நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும்முன் கேட்க வேண்டிய 12 கேள்விகள்..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குச் சந்தை முதலீட்டுக் குருக்களில் முக்கியமானவர் சார்லி முங்கர். பங்குச் சந்தை முதலீடு பற்றி அவர் சொல்லும்போது, “எந்த புத்திசாலித்தனமான பைலட்டும், அவரது திறமை மற்றும் அனுபவம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், விமானத்தை இயக்கும் முன் ‘செக்லிஸ்ட்’ (Checklist) பட்டியலைப் பயன்படுத்தத் தவறுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அர்த்தம், எந்த ஒரு பங்கைத் தேர்வு செய்யும் முன்பும் ஒரு பட்டியலைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்.

ஜி.எஸ்.ராஜேஷ் குமார் 
ஈக்விட்டி அனலிஸ்ட், 
Rkgcapitalgains.com
ஜி.எஸ்.ராஜேஷ் குமார் ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com

அந்த வகையில் ஒரு முதலீட்டாளர் தனக்குத் தானே ஒரு பட்டியலைத் தயார் செய்து கொண்டு, அந்தக் கேள்விகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும்பட்சத்தில் மட்டுமே அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்ய வேண்டும்.

வெற்றிகரமான பங்கு என்பது தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித் தருவதாக உள்ளது. லாபம் தரும் பங்கைத் தேர்வை செய்ய முதலீட்டாளர் ஒருவர் தனக்குத் தானே கேட்க வேண்டிய முக்கியமான 12 கேள்விகள் வருமாறு...

1. நிறுவனம் என்ன தொழிலில் ஈடுபட்டு வருகிறது..?

ஒரு நிறுவனம் என்னென்ன பொருள்களைத் தயாரிக்கிறது/ என்னென்ன சேவைகளை அளிக்கிறது அல்லது இரண்டிலும் ஈடு பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் தொழில் மாடல் முதலீட்டாளருக்குப் புரிவதாக இருப்பது அவசியம். மேலும், ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் அதிகம் விற்பனையாகும் பொருள்கள்/ பிராண்டுகள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

2. நிறுவனத்தை நடத்துவது யார்?

நிறுவனத்தின் நிறுவனர்கள் (Promoters) / உரிமையாளர்கள் யார் என்பதைக் கவனிக்க வேண்டும். நிறுவனம் நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகிறதா, குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களைவிட நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட அதிக வாய்ப்புள்ளது. நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மற்றும் நிர்வாகக் குழுவில் யார் இடம்பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, செபி அமைப்பு அல்லது வேறு ஏதாவது ஓர் அரசு அமைப்பு, அந்த நிறுவனத்தின் அபராதம் ஏதும் விதித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்; சிக்கலுக்குரிய அல்லது மோசடி புகாரில் சிக்கிய யாராவது இடம் பெற்றிருந்தால் அந்தப் பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும்முன் கேட்க வேண்டிய 12 கேள்விகள்..!

3. பங்கு முதலீட்டாளர்கள் யார்..?

ஒரு நிறுவனப் பங்கில் யார் முதலீடு (Shareholding Pattern) செய்திருக்கிறார்கள் என்கிற விவரத் தைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டு முதலீட் டாளர்கள் (FIIs), உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர் களாக காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், வங்கிகளின் முதலீடு எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது எனக் கவனிக்க வேண்டும். இவர்களின் முதலீடு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பங்கில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

4. நிறுவனம் லாபகரமாக இயக்குகிறதா?

கடந்த 5, 10 ஆண்டுகளின் நிறுவனம் எவ்வளவு லாபம் ஈட்டியது, ஆண்டுக்கு ஆண்டு அதன் லாபம் அதிகரித்து வருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். நிறுவனத்தின் மொத்த லாபம், செயல்பாட்டு லாபம், நிகர லாபம் என அனைத்து லாபங்களும் தொடர்ந்து அதிகரித்து வரவேண்டும். மேலும், லாப வரம்பு அந்தத் துறையின் சராசரியைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் லாபம் குறைந் தால், அது தற்காலிகமானதா அல்லது நீண்ட காலமாக இருக் கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். கோவிட் 19 பாதிப்பு போன்ற காரணங்கள் அனைத்து நிறுவனங்களுக்கும் பொது வானவை என்பதால், அவற்றைக் கவனத்தில் கொள்ளத் தேவை யில்லை.

போட்டியாளர்களை நிறுவனம் எப்படி சமாளிக்கிறது? முதலீடு செய்யப்போகிற நிறுவனம் போட்டி நிறுவனங்களை எப்படி சமாளிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். செலவுகளை எப்படி குறைவாக வைத்திருக்கிறது, போட்டி நிறுவனங்களைவிட நெட் வொர்க் சேவை உள்ளிட்டவற்றில் எப்படி தொடர்ந்து லாபகரமாக செயல்படுகிறது எனக் கவனிக்க வேண்டும்.

மேலும், நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுகப் போட்டி யாளர்கள் யார், அவர்களை இந்த நிறுவனம் எப்படி சமாளிக் கிறது, இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு எவ்வளவு, அது நீண்ட காலத்தில் அதிகரித்து வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மேலும், ஒரு நிறுவனம் ஏற்றுமதியில் ஈடுபட்டால் வெளிநாட்டு போட்டி நிறுவனங் களையும் சமாளிக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

5. நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி?

கடந்த 5, 10 ஆண்டுகளின் நிறுவனத்தின் நிதிநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, அதன் பணவரத்து எப்படி எனப் பார்க்க வேண்டும். அடுத்து விற்பனை, வரிக்குப் பிந்தைய நிலையில் நிறுவனத்தின் வருமானம் ஆகிய வற்றையும் அலசி ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

6. நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட் எவ்வளவு வலிமையானது?

நீண்ட காலத்தில் நிறுவனத்தின் சொத்துகள் எப்படி வளர்ச்சி கண்டிருக்கிறது, நிறுவனத்தில் ரொக்கக் கையிருப்பு எந்தளவு இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

7. நிறுவனத்துக்கு எவ்வளவு கடன் இருக்கிறது?

கூடியவரையில் கடன் இல்லாத நிறுவனமாகப் பார்த்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். நிறுவனத்தின் குறுகிய காலக் கடன், நீண்ட காலக் கடன் எவ்வளவு இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். மேலும், அதன் பங்கு களை ஏதாவது அடமானம் வைத்து கடன் வாங்கியிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதிக கடன்கள், பங்குகள் அதிகம் அடமானம் வைத்திருந்தால், அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

8. பங்கின் மதிப்பீடு எப்படி?

பங்கின் சந்தை விலையைக் கவனிப்பதைவிட அதன் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) எவ்வளவு எனப் பார்ப்பது அவசியம். தற்போது இந்த நிறுவனப் பங்கின் விலை பங்குத் தரகு நிறுவ னங்களால் அதிக விலை / நியாய மான விலை / குறைவான விலை என எப்படிச் சொல்லப்படுகிறது என பார்க்க வேண்டும். நல்ல நிறு வனப் பங்கு என்றாலும், சரியான விலையில் வாங்குவது நல்லது.

9. பங்கின் கடந்த கால செயல்பாடு எப்படி?

பல நிறுவனங்களில் தொடர்ந்து லாபம் அதிகரித்து வரும். ஆனால், அதற்கேற்ப பங்கின் விலை அதிகரிக்காது. அந்த நிறுவனங்கள் அவற்றின் பங்கு விலை அதிகரிக்க வேண்டும் என்கிற எந்த நோக்கத்தையும் கொண்டிருக்காது. அது போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது. நீண்ட காலத்தில் அதாவது, 10, 15, 20 ஆண்டுகளில் அந்தப் பங்கு ஆண்டுக்கு சராசரி யாக 12% - 15% வருமானம் தருவதாக இருக்க வேண்டும்.

நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும்முன் கேட்க வேண்டிய 12 கேள்விகள்..!

10. பி/இ விகிதம் எவ்வளவு?

ஒரு பங்கில் முதலீடு செய்ய பி/இ விகிதம் (Price-to-Earnings Ratio -P/E Ratio) ஒரு முக்கிய அம்சமாகும். இது எந்த அளவுக்கு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு லாபகரமாக இருக்கும். மேலும், பங்கின் பி/இ விகிதம் அந்தத் துறையின் சராசரியைவிடக் குறைவாக இருப்பது லாபகரமாகும். ஒரு பங்கின் விலை ரூ.100; அதன் பி/இ விகிதம் 10 எனில், இதன் அர்த்தம் இந்தப் பங்கு அடுத்த ஆண்டில் ரூ.10 வருமானம் ஈட்டித் தர வாய்ப்புண்டு.

11. நிறுவனம் சார்ந்திருக்கும் துறையின் செயல்பாடு எப்படி?

நிறுவனத்தின் செயல்பாட்டைக் கவனிக்கும் அதே நேரத்தில் அந்த நிறுவனம் சார்ந்திருக்கும் துறையின் செயல்பாடு இப்போது எப்படி இருக்கிறது, எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

12. பங்கின் சந்தை மதிப்பு எவ்வளவு?

ஒரு பங்கின் பங்குச் சந்தை மதிப்பு (Market Cap) மிக அதிகமாக இல்லாமலும், மிகக் குறைவாக இல்லாமல் நடுத்தர அளவாக ரூ.5,000 கோடிக்குமேல் இருப்பது நல்லதாகும்.

பங்கில் முதலீடு செய்வதன் நோக்கம் என்ன?

இந்தப் பங்கை உங்களின் முதலீட்டுக் கலவையில் (Portfolio) நோக்கம் என்பது தெளிவாக தெரித்தால் மட்டுமே சரியான பங்கைத் தேர்வு செய்யமுடியும். நீண்ட காலத்தில் செல்வம் சேர்ப்பதாக இருந்தால் வளர்ச்சி அல்லது மதிப்பு (Growth or Value) பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும். இடையிடையே வருமானம் தேவையெனில், அதிக டிவிடெண்ட் தரும் நிறுவனப் பங்கைத் தேர்வு செய்ய வேண்டும்.