Published:Updated:

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!
குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

பிரீமியம் ஸ்டோரி
குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

டந்த ஓரிரு ஆண்டுகளாக டெபாசிட் வட்டி விகிதங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. ஏன் குறைகிறது என்பது ஒருபக்கம் இருக்க, பெரும்பாலோரின் கேள்வி - குறையும் வட்டி விகிதத்தினால், குறையும் வருமானத்தை எப்படி சமாளிப்பது என்பதுதான்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் 2011-ம் ஆண்டில் 9.25% ஆகவும், 2012, 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் 9.0% ஆகவும், 2015-ல் 8.25% ஆகவும் இருந்தது. தற்சமயம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதே ஒரு வருட டெபாசிட்டுக்கு 7.05% வட்டியை வழங்கி வருகிறது. கடந்த கால டேட்டாவை வைத்துப் பார்க்கும்போது, இந்த வட்டி விகிதம் இன்னும் குறைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள கிராப்) இந்த வட்டி விகிதக் குறைப்பு முழுமை அடைந்து, மீண்டும் ஏறுமுகத்தைக் காட்ட இன்னும் சிலபல ஆண்டுகளாகிவிடும்.

குறைவான பணவீக்கம் (விலைவாசி உயர்வு) பொருளாதாரத்துக்கு நல்லது. டெபாசிட்களின் வட்டி விகிதத்துக்கும் பணவீக்கத்துக்கும் நேரடி உறவு உண்டு. பணவீக்கம் குறைவதால், வட்டி விகிதமும் குறைகிறது. இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது, வட்டி வருமானத்தையே நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள்தான். வட்டி விகிதம் குறைவதை தனிநபர்களால் நிறுத்த முடியாது. ஆனால், சமாளிக்க முடியும். எப்படி?  

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

இதுவரை நம் மூத்த குடிமக்கள், தங்களின் ஓய்வுக் கால வருமானத்துக்கு, வங்கி வட்டி ஒன்றே கதி என்று இருந்தார்கள். வட்டி குறைந்துவரும் சமயத்தில் வங்கியை மட்டுமே நம்பி இருந்தால், வருமான இழப்பு என்பது உறுதி. ஆகவே, முதலீட்டைப் பரவலாக்கவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வருமானத்தை அதிகப்படுத்த உதவும். பரவலாக்குவதற்கு எந்தெந்த முதலீடுகளை நாம் தேர்வு செய்யலாம்?

1.  சிறிய வங்கிகள் அல்லது புதிதாக லைசென்ஸ் பெறப்பட்ட வங்கிகளில் டெபாசிட்கள் அல்லது முதிர்வுக் காலத்துக்கு முன்பு குளோஸ் செய்ய முடியாத டெபாசிட்கள் (non-callable deposits)

2. கார்ப்பரேட் டெபாசிட்கள்

3. அஞ்சலக சேமிப்புகள்

4. பெனிஃபிட் ஃபண்டுகள்

5. கடன் சந்தையில் வர்த்தகமாகும் அதிக யீல்ட் தரக்கூடிய பாண்டுகள்/ டிபெஞ்சர்கள்

6. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு

இனி இந்த முதலீடுகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கிகள்!

நமது முன்னாள் ரிசர்வ் பேங்க் ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி வகித்தபோது, பலவிதமான வங்கிகள் புதிதாக ஆரம்பிப்பதற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வங்கிகள், ஏற்கனவே நீண்ட காலமாக இருந்து வரும் வங்கிகளோடு பிசினஸுக்காக போட்டிப் போடவேண்டும். ஆகவே, அந்த வகை வங்கிகள் தங்களது டெபாசிட்டுக்காக சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இவற்றின் கிளைகள் எல்லா நகரங்களில் இல்லாவிட்டாலும், சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ளன. மேலும், இந்த வங்கிகள் திருச்சி, மதுரை, கோவை  போன்ற இரண்டாவது நிலை (2nd Tier) நகரங்களிலும் தங்களது கிளைகளைப் பரப்பி உள்ளன அல்லது பரப்ப உள்ளன.

