Published:Updated:

ஷேர்லக்: வளர்ச்சிப் பாதையில் மாருதி சுஸூகி!

ஷேர்லக்: வளர்ச்சிப் பாதையில் மாருதி சுஸூகி!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: வளர்ச்சிப் பாதையில் மாருதி சுஸூகி!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: வளர்ச்சிப் பாதையில் மாருதி சுஸூகி!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: வளர்ச்சிப் பாதையில் மாருதி சுஸூகி!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: வளர்ச்சிப் பாதையில் மாருதி சுஸூகி!
ஷேர்லக்: வளர்ச்சிப் பாதையில் மாருதி சுஸூகி!

‘இரவு பாராட்டு விழா ஒன்றுக்குச் செல்ல இருப்பதால், மாலையிலேயே வந்து விடுகிறேன்’ என நமக்கு ஷேர்லக் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருந்தார். அதன்படியே கோட் சூட் உடன் காரில் வந்து இறங்கினார் ஷேர்லக். நாம் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த, பதநீரை கண்ணாடி கிளாஸில் ஊற்றிக் கொடுத்தோம். அண்மைக் காலமாக இயற்கை உணவு பிரியராக மாறியிருந்த அவர், பதநீரை சுவைத்துக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகபட்சமாக 40% விதிக்கப்படலாம் என்கிறார்களே?”

“உண்மைதான். தற்போது 5%,12%,18% மற்றும் 28% என நான்குவிதங்களில் ஜிஎஸ்டி இருக்கிறது. 28% என்பதில் மாநில ஜிஎஸ்டி 14%, மத்திய ஜிஎஸ்டி 14% என இருக்கிறது. வியாழக்கிழமை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சொகுசு மற்றும் தீமை விளைவிக்கும் (மது, சிகரெட் உள்ளிட்டவை) பொருள்களுக்கு அதிகபட்சம் 40% வரி விதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 பிற்காலத்தில், ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற அனுமதியை தனியாகப் பெற வேண்டியிருக்கும் என்பதால், அந்த மாற்றம் இப்போதே செய்யப்படுவதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.”   

“இந்தியன் ஹோட்டல்ஸ் பங்கு விலை இறங்க ஆரம்பித்திருக்கிறதே?”

“வியாழக்கிழமை இந்தப் பங்கு, சுமார் 5% இறக்கம் கண்டது. வெள்ளிக்கிழமையும் இறக்கம் தொடர்ந்தது. புதுடெல்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் மன்சிங்-ஐ, 33 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த குத்தகை நிறைவுபெற்ற நிலையில் இந்தியன் ஹோட்டல்ஸ், அதனை நீடிக்க கேட்டுக் கொண்டது. இதனால், அந்த  ஹோட்டல் அமைந்துள்ள இடத்தின் உரிமைபெற்ற புதுடெல்லி நகராட்சிக்கும், இந்தியன் ஹோட்டல்ஸுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தை ஏலத்துக்கு விட சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியை புதுடெல்லி நகராட்சி பெற்றது. விரைவில் ஏலம் விடப்பட உள்ளது.

இதனையடுத்தே பங்கின் விலை இறக்கம் காண ஆரம்பித்திருக்கிறது. இறக்கத்தைப் பயன்படுத்தி இந்தியன் ஹோட்டல்ஸ் பங்குகளை சிறு முதலீட்டாளர்கள் வாங்கலாமா என்றால், அப்படி செய்வது அதிக ரிஸ்க்காக இருக்கும். காரணம், இந்த நிறுவனம், கடந்த 7 ஆண்டுகளாக நிகர இழப்பைச் சந்தித்து வருகிறது. மேலும், 2016 மார்ச் நிலவரப்படி இந்த நிறுவனத்தின் கடன் ரூ.4,781 கோடியாக இருக்கிறது.”

“சென்செக்ஸ் இண்டெக்ஸில் எஃப் அண்ட் ஓ கான்ட்ராக்ட்ஸ் வர இருக்கிறதே?”

“ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தை பிஎஸ்இ, அதன் சென்செக்ஸ் 50 குறியீட்டில் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (எஃப் அண்ட் ஓ) கான்ட்ராக்ட் கொண்டு வருகிறது. இது மார்ச் 14 முதல் அமலுக்கு வருகிறது. சென்செக்ஸ் 50 குறியீட்டை, கடந்த 2016 டிசம்பரில் பிஎஸ்இ அறிமுகப்படுத்தியது. இந்தக் குறியீடு, பிஎஸ்இ-யில் பட்டியலிட்டப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் சுமார் 50 சதவிகிதத்தை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சென்செக்ஸ் 50-ல் இடம் பெற்றுள்ள பங்குகள் எளிதில் பணமாக்கக் கூடியதாக (லிக்விட்டி) இருக்கின்றன.”

“புதிய பங்கு வெளியீட்டுக்கு இணையாக உரிமைப் பங்கு வெளியீடும் அதிகரித்திருக்கிறதே?”


“பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட செபி  அமைப்பை அணுகி வரும் நிலையில், பல நிறுவனங்கள் ரைட்ஸ் இஷ்யூ வெளியிட களமிறங்கி இருக்கின்றன. மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள், மொத்தம் ரூ.700 கோடி திரட்ட உள்ளன. வர்தமான் ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் (vardhman special steels), இன்டலெக்ட் டிசைன் அரேனா (Intellect design arena), ஜெனோடெக் லேபாரட்டரீஸ் (Zenotech     laboratories)போன்றவை இதர நிறுவனங்களாகும்.”

“நடப்பு 2017-ம் ஆண்டு இறுதிக்குள் மாருதி சுஸூகி பங்கு விலை ரூ.6,500-ஐ தொடும் என்கிறார்களே?”


“மாருதி சுஸூகி பங்கு விலை கடந்த வாரம் புதன் கிழமை அன்று ரூ. 6,000-ஐ நெருங்கி இருக்கிறது. கார் உற்பத்தி நிறுவனங்களிலேயே எல்லாத் தரப்பு மக்களும் வாங்கக்கூடிய விலையிலும், அதேநேரம் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் கார்களை உற்பத்தி செய்வதில் மாருதி சுஸூகி தனித்தடம் பதித்திருக்கிறது. இதனால் எப்போதுமே அதன் விற்பனை படுஜோர்தான்.

மேலும் மாருதி சுஸூகி அவ்வப்போது புதிய டிசைன்களில் கார்களை அறிமுகப்படுத்தும். மாருதிக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவும், விற்பனை நன்றாக இருப்பதாலும் அதன் பங்கு விலை உயர்ந்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் பங்கு விலை 70 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்த வருடத்துக்குள் ஒரு பங்கின் விலை ரூ.6,500 என்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக அனலிஸ்ட்கள் கணித்துள்ளார்கள். அதற்கான எல்லா வாய்ப்புகளும் நன்றாகவே இருக்கின்றன.

விரைவில் குஜராத்தில் ஓர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது. அந்த நிலையை எட்டினால் மாருதி சுஸூகியின் தற்போதைய மார்க்கெட் கேபிட்டலைசேஷன் ரூ.1.8 லட்சம் கோடி என்பது ரூ.2 லட்சம் கோடியைத் தொட்டுவிடும். அப்போது ரூ.2 லட்சம் கோடி மார்க்கெட் கேபிட்டலைசேஷன் கொண்ட முதல் ஆட்டோ நிறுவனமாக மாருதி சுஸூகிதான் இருக்கும். டாடா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்றவற்றையெல்லாம் காட்டிலும் மிக விலை உயர்ந்த பங்காக மாருதி இப்போது இருக்கிறது.”

 “பங்குகளாக மாற்றவியலாத கடன் பத்திரங்கள் விற்பனை அதிகரித்திருக்கிறதே?”


“இந்த நிதி ஆண்டில் இதுவரை தனியார் நிறுவனங்கள், பங்குகளாக மாற்றவியலாத கடன் பத்திரங்கள் விற்பனை மூலம் திரட்டிய நிதி ரூ. 29,000 கோடியாக உயர்ந்துள்ளது. தனியார் நிறுவனங்கள், தங்களின் நிதித் தேவைக்காக இந்த வகையான கடன் பத்திரங்களை விற்பனை செய்கின்றன.

2015-16-ம் நிதி ஆண்டில் மொத்தமாக 20 வெளியீடுகள் மூலம் ரூ.38,812 கோடி திரட்டப் பட்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டில் இதுவரை 14 வெளியீடுகள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அதற்குள்ளாகவே திரட்டிய நிதி ரூ. 29,000 கோடியைத் தொட்டிருக்கிறது.

 இந்தியக் கடன் பத்திரங்கள், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களை எப்போதும் கவரக்கூடியவை. ஆனால் சமீப காலமாகவே அவர்கள் தொடர்ந்து முதலீடுகளை விற்று வந்தனர். ஆனால், பிப்ரவரி மாதத்தில் அதிக அளவில் கடன் பத்திரங்களை வாங்கியுள்ளனர்.”

“டிஎல்எஃப் அதன் பங்குகளை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறதே?”

இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப், அதன் துணை நிறுவனமான டிஎல்எஃப் சைபர் சிட்டி டெவலப்பர்ஸில் வைத்துள்ள 40% பங்குகளை, சிங்கப்பூரைச் சேர்ந்த ஜிஐசி நிறுவனத்துக்கு விற்க திட்டமிட்டுள்ளது. இந்த விற்பனை மூலம் டிஎல்எஃப் நிறுவனத்துக்கு லாபமா என்பதில் பங்குத் தரகு நிறுவனங்கள் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கின்றன. தற்போது டிஎல்எஃப் நிறுவனத்துக்கு ரூ.24,500 கோடி கடன் இருக்கிறது இந்த நிலையில் டிஎல்எஃப் பங்குகளை முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சிஎல்எஸ்ஏ பங்குத் தரகு நிறுவனம், பங்கின் விலை ரூ.115க்கு இறங்கலாம் என்பதால், விற்றுவிடலாம் எனச் சொல்லி இருக்கிறது. மாக்யூர், கோட்டக், ஹெச்எஸ்பி போன்ற தரகு நிறுவனங்கள், பங்கின் விலை ரூ.160க்கு உயரும் எனச் சொல்லி இருக்கின்றன. முதலீட்டாளர்கள், இந்த நிறுவனத்தின் மீது கொண்டிருக்கும் பரிச்சயத்தின் அடிப்படையில் முடிவை எடுப்பது மிகச் சரியாக இருக்கும்.

“இந்திய பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?”

“சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் காரணிகள் தெளிவாக இருந்தாலும் அவ்வப்போது முதலீட்டாளர்கள் எடுக்கும் முடிவுகள், சந்தையின் போக்கை சலனப்படுத்தி விடுகின்றன. ஒரு பங்கு விலை உயர்ந்தால் மூன்று பங்குகள் விலை சரிகின்றன. கடந்த புதன்கிழமையன்று நிஃப்டி, 8945.80 புள்ளிகளுக்கு உயர்ந்தது. இது அதன் வாழ்நாள் உச்சமான 8996.25-க்கு (மார்ச் 3,2015) நெருக்கமாக இருந்தது. கடந்த 12 மாதங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் டாலர் மதிப்பில் நிஃப்டி, 32% வருமானம் தந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் டவ் ஜோன்ஸ்  25% அதிகரித்தது.

ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தைகள் பாசிட்டிவான போக்கில் இருப்பதால் நிஃப்டி உயர்ந்து 9000-ஐ நெருங்க இருந்தது. ஆனால், இந்த உச்சத்தை சந்தை அடைந்ததும், வியாழக்கிழமை யன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்றதால் (பிராபிட் புக்கிங்), நிஃப்டி 8900க்கு கீழே இறங்கியது. முதலீட்டாளர்கள் லாபத்தை புக் செய்ததற்கும், வரும் வாரத்தில், அண்மையில் நடந்து முடிந்த வட மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வர இருப்பதும், நிச்சயமில்லாத பங்கு விலை உயர்வு என்ற பயமும்தான் காரணம்.”

“ஃபாலோ செய்ய வேண்டிய பங்குகள்...” என நாம் கேள்வியை கேட்டு முடிக்கும் முன்பே, “இல்லை” என சைகையிலேயே சொல்லிவிட்டு காரில் ஏறி ஜூட் விட்டார் ஷேர்லக்.