Published:Updated:

இந்தியாவைக் குறிவைக்கும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தியாவைக் குறிவைக்கும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்!
இந்தியாவைக் குறிவைக்கும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்!

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ் (Money Avenues)

பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவைக் குறிவைக்கும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்!

டந்த சில ஆண்டுகளாக இந்தியாவை குறிவைத்து முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றன தனியார் நிதியங்கள் எனப்படும் பிரைவேட் ஈக்விட்டி (Private Equity) நிறுவனங்கள். 

பிரைவேட் ஈக்விட்டி!

இந்தியாவைக் குறிவைக்கும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்!


தனியார் நிதியங்கள் என்றால் எவை, அவைகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்கிற கேள்விகள் எல்லோருக்கும் எழக் கூடியவை. அவர்கள் யார் என்று ஒற்றை வரியில் சொல்லவேண்டுமென்றால், அவர்கள் நேரடியாகத் தொழில் செய்யாமல் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலீட்டாளர்கள். அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்கள். உலகப் பொருளாதார வளர்ச்சி காரணமாக வெளிநாட்டினரிடம் அதிகப்படியான பணம் கைகளில் புழங்கியது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, வளைகுடா நாடுகள் போன்றவற்றில் அதிகப்படியான பணப்புழக்கம் இருந்து வந்த காரணத்தால், அனைத்தையும் தங்களது நாடுகளில் முதலீடு செய்யாமல் வெளிநாடுகள், அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள தொழில்களில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தது.

முதலீட்டு மந்திரம்!

செகோயா கேபிட்டல், க்ரிஸ் கேபிட்டல், சாஃப்ட் பேங்க், டைகர் ஃபண்ட்ஸ், அபேக்ஸ் பார்ட்னர்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் மேலும் பல இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் பல்வேறு தொழில்களில் கடந்த காலங்களில் முதலீடு செய்துள்ளன. இவர்களின் முதலீட்டுத் தாரக மந்திரம் என்ன?

தனியார் நிதியங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டுத் தாரக மந்திரம் என்பது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் துவக்க காலத்திலேயே முதலீடு செய்து, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து, பிற்காலத்தில் அந்தப் பங்குகளை வேறு ஒரு நிறுவனத்துக்கு  விற்றுவிட்டு, அவர்கள் செய்த முதலீட்டுக்கு கணிசமான லாபத்தைப் பெறுவதுதான். சொல்வதற்கும் கேட்பதற்கும் சற்றே எளிதாகவும் சுலபமாகவும் காணப் பட்டாலும், அவர்களின் பணி மிகக் கடுமையானது, சவாலானதும்கூட. காரணம், ஒரு நிறுவனத்தின் துவக்க காலத்தில் அந்த நிறுவனம் நல்ல நிலையை எட்டும் என்று கணிப்பதும் உறுதியாகக் கூறுவதும் மிகக் கடினமான காரியம்தான்.  பொருளாதாரச் சூழல், ஒரு நிறுவனத்தின் தொழில், ஒரு நிறுவனத்தின் பின்னணி, முதலீட்டுக் காலம், நாட்டின் தொழில் கொள்கை என பல்வேறு நோக்கில் ஆராய்ந்து விட்டுத்தான் முதலீட்டு முடிவை எடுக்கின்றன இந்த நிறுவனங்கள்.

இந்தியாவைக் குறிவைக்கும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்!

இந்தியாவும் தனியார் நிதியங்களும்!

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் தனியார் நிதியங்களின் முதலீட்டு வளர்ச்சி அபாரமாக இருந்துவந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் அளவற்ற நன்மைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க இருப்பதால், பல தனியார் நிதியங்கள் நமது நாட்டுக்குப் படை எடுத்து வருகின்றன. சென்ற ஆண்டில் மட்டும் இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தனியார் நிதியத் துறை சந்தித்திருக்கிறது. மேலும், இந்தியாவில் வரக்கூடிய தனியார் நிதியங்களின் முதலீடுகள் பெரும்பாலும் நுகர்வோர் சார்ந்த துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது. பல சிறிய அளவிலான முதலீடுகள் மருந்து, ரியல் எஸ்டேட் மற்றும் அறிவியல் துறை சார்ந்த நிறுவங்களுக்கும் சென்றுள்ளது.

ஆனால், குறிப்பிடும்படியான முதலீடுகள் இ-காம் மற்றும் மொபைல் ஆப் சார்ந்த நிறுவனங்களுக்கே சென்றுள்ளன. அதன் காரணமாக சில நிறுவனங்களின் மதிப்பீடுகள் நல்ல உச்சத்தைத் தொட்டன.

 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பீடு இருந்தால் ‘யூனிகார்ன்’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலுள்ள ‘யூனிகார்ன்’ நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், பேடிஎம், முசிக்மா, க்விக்கர், ஓலா, இன்மோபி, ஷாப்க்ளூஸ் போன்றவை கடந்த சில ஆண்டு களாக பன்மடங்கு முதலீடுகளை தனியார் நிதியங்களிடமிருந்து ஈர்த்துள்ளன.

இந்திய நிதித் துறையிலும் கணிசமான முதலீடுகளை செய்துள்ளன. உதாரணத்துக்கு, சமீபத்தில் ஐபிஒ வந்த ஆர்பிஎல் வங்கியில், பல நிறுவனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக முதலீடுகள் செய்திருந்தன. அந்த வங்கியின் பட்டியல் விலையில் கிட்டத்தட்ட மூன்ற மடங்குக்கு மேல் அந்த நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்துவிட்டது.

இந்தியாவில் பிஇ ஃபண்டுகள்!

கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக வளர்ந்துவந்த இந்தத் துறையின் முதலீடுகள், கடந்த சில மாதங்களாக சற்றே குறைந்து வருகின்றன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம், இந்திய இகாம் நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகப்படியாக இருப்பதால், புதிதாக முதலீட்டாளர்கள் இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டுகிறார்கள். சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் பிற்காலத்தில்  கிடைக்கும் லாபம் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

தவிர, அமேசான், ஊபர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் நேரிடையாக இந்தியாவில் கால்பதித்திருப்பதால், இந்திய நிறுவனங்களுக்குக் கடும் போட்டியும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக இந்திய நிறுவனங்களின் லாபம் மேலும் தாமதம் அடையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதன் காரணமாகவும் புதிய முதலீடுகள் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் நிதி ஆதாரம் சற்றே மந்தமாக உள்ளதும் இதற்கு முக்கியக் காரணம். அந்தக் காரணங்களுக்காக இந்திய நிறுவனங்கள், சமீபகாலமாக தங்களது செலவினங்களை வெகுவாகக் குறைத்து வருகின்றன.

 துவக்கத்தில் மார்க்கெட் ஷேர் எனப்படும் சந்தைப் பங்கை மட்டும் இலக்காக வைத்திருந்த நிறுவனங்கள், இப்போது லாபத்தையும் மனதில் வைத்துக்கொண்டு தொழில் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. அதன் காரணமாக இந்தத் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஆனால், இந்தியாவின் வளர்ச்சி, வரும் காலங்களில் பன்மடங்காகக் பெருக இருப்பதால், ஏற்கெனவே முதலீடு செய்த நிறுவனங்களுக்கு நல்ல லாபம் எதிர்காலத்தில் வருவதற்கான சூழல் இருக்கத்தான் செய்கிறது.

இந்தியாவைக் குறிவைக்கும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்!

எதிர்காலம் எப்படி? 

இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மையாக உள்ளது. மேலும் வரக்கூடிய ஆண்டுகளில் இணையதள வளர்ச்சி என்பது பட்டிதொட்டி எல்லாம் சென்றடைய அதிகமான வாய்ப்புகள் உள்ளது. மேலும், ரிலையன்ஸ் ஜியோ போன்ற புரட்சிகரமான தொலைத்தொடர்பு சேவைகளால் இணையதளம் மேலும் இந்தியா முழுவதும் பறந்து விரிவதற்கான வாய்ப்புகள் ஏராளம். அதன் காரணமாக பெருவாரியான இந்தியர்கள், இகாம் நிறுவனங்கள் மூலம் வர்த்தகம் செய்வது பன்மடங்காக உயரவே வாய்ப்புள்ளது. இது அந்தத் துறைக்கு ஒரு மிகப் பெரிய பலம்தான். இதன் காரணமாக முதலீடுகளின் தேவை வரக்கூடிய ஆண்டுகளில் அதிகரிக்கும்.

பல வெளிநாட்டு நிறுவனங் களுக்கும் இந்தியாவை விட்டால் மிகப் பெரிய சந்தை அவர்களுக்குக் கிடைப்பது கடினம். சீனாவில் இதுபோன்ற நிதியங்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதால், அங்கு சுலபமாகக் கால்பதிக்க முடியாது. மேலும், இ-காம் துறையைத் தவிர்த்து, பல துறைகளில் இந்தியாவில் தனியாகத் தொழில்முனைவோரின் எண்ணிக்கை என்பது கூடிக் கொண்டே போகிறது.

பல இளைஞர்கள் நல்ல பல தொழில் எண்ணங்களை சுமந்து கொண்டு, நிதித் தேவைக்காகக் காத்திருக்கிறார்கள். வலிமையான பொருளாதாரம், மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தை, ஸ்திரமான அரசுக் கொள்கைகள், மாறிவரும் மக்களின் வாழ்க்கை முறை, கணக்கிலடங்கா தொழில் எண்ணங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ள நமது நாட்டில் தனியார் நிதியங்களின் பங்களிப்பு, வரும் ஆண்டுகளில் பன்மடங்காகப் பெருகவே நிறைய வாய்ப்புகள் உள்ளன. இப்போது நாம் காண்பது பனிமலையின் நுனிதான். மிகப் பெரிய வளர்ச்சி இனிமேல்தான் நாம் காண இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு