Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... இதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்!

மியூச்சுவல் ஃபண்ட்... இதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்!
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்... இதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்!

ஏ.கே.கார்த்திகா

மியூச்சுவல் ஃபண்ட்... இதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்!

ஏ.கே.கார்த்திகா

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்... இதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்!
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்... இதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்!
மியூச்சுவல் ஃபண்ட்... இதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்!

‘‘நம் பிஸியான வாழ்க்கையில் வெறும் பணத்தை மட்டும் முதலீடு செய்தால் போதும்; நம் நேரத்தை செலவு செய்யாமல், உழைக்காமல், நல்ல வருமானத்தைப் பெற முடியும் என்றால் அது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மட்டுமே  சாத்தியம். எனவேதான், மியூச்சுவல் ஃபண்ட் மாதிரி ஒரு ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் வேறு எதுவும் இல்லை’’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த ராதாலட்சுமி. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அவர் அடைந்த நன்மைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

   அப்பாவை இழந்தேன்

‘‘எனக்கு சொந்த ஊர் தேனி என்றாலும், எனது தந்தையார் மேட்டூரில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். நான் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் படிக்கிறபோதே என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மா, நான், என் தங்கை என நாங்கள் மூவரும் நிராதரவாகிப் போனோம். என்னால் தொடர்ந்து படிக்க முடியுமா என்பதே கேள்விக்குறியானபோது, நான் படித்த எஸ்எஸ்எம் டெக்ஸ்டைல் டெக்னாலஜி கல்லூரி நிர்வாகமும், என் பேராசிரியர்களும் நான் தொடர்ந்து படிக்க உதவி செய்தனர். 

   பிசினஸ் தொடங்கினேன்


டிப்ளோமோ படித்து முடித்தவுடன் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கினேன்.  ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கத் தேவையான பட்டன்கள், ஜிப்புகள் எனப் பலவற்றையும் சப்ளை செய்யும் தொழிலை சொந்தமாகச் செய்ய ஆரம்பித்தேன். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் என் தங்கையை ஃபேஷன் டெக்னாலஜி படிக்க வைத்து, அவளுக்குத் திருமணம் செய்து வைத்தபின், நானும் திருமணம் செய்துகொண்டேன்.

   எதிர்காலச் சேமிப்பு

என் கணவர் சுரேஷ்குமார், பத்திர எழுத்தாளர். எங்களின் ஒரே மகள் ரிதன்யா. அவள்தான் எங்கள் உயிர். சிறு வயது முதலே நான் பணக் கஷ்டத்தில் வளர்ந்ததால், தாம்தூம் என்று செலவு செய்யும் பழக்கம் என்னிடம் இருந்ததே இல்லை. கிடைக்கிற பத்து ரூபாயில் ஐந்து ரூபாயை மிச்சப்படுத்த முடியுமா என்பதில்தான் நான் எப்போதும் குறியாக இருப்பேன். எதிர்காலத் தேவைக்குச் சேமிக்கவேண்டும். அதுதான் நம்மைக் காப்பாற்றும் என்பதைத் தெளிவாக உணர்ந்து வைத்திருந்தேன். எனக்குத் தெரிந்தவரை, என் குழந்தையின் எதிர்காலத்துக்கென சில மனைகள், கொஞ்சம் தங்கம் என்று வாங்கினேன். ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆக நான் இருந்ததால், இன்ஷூரன்ஸிலும் கொஞ்சம் பணத்தைப் போட்டேன்.

   மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம்

அப்போதுதான் ஒரு திருமணத்தில் எங்கள் குடும்ப நண்பரும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தருமான கண்ணனை சந்தித்தேன்.   ‘‘பதினைந்து ஆண்டுகள் கழித்து உன் குழந்தையின் படிப்புச் செலவுக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டுமா?’’ என்று கேட்டார். ‘‘வேண்டும்’’ என்றேன். ‘‘அப்படியானால், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி திட்டத்தின் மூலமாக நீ முதலீடு செய். ஒரு மாதத்துக்கு ரூ.10,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவேண்டும். இடையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் முதலீட்டை நிறுத்தக் கூடாது. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்கக்கூடாது’’ என்றார். உடனே ஓகே சொல்லிவிட்டு, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கினேன்.

   வருமானம் வந்தது

அவர் சொன்னபடியே செய்ய ஆரம்பித்தோம். ஒன்றிரண்டு ஆண்டுகள் முதலீடு செய்தபின், அதன் மூலம் பெரிய வருமானம் கிடைக்காததைக் கண்டு நாங்கள்  கவலை அடைந்தோம். அப்போது ஒரு நாள் கோவைக்குப் போயிருந்தபோது, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரான  கண்ணனைச் சந்தித்தேன். எங்கள் முதலீடு மூன்றாம் ஆண்டில் சுமார் 40% வருமானம் தந்திருப்பதாக அவர் சொன்னார். அதை புள்ளி விவரத்துடன் எடுத்துச் சொன்னார். அப்போது தான் எங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மீது முழு நம்பிக்கை வந்தது. அன்றிலிருந்து எனது முதலீட்டை இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கொரு முறை குறிப்பிட்ட அளவு அதிகப்படுத்தினேன். இதனால் 15 ஆண்டுகளில் எனது லட்சியம் நிச்சயம் நிறைவேறும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

   முதல் செலவு முதலீடு

எனது வருமானத்தில் முதல் செலவை முதலீட்டுக்கு ஒதுக்கிவிடுவேன். பலரும் வருமானம் போதவில்லை என்று சொல்லி, எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்யாமலே இருக்கிறார்கள்.  ஒருவர் 15 ஆயிரம் சம்பாதிக்கிறார் எனில், முதலில் 1,000 அல்லது 2,000 ரூபாயை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால், யார் வேண்டு மானாலும் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

   மனையைவிட அதிக வருமானம்

இப்போதுகூட பலரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மீது நம்பிக்கை இல்லாமலே இருக்கிறார்கள். மனை வாங்குவதிலும், தங்க நகை வாங்குவதிலும் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். மனை விலை அதிகபட்சமாக இரட்டிப்பாகும். தங்கம் விலை இனி இரட்டிப்புகூட ஆகாது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்கும். பணவீக்கம் சுமார் 7% எனில், 12 முதல் 15% வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இத்தனைக்கும் நாம் அதற்காக அதிக நேரமோ, அறிவோ, உழைப்போ தரவேண்டியதில்லை.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் நான் அடைந்த நன்மைகளை என்னைச் சுற்றி இருப்பவர் களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களையும் முதலீடு செய்ய வற்புறுத்தி வருகிறேன்’’ என்று சிரித்தபடி நமக்கு விடை கொடுத்தார் ராதா. இவரைப் பார்த்து, மற்றவர்கள் தங்கள் எதிர்காலத் தேவைக்கான முதலீட்டை செய்யத் தொடங்கட்டும்!

படம்: ரமேஷ் கந்தசாமி