Published:Updated:

ஷேர்லக்: மோதலில் டாடா... பங்குகளின் விலை குறையுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: மோதலில் டாடா... பங்குகளின்  விலை குறையுமா?
ஷேர்லக்: மோதலில் டாடா... பங்குகளின் விலை குறையுமா?

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

‘‘தீபாவளி வந்தாச்சா....’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘வந்தாச்சு. இதழை முடிக்க உங்கள் மேட்டர் மட்டும்தான் பாக்கி’’ என்றபடி அவருக்கு இஞ்சி டீ கொடுத்தோம். அதைக் குடித்து முடித்தவர், பட்டாசாக நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார். நம் முதல் கேள்வி எல்லோரும் கேட்க நினைக்கும் கேள்விதான்.  

‘‘டாடா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப் பட்டிருப்பதால், அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை குறையுமா?” என்று கேட்டோம்.  இந்த கேள்விக்கு விரிவான பதிலைச் சொல்ல ஆரம்பித்தார் ஷேர்லக்

‘‘குறுகிய காலத்தில் பங்குகளின் விலை இறக்கத்தைச் சந்திக்கக்கூடும் என்கிறார்கள். அதே நேரத்தில், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்தில் இந்தப் பிரச்னையை டாடா இயக்குநர் குழு எப்படிச் சமாளிக்கிறது என்பதைப் பொறுத்து பங்குகளின் விலை ஏறலாம் அல்லது இறங்கலாம் என்கிறார்கள் முன்னணி அனலிஸ்ட்கள்.

ஷேர்லக்: மோதலில் டாடா... பங்குகளின்  விலை குறையுமா?

டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா ஸ்டீல், டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா மெட்டாலிக்ஸ், டைட்டன், டாடா கெமிக்கல்ஸ், டாடா பவர், டாடா குளோபல், ராலிஸ் இந்தியா போன்ற டாடா நிறுவனப் பங்குகளின் விலை மிஸ்திரி நீக்கம் குறித்த தகவல் வெளியானவுடன் 1-3% வரை இறங்கின. டாடா மோட்டார்ஸ், டைட்டன் பங்கின் விலை ஏறத் தொடங்கின.

தலைமையில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சையினால்,  டாடா குழுமத்தின் ஃபண்டமென்டல் எதுவும் மாறப் போவதில்லை. அதே நேரத்தில், டாடா குழும நிறுவனங்களின் தனிப்பட்ட பிரச்னைகளை மனதில்கொண்டு புதிய முதலீடு செய்யலாமா அல்லது ஏற்கெனவே இருக்கும் முதலீட்டைத் தொடரலாமா என்கிற முடிவை எடுப்பது நல்லது.

உதாரணமாக, சீனாவில் ஸ்டீல் உற்பத்தித் திறன் தேவைக்கு அதிகமாக இருப்பது, ஐரோப்பிய சந்தையில் ஸ்டீல்-க்கு நல்ல விலை கிடைக்காமல் இருப்பது போன்றவை டாடா ஸ்டீல் நிறுவனத்தைப் பாதிக்கும். மேலும், மேற்கத்திய நாடுகளில் தகவல் தொழில்நுட்பத்துக்கு செலவிடுவது குறைவது, இந்தியாவின் ஐடி ஏற்றுமதியில் மாற்றம் போன்றவற்றால் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் குறையக்கூடும்.

பொதுவாக, அடுத்து 8-10 மாதங்களுக்கு டாடா குழும நிறுவனப் பங்குகளுக்கு போதாத காலமாக இருக்கலாம். இந்தப் பிரச்னை தொடர்பாக சைரஸ் மிஸ்திரி நீதிமன்றத்துக்குப் போனால், டாடா குழும பங்குகள் அனைத்தும் விலை இறக்கத்தைச் சந்திக்கக்கூடும். அந்த வகையில், சில மாதங்களுக்கு இந்தக் குழும பங்குகள் விலை இறங்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.

இந்தப் பிரச்னையை இயக்குநர் குழு அளவில் பேசி முடிப்பதுதான் டாடா குழும நிறுவனப் பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்லது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இதுபற்றி அதிகம் கவலை  கொள்ளத் தேவையில்லை. அடுத்த சில மாதங்களில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். புதிய தலைவர் தேர்வானபின் நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வரலாம்’’ என பல தகவல்களைச் சொன்னார்.
  
‘‘ஆதித்யா பிர்லா நூவோவில் வெளிநாட்டினரின் முதலீடு அதிகரிக்கும் போலிருக்கே?’’ என நமது அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

‘‘ஆமாம், ஆதித்யா பிர்லா நூவோ நிறுவனப் பங்கில், போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்பு 24% வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்ற நிலையை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது 30% வரை இதில் முதலீடு செய்யலாம். இதனைத் தொடர்ந்து இந்த பங்கில் முதலீடு செய்யலாம் என சில புரோக்கிங் நிறுவனங்கள் பரிந்துரை தர ஆரம்பித்திருக்கின்றன. நீண்ட நாளைக்கான முதலீட்டுக்கு இந்தப் பங்கை ஃபாலோ செய்யலாம்’’  என்றார்.

‘‘மாருதி நிறுவனத்தின் லாபம் 60% அதிகரித்திருக்கிறதே’’ என்றோம்.

‘‘மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த காலாண்டில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கடந்த காலாண்டில் மட்டும் 4.18 லட்சம் கார்களை விற்றிருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 18.4% அதிகம். இதனால் கடந்த ஆண்டு இதே காலாண்டைவிட 60.2% லாபம் உயர்ந்து, ரூ.2,398 கோடியை அடைந்திருக்கிறது. இத்தனை பெரிய லாபம் வந்தபின்னும், இந்தப் பங்கின் விலையில் பெரிய அளவில் இன்றைக்கு ஏற்றம் காணவில்லை. காரணம், இந்தப் பங்கு ஏற்கெனவே 52 வார விலை உச்சியில் இருப்பதுதான்’’ என்று சொன்னார்.

‘‘மற்ற நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எப்படி’’ என்றோம்.

‘‘ஐடியா செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 88% குறைந்து, ரூ.91.46 கோடியாக உள்ளது. இதன் பிராட்பேண்ட் மற்றும் 4ஜி வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ள நிலையிலும், இதன் செலவீனங்கள் அதிகரித்த காரணத்தால் லாபம் குறைந்துள்ளது.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 63% குறைந்துள்ளது. இதற்கு கமாடிட்டிப் பொருட்களின் வாலட்டைலிட்டிதான் காரணம் என்கிறார்கள்’’ என்றவர் கிளம்புவதற்கு முன் சொன்னார்.

‘‘வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை ‘முகூர்த் டிரேடிங்’ நடக்கவிருப்பதால், திங்களன்று பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகள் விடுமுறை அறிவித்துள்ளன. எனவே, செவ்வாய்க்கிழமை காலைதான் அடுத்து வர்த்தகம் நடக்கும்’’ என்றவர், ஒரு துண்டுச் சீட்டைத் தந்துவிட்டுப் போனார். அதில் நீண்ட கால முதலீட்டுக்கு ஃபாலோ செய்ய வேண்டிய பங்குகள் இருந்தன. அதில் இருந்த பங்குகள் இனி...

“நீல்கமல், அஜந்தா பார்மா, எக்ஸைட் இண்டஸ்ரீஸ், டிவிஎஸ் மோட்டார், மைண்ட்ட்ரீ, பாரத் ஃபோர்ஜ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், க்ரின்பிளே இண்டஸ்ட்ரீஸ்.”

நாணயம் விகடன் இணையதளத்தில்...

டிரேடர்ஸ் பக்கங்கள் பகுதியைப் படிக்க :  http://bit.ly/2eJCyUe
(அக்.31-ம் தேதி பகல் 12 மணிக்கு மேல்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு