Published:Updated:

ஷேர்லக்: உஷார், அக்டோபர் எஃபெக்ட்!

ஷேர்லக்: உஷார், அக்டோபர் எஃபெக்ட்!

ந்ததும் வராததுமாக டேபிளில் இருந்த தலையங்கத்தைப் படித்துப் பார்த்தார் ஷேர்லக். ‘‘சபாஷ், சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்! வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமலே இருக்கும் இந்த அரசின் மீதும், கடவுள் வரம் தந்தாலும் பூசாரிக்கு மனசில்லை என்கிற ரீதியில் நடக்கும் வங்கிகள் மீதும் சரியான சாட்டையடி தந்திருக்கிறீர்கள்’’ என்று புகழ்ந்தவரை நிறுத்தி, பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்று கேட்டோம்.

‘‘ஆர்பிஐ எதிர்பார்த்ததைவிட அதிகமாக வட்டியைக் குறைத்தது, வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்களுக்கு ‘மேட்’ வரியில் சலுகை என பல விஷயங்கள் இந்திய பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றன. அதேநேரத்தில், அமெரிக்காவில் வட்டி விகித அதிகரிப்பு என்கிற எதிர்பார்ப்பு நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் கடந்த 2008, 1992,     1990-ம் ஆண்டுகளில் நடந்ததுபோல, அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தை பெரிய சரிவை சந்திக்க கூடும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். அதாவது, இந்த ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் முறையே 24%, 11%, 9% இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதேபோல் இந்த அக்டோபர் மாதத்திலும் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. முடிந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அதிக பாசிட்டிவ் ஆக இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அக்டோபரில் சந்தை ஒரு ரேஞ்ச் பவுண்டில்தான் செயல்படக்கூடும். எனவே, உஷார்’’ என்று எச்சரிக்கைப்படுத்தினார்.

ஷேர்லக்: உஷார், அக்டோபர் எஃபெக்ட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘சந்தை ஏற்றத்திலிருந்தும் மெட்டல் பங்குகளின் விலை இறக்கம் கண்டிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘சர்வதேச அளவில் பல்வேறு கமாடிட்டி பொருட்களின் விலை இறக்கம் கண்டிருக்கிறது. அந்த வகையில் லண்டன் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கிளென்கோர் (Glencore) நிறுவனப் பங்கின் விலை அண்மையில் கணிசமான இறக்கத்தைக் கண்டது. கிளென்கோர் நிறுவனம், ஒருங்கிணைந்த கமாடிட்டி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது. சீனாவில் பொருளாதார மந்தநிலை காணப்படுவதால், கமாடிட்டிக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் உலக அளவில் கமாடிட்டி தொடர்பான நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டுவருகிறது. இந்தியாவில் வேதாந்தா, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துள்ளது. எனவே, மெட்டல் பங்குகளில் இப்போது புதிதாக நுழைவது சரியாக இருக்காது. ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் நீண்ட காலம் பொறுக்க முடியும் எனில், கொஞ்சம் கொஞ்சமாக ஆவரேஜ் செய்யலாம்’’ என்று யோசனை தந்தார்.

‘‘டாடா மோட்டார்ஸின் தரக்குறியீடு குறைக்கப் பட்டிருக்கிறதே?’’ என்றோம் சற்று ஆச்சரியத்துடன்.

‘‘சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான எஸ்&பி ரேட்டிங்ஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தரக்குறியீட்டை பாசிட்டிவ் என்பதிலிருந்து ஸ்டேபிள் என மாற்றியிருக்கிறது. சீனாவின் பொருளாதார மந்தநிலை, ஜாக்குவார் லேண்ட் ரோவரின் மூலதனச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் ரேட்டிங்கைக் குறைத்திருக்கிறது. அதேநேரத்தில், புதிய கார்கள் அறிமுகம் மற்றும் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த நிறுவனத்தின் நிதிநிலை செயல்பாடு 2017-ம் ஆண்டில் மேம்படும் என எஸ்&பி ரேட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளது’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து ஐடி நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனவே?’’ என்று வினவினோம்.

‘‘ஐடி நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவாக ரூ.40,602 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2014 ஆகஸ்டில் ரூ.29,668 கோடியாக இருந்தது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம், இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததே. எனவே, கரன்சி மார்க்கெட்டை தொடர்ந்து ஃபாலோ பண்ணும் திறமை இருப்பவர்கள் இந்த விளையாட்டில் பங்கு பெறலாம்’’ என்றார். 

‘‘ஆர்பிஐ நிதிக் கொள்கையில் ரெப்போ ரேட் குறைப்பு தவிர்த்து வேறு ஏதாவது முக்கிய விஷயங்கள் இருக்கின்றனவா?’’ என்று கேட்டோம்.

‘‘பல விஷயங்கள் இருக்கிறது. அரசுக் கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கான (எஃப்ஐஐக்கள்) முதலீட்டு வரம்பை 5 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ரூ.1.2 லட்சம் கோடி அளவுக்கு எஃப்ஐஐக்கள் அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். அடுத்து, வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு வழங்கும் கடனுக்கான ரிஸ்க் வெயிட்டேஜ் தற்போது 50 சதவிகிதமாக உள்ளது. இதனைக் குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், கேன்ஃபின் ஹோம்ஸ், திவான் ஹவுஸிங், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் அடையும்’’ என்றார் உற்சாகமாக.   

‘‘முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளதே?’’ என்று கேட்டோம் சற்று வருத்தத்துடன்.

‘‘உருக்கு உற்பத்தி குறைவு, நிலக்கரி, சிமென்ட், மின்சார உற்பத்தியில் மந்தநிலை போன்றவற்றால் முடிந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி 2014-ம் ஆண்டின் இதே மாதத்தில் 5.9 சதவிகிதமாக இருந்தது’’ என்றார்.

‘‘வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதே?’’ என்றோம் மகிழ்ச்சியுடன்.

‘‘மொரிஷியஸ் நாட்டை சேர்ந்த  கேசில்டன் இன்வெஸ்ட்மென்ட் (Castleton Investment) நிறுவனம் ‘மேட்’ வரிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், மத்திய அரசு கடந்த புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்துக்கு ‘மேட்’ வரி கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் சொன்னது. இதனால் சந்தை ஏற்றம் கண்டது’’ என்றவர் சிறிது யோசித்துவிட்டு, ‘‘அக்டோபர் எஃபெக்ட் எப்படி இருக்குமோ தெரியவில்லை. எனவே, ஃபாலோ செய்ய வேண்டிய பங்குகளை பிறகு சொல்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, சட்டென்று வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார்.