Published:Updated:

ஷேர்லக்: சந்தை மீது நம்பிக்கை வைத்திருக்கும் தரகு நிறுவனங்கள்!

ஷேர்லக்: சந்தை மீது நம்பிக்கை வைத்திருக்கும் தரகு நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: சந்தை மீது நம்பிக்கை வைத்திருக்கும் தரகு நிறுவனங்கள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: சந்தை மீது நம்பிக்கை வைத்திருக்கும் தரகு நிறுவனங்கள்!

‘‘நான் முக்கியமான வேலையாக பெங்களூரு செல்கிறேன். வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குப் பேசுகிறேன்” என இரண்டு நாட்களுக்கு முன்பே எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார் ஷேர்லக். சொன்னபடியே சரியாக அவரிடமிருந்து அழைப்பு வரவே, நாம் குறித்து வைத்திருந்த கேள்விகளைக் கேட்கத் தயாரானோம்.

“சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் பங்குத் தரகு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தை மீது நம்பிக்கை வைத்துள்ளனவே?”


‘‘உண்மைதான், புரோக்கரேஜ் நிறுவனங்களின் அறிக்கைகள்கூட இதை உறுதிபடுத்தும் வகையில் தான் உள்ளன. அதாவது, டாலர் மதிப்பு வலுவடைவதன் காரணமாக வளரும் நாடுகளின் சந்தைகள் அனைத்துமே சற்று தடுமாற்றத்தில்தான் இருக்கின்றன. என்றாலும், பிற சந்தைகளுடன்  ஒப்பிடுகையில், இந்தியச் சந்தையை உலக முதலீட்டாளர்கள் அனைவரும் பாசிட்டிவ் ஆகவே பார்க்கின்றனர் என்கின்றன பல பங்கு தரகு நிறுவனங்கள். குறிப்பாக, பிஎன்பி பரிபாஸ், கிரெடிட் சூயிஸ், நோமுரா, யுபிஎஸ் ஆகிய புரோக்கரேஜ் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாட்டின் மீது நல்ல நம்பிக்கை வைத்துள்ளன. இதற்கு ஜிஎஸ்டி, பணமில்லா பரிவர்த்தனை பொருளாதார முயற்சி, உள்கட்டமைப்பு ஆகியத் துறைகளில் அதிக முதலீடு மற்றும் வங்கிச் சீரமைப்பு ஆகியவையே காரணம்.’’

“பிஎஸ்இ-யின் வர்த்தகக் கட்டுப்பாட்டுக்கு ஆளான அந்த 10 பங்குகள் என்னென்ன?” 


“பிஎஸ்இ 10 பங்குகளை கட்டுப்பாட்டு வர்த்தகத்தில் கொண்டு வந்திருக்கிறது. சந்தை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காக்கும் விதத்தில் யூகத்தைக்  குறைக்க வேண்டி இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் பிரிதிஷ் நந்தி கம்யூனிகேஷன்ஸ், ஆதர்ஷ் பிளான்ட் புராடெக்ட், ஆதிநாத் பயோலேப்ஸ், பாரத் ஒயர் ரோப்ஸ், எனர்ஜி டெவலப்மென்ட் கம்பெனி, கேஎஸ்எஸ், குன்ஸ்ட்ஸ்டோஃபி (Kunststoffe) இண்டஸ்ட்ரீஸ், பிரதீப் மெட்டல்ஸ், ஸ்டீல்கோ குஜராத் மற்றும் யுனிஸ்டாஸ் மல்டிமீடியா ஆகியவை உள்ளன.”

“2017-ல் வரும் ஐபிஓ-க்கள் பற்றி சொல்லுங்கள்...’’

“2016-ம் ஆண்டைவிட 2017-ல் அதிக நிறுவனங்கள் புதிதாகப் பங்குகளை வெளியிடும் போலிருக்கிறது. கேபிள் டிவி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளைக் தந்துவரும் ஹாத்வே கேபிள் நிறுவனத்தின் பகுதி நிறுவனமான ஜிடிபிஎல் ஹாத்வே ரூ.300 கோடிக்கான ஐபிஓ-வுக்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. கடனை அடைப்பதற்காக இந்த நிதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்இ ஐபிஓ-வுக்கு செபி அமைப்பு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. 30 சதவிகிதப் பங்குகள், அதாவது, 2.9 கோடி பங்குகளை பொதுப் பங்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறது. ரூ.1,300 கோடி நிதி இதன் மூலம் திரட்டப்பட இருக்கிறது.

ஹட்கோ நிறுவனம் ஐபிஓ வருவதற்கான விண்ணப்பத்தை செபியிடம் சமர்ப்பித்துள்ளது. உள்கட்டமைப்பு நிறுவனமான ஹட்கோ, தனது 10 சதவிகித, அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட 20.02 கோடி பங்குகளை பொதுப் பங்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.”

“திடீரென்று ரியல் எஸ்டேட் பங்குகள் ஏற்றமடைய என்ன காரணம்?”

“ஜனவரி 2 அன்று 90 சதவிகித ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 0.72% முதல் 6.65%  வரை ஏற்றம் கண்டிருக்கின்றன. அதிகபட்சமாக டிஎல்எஃப் பங்கு 6.65% ஏற்றம் அடைந்திருக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கியில் குவிந்த டெபாசிட் காரணமாக வங்கிகள் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்ததுதான் இதற்குக் காரணம். பல வருடங்களாக வட்டி விகிதத்தைக் குறைக்காத வங்கிகள்கூட வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கின்றன. இதனால் வீட்டுக் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.”

“நடப்பு 2017-ம் ஆண்டில் நிஃப்டி 9600 புள்ளிகளைத் தொடலாம் என்கிறார்களே?”


“2017-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை சிறப்பாக இருக்கும் என்றும், நிஃப்டி 9600 புள்ளிகளைத் தொட வாய்ப்புள்ளது என்றும் பெரும்பாலான அனலிஸ்ட்டுகள் கணித்து இருக்கிறார்கள். அதற்கான டெக்னிக்கல்          காரணிகளும், காரணங்களும் நிறையவே இருக்கிறது என்கிறார்கள்.

மேலும், நிஃப்டியில் உள்ள 50 பங்குகள் காளையின் போக்கில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே 21 பங்குகளின் விலையில் கரெக்‌ஷன் ஏற்பட்டிருக்கிறது. 12 பங்குகள் ஏற்றமடையத் தொடங்கி இருக்கின்றன. ஆக மொத்தத்தில், நிஃப்டியின் 78 சதவிகிதப் பங்குகள் ஏற்றத்தின் போக்கில் தொடர்வதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருப்பதால், இந்த வருடம் நிஃப்டியின் போக்கும் நன்றாகவே இருக்கும் என்கிறார்கள்.  இந்த ஆண்டில் முடிந்தபோதெல்லாம் நல்ல பங்குகளிலும் மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.’’ 

“பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஆட்டோ செக்டார் பெரிதும் பாதிக்கப்படும் என்றார்கள். எப்படி இருக்கிறது நிலவரம்?”


“இந்த நடவடிக்கையால் ஆட்டோ செக்டார் வெகுவாகவே பாதிக்கப்படும் என்றும், வாகன விற்பனை 15% குறையும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் வாகனங்களின் விற்பனை 5% மட்டுமே குறைந்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், ஆட்டோ செக்டார் பங்குகளில் புதிதாக முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. அப்படியே முதலீடு செய்பவர்களும் இந்த வரிசையில்தான் பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். முதலில் கார் நிறுவனப் பங்குகள், இரண்டாவது டிராக்டர், மூன்றாவது இருசக்கர வாகனங்கள், இறுதியாக டிரக்குகள்.

தற்போது மாருதி சுஸூகி மற்றும் எய்ஷர் மோட்டார்ஸ் பங்குகள் முன்னிலையில் உள்ளன. இவை இரண்டும் மொத்த கார் சந்தையில் 70 சதவிகிதத்தை வைத்துள்ளன. ஆட்டோ செக்டாரில் இருசக்கர வாகனங்களின் விற்பனை தான் அதிகமாகக் குறைந்துள்ளது. நவம்பரில் 6 சதவிகிதமும், டிசம்பரில் 20 சதவிகிதமும் குறைந்துள்ளன.

பண மதிப்பு நீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படாத அமைப்பு ரீதியான நிறுவனங்கள் 2017-ம் ஆண்டில் அதிக  லாபம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நுகர்வோர் எலெக்ட்ரிக்கல் நிறுவனங்களான ஹேவெல்ஸ், ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ், வி-கார்ட் இண்டஸ்ட்ரீஸ், கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஷுயூமர் எலெக்ட்ரிக்கல் போன்ற நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

“பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்களே!’’

“2017-18 பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகும் மத்திய அரசுக்கு சிக்கல்கள் அதிகம் இருக்கின்றன. திட்டமிடல்கள் சரியாக இல்லாமல் திடீரென்று எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டு, இழப்புகளும் அதிகரித்துள்ளன. மாநில அரசுகளும், தொழிற்சங்கங்களும் இழப்பீடு கேட்கிறார்கள். பணமில்லா பொருளாதாரம், டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை மேலும் அரசு முன்னெடுக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான முடிவுகள், நிதி ஒதுக்கீடுகள் இருக்க வாய்ப்புள்ளன. மேலும், வங்கிகள், பேமென்ட் வங்கிகள் தொடர்பாகவும் பல முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்தியத் தொழில் துறைக்கு  ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் பட்ஜெட் இல்லாவிட்டால், 2016-17 நிதி ஆண்டில் ஏற்படும் ஜிடிபி இழப்பிலிருந்து மீண்டு வருவது கடினமாகிவிடும்.”

“ஏப்ரல் 2017-க்குள் ஜிஎஸ்டி வராது போலிருக்கிறதே!’’

‘‘இந்த மசோதாவை நிறைவேற்றுவதால்  மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது ஒருபக்கமிருக்க, தற்போது பண மதிப்பு நீக்க  நடவடிக்கையால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும் என்று மாநிலங்கள் அஞ்சுகின்றன. இந்த நிலையில், ஜனவரி 16-ம் தேதி மீண்டும் இது தொடர்பாக கலந்தாலோசிப்புக் கூட்டம் நடக்கவுள்ளது.

வரும் சனிக்கிழமை பொங்கல் திருநாள் என்பதால், முன்கூட்டியே இதழை முடிப்பீர்கள். எனவே, நாம் வியாழக்கிழமை அன்று சந்திப்போம். ஹாப்பி பொங்கல்” என்று சொல்லிவிட்டுப்  போனை வைத்தார்.

முக்கிய அறிவிப்பு!

அடுத்த இதழில் மட்டும் டிரேடர்ஸ் பக்கங்கள் இடம் பெறாது. வாசகர்கள் nanayam.vikatan.com இணையதளத்தில் படிக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz