Published:Updated:

ஷேர்லக்: இன்ஃபோசிஸ் உஷார்!

ஷேர்லக்: இன்ஃபோசிஸ் உஷார்!

ஷேர்லக்: இன்ஃபோசிஸ் உஷார்!

ஷேர்லக்: இன்ஃபோசிஸ் உஷார்!

Published:Updated:

த்திரி வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க, இரவு எட்டு மணிக்கு மேல் நம் அலுவலகத்துக்கு வந்தார் ஷேர்லக். வந்தவரிடம் நாம் கேட்ட முதல் கேள்வி, ‘‘சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறதே, என்ன காரணம்?’’ என்பதே.

‘‘புதன்கிழமையன்று மேட் பிரச்னை மற்றும் சீர்திருத்தங்களில் (குறிப்பாக, ரியல் எஸ்டேட் மசோதா) பின்னடைவு போன்ற காரணங்களில் சென்செக்ஸ் புள்ளிகள் 723 புள்ளிகள் இறங்கியது. இவ்வளவுக்கும் புதன்கிழமை அன்றுதான் நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா பாஸானது. வெள்ளிக்கிழமை 505 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது. அதேநேரத்தில், ஒரு வாரக் கணக்கில் 95 புள்ளிகள்தான் ஏறி இருக்கிறது.

ஷேர்லக்: இன்ஃபோசிஸ் உஷார்!

மே 25-ம் தேதி வந்தால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. மேட் வரி, நான்காம் காலாண்டில் நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சி குறைவு, பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பெய்யும் என்கிற கணிப்பு, கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு, ரூபாய் மதிப்பு சரிவு போன்றவை பங்குச் சந்தையை நன்றாக இறக்கிவிட்டிருக்கிறது. இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் நடுத்தர காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் இதர நாடுகளைவிட வேகமாக வளரும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் இதை கவனிக்கத் தவறிவிடக் கூடாது!’’ என்றார்.

‘‘காலாண்டு முடிவுகள் எப்படி?’’ என்று கேட்டபடி சில்லென்ற தர்பூஸ் ஜூஸைத் தந்தோம்.

‘‘நிகர வாராக் கடன் அதிகரிப்பால் சவுத் இந்தியன் பேங்க்-ன் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 87% வீழ்ச்சிக் கண்டுள்ளது.

இதர வருமானம் ரூ. 2,655 கோடி அதிகரித்ததால், கோட்டக் மஹிந்திரா பேங்க்-ன் நிகர லாபம் 37.6% அதிகரித்து ரூ. 912.60 கோடியாக உயர்ந்துள்ளது.

நுகர்வு அதிகரித்ததால், டாபர் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 21.03% அதிகரித்து, ரூ.284.8 கோடியாக அதிகரித்துள்ளது.

சந்தை எதிர்ப்புக்கு ஏற்ப ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிகர லாபம் 16.7% அதிகரித்து ரூ.1,018 கோடியாக அதிகரித்துள்ளது.

நிகர வட்டி வருமானம் குறைந்ததால் பஞ்சாப் நேஷனல் பேங்க்-ன் நிகர லாபம் 62% வீழ்ச்சி கண்டுள்ளது’’ என்று சொன்னார். 

‘‘உரிமைப் பங்கு வெளியீடு வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘2015-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஆறு நிறுவனங்கள் சேர்ந்து மொத்தம் ரூ.11,434 கோடி உரிமைப் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டி இருக்கின்றன. இது 2008-ம் ஆண்டுக்குபிறகு மிக அதிக தொகை ஆகும். நடப்பு ஆண்டில் அதிகப்படி யாக டாடா மோட்டார்ஸ் ரூ.7,498 கோடி, ஃப்யூச்சர் ரீடெய்ல் ரூ.1,600 கோடி, ஜிஎம்ஆர் இன்ஃப்ரா ரூ.1,402 கோடி திரட்டி உள்ளன. இந்த முறையில் நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு செலவு குறைவு என்பதால் இன்னும் பல நிறுவனங்கள் உரிமைப் பங்கு வெளியீட்டில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ பங்குச் சந்தைக்கு முதலீடு வந்தால் சரி’’ என்றவர், ஜூஸை ரசித்தபடி ஒரு சிப் குடித்தார்.

ஷேர்லக்: இன்ஃபோசிஸ் உஷார்!

‘‘சிமென்ட் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறதே?’’ என்று வினவினோம்.

