Published:Updated:

ஷேர்லக்: பங்குச் சந்தை... 10% உயரும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: பங்குச் சந்தை... 10% உயரும்!
ஷேர்லக்: பங்குச் சந்தை... 10% உயரும்!

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: பங்குச் சந்தை... 10% உயரும்!

‘‘குடியரசு தின விடுமுறையை ஒட்டி,  நான் வெளியூருக்கு வந்துவிட்டேன். எனவே, மாலை ஆறு மணிக்கு எனக்கு போன் செய்தால், செய்திகளை சொல்லி விடுகிறேன்!’’ என்று வெள்ளிக்கிழமை காலையிலேயே தகவல் அனுப்பினார் ஷேர்லக். அவருக்கு ‘ஓகே’ சொல்லிவிட்டு, மாலை ஆறு மணிக்கு அவருடன் பேசினோம். அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு  அவர் சொன்ன பதில்களும்...

‘‘இந்திய பங்குச் சந்தை, நடப்பு 2017-ம் ஆண்டில் 10% வருமானம் தரும் என்கிறாரே உதய் கோட்டக்?’’

‘‘மிக வேகமாக வளர்ந்துவரும் கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரும், பங்குச் சந்தையில் நல்ல அனுபவம் கொண்டவருமான உதய் கோட்டக் இப்படி சொல்வது கவனிக்கத்தக்க விஷயமே. இந்த வருடம் (2017) இந்தியப் பங்குச் சந்தைகள் 8 முதல் 10% வரை வருமானம் தரலாம் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பல. அதில் முக்கியமாக, இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும், பல முன்னணி நிறுவனங்கள், நியாயமான மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியிடத் தயாராகி வருகின்றன.

இந்த ஆண்டின் அதிர்ஷ்டம்மிக்க துறையாக இருக்கப்போவது, ஃபைனான்ஷியல் சர்வீசஸ் துறைதான். ஏனெனில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, அதற்கான வாய்ப்புகளை இந்தத் துறைக்கு அள்ளித் தந்திருக்கிறது. மேலும், மக்களிடையே நிதி சேமிப்பு, முதலீடு ஆகியவற்றில் கணிசமான மாற்றங்கள் உண்டாகுவதன் மூலம் பங்குச் சந்தைகளில் பலரும் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். இதுபோன்ற சாத்தியக்கூறுகள் இந்தியச் சந்தையில் இருப்பதால்தான், உதய் அப்படி சொல்லி இருக்கிறார். நீண்ட காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சந்தையுடன் ‘டச்’ வைத்திருப்பது அவசியம்.”

‘‘பிஎஸ்இ ஐபிஓ-க்கு எப்படி வரவேற்புக் கிடைத்திருக்கிறது?’’

‘‘ஆசியாவின் மிகவும் பழைமையான பங்குச் சந்தையான பிஎஸ்இ-யின் புதிய பங்கு விற்பனைக்கு அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது. மொத்தம் 51 மடங்குக்கு அதிகமாக பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் பிரிவில் 48.64 மடங்கும், பெரும் பணக்காரர்கள் பிரிவில் 72.22 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 6.18 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்ல, மொயில் நிறுவனத்தின் 10% பங்குகளை மத்திய அரசு ஓப்பன் ஆஃபர் மூலம் விற்பனை செய்தது. இதற்கு 6.38 மடங்கு அதிகமாக ஆதரவு கிடைத்துள்ளது. சிறு முதலீட்டாளர்கள் தரப்பில்கூட 5.36 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டது.’’ 

‘‘பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விஜய் மல்லையாவுக்கு செபி தடை விதித்துள்ளதே?’’


‘‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்காகத் திரட்டிய நிதியை வேறு விஷயத்துக்கு பயன் படுத்தியதற்காக தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் ஆறு பேரை பங்கு வர்த்தகத்தில் (வாங்கி, விற்க) ஈடுபட பங்குச் சந்தைக் கட்டுபாட்டு அமைப்பான செபி அமைப்பு தடை விதித்துள்ளது. செபியின் இந்த உத்தரவை அடுத்து யுனைடெட் புரூவரீஸ் மற்றும் யூபி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பதவியிலிருந்து அவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’.  

ஷேர்லக்: பங்குச் சந்தை... 10% உயரும்!

‘‘என்சிடி கடன் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய நிதி அதிகரித்திருக்கிறதே?’’ 

‘‘நடப்பு 2016-17-ம் நிதி ஆண்டில், இதுவரை மட்டும் என்சிடி கடன் பத்திரங்கள் மூலம் இந்திய நிறுவனங்கள், சிறு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.29 ஆயிரம் கோடி நிதி திரட்டி உள்ளன. இவை 13 வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்டிருக்கின்றன. 2015-16 நிதி ஆண்டு முழுவதிலுமே 20 வெளியீடுகள் மூலம் ரூ.38,812 கோடிதான் திரட்டப்பட்டது. இந்த நிதி விரிவாக்கத் திட்டங்களுக்காகவும், கடன் சுமையைக் குறைப்பதற்காகவும், செயல்பாட்டு மூலதனத்துக்காகவும் மற்றும் பிற செயல்பாடு களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த என்சிடி பாண்டுகள், கடன் சார்ந்த திட்டங்களாக இருந்தாலும் பங்குகளாக மாற்றிக் கொள்ள முடியாது என்பதால், அதிக வட்டி விகிதம் தரப்பட்டு வருகிறது. இதுதான் இவற்றில் அதிகளவில் சிறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டக் காரணம். இது கார்ப்பரேட்டுகளுக்கு பங்குச் சந்தை வாலட்டைலிட்டியாக இருக்கும் போதும் நிதி திரட்டுவதற்கான சிறந்த வழியாக இருக்கிறது. திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் கொசமட்டம் ஃபைனான்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இரண்டு முறை என்சிடி பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டியுள்ளன. இதில் திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் மட்டுமே ரூ.14 ஆயிரம் கோடி திரட்டி உள்ளது.’’

‘‘காலாண்டு முடிவுகள் எப்படி வந்துகொண்டிருக்கின்றன?’’

‘‘ஒட்டுமொத்த விற்பனை அதிகரிப்பு மற்றும் விற்பனை பயன்பாடு அதிகரித்ததால், மூன்றாம் காலாண்டில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் 48% அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க பிரச்னை, மூலப்பொருட்கள் (குறிப்பாக, உருக்கு) விலை அதிகரிப்பால், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 13% குறைந்துள்ளது.

இதர வருமானம் அதிகரித்ததால், இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ. 42 கோடியிலிருந்து ரூ.373 கோடியாக அதிகரித்துள்ளது. வாராக் கடன் அதிகரிப்பினால், ஐடிஎஃப்சி பேங்கின் நிகர லாபம் 21% குறைந்துள்ளது. இதர வருமானம் அதிகரிப்பினால், கோட்டக் மஹிந்திரா பேங்கின் நிகர லாபம் 39% உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்க பிரச்னையால் கடன் வளர்ச்சி குறைந்து, கரூர் வைஸ்யா பேங்கின் நிகர லாபம் 24% குறைந்துள்ளது.

செயல்பாட்டு வருமானம் அதிகரித்ததால், சென்னயைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் பேங்கின் நிகர இழப்பு மூன்றாம் காலாண்டில் 61% குறைந்து, ரூ.554 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்த இழப்பு ரூ.1,425 கோடியாக இருந்தது. அதேசமயம், மொத்த வாராக் கடன் 12.64 சதவிகிதத்திலிருந்து 22.42% அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது. 

கர்நாடகா வங்கியின் நிகர லாபம் 29.38% குறைந்திருக்கிறது. 2015-16 நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.96.91 கோடியாக இருந்த அதன் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.68.52 கோடியாகக் குறைந்திருக்கிறது.

ஏர்டெல்லின் நிகர லாபமும் 54% குறைந்திருக்கிறது. காரணம், ஜியோ எஃபெக்ட்தான். 2015-16 நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.1,108 கோடி நிகர லாபம் பதிவு செய்த பார்தி ஏர்டெல், நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.503.7 கோடி மட்டுமே நிகர லாபம் ஈட்டியுள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, ஜியோ வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் ஃப்ரீ கால் மற்றும் ஃப்ரீ டேட்டாவை அள்ளி வீசியது. ஜியோவின் இந்த ஆஃபரால் பார்தி ஏர்டெல்லின் பிசினஸ் குறைந்தது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 10% உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை யினால் பெரும்பாலான நிறுவனங்களைப் போலவே, இதன் விற்பனையும் குறைந்தது. ஆனாலும் 10% வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 2015-16 நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.120 கோடியாக இருந்த இதன் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.133 கோடியாக உயர்ந்துள்ளது. காரணம், அதன் பிற வருமானம் அதிகரித்ததும், வரி செலவினங்கள் குறைந்ததும் தான்.

ஹெச்டிஎஃப்சி-யின் நிகர லாபம் இந்த நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 15.1% உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.3,356.8 கோடியாக இருந்த இதன் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டில் ரூ.3865.3 கோடியாக உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்கத்தினால் இந்த வங்கி பாதிப்படையவில்லை.’’

‘‘பங்குச் சந்தை அடுத்த வாரம் எப்படி இருக்கும்?’’

‘‘பட்ஜெட் தாக்கல், அமெரிக்க ஃபெட் வட்டி விகித அதிகரிப்பினால், சந்தையின் போக்கு மேலும் கீழுமாகத்தான் இருக்கிறது. எனவே உஷார்’’ என்று சொல்லிவிட்டு போன்காலை கட் செய்தார்.

ஷேர்லக்: பங்குச் சந்தை... 10% உயரும்!

பகுதிகளைப் படிக்க :

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு