Published:Updated:

2017 முதலீட்டுக்கு ஏற்ற 10 பங்குகள்!

2017 முதலீட்டுக்கு ஏற்ற 10 பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
2017 முதலீட்டுக்கு ஏற்ற 10 பங்குகள்!

மு.சா.கெளதமன்

2017 முதலீட்டுக்கு ஏற்ற 10 பங்குகள்!

ந்தை ஓரளவுக்கு நன்கு சரிந்து, இப்போது மேலே செல்லுமா அல்லது இன்னும் கீழே செல்லுமா என்கிற கேள்விக்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், 2017-ம் ஆண்டில் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது என்று ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஹெட் ரிசர்ச் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

‘‘சந்தையில் தற்போது ஒரு ‘ரிலீஃப் ரேலி’ என்று சொல்லப்படும் நிவாரண ஏற்றம்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த டிரெண்டைப் பார்த்தால், இன்னும் இறக்கத்தில் தான் இருக்கிறது. நெகட்டிவ் செய்திகளோ அல்லது சந்தைக்கு எதிரான அறிவிப்புகளோ வரும்பட்சத்தில், நிஃப்டி 7400 அல்லது அதிகபட்சமாக 7200 வரை இறங்க வாய்ப்பிருக்கிறது.

2017 முதலீட்டுக்கு ஏற்ற 10 பங்குகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizஇப்படி, சந்தை என்னதான் இறக்கம் காட்டினாலும், இந்த பெரிய இறக்கத்துக்குப்பின், வரும் 2020 டிசம்பருக்குள் நிஃப்டி 15000 - 16000 வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதை  மறுப்பதற் கில்லை. அதோடு, பணமதிப்பு நீக்கம் தொடர்பான பிரச்னைகள், 2016-17-ம் நிதி ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் ஒவ்வொரு பங்குக்கும் தனித் தனியாகக் காட்டும்.

தற்போதுள்ள நிலையில், சந்தை இறக்கம் காண்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. தற்போது சந்தை வர்த்தகமாவதைப் பார்த்தால், அதன் போக்கைக் கணிப்பது சற்று கடினமே. வட்டி விகிதக் குறைவு, தங்கம் விலை வீழ்ச்சி, ரியல் எஸ்டேட் துறை தடுமாற்றம், பண மதிப்பு நீக்கம் போன்ற பூதாகர பிரச்னைகளுக்கு நடுவில், பங்குச் சந்தை மட்டுமே நீண்ட காலத்தில் நல்ல வருமானம் ஈட்ட அதிக வாய்ப்பிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

சந்தையில் நிலையாக வர்த்தகமாகி, முதலீட்டாளர்களுக்கு லாபத்தைத் தரக்கூடிய 10 பங்குகளைப் பார்ப்போம். அடுத்த 12 - 15 மாத காலத்தில் இந்தப் பங்குகள் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். 

   இன்ஃபோசிஸ்!  

பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் முதலில் காலாண்டு முடிவு வெளியிடும் நிறுவனம் இது. வரும் ஜனவரி 13, 2017-ல் இதன்் மூன்றாவது காலாண்டு முடிவு வெளியாக இருக்கிறது. தற்போது இந்தப் பங்கின் ‘ஃபார்வேர்ட் ஏர்னிங்ஸ்’ என்று சொல்லப்படும், பங்கு விலைக்கும், இபிஎஸ்-க்குமான விகிதம் 13 மடங்காக இருக்கிறது.

2016 மார்ச் நிலவரப்படி, 68 ரூபாயாக இருந்த இபிஎஸ், வருங்காலத்தில் 70 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த நிறுவனம் மார்ச் 2016 நிலவரப்படி, சுமார் 56,000 கோடி ரூபாயை கையிருப்பாகக் காட்டி இருக்கிறது.  
இந்தப் பங்கின் விலை ரூ.1,279-ல் இருந்து ரூ.900 வரை ‘கரெக் ஷன்’  ஆகி இருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். இனி வரும் மாதங்களில் இதன் விலை அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.

   பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

சிறிய ஐ.டி துறை சார்ந்த நிறுவனமான இது, என்டர்பிரைசஸ்களை டிஜிட்டல் தளத்துக்கு மாற்றும் பணிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வருவாய், என்டர்பிரைசஸ் கஸ்டமர்களிடமிருந்தே அதிகளவில் வந்துகொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே என்டர்பிரைசஸ் கஸ்டமர்களுக்கு தகுந்தாற்போல, தங்களுடைய மொத்த நிறுவனத்தையும் மாற்றி அமைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அதோடு, ஐபிஎம் (IBM) நிறுவனத்துடன் சில ஒப்பந்தங்களும் போட்டுக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அதிகரிக்கும்போது, இந்த நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கவே செய்யும்!

இந்த நிறுவனப் பங்கின் விலை சமீபத்தில்தான் தனது வாழ்நாள் உச்சத்தை நெருங்கி வர்த்தகமானது. இருப்பினும், உச்ச விலையைக் கடக்கவில்லை. இனி வரும் காலங்களில் கடக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு, இந்தப் பங்கின் தற்போதைய விலைக்கும், இபிஎஸ்-க்குமான விகிதம் 14 மடங்காக இருப்பது கவர்ச்சிகரமான அம்சம்தான். அதோடு, ரூ.575 என்பது மல்டிபில் சப்போர்ட்டாக  இருப்பது கவனிக்கத்தக்கது.

2017 முதலீட்டுக்கு ஏற்ற 10 பங்குகள்!

   யூ.எஃப்.ஓ மூவீஸ்!  

பண மதிப்பு நீக்கம் காரணமாக பெரிதும் பாதிக்கப்படாத நிறுவனங்களில் இதுவும் ஒன்று.  இந்த நிறுவனத்துக்கு சினிமா தியேட்டர்களில் படத்தை வெளியிடுவது மற்றும் சினிமா விளம்பரங்கள் மூலமாகவே வருவாய் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் சந்தையே இந்தியாவின்  பி  மற்றும் சி தர நகரங்கள்தான் என்பதால், இதன் வளர்ச்சியிலும் பெரிய பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் 5,055 ஸ்க்ரீன்கள் மற்றும் 1,675 ஸ்க்ரீன்கள் மத்திய ஆசிய நாடுகளிலும் சாட்டிலைட் நெட்வொர்க் மூலமாக இவர்கள் தான் சினிமாப் படத்தை வெளியிடுகிறார்கள். இதுவரை 22 மொழிகளில், 10,000-க்கும் மேற்பட்ட சினிமாக்களை 2.10 கோடி முறை திரையிட்டு இருக்கிறார்கள். இனி வருங்காலங்களிலும் இவர்களின் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையும், சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், சினிமா ஸ்க்ரீன்களில் படம் போடுவதில் வரும் வருமானம் குறைய வாய்ப்பில்லை. இந்த நிறுவனத்தின் விளம்பர வருவாய் 2016 - 19 ஆண்டுகளில்  ஆண்டு  கூட்டு வட்டிக் கணக்கில் 34% வரை அதிகரிக்கலாம். ஆக மொத்தத்தில் சினிமா ஸ்க்ரீனிங் மூலம் வருவாய் அதிகரிப்பது, விளம்பர வருமானம் அதிகரிப்பது, ஆர்.ஓ.இ அதிகரிப்பது, வலுவான பேலன்ஸ்ஷீட் ஆகிய காரணங்களால் இதில் முதலீடு செய்யலாம்.

ரூ.640-ல் இருந்து பங்கின் விலை ‘கரெக் ஷன்’ ஆகி, ரூ.396-க்கு நல்ல சப்போர்ட் எடுத்திருக்கிறது.  ரூ.380-க்கு கீழே இறக்கம் காணாமல் மேல்நோக்கியே வர்த்தகமாகி வந்தால், மீண்டும் தன் பழைய உச்ச விலையான 640 ரூபாயைத் தொடலாம்.

   என்பிசிசி! 

இந்த நிறுவனத்தின் வருவாய் 2016 மார்ச்-ல் 6,000 கோடி ரூபாய்.  இந்த நிறுவனத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.70,000 கோடி மதிப்புள்ள கட்டுமான ஆர்டர் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி 2016-17 நிதி ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டில் எதிர்பார்ப்பைவிட சற்றே குறைவாக உள்ளது. இந்தியா முழுக்க  ரியல் எஸ்டேட் துறையே மந்தநிலையில் இருக்கும்போது, இந்த நிறுவனம் வளர்ச்சியில் இருக்கிறது. பி.எம்.சி என்று அழைக்கப்படும் ‘புராஜெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்’ துறையில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு 25% வளர்ச்சியைக் காட்டிவருவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். சமீபத்தில்தான் இந்தப் பங்கின் விலை, தன் 52 வார உச்சமான 299.20 ரூபாயைத் தொட்டது. தற்போதும் மேல்நோக்கியே டிரெண்ட் உள்ளதால். மீண்டும் நல்ல விலை ஏற்றத்தை காணலாம்.

   மஹிந்திரா & மஹிந்திரா! 

இது ஒரு ஹோல்டிங் நிறுவனம். அதுவும் சந்தை இதுவரை சரியான விலையைக் கொடுக்காமலேயே இருக்கிறது. இந்த ஒரு நிறுவனத்தின் கீழ்தான் மஹிந்திராவின் டெக்னாலஜி, ஆட்டோ மொபைல், ஹோட்டல் மற்றும் ரிசார்ட்கள், ரியல் எஸ்டேட், இன்ஜின்கள் என்று பல துறைகளை உள்ளடக்கியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டில் வந்த பருவ மழைகள், இந்தியாவுக்குச் சாதகமாகவே இருந்தது. இந்த நிறுவனங்களின் பொருட்களுக்கு, கிராமப்புறங்களில் நல்ல சந்தை இருப்பதால், வரும் மாதங்களில் இவர்களின் விற்பனை அதிகரித்து, வருவாயும் அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, பங்கு விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் பங்கு 1,500 ரூபாயில் இருந்து 1,140 ரூபாய் வரை இறக்கம் கண்டு ‘கரெக் ஷன்’ ஆகி இருக்கிறது. நாம் ஏற்கெனவே சொன்ன படி, இதன் விற்பனை, அதிகரிக்கத் தொடங்கினால், தானாகவே வருவாயும், லாபமும் அதிகரிக்கும். பங்கு விலையில் லாபம் பிரதிபலித்து பங்கு விலை உயரும்.

   அர்விந்த்! 


இந்த நிறுவனம் சர்வதேச பிராண்டட் தயாரிப்புகளை (Arrow, US Polo Assassin)  இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம், தன் பிராண்டுகள் மூலம், லாப வரம்புகளை அதிகப்படுத்து வதற்கான வேலைகளைச் செய்து வருகிறது. அதோடு தன்னுடைய 10% பங்குகளை 740 கோடி ரூபாய்க்கு சந்தையில் வெளியிட்டு, நிறுவனத்தின்  மதிப்பை (என்டர் பிரைஸ் வேல்யூ) 8,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதோடு தனது பிராண்ட் பிசினஸை ரூ.2,740 கோடியில் இருந்து ரூ.9,000 கோடியாக உயர்த்தவும், ரூ.134 கோடியாக இருக்கும் வரி, வட்டி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய  (EBITA) லாபத்தை ரூ.1,250 கோடியாக உயர்த்தவும், ஆர்.ஓ.சி.இ-யை 5 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகித மாக அதிகரிக்கவும் படிப்படியாக திட்டங்களைச் செயல்படுத்தி  வருகிறது.

இந்தப் பங்கு சமீபத்தில்தான் தன் வாழ்நாள் உச்சமான 423.90 ரூபாயைத் தொட்டது. மீண்டும் பண மதிப்பு நீக்கம் காரணமாக விலை இறக்கம் காணத் தொடங்கியது. பண மதிப்பு நீக்கத்தினால் இந்த நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அப்படி நடந்து விலை மீண்டும் கொஞ்சம் ஏறத் தொடங்கினால்கூட நல்ல ஏற்றம் கண்டு, ரூ.550 வரை செல்லலாம்.

   கொரமண்டல் இன்டர்நேஷனல்!

கடந்த ஆண்டில் பெய்த நல்ல பருவமழை காரணமாக அதிக உரங்கள் விற்கப்படலாம். இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 7000-க்கும் மேற்பட்ட டீலர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் உரங்கள் விற்பதில் டாப் 3 நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பதால், பங்கு விலையிலும் இது விரைவில் பிரதிபலிக்கும்.  

கடந்த மூன்று மாதங்களில் ஒட்டு மொத்த சந்தையே மந்த நிலையில்  வர்த்தகமாகும்போது, இந்தப் பங்கு, ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.  சில நாட்களுக்கு முன்புதான் தன்னுடைய 52 வார உச்சத்தைத் தொட்டது.  ‘அப் டிரெண்ட்’-ல் விலை சீராக ஏற்றம் கண்டு, அடுத்து வரும் மாதங்களில் தனது வாழ்நாள் உச்சமான 376 ரூபாயைக் கடக்க  வாய்ப்பு இருக்கிறது.

2017 முதலீட்டுக்கு ஏற்ற 10 பங்குகள்!

   கெயில்! 

கடந்த 2016-ம் ஆண்டு பெட்ரோகெமிக்கல் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, சிக்கலான ஆண்டு தான். இருப்பினும், இந்த நிறுவனம் தன் உற்பத்தித் திறனை 440 கே.டி.யில் இருந்து 810 கே.டி.க்கு (KT - கிலோ மெட்ரிக்) அதிகரித்துக் கொண்டது. தற்போது அதில் 90% செயல்பட்டு வருகிறது.  எனவே, வரும் 2017-18 நிதி ஆண்டுக்குள் கெயில் நிறுவனத்தின் உற்பத்தி, நாள் ஒன்றுக்கு சீராக 20 எம்.எம்.எஸ்.சி.எம். (MMSCM - Million Metric Standard Cubic Meter) அதிகரிக்கும். தற்போதே நீண்ட கால ஒப்பந்தத்தின் பெயரில் 4.5 மெட்ரிக் டன்  உற்பத்தி செய்து வருகிறது.

இந்தப் பங்கு தன் 5 வருட குறைந்த விலையான 260 ரூபாயில் இருந்து சீராகவும், பொறுமையாகவும் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றம் தொடர்ந்தால், அதன் 5 வருட உச்ச விலையான 551 ரூபாயைத் தாண்டி உயர வாய்ப்பிருக்கிறது.

   அஸ்திரால் பாலி! 


இந்திய பிவிசி மற்றும் சிபிவிசி பைப்புகளில் 30 - 35 % சந்தையை இந்த நிறுவனம்தான் வைத்திருக்கிறது. தற்போது இந்த நிறுவனம் 1.2 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு பைப்புகளை உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்தித் திறனை வரும் 2018 நிதி ஆண்டு முடிவுக்குள் 1.5 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருவாய், 80% பைப்புகள் மூலமே  வருகிறது. இந்த நிறுவனத்துக்கான பெரிய ப்ளஸ் என்றால்,     ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பு நீக்கம்தான். 

இந்தப் பங்கு தன் 52 வார உச்ச விலையான 527 ரூபாயில் இருந்து விலை இறங்கி வர்த்தகமாகி வருகிறது. 367 ரூபாய் என்பது நல்ல சப்போர்ட்டாக இருக்கிறது.  எனவே, 367 ரூபாய்க்குக் கீழே இறங்காமல் இருந்தாலே எப்படியும் அடுத்து வரும் மாதங்களில் இதன் விலை அதிகரிக்கத் தொடங்கி, தன் 52 வார உச்சத்தைக் கடக்க வாய்ப்பிருக்கிறது.

   ரெயின் இண்டஸ்ட்ரீஸ்!  

உலகின் மிகப் பெரிய கால்சினைடு பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி, தார் போன்ற பொருட்களின் தயாரிப்பாளர் இந்த நிறுவனம் தான். இவர்களின் பொருட்கள், வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ரஷ்யா என பல நாடுகளில் கால்பதித்திருக்கின்றன. அதிக வட்டிக்கு வாங்கி இருக்கும் கடன்களை குறைந்த வட்டிக்கு மாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிறுவனத்தின் நிகர லாபம், வரும் 2016–2019 ஆண்டுகளில் கூட்டு வட்டிக் கணக்கில் சுமாராக 27% வரை அதிகரிக்கலாம். அந்த வளர்ச்சி வரும் ஆண்டுகளில் பங்குகளிலும் பிரதிபலிக்கும்.

சமீபத்தில்தான் இந்தப் பங்கு தன் 52 வார உச்சமான 58.40 ரூபாயைத் தொட்டது. இனி வரும் காலங்களில் இதே ஏற்றம் தொடரும்பட்சத்தில், (அதிகபட்சமாக 2 ஆண்டுகளில்) தன் வாழ்நாள் உச்சத்தைக் கடந்து சுமாராக இரண்டு மடங்கு வரை அதிகரிக்கலாம்.”

உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப இந்த பங்குகளில் முதலீடு செய்ய நீங்கள் பரிசீலிக்கலாமே!