Published:Updated:

ஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்!

ஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்!

‘‘ஹேப்பி கிறிஸ்துமஸ்’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவருக்குத் தருவதற்காக நாம் வாங்கி வைத்திருந்த பிளம் கேக்கை ஒரு தட்டில் வைத்து நீட்டினோம். ‘பிரமாதம்’ என்றபடி கொஞ்சம் பிய்த்து சாப்பிட்டவர், ‘‘கேள்விகளைக் கேளும்’’ என்றார்.

“நடப்பு 2016-ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை தந்த லாபம் சொல்லிக் கொள்ளும்படி இல்லையே?” - கொஞ்சம் வருத்தத்துடன் கேட்டோம்.

‘‘உண்மைதான். இந்த ஆண்டில் இதுவரை சென்செக்ஸின் வளர்ச்சி  கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லி விடலாம். இதே காலகட்டத்தில் பிஎஸ்இ 500 குறியீடு சுமார் 2% வருமானம் தந்துள்ளது. 2015-ம் ஆண்டில் பிஎஸ்இ 500 தந்த வருமானம் மைனஸ் 0.81 சதவிகிதமாக இருந்தது.

ஆனால், 2016-ம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடாக (ஐபிஓ) வந்த பல நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் தந்திருக்கின்றன. குறிப்பாக, இன்ஃபி பீம் இன்கார்ப்பரேஷன் (Infi Beam Incorporation) 173.78%, அட்வான்ஸ்டு என்சைம் டெக்னாலஜீஸ் (Advanced Enzyme Technologies) 115.88%, மஹாநகர் காஸ் 82.10% ஆகிய பங்குகள் நல்ல வருமானம் தந்திருக்கின்றன.

ஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்!

பிஎஸ்இ 500 நிறுவனங்களில் குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் பங்கு விலை 155 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதே போல, வேதாந்தா (140%), ஸ்வான் ஃபெர்டிலைசர்ஸ் (130%), மணப்புரம் ஃபைனான்ஸ் (105%), ஹிண்டால்கோ (90%), சார்தா கார் கெமிக்கல் (85%) உள்ளிட்ட பங்குகள் நன்றாக விலை உயர்ந்துள்ளன.   ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐடியா செல்லூலர், ஜஸ்ட் டயல், ஜெட் ஏர்வேஸ், வோக்கார்ட், ராம்கோ சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் மிகவும் மோசமாகச் செயல்பட்டுள்ளன. இந்த நிறுவனப் பங்குகளின் விலை 2016-ம் ஆண்டில் சுமார் 50 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டுள்ளன” என்று நீண்ட பட்டியலை வாசித்தார்.

“அப்படியானால் பங்குச் சந்தையில் இந்த ஆண்டு யாருக்கும் லாபம் கிடைக்கவில்லையா?’’ என்று கேட்டோம்.

“இந்த ஆண்டில் ஆளானப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்குப் பெரிய அளவில் வளர்ச்சியைத் தந்துவிடவில்லை. ஏனெனில் இந்த வருடத்தில் சென்செக்ஸ் வளர்ச்சியே காணவில்லை. அவர் நிர்வகித்துவரும் பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், அவற்றின் மதிப்பு வளர்ச்சி ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் தட்டையாகவே இருந்தது. அவர், ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ள நிறுவனங்கள் 2% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளன. அவர் மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக வைத்துள்ள பங்குகள் பெரிதளவில் ஏற்றம் அடையவில்லை.

அவருடைய நீண்ட கால நம்பிக்கைப் பங்கு களான அரோபிந்தோ பார்மா, லூபின், டைட்டன் ஆகியவை இந்த வருடத்தில் அவருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளன. இரண்டு பார்மா நிறுவனங்கள் 20 சதவிகிதமும் டைட்டன் 9 சதவிகிதமும் குறைந்திருக்கின்றன. ஆனால், இந்த வருடத்தில் சற்று வித்தியாசமாக பெரிய அளவில் பிரபலமாகாத நிறுவனங்களின் பங்குகளான ஜியோமெட்ரிக், ஆட்டோலைன் இண்டஸ்ட்ரீஸ், மந்தனா ரீடெய்ல் மற்றும் டெல்டா கார்ப்பரேஷனையும் வாங்கினார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. அவர் எந்தப் பங்கை வாங்கினாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் என்பதால், இந்தப் பங்குகள் எதிர்காலத்தில் நல்ல லாபம் தரலாம். ஆனால், அவர் வாங்கிவிட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக நாமும் அந்தப் பங்கை வாங்க வேண்டியதில்லை.” 

“உரிமைப் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டுவது 2016-ம் ஆண்டில் குறைந்திருக்கிறதே?” என்றோம் சற்றுக் கவலையுடன்.

“2016 முழுவதும் நடந்த பல பொருளாதாரம் சார்ந்த நிகழ்வுகளால் பங்குச் சந்தை, தொடர் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது. இந்த நிலையற்ற தன்மையாலும், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்ததாலும் உரிமைப் பங்குகள் வெளியிடுவது (Right Issue) குறைந்துள்ளது. கடந்த  2015-ம் ஆண்டு  உரிமைப் பங்கு வெளியீடு மூலம் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ரூ.12,568 கோடியைத் திரட்டியது. ஆனால், 2016-ம் ஆண்டில் 10 நிறுவனங்கள் மட்டும் ரூ.1,913 கோடியைத் திரட்டின. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 85% வீழ்ச்சி ஆகும்.  கடந்த        2003-க்குப் பிறகு இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியில் இதுதான் மிகக் குறைவு.

அதேசமயம், தற்போதுள்ள சூழலில் நிதித் தேவை அதிகம் இல்லாததால், நிறுவனங்களின் புரமோட்டர்களும் உரிமைப் பங்கு வெளியீடு மூலம் அதிக நிதி திரட்ட தயாராக இல்லை.  பொதுப் பங்கு வெளியீட்டைத் தவிர, பிற நிதி  திரட்டும் திட்டங்களின் செயல்பாடும் இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தே காணப்பட்டது” என்றவருக்கு சுக்கு மல்லி காப்பி கொடுத்தோம். 

“உர நிறுவனப் பங்குகள் திடீர் ஏற்றம் கண்டுள்ளதே, என்ன காரணம்?” என்று கேட்டோம்.

“குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் (GSFC) மற்றும் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் (FACT)  ஆகியவற்றின் பங்குகள் கடந்த வாரம் புதன் அன்று முறையே 8.9%, 4.3%  உயர்ந்து வர்த்தகமாகின. காரணம், இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கேப்ரோலேக்டம் எனும் நைலான் மற்றும் ரெசின்கள் தயாரிக்க தேவையான முக்கிய மூலப் பொருளின் விலை இரண்டாண்டுகளில் இல்லாத உச்சத்தை அடைந்திருக்கிறது. நைலான் மற்றும் ரெசின்கள் டெக்ஸ்டைல் மற்றும் தொழில் துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கேப்ரோலேக்டம் 2014 டிசம்பர் 19-ம் தேதி நிலவரப்படி, 1,42,707 ரூபாயாக இருந்தது தற்போது 1,61,118 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்எஃப்சி மற்றும் எஃப்ஏசிடி பங்குகள் ஏற்றமடைய இதுதான் காரணம். ஆனாலும் செப்டம்பர் மாதக் காலாண்டில் இந்த இரண்டு நிறுவனங்களின் நிகர லாபம் கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது” என்று பதிலளித்தார்.

“பண மதிப்பு நீக்கத்துக்குப்  பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கிய டாப் பங்குகள் என்னென்ன என்று கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டோம்.

“நரேந்திர மோடி அரசு எடுத்த அதிரடி  நடவடிக்கையால் பங்குச் சந்தையின் போக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்  கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவ்வப்போது முதலீட்டை விற்று வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு ரூ.19,000 கோடி முதலீட்டை வெளியே எடுத்திருக்கின்றனர். அதே சமயம், மிட்கேப் பங்குகளில் ஏற்பட்ட விலைச் சரிவு வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திருக்கிறது. பாரத் ஃபைனான்ஷியல், தம்பூர் சுகர் மில்ஸ், என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், எஸ்கார்ட்ஸ், காவேரி சீட், மிண்டா இண்டஸ்ட்ரீஸ், எம்சிஎக்ஸ், ஓரியன்ட் பேப்பர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், ஷில்பி கேபிள் டெக்னாலஜீஸ், வக்ராங்கி ஆகிய நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியிருக்கிறார்கள். பங்கு விலை குறைந்ததற்காக மட்டுமே அவர்கள் இந்தப் பங்கை வாங்கிவிடவில்லை. மாறாக, இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் ஓரளவுக்கு நன்றாக இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்” என்று கிளம்பத் தயாரானார்.

“ஐபிஓ வந்த லாரஸ் லேப்ஸ் பட்டியலானதே, வரவேற்பு எப்படி?’’ என்று விசாரித்தோம்.

“ஹைதராபாத்தைச் சேர்ந்த பார்மா கம்பெனியான லாரஸ் லேப்ஸ் சமீபத்தில் ஐபிஓ வெளியிடப்பட்டு கடந்த வாரம் திங்கட்கிழமை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ரூ.490-க்குப் பட்டியலிடப்பட்ட லாரஸ் லேப்ஸ், அன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ.498 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ.475 விலையிலும் வர்த்தகமானது. அதன் வெளியீட்டு விலையான ரூ.428-ஐ காட்டிலும் 14.5% உயர்ந்து வர்த்தகமானது” என்றவர், ‘‘வருகிற வாரத்தில் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வருகிறது. எனவே, சந்தை அப்படியும் இப்படிமாகத்தான் இருக்கும். வாசகர்களுக்கு அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்’’ என்று வாழ்த்து சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism