Published:Updated:

ஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட் பங்குகள் உஷார்!

ஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட் பங்குகள் உஷார்!

பிரீமியம் ஸ்டோரி

ழக்கமான நேரத்துக்கு முன்பாகவே வந்த ஷேர்லக்கை இன்ப அதிர்ச்சியுடன் வரவேற்று, உட்கார வைத்தோம்.  ‘‘விறுவிறு வென்று உயர்ந்த பங்குச் சந்தை மீண்டும் சரியத் தொடங்கி இருக்கிறதே?’’ என்றோம். இப்படி ஒரு கேள்வியை நாம் கேட்போம் என்று தெரிந்தவர்மாதிரி, உடனே பதில் சொல்லத் தயாரானார்.

‘‘இந்த வாரம் சந்தை சரிய வெளிக்காரணங்களைவிட உள்காரணங்களே அதிகம். முக்கியமாக, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்தே சலசலப்பு. சுஷ்மா சுவராஜ் பிரச்னை, வசுந்தரா ரஜே பிரச்னை, மத்தியப்பிரதேசத்தில் வியாபம் சர்ச்சை எனப் பல பிரச்னைகள் நாடாளுமன்றத்தை முடக்கிப் போட்டுவிட்டன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் சமாளிக்க முடியாமல் பிஜேபி கூட கொஞ்சம் திணறத்தான் செய்கிறது. தினமும் நாடாளு மன்றமே நடக்குமா என்கிற நிலையில், முக்கிய சீர்திருத்தங்கள் எல்லாம் இந்தத் தொடரில் நிறைவேறுமா என்கிற சந்தேகம் பலருக்கும் வரவே, புதிய முதலீட்டைச் செய்யாமலும், பழைய முதலீட்டைக் கொஞ்சம் எடுக்கவும் செய்திருக்கிறார்கள். அடுத்த வாரத்திலும் இந்த சலசலப்பு ஓய்ந்தால்தான், சந்தை மேலே செல்லும்.

ஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட்  பங்குகள் உஷார்!

ஆனால், வரும் வாரத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன. ஒன்று, வியாழக் கிழமை அன்று வரவிருக்கும் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி. பெரிய அளவில் ரோல் ஓவர் இருக்க வாய்ப்பில்லை என்பதே இப்போதைக்குத் தெரியும் நிலைமை. தவிர, வருகிற 29, 30 தேதிகளில் அமெரிக்காவில் ஃபெடரல் கூட்டம் இருக்கிறது. வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறித்த அறிவிப்பு இந்தக் கூட்டத்திலேயே வருமா அல்லது செப்டம்பர் வரை தள்ளிப் போகுமா என்கிற கேள்விக்கு இப்போது துல்லியமான பதில் இல்லை என்றாலும், இதன் காரணமாக சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்! எனவே, டிரேடர்கள் உஷாராக இருப்பது அவசியம்’’ என்றவரை, மாடியில் இருக்கும் கேன்டீனுக்கு அழைத்துச் சென்றோம். தட்டுவடையும், டீயும் ஆர்டர் சொல்லிவிட்டு, மீண்டும் பேசத் தொடங்கினோம்.

“காலாண்டு முடிவுகள் எப்படி?'' என்று கேட்டோம்.

‘‘இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸ்-ன் முதல் காலாண்டு முடிவு, கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்ததாக வந்திருக் கிறது. அந்தக் காலாண்டில் அதன் நிகர லாபம் 5%, வருவாய் 12.4% அதிகரித்துள்ளது. இதற்கு நிறுவனம் சாராத சிஇஓ-வான விஷால் சிக்காவின் நடவடிக்கை கள்தான் காரணம் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். இதுவரை வந்துள்ள ரிசல்டுகளை வைத்துப்  பார்க்கும்போது விற்பனை 10 சத விகிதமும், செயல்பாட்டு லாபம் 15%மும் உயர்ந்துள்ளது. இது வளர்ச்சிக்கான அறிகுறியாகத் தெரியவில்லை. நிறுவனங்கள் செலவைக் குறைத்தே இந்த நிலையை எட்டியுள்ளன என நினைக்கிறேன்’' என்றவரிடம், தட்டுவடையையும் டீயையும் வைத்தோம். 
 
‘‘சன் பார்மா பங்கின் விலை ஒரேநாளில் 15% இறங்கி இருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘இந்த நிறுவனத்துடன் ரான்பாக்ஸி லேபாரட்டரீஸ் இணைக்கப்படுகிறது. அதற்கான செலவுகளால் 2016-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் கணிசமாகக் குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் பங்கின் விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதே நேரத்தில், ஜூன் காலாண்டில் சன் பார்மாவில் எஃப் ஐஐக்களின் பங்கு மூலம் 18.82 சதவிகிதத் திலிருந்து 23.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது’’ என்று விளக்கம் தந்தார் டீயை உறிஞ்சிக் குடித்தபடி.

‘‘அதானி குழுமப் பங்குகளில் முதலீட்டை எல்ஐசி அதிகரித்து உள்ளதே?’’ என்றோம் சற்று ஆச்சர்யத்துடன்.

ஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட்  பங்குகள் உஷார்!

‘‘ஜூன் காலாண்டில் அதானி பவர், அதானி போர்ட் அண்ட் எஸ்இஇசட் நிறுவனங்களில் எல்ஐசி முதலீட்டை 2 சத விகிதத்துக்கும் (சுமார் 2.05 கோடி பங்குகள்) அதிகமாக உயர்த்தி உள்ளது. இதையும் சேர்த்தால் இந்த நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு முதலீட்டு மதிப்பு ஏறக்குறைய ரூ.172 கோடியாக உள்ளது. எல்ஐசி நிறுவனம் என்ன துணிச்சலில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்கிறது என்று புரியவில்லை. மேலிடத்திலிருந்து தரப்படும் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், இதெல்லாம் மக்கள் கட்டிய  பிரீமியம் பணம். அதை அவர்களுக்குத் திரும்பத் தரவேண்டிய கடமை எல்ஐசிக்கு உண்டு என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை’’ என்றார் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி.

‘‘நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவற்றின் நிறுவனர்கள் 100 சதவிகித பங்கு களையும் அடமானம் வைத்திருக் கிறார்களாமே?’’ என்றோம் கொஞ்சம் அதிர்ச்சியுடன்.

‘‘பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள 41 நிறுவனங்களின் நிறுவனர்கள், தங்கள் வசம் உள்ள பங்குகளில் 100 சதவிகிதத்தையும் அடமானம் வைத்திருக்கிறார்கள். பிஎஸ்இ இணையத்தள விவரப்படி, பார்தி ஷிப்யார்ட், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், ஐஎல்&எஃப்எஸ், பிபாவ் டிபென்ஸ், ஆஃப்ஷோர் இன்ஜினீயரிங்,குஜராத் என்ஆர்இ கோக், ஐவிஆர்சிஎல் போன்றவை இதில் முக்கிய நிறுவனங்கள். இந்தப் பங்குகளில்  முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது’’ என்றார்.

“ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதைக் குறைத்துள்ளதே?'' என்றோம்.

“நாட்டில் பொருளாதார மந்தநிலை தொடர்வதால், நாட்டின் முக்கிய நகரங் களில் மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை கணிசமாக வீழ்ச்சி கண்டு உள்ளது. மேலும், கட்டி முடித்து, விற்காத வீடுகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குத் தரும் கடனை வங்கிகள் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. 2015, மே 29-வுடன் முடிந்த ஓராண்டு காலத்தில் வங்கிகள் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் 7.5 சதவிகிதம்தான் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இந்த வளர்ச்சி 17.8 சதவிகிதமாக இருந்தது''  என்று கிளம்பத் தயாரானவர், திடீரென நம்மிடம் ‘‘பங்குச் சந்தை கட்டண பயிற்சி வகுப்பு நடத்துகிறீர்களாமே! தற்செயலாக ஒருவரை சந்தித்தபோது, அவருக்கு நீர் அனுப்பிய எஸ்எம்எஸ்ஸைக் காட்டினார்’’ என்றார்.

‘‘உண்மைதான். ஆனால், எல்லா சீட்டுகளும் காலி ஆகிவிட்டன. இனி நடக்கவிருக்கும் கட்டண பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த இணையதள முகவரியில் (http:/bit.ly/NSMTclass) தங்கள் பெயரை பதிவு செய்துகொண்டால், அடுத்தமுறை கட்டண பயிற்சி வகுப்பு நடக்கும் போது அவசியம் தெரியப்படுத்துவோம்’’ என்றோம். ‘‘அட, நீர் செய்வது நல்ல சேவைதான்’’ என்று நம்மைப் பாராட்டிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

ஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட்  பங்குகள் உஷார்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு