கம்பெனி ஸ்கேன்!

வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் உண்டா?

2012-13ல் ஆரம்பிக்கப்பட்ட புராஜெக்ட் கோர் என்ற திட்டத்தின் கீழ் தன்னுடைய தயாரிப்புகளை நேரடியாக அதிக அளவிலான பார்மஸிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை தற்சமயம் நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்சமயம் 1.72 லட்சம் பார்மஸிகள் வழியாக விற்பனை செய்யப்பட்டுவரும் இதன் தயாரிப்புகளை 2.06 லட்சம் பார்மஸிகளாக உயர்த்த இந்தத் திட்டம் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல், கிராமங்களிலும் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்யும்பொருட்டு 2012-13-ம் ஆண்டு புராஜெக்ட் டபுள் என்ற திட்டத்தைக் குறிப்பிட்ட பத்து மாநிலங்களில் அறிமுகப் படுத்தியுள்ளது. 2011 மார்ச்சில் 14,865 கிராமங்களில் மட்டுமே கிடைத்துவந்த டாபரின் தயாரிப்புகள், செப்டம்பர் 2014 இறுதியில் ஏறக்குறைய 42,254 கிராமங்களில் கிடைக்க இந்த புராஜெக்ட் உதவியுள்ளது.

கம்பெனி ஸ்கேன்!

ரிஸ்க் ஏதும் உண்டா?

போட்டி என்பது ஒரு ரிஸ்க்காகவும், அழகு சாதனங்கள் பிரிவுக்கு பொருளாதார மந்தநிலை ஒரு ரிஸ்க்காகவும் திகழ்கிறது. ஆனாலும், கடந்த பத்து ஆண்டுகளை ஆராய்ந்தால், விற்பனையும், நிகர லாபமும் ஏறக்குறைய 19 - 23% (வருடாந்திர அளவில் அதிகரிப்பு) முறையே அதிகரித்தே வந்துள்ளது. எனவே, இந்தவகை ரிஸ்க்குகளை நீண்ட அனுபவம் உள்ள கம்பெனியின் நிர்வாகம் சமாளித்துவிடும் என்றே சொல்லலாம்.

நல்ல நிலையில் தன்னுடைய தயாரிப்புகளுக்கான சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தை நீண்ட கால முதலீட்டுக்காக முதலீட்டாளர்கள் ட்ராக் செய்து ஓர் அசாதாரண இறக்கம் சந்தையில் வரும்போது தங்களுடைய போர்ட் ஃபோலியோ வில் சேர்த்துக்கொள்ள பரிசீலனை செய்யலாம்.

மறைமுக வரி வசூல்  6.7% உயர்ந்தது!

கடந்த ஏப்ரல் - டிசம்பர் இடையிலான ஒன்பது மாதங்களில் மறைமுக வரி வசூல் 6.7% உயர்ந்துள்ளது. இது, சுமார் 3.78 லட்சம் கோடி ரூபாய். கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இது சுமார் 3.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுங்க வரி வசூலானது 9.5% உயர்ந்து 1.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் 1.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பொருளாதாரம் வளர்ந்து வருவதையே இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே  வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்.)