Published:Updated:

ஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு!

ஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு!
ஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு!

‘‘பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை இனி மாற்ற முடியாது. வங்கியில் டெபாசிட் செய்து மட்டுமே திரும்ப எடுக்க முடியும்’’ என்கிற மத்திய அரசின் அறிவிப்பை தன்னுடைய செல்போனில் படித்தபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். இன்னும் என்னென்ன குண்டு களைத் தூக்கிப் போடப் போகிறாரோ என்றபடி அவரை உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தோம்.

‘‘சந்தை தொடர்ந்து இறங்கிக் கொண்டிருக்கிறதே. இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?’’ என்று கவலையுடன் கேட்டோம்.

‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என பலரும் நினைப்பதால், பங்குச் சந்தை தொடர்ந்து இறங்கிக் கொண்டி ருக்கிறது. இதனால் அரசு சந்திக்க இருக்கும் பிரச்னைகள் ஒன்றிரண்டல்ல. கடந்த 9-ம் தேதி முதல் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் ஆகியிருக்கிறது. இதனால் டெபாசிட்டுக்கான வட்டியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஆர்பிஐக்கு ஏற்பட்டுள்ளது. டெபாசிட் ஆன பணத்தை கடன் கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், வங்கிகளின் வாராக் கடன் பெரிய அளவில் இருக்கும்போது, வங்கிகள் யாருக்கு கடன் கொடுக்க முடியும்? அப்படிக் கொடுக்கும் கடன் திரும்ப வரவில்லை என்றால், வாராக் கடன் பெருகத்தானே செய்யும்?

இது மாதிரியான பல்வேறு பிரச்னைகளினால்தான் சந்தை சரிந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து சில நாட்களாக சரிந்த சந்தை, திடீரென்று உயரக் காரணம், எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரியை முன்னிட்டு ஷார்ட் போனவர்கள் அதை நேர் செய்ய வாங்கியதுதான். இதனால் இரண்டு நாட்கள் நிஃப்டி கொஞ்சம் ஏறினாலும், எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி அன்று சந்தை முடிய அரை மணி நேரம் இருக்கும்போது திடீரென கணிசமாக சந்தையை இறக்கி எல்லோரையும் கதிகலங்க வைத்து விட்டார்கள் டிரேடர்கள்.  இதுவரை சரிந்த சந்தை இன்னும்கூட சரியவே வாய்ப்பு இருப்பதாக டெக்னிக்கல் அனலிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். நிஃப்டி 7600 அடுத்த சப்போர்ட், அதை விட்டால் இன்னும் சந்தை பெரிதாக இறங்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாம் இப்போதே நடக்குமா அல்லது இனிவரும் நாட்களில் நடக்குமா அல்லது நடக்காமலே போய் விடுமா என்கிற கேள்விக்குத்தான் தெளிவான பதில் இல்லை.

என்றாலும் எப்படிப்பட்ட நிகழ்வுக்கும் நம்மைத் தயார்படுத்திக்கொள்வது நல்லது. காரணம், மோடியின் அதிரடி நடவடிக்கையினால் ஏற்பட்ட விளைவுகள், குறைந்தபட்சம் ஆறு மாதங்களிலாவது முழுமையாகச் சீரடைந்தால், அதன்பிறகு பொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்து, ஜிடிபி உயர்ந்து, பங்குச் சந்தையும் உயர ஆரம்பிக்கும். ஆனால், இப்போதுள்ள நிலைமையில் ஜிடிபி வளர்ச்சி பற்றி பலவாறாக சொல்லிக் குழப்புகிறார்கள். இதனால் நான்கையும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு!

இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையை ஒரு தற்காலிகப் பிரச்னை என்றுதான் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். சர்வதேச பங்கு ஆராய்ச்சி நிறுவனமான மார்கன் ஸ்டேன்லியும் இதே கருத்தைதான் வலியுறுத்தி உள்ளது. பண மதிப்பு நீக்கத்தால் நடப்பு மூன்றாம் காலாண்டில் நிறுவனங்கள் லாபம் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்தியாவில் நிறுவனங்கள் பிரிப்பு மற்றும் இணைப்பு அதிக எண்ணிக்கையில் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது’’ என பங்குச் சந்தை பற்றிய பல்வேறு கருத்துக்களையும் சொன்னார் ஷேர்லக்.

‘‘பி-நோட் மூலமான முதலீடு பங்குச் சந்தையில் குறைந்திருக்கிறதே? கறுப்புப் பணத்தை ஒழித்ததன் விளைவா இது?’’ என்றோம்.

‘‘வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொள்ளும் முதலீடு கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1.99 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய செப்டம்பர் மாதத்தில் இது ரூ.2.12 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த முப்பது மாதங்களில் மிகக் குறைவாகும். இந்த முதலீட்டு குறைவுக்கு இந்திய சந்தையின் போக்கும் ஒரு காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் 2016-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் 1,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செபியிடம் பதிவு செய்துள்ளார்கள். 2015-16-ம் நிதி ஆண்டில் இப்படி பதிவு செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,900-ஆக உள்ளது. 2016 அக்டோபர் நிலவரப்படி 5,828-ஆக உள்ளது.

பி-நோட் முதலீடு மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்கள்கூட பங்குகளை விற்றபடிதான் இருக்கிறார்கள். இந்த வாரத்தில் கடந்த நான்கு நாட்களில் (வியாழன் வரை) சுமார் 3,000 கோடி வரை விற்றுள்ளார்கள். மோடியின் நடவடிக்கை யினால், அடுத்த சில ஆண்டுகள் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையலாம் என்கிற கணிப்பில்தான் அவர்கள் பங்குகளை விற்று வருகிறார்கள்’’ என்றவருக்கு, சூடான டீ தந்தோம். 
‘‘டாடாவுக்குள் புதுக் குண்டை போட்டுருக்கிறாரே மிஸ்திரி’’ என்று கேட்டோம். 

‘‘டாடா நிறுவனத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஏற்கெனவே அதன் மீது மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கு இருந்து வந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலையில், தினம் தினம் ஏதோ ஒரு செய்தி வெளியாகி டாடா குழுமத்தின் இமேஜை டேமேஜ் செய்து வருகிறது. டாடா நிறுவனம் மிஸ்திரி மீதும், டாடா நிறுவனத்தின் மீது மிஸ்திரியும் மாறி மாறி பழிகளைப் போட்டு வருகிறார்கள். தற்போது டாடாவின் மீது மிஸ்திரி ஒரு புதுக் குண்டை வீசியுள்ளார். டாடா குழுமத்திலேயே அதிக வருமானம் ஈட்டி வந்தது டிசிஎஸ் நிறுவனம்தான். டிசிஎஸ் நிறுவனத்தை ஐபிஎம் நிறுவனத்துக்கு விற்க ரத்தன் டாடா விரும்பினார் என்று மிஸ்திரி ஒரு புதுக் குண்டை போட்டுள்ளார். ரத்தன் டாடா தனது ஈகோ குணத்தினால் டாடா குழுமத்துக்கே பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டாடாவுக்குள் நிலவும் அதிகார மோதலால், டாடா குழும நிறுவனங்களின் செயல்பாடு குறைந்துள்ளது. டாடா நிறுவனப் பங்குகளின் விலையும் சரிந்துள்ளது. இவர்கள் இரண்டு பேரும் கூடிப் பேசினால், பாரம்பர்யமிக்க நிறுவனம் இன்னும் பெரிதாக வளர பேருதவியாக இருக்கும் என்பதே முதலீட்டாளர்களின் எண்ணம்’’ என்று பதில் சொன்னார்.

‘‘கிரீன் சிக்னல் ஐபிஓ திரும்பப் பெறப் பட்டிருக்கிறதே’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டோம்.

‘‘வாக்சின் உற்பத்தி செய்யும் கிரீன் சிக்னல் நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதாக இருந்தது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு நிதி நிறுவனங் களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இரண்டு முறை ஐபிஓ இறுதித் தேதியைத் தள்ளிவைத்தும் பலனில்லை. இதனால் இந்தப் பொதுப் பங்கு வெளியீட்டை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிஎஸ்இ-யிடம் கிரீன் சிக்னல் நிறுவனம் தெரிவித்துள்ளது’’ என்றார்.

‘‘அய்யோ பாவம்! 353 பங்குகள் குறைந்தபட்ச விலைக்கு சரிந்திருக்கிறதே என்ன காரணம்’’ என்று வினவினோம்.

‘‘பண மதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து இந்தியப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை உருவாகி பங்குச் சந்தையை வெகுவாகப் பாதித்துள்ளது. கடந்த திங்கள் அன்று பிஎஸ்இ-யில் உள்ள 353 பங்குகள் அதன் குறைந்தபட்ச விலைக்குச் சரிந்தன. 107 பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன. பெரும்பாலான மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலைக்கு இறங்கியுள்ளன’’ என்றவர், ‘‘பங்குச் சந்தை தொடந்து இறக்கம் காணும் என்பதால், நிதானமாக முதலீடு செய்யவும்’’ என்று சொல்லிவிட்டு, ஃபாலோ பண்ண வேண்டிய பங்குகள் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குப் புறப்பட்டார்.

IPO ஷீலா ஃபோம்

திரட்டப்படும் நிதி: ரூ.510 கோடி 

விலைப்பட்டை: ரூ.680-730

பங்கு விற்பனை காலம்: நவ. 29 - டிச. 1 

குறைந்தபட்ச முதலீட்டுப் பங்குகள்:  20