
சேனா சரவணன்
ஒருவர் நிறுவனப் பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு எளிய சூத்திரம் ஒன்று இருக்கிறது. முதலீடு செய்பவரின் வயதை 100-லிருந்து கழிக்கக் கிடைக்கும் எண்ணை சதவிகிதமாகப் பாவித்து, அவரின் மொத்த முதலீட்டில் அந்த சதவிகிதத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், ரிஸ்க் குறையும்.

உதாரணத்துக்கு, ஒருவரின் வயது 25 என்றால், பங்குச் சந்தையில் அவர் 75% அளவுக்கு முதலீட்டை மேற்கொள்ளலாம். மீதியைத் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் எனப் பிரித்து முதலீடு செய்யலாம்.
இங்கே பங்குச் சந்தை முதலீடு என்பதில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் அடங்கும். இவை இரண்டிலும் கலந்தும் முதலீடு செய்யலாம். இதேபோல் ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் கலந்து முதலீடு செய்யலாம்.
இன்னோர் உதாரணத்தைப் பார்த்தால், இன்னும் தெளிவாக விளங்கும். ஒருவரின் வயது 35 எனில், 100-லிருந்து 35-யைக் கழித்தால், கிடைப்பது 65. அதாவது, ஒருவர் தன் முதலீட்டுத் தொகையில் 65 சதவிகிதத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். இந்த 65 சதவிகிதத்தை நேரடியாக பங்குச் சந்தையில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. 50 சதவிகிதத்தை நேரடியாக பங்குகளில் முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ள 15 சதவிகிதத்தை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
வயதுக்கு ஏற்ற முதலீடு என்கிறபோதும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. பங்குச் சந்தை பற்றி நன்கு அறிந்தவர் என்றால், நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம்.