Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கொடிநாட்டும் கோவை தோழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மியூச்சுவல் ஃபண்ட்  துறையில் கொடிநாட்டும் கோவை தோழிகள்!
மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கொடிநாட்டும் கோவை தோழிகள்!

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கொடிநாட்டும் கோவை தோழிகள்!

பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்  துறையில் கொடிநாட்டும் கோவை தோழிகள்!

முதலீடு என்பது ஆண்களின் சாம்ராஜ்யமாகவே  இருக்கிறது. அதிலும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகம் செய்பவர்களில் பலர் ஆண்கள்.  என்றாலும், இந்த முதலீட்டு உலகத்தில் நுழைந்து தங்கள் திறமையை முழுவதுமாகக் காட்டி  முன்னேறி வருகின்றனர் கோவையைச் சேர்ந்த ரௌத்ரி மற்றும் பிரவீனா. ஆர்.பி கன்சல்டன்ஸி என்கிற பெயரில் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள் இவர்கள்.

வெற்றித் தோழிகள்!

“கோட்டக் மகேந்திரா, சிட்டி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கார்வி பிரைவேட் வெல்த் என்று 12 ஆண்டுகளாக பல நிறுவனங்களில் கடுமையாக உழைத்தோம். அங்கு பங்குகளை விற்பதுதான் எங்கள் வேலை. அதைச் செய்யும்போதுதான் மியூச்சுவல் ஃபண்ட் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் மேல் ஒரு தீராத ஈர்ப்பு உண்டானது. அதுபற்றி நிறைய தேடித் தெரிந்துகொண்டோம். அதன் பலனைத்தான் இன்று நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

முதலீடு என்று வந்துவிட்டாலே ஆண்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம்தான். சிக்கனமாக இருப்பதில் பெண்கள், ஆண்களைவிட அதிக கவனமாக இருப்பார்கள். எனவே, இந்தத் துறையில் நுழைய முடிவு செய்தோம். எங்களால் முடியாது என்று பிறர் நினைக்கும் ஒன்றைச் சிறப்பாகவும் எளிமையாகவும் செய்து காட்டவேண்டும்  என்ற  வைராக்கியமே எங்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது’’ என்றார்கள் அந்த வெற்றித் தோழிகள்.

யோகா மாதிரி!

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய யார் வந்தாலும், அதில் இருக்கும் ரிஸ்க்கை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அதன்பின்பே முதலீடு செய்ய வைப்பது இவர்களின் ஸ்டைல்.

‘‘முன்பு நாங்கள் வேலை பார்த்தபோது, யாராவது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வந்தால், உடனே அதை ஊக்குவிக்க மாட்டோம். அவர்களின் பணயிருப்பு, சொத்து விவரங்களைத் தெரிந்துகொண்ட பின்பே முதலீடு செய்ய உதவுவோம். காரணம், அவர்கள் முதலீடு செய்ய நினைக்கும் பணத்தினால், அவர்களது வாழ்க்கை முறை வீழ்ச்சி அடையக் கூடாது என்று உறுதியாகத் தெரிந்தபின் முதலீடு செய்ய உதவுவோம். 

பங்கு விலை நிலவரத்தைத் தினமும் பார்த்து, விலை ஏறிவிட்டால் மகிழ்ச்சியில் குதிப்பதும், விலை இறங்கிவிட்டால் கவலைப்படுவதும் கூடாது. ஏற்ற, இறக்கத்தை உணர்ச்சி வசப்படாமல் கவனித்து, அதற்கேற்ப மாற்றங்களைச் செய்தால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதை ஒரு யோகா மாதிரி செய்யவேண்டும்’’ என்கின்றனர்.

முதலீட்டு தகுதிகள்!


இன்றைய நிலையில், இவர்கள் அதிக அளவில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான். இதில்கூட ஒருவர் முதலீடு செய்யும்போது, அவரது  வயது, தேவை, இழப்பைத் தாங்கும் சக்தி என பல்வேறு முதலீட்டுத் தகுதிகளைக் கருத்தில் கொண்டுதான் முதலீட்டு ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

‘இந்தப் பணம் இப்போதைக்கு எங்களுக்குத் தேவையில்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளில் நாங்கள் அதை நிச்சயமாகத் திரும்ப எடுக்க மாட்டோம்’ என்கிறவர்களை மட்டுமே நாங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கிறோம். ‘குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணத்தைத் திரும்ப எடுக்கக் கூடாது’ என்கிற கண்டிஷனுடன் நாங்கள் முதலீடு செய்ய அனுமதிப்பதால், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அந்த லாபத்தை வாங்கித் தந்தோம் என்கிற நல்ல பெயரும் நமக்குக் கிடைக்கிறது’’ என்று சந்தோஷப்பட்டனர்.

 வெற்றியின் சூட்சுமம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் இவர்கள் வாடிக்கையாளர்களாக மாறியிருப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல். வெறும் நூறு பேர்தானா என்று நினைக்காதீர்கள். அத்தனை பேரும் ஹெச்.என்.ஐ.கள் (High Network Individuals). இவர்களின் முதலீடு லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை நீள்கிறது. பெரும் பணக்காரர்களின் நம்பிக்கையை இவர்கள் எப்படிப் பெற்றார்கள்?

“மியூச்சுவல் ஃபண்டில் நிலைப்பதற்கான வழி மிக எளிது. எப்போது அடுத்தவர் நம்மை நம்பி அவரது பணத்தைக் கொடுத்தாரோ, அந்த கணத்தில் இருந்து அந்தப் பணத்தை நாமே முதலீடு செய்கிற மாதிரி நினைத்து முதலீடு செய்தால் போதும். சரியான புரிதலும், ஃபண்ட் பற்றி அனலைஸ் செய்தும் முதலீடு செய்து கொடுத்தாலே போதும், வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்று விடலாம். அதுதான் நம்மை அடுத்தபடிக்குக் கொண்டு செல்லும்’’ என்று தங்கள் வெற்றி ரகசியத்தை எடுத்துச் சொன்னார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்  துறையில் கொடிநாட்டும் கோவை தோழிகள்!

தேவை விழிப்பு உணர்வு!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து, தொடர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் இவர்கள். ‘‘15 வருஷம் பணத்தைப் போட்டால், கம்பெனிக்காரன் ஓடிவிட மாட்டானா?’ என்று சிலர் கேட்கிறார்கள். பல ஏமாற்றுத் திட்டங்களில் பணத்தைப் போட்டு இழந்ததால் இப்படிக் கேட்கிறார்கள். ‘செபி நிர்ணயம் செய்த விதிமுறைகள்படி இந்த ஃபண்ட் திட்டங்கள் நடக்கின்றன.  எனவே, பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்களோ என்கிற அச்சமே தேவையில்லை’ என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்ன பின்புதான் பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அருமை புரிய ஆரம்பிக்கிறது. 

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய சாட்டர்ட் அக்கவுடன்ட்டுகள்கூட தயங்கு கிறார்கள். அந்தத் தயக்கத்தை உடைக்க முயற்சி செய்து வருகிறோம். வருமான வரி செலுத்த வேண்டிய நேரத்தில் அவசரமாக ஏதோ ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் குறித்துப் பேசுகிறோம். இதன் மூலமும் விலக்குப் பெறலாம் என்று  அவர்களுக்கு விளக்கிச் சொல்கிறோம். நிறுவனங்கள் தரும் போனஸை லிக்விட் ஃபண்ட்-ஆகக்  கொடுத்தால் அது ஒரு சிறிய தொடக்கமாக அமையும்’’ என்றார்கள் அவர்கள்.

ஐஸ்கிரீம் + முதலீடு!
 
கோவை ஆர்.எஸ்.புரம் சாலையில் ‘சீக்கிங்ஸ்  ஐஸ்க்ரீம்’ என்ற கடையை நடத்திவருகிறார்கள் இந்த இளம்பெண்கள். ஒருபக்கம் முதலீடு, இன்னொரு பக்கம் ஐஸ்கிரீம் விற்பனை... சற்றும் தொடர்பில்லாத இரண்டு தொழில்களில் இருக்கிறீர்களே என்று கேட்டோம்.

‘‘தொடர்பில்லாத தொழில் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், மிக மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது எங்கள் அனுபவம். நாங்கள் இரண்டு பேருமே பல்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்திருந்தாலும்,    2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக எங்கள் வேலை பறிபோகவில்லை. ஆனால், அன்றைக்கு எங்கள் நண்பர்களுக்கு ஏற்பட்ட நிலை, பிற்காலத்தில் எங்களுக்கும் ஏற்படலாம் என்று நினைத்தோம்.

சொந்தத் தொழில் தொடங்குவது ஒன்றுதான் இதற்கு ஒரே தீர்வு என்று நினைத்து, பல்வேறு தொழில்களை ஆராய்ந்தோம். கடைசியில் உணவுத் துறையே  பெஸ்ட் என முடிவெடுத்தோம். அதிலும் குறிப்பாக ஐஸ்கிரீம் விற்பனையைத் தேர்வு செய்தோம்.

இன்றைக்கு எங்கள் கடைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வருகிறவர்கள், நாங்கள் தரும் ஐஸ்கிரீமை  ரசித்துச் சாப்பிட்டு முடித்தவுடன், முதலீடு குறித்து பேசுகிறோம். முதலில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்கிறோம். அதன்பிறகு ஆயுள் மற்றும் பொது இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்கிறோம். இதன்பிறகுதான் அவர்களை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேற்கொள்ள ஆலோசனை சொல்கிறோம். இப்படி எங்கள் முதலீட்டாளராக வரும் ஹெச்.என்.ஐ.கள், தங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு எங்களிடம் ஐஸ்கிரீம் ஆர்டர் தருகிறார்கள்’’ என்கிறார் இந்த தோழிகள்.

ஒரே கஸ்டமர், இரண்டு பிசினஸ் எனக் கலக்கி வரும் இந்தத் தோழிகள் கில்லாடிகள்தான்! 

கட்டுரை & படங்கள் :  கோ.ப.இலக்கியா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு