Published:Updated:

ஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்?

ஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்?
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்?

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்?

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்?
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்?
ஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்?

சென்னையில் மாலை தொடங்கி அதிக அளவில் பனி பெய்வதால், வெள்ளிக்கிழமை பிற்பகல் சந்தை முடிந்த கையோடு நம்மைச் சந்தித்தார் ஷேர்லக். கேன்டீனில் சாப்பிட்டபடி அவரோடு உரையாட ஆரம்பித்தோம். ‘‘சந்தையின் போக்கு நிர்ணயிக்க முடியாதபடிக்கு இருக்கிறதே’’ என்று முதல் கேள்வியைக் கேட்டோம்.

‘‘ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதமாவது குறைப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அமெரிக்க வட்டி விகித உயர்வு, கச்சா எண்ணெய் விலை ஆகிய விஷயங்களைக் கொண்டு இப்போதைக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறது நிதிக் கொள்கை கமிட்டி. இது ஒரு வகையில் புத்திசாலித்தனமான முடிவு என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர், வட்டியைக் கொஞ்சம் குறைத்திருந்தால், வங்கிகள் கடன் தந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். இதனால் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பினை ரிசர்வ் வங்கி தவறவிட்டுவிட்டதே என்கிறார்கள்.

வட்டி விகிதத்தைக் கொஞ்சமாவது குறைப் பார்கள் என்றுதான் சந்தை முதலீட்டாளர்களும் எதிர்பார்த்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால்தான், அன்றைக்கு சந்தை கொஞ்சம் சரிந்தது. என்றாலும், ஐரோப்பிய யூனியன் அறிவித்த சலுகை அறிவிப்புகளால் எல்லா நாட்டு சந்தைகளும் உயர, நம் சந்தையும் உயர்ந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை தொடர்ந்து விற்றுவந்த நிலையில், டிசம்பர் 6-ம் தேதி முதல் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை சுமார் ரூ.745 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதால், அன்று சந்தை நல்ல ஏற்றம் கண்டது. தவிர, அன்றைய தினம் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கின்றன. அதே நேரத்தில், வரும் வாரங்களில் இந்த முதலீடும் சந்தை ஏற்றமும் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அடுத்த சில வாரங்களுக்கு சந்தை ஏற்ற இறக்கமாகவே இருக்கலாம் என்கிறார்கள் முன்னணி அனலிஸ்ட்கள்” என்றவர், ஃபில்டர் காபியை ரசித்துக் குடித்தார்.

‘‘கடந்த ஒரு மாத காலமாக சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கிறதே. இதிலிருந்து எப்போது மீண்டு வரும்?’’ என்று கேட்டோம்.

‘‘கடந்த ஒரு மாத கால செயல்பாட்டை வைத்துப் பார்த்தால், சர்வதேச அளவில் மோசமாக செயல்படும் சந்தைகளில் நான்காவது இடத்தில் இருக்கிறது நம் இந்திய சந்தை. முதல் மூன்று இடங்களில் மெக்ஸிகோ, பிரேசில் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய சந்தைகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் கிட்டதட்ட 3.5% சரிவைச் சந்தித்தன. எஃப்ஐஐ-கள் தங்களது முதலீடுகளைப் பெருமளவில் வெளியே எடுத்தனர். ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் இறக்கத்தில் பங்குகளை வாங்கி முதலீடு செய்து வருவதால், சந்தை சரிவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு அவ்வப்போது ஏற்றத்திலும் வர்த்தகமாகி வருகிறது.

துறைவாரியாகப் பார்க்கும்போது, கடந்த ஒரு மாதத்தில் நிஃப்டி ரியாலிட்டி 15.9% சரிந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, நிஃப்டி மீடியா 9 சதவிகிதமும், ஆட்டோமொபைல் 7.7 சதவிகிதமும் சரிந்திருக்கிறது. நிஃப்டி எஃப்எம்சிஜி, பிரைவேட் பேங்க் மற்றும் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஆகியவை 5.5 முதல் 6.5% வரை இறக்கம் அடைந்துள்ளன. அதேசமயம், பொதுத் துறை வங்கிகள், பார்மா, எனர்ஜி உள்ளிட்ட நிஃப்டி குறியீடுகள் 2.5 முதல் 3% வரை ஏற்றம் அடைந்துள்ளன. நிஃப்டி மெட்டல் அதிகபட்சமாக 4.7% வரை ஏற்றமடைந்திருக்கிறது” என்றார்.
 
‘‘ஆனால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் அதிகரித்து வருகிறதே?’’ என்றோம் கொஞ்சம் வியப்புடன்.

‘‘கடந்த அக்டோபரில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.9,395 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. இது கடந்த 16 மாதங்களில் மிக அதிகமாகும். நவம்பரில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.9,079 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதையும் சேர்த்தால் தொடர்ந்து எட்டு மாதங்களாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு பாசிட்டிவாக இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் நவம்பர் வரையில் மொத்தம் ரூ.40,706 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதையும் சேர்த்தால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.4.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) மூலமான முதலீடு உயர்ந்து வருவதே. இதேபோல், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த தொகை இதுவரை இல்லாத அளவாக ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்டில் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்யக் காரணம், நீங்கள் நடத்தும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் என்பதை அவசியம் சொல்ல வேண்டும்” என்றவரிடம் என்எஸ்இ பற்றி விசாரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்?

‘‘என்எஸ்இ-ல் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு பதில் புதிய சி.இ.ஓ நியமிக்கும் வேலை எந்தளவுக்கு இருக்கிறது?’’ என்று கேட்டோம்.

‘‘என்எஸ்இ-ன் முதல் பெண் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா, கடந்த வாரம் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகினார். அதற்கான காரணம், கருத்து வேறுபாடு என்பதைத் தவிர வேறு தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், அடுத்த சி.இ.ஓ-வைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது, என்எஸ்இ. அந்தப் பொறுப்புக்கான நபரைத் தேர்ந்தெடுக்க நான்கு பேர் கொண்ட குழுவை என்எஸ்இ அமைத்துள்ளது. அந்தக் குழுவில் என்எஸ்இ-ன் பொதுநல இயக்குநர்களான தினேஷ் கனபர், டிவி மோகன்தாஸ் பாய் மற்றும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் உஷா தோரத் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்தக் குழு பரிந்துரைக்கும் நபர்தான் சிஇஓ-வாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது’’ என்றவர் புறப்படும்முன், ஐபிஓ பற்றிய தகவல்களை அள்ளி வழங்கினார்.

‘‘இன்று (வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தையில் பட்டியலிட்டப்பட்ட ஷீலா ஃபோம் நிறுவனம் அதன் வெளியீட்டு விலையைவிட ஏறக்குறைய ரூ.300 உயர்ந்தது. இது சுமார் 41% ஆகும்.  

பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், விரைவில் ஐபிஓ வரவிருக்கிறது. இதற்கான அனுமதி மத்திய மந்திரி சபை யிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான ஹட்கோ நிறுவனம், வரும் 2017 ஜனவரி - மார்ச் காலாண்டில் ஐபிஓ வெளியிட வாய்ப்புள்ளது. இந்த நிறுவனத்தில் மத்திய அரசு 100 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ளது. இதில் தனது பங்கு மூலதனத்தை குறைத்துக்கொண்டு நிதி திரட்டத் திட்டமிடப்பட்டு உள்ளது. 10 சதவிகிதப் பங்குகள் பொதுப் பங்கு விற்பனைக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது. ஐபிஓ வெளியிட ரெஜிஸ்டர்ட் நிதி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கேட்டிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் ஐபிஓ வெளியீட்டை நடத்தும் உரிமையைப் பெறும். சிறு முதலீட்டாளர்களுக்கும், ஹட்கோ நிறுவன ஊழியர்களுக்கும் 5 சதவிகித தள்ளுபடியில் பங்குகளை விற்க அரசு அனுமதி வழங்கி உள்ளது’’ என்றவரிடம், ‘‘அக்டோபர் மாதத்தில் இந்திய தொழில் உற்பத்தி குறியீடு வளர்ச்சி (ஐஐபி) குறைந்துவிட்டதே” என்றோம்.

‘‘ஆமாம். 1.9% குறைந்துள்ளது. முந்தைய செப்டம்பர் மாதத்தில்  இது 0.7%  வளர்ச்சிக் கண்டிருந்தது. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பரில் ஐஐபி வளர்ச்சி இன்னும் குறையும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்” என்றவர், ‘‘டிராபிக் அதிகமாவதற்குள் நான் வீடு போய் சேர்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, விருட்டென்று புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism