Published:Updated:

ஷேர்லக்: ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 30000

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 30000
ஷேர்லக்: ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 30000

ஷேர்லக்: ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 30000

பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 30000

‘‘தீபாவளி போனஸ் போட்டாச்சு’’ - அலுவலக நண்பர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை நாம் குதூகலமாக படித்து ரசித்துக் கொண்டிருக்க, உள்ளே வரலாமா என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். வந்தவரை உட்கார வைத்து, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

‘‘சந்தையின் போக்கு மேலேயா அல்லது கீழேயா என்று முடிவு செய்ய முடியாதபடி இருக்கிறதே!’’ என்றோம்.

‘‘சரியாகச் சொன்னீர்கள். அடுத்த வாரத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சந்தை கொஞ்சம் உயரலாம். அல்லது பெரிய அளவில் சரியாது என்று எதிர்பார்க்கலாம். ஆனால், தீபாவளிக்குப் பிறகு சந்தை கொஞ்சம் சரிய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் என் அனலிஸ்ட் நண்பர்கள். அப்படிச் சரிந்தால், நல்ல பங்குகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்’’ என்றவருக்கு கும்பகோணம் பில்டர் காபி தந்தோம்.

‘‘சென்செக்ஸ், 2017 மார்ச் மாதத்துக்குள் 30000 புள்ளிகளைத் தொடும் என்று சிட்டி இந்தியா புரோக்கரேஜ் நிறுவனம் கூறியுள்ளதே?’’ என்றோம் ஆச்சர்யத்துடன்.

‘‘சர்வதேச பொருளாதார மந்தநிலையால் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திக்கும் என்ற கவலையில் உலகமே இருக்க, வரும் 2017 மார்ச்சுக்குள் சென்செக்ஸ் 30000 புள்ளிகளைத் தொடும் என்று சிட்டி இந்தியா புரோக்கரேஜ் கணித்துள்ளது. நிறுவனங்களின் வருமான வளர்ச்சி இதை சாத்தியப்படுத்தும் காரணியாக இருப்பதாக அதன் பங்குச் சந்தை ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் அபினவ் கன்னா தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் காலாண்டைக் காட்டிலும், செப்டம்பர் காலாண்டில் நிறுவனங்களின் வளர்ச்சி நன்றாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பது நிறுவனங்களுக்குக் கூடுதலாக வருமானத்தை ஈட்ட உதவியாக இருக்கும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, சிமென்ட், ஃபைனான்ஸ், பார்மா மற்றும் எனர்ஜி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுபவையாக உள்ளன’’ என்று விளக்கம் தந்தார். 

‘‘செப்டம்பரில் சென்செக்ஸ் 5% வீழ்ந்தாலும், 120 பங்குகள் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறதே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘செப்டம்பரில் சென்செக்ஸ் 29000 புள்ளிகளை அடைந்தது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, கடந்த வெள்ளியன்று 1400 புள்ளிகள், அதாவது 5% வரை இறக்கம் கண்டு, 27673 புள்ளிகளுக்கு இறங்கியது. தற்போது 28000 புள்ளிகள் என்ற நிலையில், ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமாகிறது.

ஷேர்லக்: ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 30000

ஆனால், சென்செக்ஸ் 5% இறங்கினாலும் பிஎஸ்இ 500 பட்டியலில் உள்ள 120 பங்குகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இவற்றில் பஜாஜ் ஆட்டோ, பயோகான், பிரிட்டானியா, சிட்டி யூனியன் பேங்க், டிவிஸ் லேப், எய்ஷெர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஐடிஎஃப்சி, இண்டஸ்இந்த், பிவிஆர், ரெப்கோ மற்றும் அல்ட்ராடெக் உள்ளிட்ட 55 பங்குகள் புதிய உச்சத்தை அடைந்து இருக்கின்றன. ஃபோர்ஸ் மோட்டார்ஸ், க்ருஹ் ஃபைனான்ஸ், ஹேவல்ஸ் இந்தியா, அரபிந்தோ, ஓரியன்ட், அஜந்தா ஆகிய பார்மா பங்குகள், வக்ராங்கி, டெல்டா கார்ப், டால்மியா பாரத் உள்ளிட்ட 65 பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருக்கின்றன. இந்தப் பங்குகள் ஏற்றமடைவதற்கான வலிமையான அடிப்படைக் காரணிகளைக் கொண்டிருந்ததே புதிய உச்சத்தை எட்டியதற்கு காரணம். மேலும், விழாக் காலமும் இந்தப் பங்குகள் மீதான பாசிட்டிவ் சென்டிமென்டுக்கு சாதகமாக மாறியிருக்கிறது’’ என்றார்.

‘‘எண்டியூரன்ஸ் டெக் முதல் நாள் வர்த்தகம் எப்படி?’’ என்று விசாரித்தோம்.

‘‘ ஐபிஓ விலையைக் காட்டிலும் 20% கூடுதலான விலையில் ரூ.572-க்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது’’ என்றார். 

‘‘கேப்ளின் பாயின்ட் லேப்ஸ் கடந்த இரு தினங்களில் 35% அதிகரித்துள்ளதே?’’ என்று புருவத்தை உயர்த்தினோம்.

‘‘அடுத்த பத்தாண்டுகளில் நல்ல லாபம் தரும் பங்குகள் என இண்டஸ்வெல்த்.காம் பிரவீன் ரெட்டி  நாணயம் விகடனில் பரிந்துரை செய்ததிலிருந்து இந்தப் பங்கு விலை நன்கு உயர்ந்தது. பங்குப் பிரிப்பின் மூலம் இந்தப் பங்கின் முக மதிப்பு ரூ.10-லிருந்து ரூ.2-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பங்கின் விலை குறைந்து, பங்கு மீதான வர்த்தகம் அதிகரித்தது. இந்தப் பங்கின் விலை கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டும் சுமார் 35% அதிகரித்துள்ளது’’ என்றார். 

‘‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவு எப்படி?’’ என்று கேட்டோம்.

‘‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (ஆர்ஐஎல்) நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 23% குறைந்து ரூ.7,206 கோடியாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனத்தின் ஷேல் காஸ் சொத்துகள் கடந்த ஆண்டு விற்கப்பட்டதால், இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்துப் பார்த்தால், இதன் நிகர லாபம் 43.1% அதிகரித்துள்ளது. இரண்டாம் காலாண்டில் இதன் சுத்திகரிப்பு வணிகம் மிகவும் லாபகரமாக இருந்துள்ளது’’ என்றவர் புறப்படத் தயாரானார்.

‘‘ஹேப்பி தீபாவளி, உமக்கும் வாசகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!’’ என்றவர்,  ‘‘தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகள் அக்டோபர் 30 ஞாயிறு அன்று ‘முகூர்த் டிரேடிங்’கை அறிவித்துள்ளன. அன்று மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை முகூர்த் டிரேடிங் நடக்கிறது. அன்று முதலீடு செய்தால் அதிர்ஷ்டம் என்பது நம்பிக்கை. நம்புகிறவர்கள் முதலீடு செய்யலாம். மற்றவர்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கலாம்’’ என்றவர், ‘‘தித்திக்கும் 5 தீபாவளி பங்கினை நீரே தருகிறீரா? அப்ப என் வேலை மிச்சம்’’ என்றபடி நடையைக் கட்டினார்.

ஓவியம்: அரஸ்

வருண் பீவரேஜஸ் ஐபிஓ!

* பங்கு விற்பனை அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி 28 வரை நடக்கிறது.

* மொத்தம் 2.5 கோடி பங்குகள் விற்பனை.

* விலைப் பட்டை ரூ.440 - 445.

* ஐபிஓ மூலம் ரூ.1,116 கோடி திரட்டப்படும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு