Published:Updated:

சம்பளம் முழுவதையும் முதலீடு செய்யும் கல்லூரிப் பேராசிரியர்!

சம்பளம் முழுவதையும் முதலீடு செய்யும்  கல்லூரிப் பேராசிரியர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சம்பளம் முழுவதையும் முதலீடு செய்யும் கல்லூரிப் பேராசிரியர்!

மியூச்சுவல் ஃபண்ட்...கார்த்திகா

சம்பளம் முழுவதையும் முதலீடு செய்யும்  கல்லூரிப் பேராசிரியர்!

ம்மில் சிலர் மாதமொன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறோம். ஆனால், தனக்குக் கிடைக்கும் மாதச் சம்பளத்தில் பெரும்பகுதியை மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் முதலீடு செய்து வருகிறார் கோவைப் பேராசிரியர் அகிலா.

இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ‘மெக்கட்ரானிக்ஸ்’ துறையில் பேராசிரியராக இருக்கிறார். இவரது கணவர் முரளிதரன், திருப்பூரில் ஜவுளி உற்பத்தித் தொழிலை செய்து வருகிறார். தனது குழந்தைகளான காவ்யா மற்றும் பிரணவ்-வின் எதிர்காலத் தேவைக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார் அகிலா. கல்லூரிக்குச் சென்றுவந்தபின் வீட்டில் ஓய்வாக இருந்த மாலை வேளையில் நாம் அவரைச் சந்தித்தோம்.

‘‘எங்கள் சொந்த ஊர் என்றால் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திருமங்கலம். என்றாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் கோவைக்கு வந்துவிட்டோம். 2005-ல் நான் கல்லூரியில் பணி யாற்றத் தொடங்கினேன். அப்போதே என் கணவர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்துக் கேள்விப்பட்டு, அதில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்து சுமார் ரூ.2 லட்சம் வரை சேர்த்திருந்தோம்.

சம்பளம் முழுவதையும் முதலீடு செய்யும்  கல்லூரிப் பேராசிரியர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


ஆனால், 2007-ல் கோவையில் ஒரு வீடு வாங்க நினைத்தபோது கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. மியூச்சுவல் ஃபண்டில் இருந்த பணத்தை எடுத்து,  வீடு வாங்கினோம்.

ஆனாலும், அது எங்களுக்கு ஒரு குறையாகவே இருந்தது. மீண்டும் 2008 முதல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைத்தபோதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முகவரான கண்ணனைச் சந்தித்தோம். மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் லாபம் குறித்து எங்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், என்ன தேவைகளுக்காக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும், ஏன் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும், இடைப்பட்ட காலத்தில் ஏன் முதலீட்டை நிறுத்தக்கூடாது என்பதைப் பற்றி எல்லாம் விளக்கமாக அவர் எடுத்துச் சொன்னார். அவரது வழிகாட்டுதல் எங்களிடம் ஒரு நிதி ஒழுங்கை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் என் பெயரில் ரூ.2,000-மும், என் கணவர் பெயரில் ரூ.2,000-மும் மாதந்தோறும் முதலீடு செய்யத் தொடங்கினோம். பிற்பாடு ஆண்டுதோறும் முதலீடு செய்யும் தொகையை கொஞ்சம் உயர்த்திக் கொண்டே வந்தோம். இப்போது வீட்டுக்குத் தேவையான செலவுக்கான பணம் என் கணவரின் பிசினஸிலிருந்து கிடைத்துவிடுவதால், என் சம்பளத்தில் பெரும்பகுதியையும் மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறோம்.  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் நாங்கள் ஒரு கோடி ரூபாயாவது சேர்க்க வேண்டும் என்று நினைத்தோம். இதில் 50 சதவிகிதத்தை நாங்கள் இப்போதே எட்டிவிட்டோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

நாங்கள் ஃபண்ட் திட்டங்களைத்  தேர்வு செய்யும்போது, பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களையே தேர்வு செய்வோம். நீண்ட காலத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களே பெஸ்ட். நீண்ட காலத்தில் இதன் மூலம் கிடைக்கும் லாபம் வேறு எதிலும் கிடைக்காது என்பதை நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறோம். அதிலும் ‘குரோத்’ ஆப்ஷனையே நாங்கள் தேர்வு செய்வோம். என்னிடமுள்ள 35 ஃபண்ட் திட்டங்களில் இரண்டே இரண்டு திட்டத்தில்  மட்டும் ‘டிவிடெண்ட்’ ஆப்ஷனைத் தேர்வு செய்துள்ளோம். இதன் மூலம் சமீபத்தில்கூட இரண்டு லட்ச ரூபாய் டிவிடெண்ட் ஆக கிடைத்த போது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போது சந்தை கொஞ்சம் சரிந்திருப்பதால், எங்கள் லாபமும் கொஞ்சமும் குறைந்திருக்கிறது. இதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மீண்டும் சந்தை உயரும்போது எங்கள் லாபமும் உயரும் என்பதால், நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் எனக்குக் கிடைத்த நன்மைகளைப் பார்த்து என் சகோதர, சகோதரிகளும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள். என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் இந்த முதலீடு பற்றி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எடுத்துச் சொல்லத்தான் செய்கிறேன். ஆனாலும், பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செயல்படும் விதம் புரியவில்லை.  அவர்கள் இன்னும்கூட வீடு வாங்குவது, தங்க நகை வாங்குவதுதான் சிறந்த முதலீடு என்று நினைக்கிறார்கள். 

‘எல்லாப் பணத்தையும் மியூச்சுவல் ஃபண்டிலேயே போடுகிறாயே, உனக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்கிற ஆசையே இல்லையா?’ என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.  என் திருமணத்தின் போது எனக்குக் கிடைத்த நகைகள் அப்படியே  இருக்கும்போது இன்னும் புதிது புதிதாக நகைகளை வாங்கி, ஏன் பணத்தை முடக்க வேண்டும்? என் மகளுக்குத் தேவைப் படும்போது சிறிய அளவில் நகைகளை வாங்கி னாலும், பெரிய அளவில் அதற்காக பணத்தைச் செலவு செய்ய நாங்கள் விரும்புவதில்லை.

நாங்கள் செய்த முதலீட்டைத் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு ஒரு சின்ன மனக்குறை உண்டு. 2007-ல் வீடு வாங்க அப்போது மியூச்சுவல் ஃபண்டில் இருந்த பணத்தை நாங்கள் எடுத்தோம்.  அந்தப் பணத்தை மட்டும் நாங்கள் அப்போது எடுக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு எங்களிடம் சேர்ந்த பணம் 1.5 கோடி ரூபாயாக இருந்திருக்கும். மியூச்சுவல் ஃபண்டில் சின்னத் தொகைகூட நீண்ட காலத்தில் கூட்டு வட்டி மூலம் பெரிய தொகையாக மாறிவிடும்’’ எனப் பேசி முடித்தார் அகிலா.

பொறியியல் கல்லூரிப் பேராசிரியராக இருந்தாலும் முதலீட்டு விஷயத்தில் தெளிவாக இருக்கும் அகிலாவை எல்லாப் பெண்களும் ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்!

படம் : தி.விஜய்