Published:Updated:

ஷேர்லக்: கவர்ச்சிகரமான நிறுவனப் பங்குகள்! - விலையில் வீட்டு வசதி

ஷேர்லக்: கவர்ச்சிகரமான நிறுவனப் பங்குகள்! - விலையில் வீட்டு வசதி
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: கவர்ச்சிகரமான நிறுவனப் பங்குகள்! - விலையில் வீட்டு வசதி

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: கவர்ச்சிகரமான நிறுவனப் பங்குகள்! - விலையில் வீட்டு வசதி

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: கவர்ச்சிகரமான நிறுவனப் பங்குகள்! - விலையில் வீட்டு வசதி
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: கவர்ச்சிகரமான நிறுவனப் பங்குகள்! - விலையில் வீட்டு வசதி

“தானாக முன்வந்து வருமானத்தைத் தெரிவிக்கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வருகிறது மத்திய அரசாங்கம்’’ - தனது செல்போனில் லேட்டஸ்ட்-ஆக வந்த செய்தியைப் படித்தபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘இது என்ன புதுசா இருக்கிறதே!’’ என்றபடி பேச ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: கவர்ச்சிகரமான நிறுவனப் பங்குகள்! - விலையில் வீட்டு வசதி

‘‘2016 டிசம்பர் 17-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, 2017 மார்ச் 31 வரை இந்த புதிய திட்டம் அமலில் இருக்கும் என மத்திய அரசு இப்போது அதிரடியாக அறிவித்திருக்கிறது. 2016-ம் ஆண்டில் மத்திய அரசு தரும் இரண்டாவது வாய்ப்பு இது. இதுவரை வருமானத்தில் காட்டாத பணத்தை இனி வருமானமாக அறிவிக்கும்பட்சத்தில் 30% வரி, 10% அபராதம், இந்த வரிகளின் மீது பிரதம மந்திரி காரிப் கல்யாண் செஸ் 33% என மொத்தம் சுமார் 50% வரி கட்ட வேண்டும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அறிவிக்கும் தொகையில் 25% தொகையை வட்டி இல்லா டெபாசிட் திட்டத்தில் போட்டு  வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

மத்திய அரசாங்கம் இப்போது அறிவிக்கும் இந்தத் திட்டத்தை நவம்பரிலேயே கொண்டு வந்திருந்தால், கறுப்புப் பணத்தை வைத்திருப் பவர்கள், தானாக முன்வந்து கணிசமான தொகையைக் கணக்கில் காட்டி இருப்பார்கள். இனி கணக்கில் காட்டவே முடியாது என்று நினைத்தவர்கள், வேறு வழி இல்லாமல் 30 முதல் 40% பணத்தை லஞ்சமாகக் கொடுத்து கணிசமான தொகையை மாற்றி விட்டார்கள். எனவே, இனியும் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டுவார்களா என்பது சந்தேகமே’’ என்று உதட்டைப் பிதுக்கியவருக்கு சூடான டீயைத் தந்தோம். 
 
“பண மதிப்பு நீக்கம் காரணமாக வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்களின் செயல்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறதே?” என்றோம்.

“ஹெச்டிஎஃப்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலை நவம்பர் 8 முதல் இதுவரைக்கும் 5% முதல் 35% வரை விலை இறக்கம் கண்டுள்ளன. இது பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு என்றாலும் நீண்ட காலத்தில், அதாவது அடுத்த 3-5 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு சராசரியாக 15% வளர்ச்சி காணும் என்கிறார்கள். அந்த வகையில், இப்போது விலை இறங்கி கவர்ச்சிகரமாக காணப்படும் இந்தப் பங்குகளை முதலீட்டுக்கு கவனிக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்” என்றார்.

 ‘‘ஷில்பா மெடிகேர்  நிறுவனப் பங்கின் விலை 52 வார உச்சத்தை அடைந்திருக்கிறதே?”  என்றோம் கொஞ்சம் ஆச்சரியத்துடன்.

“ஆங்காலஜி மருந்துகளில் தனித்துவம் வாய்ந்த நிறுவனமான ஷில்பா மெடிகேர், தனது ஜெனரிக் கேன்சர் சிகிச்சைக்கான மாத்திரைகளுக்கு அமெரிக்காவின் எஃப்டிஏ அனுமதியைப் பெற்றிருக்கிறது. இந்தச் செய்திதான் இந்தப் பங்கின் விலை  52 வார உச்சத்தை அடையக் காரணம். சென்செக்ஸ் மற்றும் ஹெல்த்கேர் இண்டெக்ஸ் இரண்டும் கடந்த மாதம் 1% மட்டுமே ஏற்றம் கண்டிருந்தது. ஆனால், இந்தப் பங்கின் விலை 24% ஏற்றம் கண்டிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டு களுக்கு இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று அனலிஸ்ட்டுகள் கணித்துள்ளனர். அதற்கான செயல்திறனும் சந்தையும் இந்த நிறுவனத்துக்கு இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த பங்கு என்பதால், தொடர்ந்து ஃபாலோ செய் பவர்கள் மட்டும் அதை கண்காணிக்கலாம்’’ என்று எச்சரித்தார்.

“சன் பார்மா பங்குகளின் இபிஎஸ் குறையும் என்கிறார்களே, என்ன காரணம்?” என்று கேட்டோம்.

“சன் பார்மாவின் ஒரு பங்கு வருமானம் (இபிஎஸ்) 6% வரை குறைய வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில் அதன் குஜராத் தொழிற் சாலையில் ஆய்வு நடத்திய அமெரிக்க எஃப்டிஏ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட செய்தி வந்த தருணத்தில் சன் பார்மா பங்குகள் விலை 0.5% குறைந்து வர்த்தகமானது. இது மேலும் குறையலாம் என்று சொல்லப்படு கிறது. பெரும்பாலும் அனைத்து ரேட்டிங் நிறுவனங்களுமே சன் பார்மா பங்கின் 2018 வரையிலான கணிப்புகளைக் குறைத்துள்ளன. எனவே, இந்த நிறுவனப் பங்கை வாங்கிய முதலீட்டாளர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பதே நல்லது” என்று மீண்டும் எச்சரித்தார்.  
 
“கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனப் பங்கு, 15 நாட்களில் 22% விலை சரிந்திருக்கிறதே,  இப்போது வாங்கலாமா என்று கேட்கிறார்கள் வாசகர்கள்” என்றோம்.

“இந்தப் பங்கு டிசம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 22% விலை குறைந்திருக்கிறது. காரணம், நஷ்டத்தில் இருக்கும் தனது வெளிநாட்டுப் பரிமாற்றம் மற்றும் விநியோகம் சார்ந்த பிசினஸை விற்க முடியாமல் இந்த நிறுவனம் திண்டாடிக் வருகிறது. 2014-15, 2015-16 ஆகிய இரு நிதி ஆண்டு களிலும் முறையே ரூ.590 கோடி மற்றும் ரூ.560 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தப் பிரச்னையில் இருந்து இந்த நிறுவனம் வெளியே வர சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை ஆக வாய்ப்புள்ளதால், இந்த நிறுவனத்தின் எதிர்காலம் மோசமான நிலையிலேயே உள்ளது. எனவே, மீண்டும் பங்கு விலை ஏற்றமடையுமா என்பதே சந்தேகம். இதனால் பங்கின் விலை 22% குறைந்துள்ள நிலையிலும் முதலீட்டாளர்கள் யாரும் வாங்க தயாராக இல்லை. புதிதாக இந்தப் பங்கை வாங்க நினைப்பவர்கள் இப்போது எந்த துணிகர முடிவையும் எடுக்க வேண்டாம்’’ என்றார்.

‘‘பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்த கடந்த நவம்பரில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு எப்படி இருந்தது?’’ என்றோம்.

‘‘மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீட்டில் பெரிய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நவம்பர் மாதத்தில் எஃப்ஐஐ-கள் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறிய போதும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள்,  இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 2.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். இவற்றில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மட்டுமே 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளன.

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பங்குத் தேர்வுகளில் மாற்றம் இருந்தன. ஆட்டோ மொபைல், ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றில் குறைவாகவும், மெட்டல், டெலிகாம் மற்றும் பவர் உள்ளிட்ட பங்குகளில் அதிகமாகவும் முதலீடு செய்துள்ளன. மிட்கேப் பங்குகளில் லாபத்தை புக் செய்த அதே சமயம், லார்ஜ் கேப் பங்குகளை வாங்கியுள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள டாப் பங்குகள் என்று பார்த்தால், ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் என்டிபிசி -ல் முதலீட்டை மேற்கொண்டு இருக்கின்றன. அதேசமயம், ஹெச்பிசிஎல், வேதாந்தா மற்றும் பிபிசிஎல்  பங்குகளை விற்றிருக்கிறது.  திஷ்மன் பார்மா, குஜராத் கேஸ் மற்றும் குவெஸ் கார்ப் ஆகியவற்றில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது. ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எல் அண்ட் டி, சன் பார்மா மற்றும் ஜிஎஸ்கே கன்ஸ்யூமர் ஆகியவற்றை வாங்கியும், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசிசி பங்குகளை விற்கவும் செய்துள்ளது. எஸ்ஸெல் புரோபேக், (Esselpropack) ஹெச்டிஐஎல் மற்றும் நவ்நீத் எஜுகேஷன் ஆகியவற்றிலிருந்து முற்றிலுமாக வெளியேறி இருக்கிறது’’ என்றவரிடம், “கீதாஞ்சலி ஜெம்ஸ் 10% விலை அதிகரித்திருக்கிறதே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

“கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான நக்‌ஷத்ரா வேர்ல்ட் விரைவில் ஐபிஓ வர இருக்கிறது. இந்த ‌ஐபிஓ மூலம் ரூ.650 கோடி நிதி திரட்ட உள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் இந்த நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 12.56%  உயர்ந்துள்ளது. இதனால் இதன் பங்கு விலை 10% உயர்ந்து வர்த்தகமாகிறது” என்றவர், பனியிலிருந்து தப்பிக்க தொப்பியைப் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.