Published:Updated:

ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

சோ.கார்த்திகேயன்

ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

கிட்டத்தட்ட 50 நிறுவனங்கள், 50,000 கோடி ரூபாய்க்கும் மேல் பங்குகளைத் திரும்பப் பெறுவதாக 2016-17-ம் நிதியாண்டில் (பைபேக்) அறிவித்திருந்தன. இதில் மிகப் பெரிய ஐ.டி நிறுவனமான டிசிஎஸ், சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் ரூ.16,000 கோடிக்கு பைபேக் செய்வதாக அறிவித்தது. ஒரு பங்கின் விலை ரூ.2,850 தந்து, மொத்தம் 5.61 கோடி பங்குகளைத் திரும்பப் பெற்றது டிசிஎஸ்.

பொதுவாக, நிறுவனங்களிடம் இருக்கும் பணம் ஒன்று, டிவிடெண்டாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் அல்லது முதலீட்டாளர்களிடம் இருக்கும் பங்குகள் திரும்ப வாங்கப்பட்டு (பைபேக்), அவர்களுக்குப் பணமாகப் கொடுக்கப்படும். 

தவிர, டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்கள் டிவிடெண்ட் விநியோக வரியை மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும். மேலும், ரூ.10 லட்சத்துக்கு மேல் டிவிடெண்ட் பெறுபவர் 10 சதவிகித வரியைச் செலுத்த வேண்டும். இந்தக் காரணத்தால், வரியை மிச்சப்படுத்தப் பெரும்பாலான நிறுவனங்கள் டிவிடெண்ட் தருவதற்குப் பதிலாகப் பங்குகளை பைபேக் செய்துவிடுகின்றன.

ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

   இரண்டு வகை பைபேக்

பொதுவாக, நிறுவனங்கள் இரண்டுவிதங்களில் பங்குகளைத் திரும்பப் பெறுகின்றன. ஒன்று, பங்குச் சந்தையிலிருந்து பங்குகளை வாங்குவதன் மூலம்  திரும்பப் பெறுவது. மற்றொன்று, டெண்டர் மூலமாகப்  பங்குகளைப் பெறுவது. நிறுவனங்கள் தங்கள் பங்குகளைத் திரும்ப வாங்க இப்படி டெண்டர் அறிவிக்கும்போது,  பங்கு வைத்திருப்பவர்கள் இந்த டெண்டர் மூலம் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை விற்பனை செய்து கொள்ளலாம். 

உதாரணத்துக்கு, ஒரு நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறும்போது,  குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் திரும்பப் பெறும். உதாரணமாக, ஒரு நிறுவனம் 100 பங்குகளை பைபேக் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  நான்கு பேரிடம் இருந்து 400 பங்குகளை விற்பதாக விண்ணப்பங்கள் பெறப் பட்டால், நான்கு பேரிடம் இருந்தும் தலா 25 பங்குகள் மட்டுமே சரிசமமாகப் திரும்பப் பெறப்படும்.

பங்குச் சந்தையில் பங்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணயக்கப்பட்டுத் திரும்ப பெறப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு நிறுவனப் பங்கின் விலை 900 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அந்தப் பங்கின் விலையை ரூ.1,000 என நிர்ணயித்து பைபேக் நடைபெறும்.

ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!



பைபேக் செய்யும் நிறுவனம் எவ்வளவு பங்குகளைத் திரும்ப வாங்கப் போகிறது என்று அறிவிக்கும். ஆனால், அந்த அளவுக்கு முழுமையாகப்  பங்குகளை வாங்கித்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வாங்கலாம்.

   ஏடிஎஃப் ஃபுட்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டீஸ்

பைபேக் மூலம் பங்குகள் வாங்கப்பட்ட பிறகு, பங்கின் விலை தொடர்ந்து ஏறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.  உதாரணமாக, கடந்த 2016-ல் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை ஏடிஎஃப் ஃபுட்ஸ் நிறுவனம்,  ரூ.18 கோடிக்கு பைபேக் செய்வதாக அறிவித்தது. பங்கு ஒன்றின் விலை ரூ.125. அப்போதே அந்தப் பங்கின் விலை, பைபேக் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக வர்த்தகமானது. ஆனால், பைபேக் தொகையில் 53.5%, அதாவது ரூ.9.63 கோடிக்கு மட்டுமே பங்குகளைத் திரும்பப் பெற்று இருந்தது.

ஆனால், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், சென்ற ஆண்டு பிப்ரவரி மத்தியில் ரூ3,500-க்கு பைபேக் செய்வதாக அறிவித்தது. அறிவிப்பு வந்த தேதியில், இந்தப் பங்கின் விலை ரூ.2,961-ஆக இருந்தது. 2016, ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரை பைபேக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப்பின், இந்தப் பங்கின் விலை மளமளவென உயர்ந்து 2016, ஜூலையில் 3,500 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து வர்த்தகமானது. ஆனால், இப்போது இந்தப் பங்கின் விலை குறைந்து 2,600 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில், பைபேக் அறிவிப்பின் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

   சூழ்நிலையைக் கவனியுங்கள்

‘‘முதலில் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் எதற்காக பைபேக் செய்கிறது  என்பதைப் பார்க்க வேண்டும். பைபேக் செய்யும் நிறுவனப் பங்கின் விலை மிகக் குறைவாக வர்த்தகமாகும்பட்சத்தில் அந்த நிறுவனப் பங்குகள் திரும்பப் பெறப்படலாம்.

சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள்  அதிகமாக இருக்கும்பட்சத்தில், பங்குகள் திரும்பப் பெறப்படலாம். டிவிடெண்டைவிட பைபேக் மூலம் முதலீட்டாளர்களுக்கு வரிச் சுமை இல்லாமல், நல்ல லாபம் வழங்க முடியும் என்பதால் பைபேக் செய்யலாம். இவற்றையெல்லாம்விட, முக்கியமாக பைபேக் நடைபெற்றபிறகு, அந்த நிறுவனம் குறைந்த அளவுக்கு உழைத்தாலே போதும், பங்கு ஒன்றுக்குச் சம்பாதிக்கும் அளவு அதிகரிக்கும். அந்த நிறுவனத்தின் பங்கினைத் தொடர்ந்து வைத்திருப்பவர்களுக்கு அது அதிக  நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.

பைபேக்கில் முதலீட்டாளர்கள் முதலில் எவ்வளவு பங்குகளை வைத்திருக்கிறார்கள், எந்தத் துறையில் பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதுமட்டுமில்லாமல், எந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறார்கள், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இப்போது இருக்கிற சூழ்நிலையில், ஐ.டி நிறுவனங்கள் அறிவிக்கும் பைபேக்கில் பங்கெடுப்பது மிக நல்லது.

ஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஏனெனில் 25 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, நடப்பு மற்றும் அடுத்த காலாண்டில் ஐ.டி துறையின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்ற கணிப்பையே வெளியிட முடியாத சூழ்நிலையில் ‘நாஸ்காம்’ இருக்கிறது. ஐ.டி துறையில் ரோபோக்களின் அறிமுகம், அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மற்றும் அமெரிக்கக் கொள்கை முடிவு என ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருவதால், இப்போதிருக்கும் பிரச்னையில் ஐ.டி நிறுவனப் பங்குகளை வைத்திருப்பவர்கள் பைபேக்கில் விற்பதே நல்லது.
டிசிஎஸ், 2,850 ரூபாய்க்கு பைபேக் அறிவித்திருக்கிறது. பங்கு ஒன்று இப்போது 2,400 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்தப் பங்கின் விலை பைபேக் விலையைத் தொடுமா அல்லது அதைத் தாண்டி வர்த்தகமாகுமா என்கிற சந்தேகம் பல முதலீட்டாளர்களுக்கு இருக்கலாம்.

டிசிஎஸ் மற்றும் அந்தத் துறையின் செயல்திறனைப் பொறுத்து, அந்த நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இப்போது 2,400 ரூபாய்க்குக் குறைவாக இந்தப் பங்கு கிடைத்தால், அவற்றை  வாங்கி, 2,850 ரூபாய்க்கு விற்பனை செய்துகொள்ளலாம். ஆனால், டிசிஎஸ் பங்கின் விலை 2,850 ரூபாய்க்குத் தாண்டி வர்த்தகமாகுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

இப்போதுள்ள முக்கியமான சவாலே, ஒரு பங்கின் விலையையும், பைபேக் விலையையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக் கூடாது என்பதுதான். டாக்டர் ரெட்டீஸ் ரூ.3,500 என பைபேக் அறிவித்தது. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் கணிப்பின்படி, அந்த நிறுவனப் பங்குகளின் விலை 3,500 ரூபாயாக இருக்கும் என்று நினைக்கிறது. அப்படி இருக்குமா, இருக்காதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. காரணம், பைபேக் செய்தபின் சந்தையைப் பொறுத்தே ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை வர்த்தகமாகும்.

   முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது

1. பைபேக் அறிவிக்கும்போது, முதலீட்டாளர்கள் முதலில் என்ன பிரீமியத்தில் பைபேக் கிடைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

2. தற்போதைய விலை, முதலீட்டாளர் வாங்கிய பங்கின் விலை மற்றும் பைபேக் அறிவித்திருக்கும் பங்கின் விலையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதில் ஓரளவு லாபம் இருந்தால் கண்டிப்பாக பைபேக் வாய்ப்பில் கலந்துகொண்டு பங்குகளை விற்பதே நல்லது.

3. எந்தவொரு முதலீட்டிலுமே 10 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானம் கிடைப்ப தில்லை. ஆனால், பைபேக்கில் ஒரே வாய்ப்பில் இந்த வருமானம் கிடைப்பதால் பயன்படுத்திக் கொள்வதே நல்லது.’’

இனி எப்போதெல்லாம் பைபேக் அறிவிக்கப் பட்டாலும், அப்போதெல்லாம் மேற்சொன்ன இந்த விஷயங்களைக் கவனத்தில்கொண்டு முதலீட்டாளர்கள் செயல்படுவது நல்லது!

பிபிஎஃப் வட்டிக் குறைப்பு!

தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் 0.10% குறைக்கப்பட்டுள்ளது. பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், கிஷான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ருதி கணக்கு, முதியோர் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ் என அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதம் 0.1% குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம், 2017 ஏப்ரல் முதல் ஜூன் வரை அமலில் இருக்கும். முக்கியமாக பிபிஎஃப் வட்டி 8 சதவிகிதத்திலிருந்து 7.9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி பிபிஎஃப் வட்டி 8 சதவிகிதத்துக்குக் கீழ் குறைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.