‘‘சிமென்ட்டுக்கான தேவைக் குறைவு, நிறுவனங்களின் லாபம் குறைவு போன்றவற்றால் பெரும்பாலான சிமென்ட் நிறுவனப் பங்குகளின் விலை கடந்த இரு மாதங்களாக குறைந்து வருகிறது. உதாரணத்துக்கு, அல்ட்ராடெக் (21%), ஏசிசி (18%), அம்புஜா (17%),  சிமென்ட் (12%) பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் சுமார் 8.5% குறைந்திருக்கிறது. சிமென்ட் கம்பெனி பங்குகளின் விலை குறுகிய காலத்தில் இன்னும் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அனலிஸ்ட்கள் தெரிவிக்கிறார்கள்’’ என்று விளக்கம் தந்தார்.  

‘‘இந்திய பங்குச் சந்தையில் எஃப்ஐஐகளின் முதலீடு எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டோம்.

‘‘வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பு (மேட்) பெரும் பிரச்னையாக இருக்கிறது.  இந்த மேட் வரி விதிப்புக்கு இடைக்கால தடை விதித்து பாம்பே ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அடுத்த விசாரணை ஜூன் 23-ம் தேதி நடக்கிறது. இருந்தாலும் எஃப்ஐஐகளின் முதலீடு இந்திய சந்தையிலிருந்து தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 16-க்கு பிறகான 15 வர்த்தக தினங்களில் ஒரே ஒரு நாளில் (ஏப்ரல் 21) மட்டும் எஃப்ஐஐகளின் நிகர முதலீடு பாசிட்டிவ்-ஆக இருந்தது. மற்ற நாட்களில் எல்லாம் மைனஸ்தான். இந்த 15 நாட்களில் எஃப்ஐஐகளின் நிகர முதலீடு ஏறக்குறைய ரூ.1,760 கோடியாக உள்ளது. இதே நாட்களில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் நிகர முதலீடு  பாசிட்டிவ்-ஆக இருந்தது.  அவை பங்குச் சந்தையில் செய்திருந்த முதலீடு ரூ.13,670 கோடியாக இருக்கிறது. அதாவது, சந்தை பெரிதாக கீழே விழாமல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தான் தாங்கி இருக்கிறது.

ஆனால், முடிந்த மார்ச் காலாண்டில் எஃப்ஐஐ முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. 2014 டிசம்பர் நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் அந்நிய நிதி நிறுவனங் களின் முதலீடு ரூ.18.3 லட்சம் கோடியாக இருந்தது. இது 2015 மார்ச் மாதம் ரூ.19.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஹெச்டிஎஃப்சி-ன் பங்கு மூலதனத்தில் எஃப்ஐஐகளின் பங்களிப்பு 79.65 சதவிகிதமாகவும், டாடா மோட்டார்ஸ் 56.18%, ஜீ என்டர்டைன்மென்ட் 49.98%, ஹெச்டிஐஎல் 49.03%, ஐடிஎஃப்சி 47.38 சதவிகிதமாகவும் உள்ளன’’ என்று சொன்னார்.

‘‘ஐடி பங்குகளின் மதிப்பீடு எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டோம்.

‘‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் ஐடி நிறுவனப் பங்குகளின் மதிப்பீடு கவர்ச்சி கரமாக மாறி இருக்கிறது. அதேநேரத்தில், பங்குத் தரகு நிறுவனமான யுபிஎஸ், இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கின் ஒரு வருட இலக்கு விலையை ரூ.1600 என குறிப்பிட்டுள்ளது. இன்ஃபோசிஸ் பங்கின் இன்றைய விலை ரூ.1,960-ஆக உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டின் மீது குறிப்பாக, அதன் 2020-ம் ஆண்டுகான இலக்கு மீது நம்பிக்கை இல்லாமல் இப்படி பங்கின் இலக்கு விலையைக் குறைத்து நிர்ணயித்து உள்ளது. இன்ஃபோசிஸ் முதலீட் டாளர்கள் உஷார்!’’என்றவரிடம், ‘‘அதானி குழுமத்தின் ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்க திட்டத்தில் என்ன பிரச்னை” என்று கேட்டோம்.

‘‘இந்த திட்டத்துக்கு  இங்கிலாந்தைச் சேர்ந்த வெர்ஜின் குழும நிறுவனர் சார்லஸ் பிரான்ஸன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த சுரங்கங்கள் உலகப் பாரம்பரியம் மிக்க கிரேட் பேரியர் ரீஃப்-ஐ அழித்துவிடும் என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த வங்கிகள் கடன் தர முன் வரவில்லை. யுனெஸ்கோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் திட்டமே கேள்விக்குறியாகலாம்.

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படும் அதானி என்ன செய்வார் என்று பார்ப்போம்” என்று புறப்படத் தயாரானவர், ‘‘சந்தை இன்னும் ஒரு நிலைக்கு வரவில்லை என்பதால் இந்த வாரம் கவனிக்க வேண்டிய பங்குகள் எதுவும் இல்லை'' என்று சொல்லிவிட்டு, விருட்டென்று புறப்பட்டார்.