இந்த வங்கிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கிகள் என பொதுமக்கள் நினைத்து பயப்படத் தேவையில்லை. பிற வங்கிகளைப் போல, இந்த வங்கிகளிலும் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் இன்ஷூரன்ஸ் உண்டு. மேலும், பிற வங்கிகளைப் போல, இந்த வங்கிகளும் ஆர்பிஐ கட்டுப்பாட்டில் தான் வருகின்றன. ஆகவே, இந்த வங்கிகளில் தங்களது டெபாசிட்டில் ஒரு பகுதியை வைத்துக் கொள்ளலாம். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சில வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதத்தை, எஸ்பிஐ-யின் வட்டி விகிதத்தோடு ஒப்பிட்டுத் தந்துள்ளோம். (பார்க்க அட்டவணை 1)

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

சிறிய வங்கிகள்!

இதுபோல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, உங்கள் ஏரியாவில் உள்ள, ஸ்மால் பேங்க் அல்லது பேமென்ட் பேங்கில் சற்று அதிக வட்டி கிடைத்தால், ஒரு பகுதியை டெபாசிட் செய்யலாம். (இந்த வகையில் வங்கிகள் இன்னும் பரவலாக டெபாசிட்டை ஏற்றுக்கொள்ளத் தொடங்கவில்லை.) ஏற்கெனவே உள்ள சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளைவிட எப்போதும் சற்று அதிக வட்டியைத் தருகின்றன. அதுபோன்ற வங்கிகளில் ஒரு தொகையை முதலீடு செய்யலாம். சில சிறிய வங்கிகள் தரும் வட்டி விகிதத்தைத் தந்துள்ளோம்.  (பார்க்க : அட்டவணை 2)

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

முதிர்வு காலத்துக்குமுன் குளோஸ் செய்ய முடியாத டெபாசிட்கள் (Non-callable Deposits)

வங்கியில் போடப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களை பொதுவாக நாம் எப்போது வேண்டுமானாலும் குளோஸ் செய்யலாம். அந்த வசதியை நீங்கள் துறக்கத் தயார் என்றால், வங்கிகள் சற்று அதிக வட்டியை உங்களுக்குத் தர தயாராக உள்ளன. பேங்க் ஆஃப் பரோடா இந்த வகை டெபாசிட்களை அட்வான்டேஜ் டெபாசிட்  என்று அழைக்கிறது. இந்த டெபாசிட்களுக்கு   வழக்கமான டெபாசிட்களைவிட 0.10% அதிக வட்டியை இந்த வங்கி வழங்குகிறது.

இதுபோன்ற டெபாசிட்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.15 லட்சமாகும். ஆக்ஸிஸ் வங்கியும் இது போன்ற வசதியை வழங்குகிறது. இந்த வசதியில் பெரிய வட்டி வித்தியாசம் இல்லை என்றாலும், ரூ.15 லட்சம் டெபாசிட் போடுபவர்களுக்கு, வருடத்துக்கு ரூ.1,500 அதிகமாகக் கிடைக்கும். இதுபோன்ற வசதி பிற வங்கிகளிலும் இருக்கும்.  உங்கள் வங்கியை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!

கார்ப்பரேட் டெபாசிட்டுகள்!

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் வங்கிகளைவிட சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் ஆர்.பி.ஐ அல்லது என்.ஹெச்.பி (NHB – National Housing Bank) கட்டுப்பாட்டில் வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் கிரெடிட் ரேட்டிங்கை பெற்றுள்ளன. ஆகவே, தரமான கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம். உங்களது முதலீடு மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமானால் AAA ரேட்டிங் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

இந்த வகை நிறுவனங்கள் தரும் வட்டி விகிதத்தை அட்டவணை 3-ல் (பார்க்க, அட்டவணை 3) தந்துள்ளோம். இந்த வட்டி விகிதம் ஆண்டுக்கொருமுறை தரப்படும் என்ற கணக்கில் தரப்பட்டுள்ளது. காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வேண்டுமானால், சிறிது வட்டி விகிதம் குறையும். AA ரேட்டிங்கை உடைய நிறுவனங்கள், மேற்கண்ட நிறுவனங்களின் வட்டி விகிதத்தைவிட சற்று அதிகமாக வட்டியை வழங்கும். AA-ஐ விட ரேட்டிங் குறைவாக உள்ள நிறுவனங்கள், இன்னும் அதிகமான வட்டியை வழங்கும். ரேட்டிங் குறையக் குறைய ரிஸ்க் அதிகம் என்பதை நாம் மறக்கக் கூடாது. உங்கள் முதலீட்டின் ஒரு போர்ஷனை, நல்ல தரமான ஹவுஸிங் ஃபைனான்ஸ் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துகொள்ளலாம்.

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

அஞ்சலக சேமிப்புகள்!

இந்தியாவில் அதிக நெட்வொர்க்கை கொண்டுள்ள நிதி அமைப்பு நமது அஞ்சலகங்களே.  வங்கிகளை ஒப்பிடும்போது,  அஞ்சலக சேமிப்புகள் இன்னும் பாதுகாப்பானவை. ஏனென்றால் அவை அரசாங்கத்தின் ஒரு அங்கம் ஆகும்.
இதுதவிர, மாதாந்திர வருமானத் திட்டங்கள் மற்றும் சீனியர் சிட்டிஸன் திட்டங்கள் இவற்றில் மிகவும் பாப்புலரானவை. மிகவும் பாதுகாப்பான முதலீட்டை நாடும் மூத்த குடிமக்கள், தங்களின் முதலீட்டின் ஒரு பகுதியை அல்லது உச்ச வரம்பு வரை இந்தத் திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம். (பார்க்க : அட்டவணை 4)

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

பெனிஃபிட் ஃபண்டுகள்!

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றவை  பெனிஃபிட் ஃபண்ட் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் நிதிச் சட்டம் 2014-ன் கீழ் வருகின்றன. இந்த நிறுவனங்கள் தங்களது உறுப்பினர்களிடம் இருந்து ஃபிக்ஸட் டெபாசிட் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிறுவனங்கள் சிறியவை என்பதால், சந்தையைவிட சற்று அதிக வட்டியை தங்களது ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்குகின்றன. இவற்றில் முதலீட்டு ரிஸ்க் அதிகம். ஆகவே, நீங்கள் முதலீடு செய்யக் கருதும் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடு, புரமோட்டர்களின் பின்னணி,  அந்த நிறுவனங்கள் லாபத்தை ஈட்டி வருகின்றனவா என்பனவற்றைக் கவனித்து உங்கள் முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.

டெபாசிட்களின் வரிக் கணக்கு!

நாம் இதுவரை பார்த்த அனைத்தும் டெபாசிட்கள். இதிலிருந்து வரும் வட்டியை நீங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வாங்கிக் கொண்டாலும் அல்லது வாங்காமல் விட்டாலும், அது உங்கள் கையில் அந்த ஆண்டு வருமானமாகக் கருதப்படும்.
ஒரு வங்கியிலிருந்து வரும் வட்டி வருமானம் ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், மூலத்தில் தரப்படும் வட்டிக்கு 10% வரிப் பிடித்தம் உண்டு. ஆண்டு முடிவில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது, மீதமுள்ள வரியைக் கணக்கிட்டு செலுத்தவேண்டும். சிலர், தாங்கள் 30 சதவிகித வருமான வரி வரம்பில் இருந்தால்கூட, 10% மூலத்தில் வரிப் பிடித்தம் செய்தால் தங்களின் வரிச் சுமை காணாமல் போய்விடும் என்று நினைக்கிறார்கள். அது சரியல்ல. எஞ்சியுள்ள வரியை நீங்கள் ஆண்டு முடிவில் செலுத்தவேண்டும்.

ஆண்டு மொத்த வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் (வட்டி வருமானம் உட்பட), தங்களின் ஆண்டு வருமானம், வருமான வரி செலுத்தவேண்டிய வரம்புக்குக் கீழ் இருப்பதால், மூலத்தில் வரிப் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று கூறி 15G (60 வயதுக்குக் கீழ்) அல்லது 15H (மூத்த குடிமக்கள்) படிவத்தை வங்கியில் அல்லது டெபாசிட் வைத்துள்ள நிறுவனங்களில் தரலாம். அவ்வாறு தரும்போது மூலத்தில் வரிப் பிடித்தம் செய்யமாட்டார்கள்.

பொதுவாக, வருமான வரி வரம்புக்குள்  இருப்பவர்களுக்கு அல்லது அல்ட்ரா கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்களுக்கு டெபாசிட் பொருத்தமாக இருக்கும். அதிக வருமானம் இருப்பவர்கள், வருமான வரி கட்டுபவர்கள், செலவுக்குப் போக அதிக அளவில் பணம் மீதமிருப்பவர்கள், ஹெச்.என்.ஐ (HNI – High Networth Individuals) போன்ற அனைவருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் மிகப் பொருத்தமாக இருக்கும். 

பாண்டுகள் மற்றும் டிபெஞ்சர்கள்!

இந்தியாவில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு கடன் சந்தை, பங்குச் சந்தை அளவுக்கு இன்னும் வளரவில்லை. இருந்தபோதிலும் கடன் சந்தையில் செயல்படும் புரோக்கர்கள் மூலமாக பாண்டுகளை வாங்கலாம். அவ்வாறு பாண்டுகளை சந்தையில் இருந்து வாங்கும்போது, டீமேட் கணக்கு அவசியமாகத் தேவைப்படும்.

பங்குகளுக்கு உபயோகிக்கும் டீமேட் கணக்கையே இதற்கும் உபயோகித்துக் கொள்ளலாம். நமது தேசியப் பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையிலும் டிபெஞ்சர்கள் வர்த்தகமாகின்றன. லிக்விடிட்டி குறைவாக இருந்தாலும், சரியான விலைக்கு கிடைக்கும்போது வாங்கிக்கொள்ளலாம்.

பல பொதுத்துறை வங்கிகளின் பெர்பீச்சுவல் பாண்டுகள் (perpetual bonds) சந்தையில் அதிக வருமானத்துடன் (Yield) கிடைக்கின்றன. இந்த பாண்டுகளின் ரிஸ்க்கும் அதிகம். அதேபோல், பிரைவேட் நிறுவனங்களின் பாண்டுகளும் கிடைக்கின்றன. இதன் குறைந்தபட்ச முதலீடு ரூ.10 லட்சம் ஆகும். நிதி ஆலோசகரின் உதவியுடன் இந்த பாண்டுகளை வாங்குவது சிறந்தது.

பல நிறுவனங்களின் டிபெஞ்சர்கள் பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. அவற்றின் விலை, கிடைக்க வாய்ப்புள்ள வட்டி விகிதம், கிரெடிட் ரேட்டிங், முதிர்வுக் காலம் போன்றவற்றை ஆராய்ந்து வாங்கவேண்டும்.

பாண்டுகள் மற்றும் டிபெஞ்சர்கள் வங்கி வட்டியைவிட அதிகமாக வட்டியைத் தரவல்லவை. ஆனால், அவற்றில் உள்ள ரிஸ்க்கைத் தெரிந்து கொண்டு வாங்கவேண்டும். இவற்றைப் பற்றிய ஞானம் இல்லாதவர்கள், விலகி இருப்பது நல்லது. இவற்றிலிருந்து வரும் வட்டி வருமானத்துக்கு,  டெபாசிட்டுகளைப் போலத்தான் வரி உரித்தாகும். ஒரே ஒரு வித்தியாசம், டீமேட் கணக்கில் இருப்பதால், இவற்றுக்கு மூலத்தில் வரிப் பிடித்தம் கிடையாது.

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

மியூச்சுவல் ஃபண்டுகள்!

மிக மிகக் குறைவான ரிஸ்க்குடனும், மிக அதிக ரிஸ்க்குடனும் முதலீடுகள் உள்ளன. மியூச்சுவல் ஃபண்டுகளில் பலவகை முதலீடுகள் உள்ளன என்றாலும், டெபாசிட்டுக்கு சமமாக அல்லது அதைவிட சற்றே கூடுதலான ரிஸ்க் உள்ள ஃபண்டுகளைப் பற்றி பார்ப்போம். 

லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள்!

இந்த ஃபண்டுகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஃபண்டுகள் உங்களின் குறுகிய காலத் தேவை களுக்கு மற்றும் உடனடித் தேவைக்கு உதவியாக இருக்கும். இப்போது ரிலையன்ஸ், டி.எஸ்.பி போன்ற ஃபண்ட் நிறுவனங்கள், இந்த வகையான ஃபண்டுகளில் முதலீட்டாளர், தேவை என்று சொன்ன 30 நிமிடத்துக்குள் பணத்தை முதலீட்டாளரின் வங்கிக் கணக்குக்குத் தந்துவிடுகின்றன. 

ஒரு வருட வங்கி டெபாசிட்டுக்கு  நிகரான வருமானத்தை இந்த ஃபண்டுகளிலிருந்து எதிர்பார்க்கலாம். இது ஒரு கடன் சார்ந்த திட்டம் ஆகும். முதலீட்டுக்கு உகந்த சில ஃபண்டுகளை அட்டவணையில் (பார்க்க: அட்டவணை 5)  தந்துள்ளோம். பங்குச் சந்தைக்கும் இந்த ஃபண்டு களுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆகையால், பங்குச் சந்தை உயர்வதோ அல்லது தாழ்வதோ இந்த ஃபண்டுகளை பாதிக்காது.

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுகள்!

இந்தத் திட்டங்கள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் பாண்டுகளில் சுமார் மூன்று ஆண்டு கால அளவுக்கு முதலீட்டை வைத்துக்கொள்கின்றன. மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக குமுலேட்டிவ் டெபாசிட்டுகளில் போட விரும்புபவர்கள் இந்த விதமான ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தைக்கும் இந்த ஃபண்டுகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆகையால், பங்குச் சந்தை உயர்வதோ அல்லது தாழ்வதோ இந்த ஃபண்டுகளைப் பாதிக்காது. முதலீட்டுக்கு உகந்த சில ஃபண்டுகளையும் அவற்றின் வருமானத்தையும் அட்டவணையில் (பார்க்க அட்டவணை 6) தந்துள்ளோம்.

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

இந்த ஃபண்டுகள் அனைத்தும் தங்களது போர்ட்ஃபோலியோவில் AAA மற்றும் AA பாண்டுகளை 95 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ளன. இந்த ஃபண்டுகளைவிட குறைவான ரேட்டிங் உடைய உபகரணங்களை வைத்துள்ள ஃபண்டுகள், சற்று  அதிக ரிஸ்க்குடன், அதிகமான வருவாயைத் தரும். தனி நிறுவன டெபாசிட்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகள் பாதுகாப்பானவை.

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

எம்.ஐ.பி திட்டங்கள்!

இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கிட்டத்தட்ட 70% வரை கடன் சார்ந்த முதலீடுகளிலும், எஞ்சியதை பங்கு சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்கின்றன. மூன்று வருடங்களுக்கு போடும் குமுலேட்டிவ் டெபாசிட்டுக்குப் பதிலாக இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

மேற்கண்ட் லிக்விட்/ அல்ட்ரா ஷார்ட் டேர்ம் மற்றும் கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டு களைவிட இவற்றில் ரிஸ்க் அதிகம். ஏனென்றால், சுமார் 30 சதவிகித முதலீடுகள் பங்குச் சந்தையில் உள்ளன. மூன்றுக்கும் மேற்பட்ட வருடங்களில் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட, சற்று அதிகமான வருமானத்தைத் தரும். முதலீட்டுக்கு உகந்த சில ஃபண்டுகளை அட்டவணையில் தந்துள்ளோம். (பார்க்க அட்டவணை 7)

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!

ஈக்விட்டி இன்கம் அல்லது ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள்!

 இந்த ஃபண்டுகள் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவை. இவை தங்களது போர்ட்ஃபோலியோவில் மூன்றில் ஒரு பகுதியை பங்குகளிலும், இரண்டாவது பகுதியை ‘ஆர்பிட்ரேஜ்’ வாய்ப்புக்களிலும், எஞ்சியதைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும் செய்கின்றன.

இந்த விதமான ஃபண்டுகளை, மூன்றரை ஆண்டுகள் வைத்திருக்கையில், பிக்ஸட் டெபாசிட்டைவிட சற்றுக் கூடுதலான வருமானத்தை எதிர்பார்க்கலாம். இந்த ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்ட் டாக்ஸ் ஃப்ரீ ஆகும். மேலும், ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கையில், வரும் லாபத்துக்கு வரி ஏதும் கிடையாது. முதலீட்டுக்கு உகந்த சில ஃபண்டுகளை தந்துள்ளோம். (பார்க்க அட்டவணை 8)இவை தவிர, ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் என்கிற ஃபண்டுகளில் வருமானம், ஓராண்டு பிக்ஸட் டெபாசிட்டைவிட சற்று குறைவாக இருக்கும். ஆனால், டிவிடெண்ட்  மற்றும் ஓராண்டுக்கு மேல் வைத்திருந்தால் கேப்பிட்டல் அப்ரிஸியேஷனுக்கு வரி ஏதும் கிடையாது.

குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!
குறையும் டெபாசிட் வட்டி - அதிக வருமானம் தரும் சூப்பர் முதலீடுகள்!லிக்விட்/ அல்ட்ரா ஷார்ட் டேர்ம், கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ், எம்.ஐ.பி திட்டங்களுக்கான வரி!


டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீட்டாளர் வரி ஏதும் தங்கள் கையில் இருந்து செலுத்தவேண்டாம். ஆனால், திட்டம் அனைத்து முதலீட்டாளர் களுக்குமாகச் சேர்த்து வரியைப் பிடித்து அரசாங்கத்துக்குச் செலுத்திவிடும். ஆகவே, டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்வது வரியை மிச்சப்படுத்தி (Tax Efficient) இருக்காது. இந்தத் திட்டங்களில் இருந்து வரும் வருமானத்துக்கு  நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸாக, மூன்று வருடத்துக்கு மேல் வைத்திருக்கையில், 20% இன்டக்சேஷனுடன் கட்ட வேண்டி வரும். குறுகிய கால கேப்பிட்டல் கெயின்ஸ் (3 வருடத்துக்குக் கீழ்) அவரவர் வருமான வரி வரம்புக்கேற்ப அமையும்.

ஆக மொத்தத்தில், ஃபிக்ஸட் டெபாசிட்களுடன் ஒப்பிடுகையில், வரிக்கு பிந்தைய வருமானத்தில் இந்தத் திட்டங்கள் ஒட்டகச் சிவிங்கியைப் போல் தலைதூக்கி நிற்கும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உள்ள இன்னுமொரு பெரிய கவர்ச்சி  (உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு), வங்கி டெபாசிட்களைப் போல சோர்ஸில் வரிப் பிடித்தம் செய்வதில்லை.

உங்களுக்குத் தேவையான அத்தனை வாய்ப்புகளையும் சொல்லிவிட்டோம். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன், வரி வரம்பு, பணத் தேவை, பரிச்சயம், பரிமாற்ற வசதி போன்ற அனைத்தையும் ஆராய்ந்து ஒரு நிதி ஆலோசகரின் உதவியுடன் உங்களது போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்ளுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு