Published:Updated:

ஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!

ஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!

‘‘ரெய்டு எல்லாம் முடிந்துவிட்டதா? இதுநாள் வரை கண்டுபிடிக்காத எதை இந்த ரெய்டில் கண்டுபிடித்தார்கள்?’’ என நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக்கிடம் கேட்டோம். ‘‘இந்த ரெய்டு இதுவரை கண்டுபிடிக்காத எதையாவது  கண்டுபிடிப்ப தற்காக அல்ல. அதெல்லாம் ஆர்.கே நகர் அரசியல் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்’’ என்றார் தயாராக இருந்த நாணயத்தின் அட்டையைப் பார்த்தபடி. நாம் சந்தை தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!

‘‘சங்கரா பில்டிங் பங்கு, பட்டியலான முதல் நாளே 37% உயர்ந்திருக்கிறதே?’’ என்று ஆச்சர்யப்பட்டோம்.

‘‘ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த இந்தப் பங்குக்கு ஐபிஓ-விலேயே அமோக வரவேற்பு இருந்தது. மொத்தமாக 41 மடங்குக் கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டது. இதில் நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள்  90 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் 51 மடங்கும் கூடுதலாக விண்ணப்பித்திருந்தனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபிஓ பங்குகளிலேயே கூடுதலாக   விண்ணப்பிக்கப் பட்ட பங்கு இதுதான். மேலும், பங்குச் சந்தையில் பட்டியலான முதல்நாளே இந்தப் பங்கு, அதன் வெளியீட்டு விலையைக் காட்டிலும் 37% உயர்ந்து வர்த்தகமாகி இருக்கிறது. ரூ.460-க்கு ஐ.பி.ஒ. வந்த இந்தப் பங்கு ரூ.545-க்குப் பட்டியலானது. முதல் நாள் வர்த்தக முடிவில் ரூ.632.80-க்கு வர்த்தகம் நிறைவுற்றது. இது மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கணிக்கும் அனலிஸ்ட்டுகள், கரெக் ஷன்  ஏற்படும்போது இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம் என்கின்றனர்’’ என்று சொன்னார்.

‘‘ரிலையன்ஸ் நிறுவனம்தான் சந்தையின் மேன் ஆஃப் த மேட்சாக இருக்கிறது என்கிறார்களே?’’ என்றோம் கொஞ்சம் சந்தேகத்துடன்.

‘‘சந்தையின் தொடர் ஏற்றம், பங்குச் சந்தையை புதிய உச்சத்துக்குக் கொண்டு  சென்றதால், சென்செக்ஸ் 30000 புள்ளிகளைக் கடந்தது. நிஃப்டி புதிய உச்சமான 9273.90 புள்ளிகளை அடைந்தது. இந்த ஏற்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு முக்கிய இடம் வகித்தது. வங்கி, நுகர்வோர் பொருள்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளில் பங்கு விற்பனை அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும்கூட, இதனால் குறியீடுகளின் வளர்ச்சி தாக்கு பிடித்திருக்கிறது. ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் ஆஃபர் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு, கடந்த புதன் அன்று 3.4% உயர்ந்து ரூ.1,400-ஐக் கடந்திருக்கிறது. இதனால் இதன் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் ரூ.4.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியப் பங்குச் சந்தையின் அதிகபட்ச மார்க்கெட் கேபிட்டலைசேஷன் கொண்ட டிசிஎஸ் பங்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது ரிலையன்ஸ் பங்கு. விரைவில் டிசிஎஸ் பங்கை முந்தி விடவும் வாய்ப்பிருக்கிறது’’ என்று பதில் தந்தார்.

‘‘ஆர்பிஐ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 0.25% அதிகரித்து, 6 சதவிகிதமாக உயர்த்தியுள்ளதே!’’ என்று விசாரித்தோம்.

‘‘எல்லாம் நிகர வாராக் கடனை (என்பிஏ) குறைக்கத் தான் என்கிறார்கள் பொருளாதார மேதைகள். எப்படி என்கிறீர்களா? ரெப்போ ரேட் என்பது வங்கிகள், தங்களிடம் உள்ள கூடுதல் தொகையை ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்யும்போது, அவற்றுக்கு ஆர்பிஐ அளிக்கும் வட்டியாகும்.

ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். அதாவது, வங்கிகளுக்கு அதிக வட்டி கிடைப்பதாக இருக்கிறது. இதன் மூலம் வங்கிகளின் வட்டி வருமானம் அதிகரித்து, அவை சுலபமாக வாராக் கடன் பிரச்னையைச் சமாளிக்கும் என்கிறார்கள். இதனால், வங்கிகள் பழையபடி கடன் வழங்க ஆரம்பித்துவிடும் என்று நினைத்து சந்தோஷப்பட வேண்டியதுதான்’’ என்றவருக்கு சில்லென்று நன்னாரி சர்பத் தந்தோம். அதைக் கொஞ்சம் குடித்தவர், ‘‘சூப்பர்’’ என்று சொல்லி விட்டு, மீண்டும் நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டுகளிலும்  (REITs), இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டுகளிலும் (InVITS) வங்கிகள் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்ததைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் பங்குகள் விலை உயர்ந்திருக்கிறதே’’ என்றோம்.

‘‘இந்தத் திட்டங்களில் வங்கிகள் குறிப்பிட்ட அளவு முதலீடு செய்ய அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. டி.எல்.எஃப் நிறுவனத்தின் பங்கு  கடந்த வியாழனன்று 4.48 சதவிகிதமும், யுனிடெக் பங்கு 3.25 சதவிகிதமும் விலை உயர்ந்தது.

வங்கிகளுக்குக் கிடைத் திருக்கும் இந்த அனுமதியை ஏற்றுக்கொள்ள வங்கிகள் சற்றுத் தயக்கம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. வங்கிகள், பல்வேறு இன்ஃப்ரா நிறுவனங்களுக்கு பெருமளவில் கடன் தந்து, அதில் குறிப்பிட்ட பகுதி வாராக் கடனாக மாறியிருக்கிறது. இந்த வாராக்  கடனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் வங்கிகள் விழித்துவரும் வேளையில், மீண்டும் இன்ஃப்ரா துறையில் வங்கிகள் முதலீடு செய்யுமா என்பது சந்தேகமே என்கிறார்கள் நிபுணர்கள்’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘சிஎல்எஸ்ஏ 2018 மார்ச்சில் நிஃப்டி 10000 ஆகும் என்கிறதே. இப்போது 9000 புள்ளிகளுக்கு மேல் இருக்கும் நிஃப்டி, 10000 புள்ளிகளை அடைய ஓர் ஆண்டு காலம் ஆகுமா?’’ என்று வியப்புடன் கேட்டோம்.

‘‘சந்தை ஏற்றமும், அதிகரிக்கும் முதலீடும் பாசிட்டிவான போக்கைக் காட்டுவதால் சிஎல்எஸ்ஏ, தனது முந்தைய நிஃப்டி இலக்கை உயர்த்தியுள்ளது. முன்பு 2018 மார்ச்சில் நிஃப்டி 9700 புள்ளிகளாக உயரும் என்று கணித்திருந்தது. தற்போது அதனை உயர்த்தி, 10000 புள்ளிகள் என  இலக்கு நிர்ணயித்துள்ளது.

ட்ரெய்லிங் அடிப்படையில் சந்தை 22 மடங்கு உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த  வருடத்தில் இதுவரை சந்தைக் குறியீடுகள் 12% வளர்ச்சி அடைந்துள்ளன. சர்வதேச அளவில் வளரும் சந்தைகளில் சிறப்பானதாக இந்தியப் பங்குச் சந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. சந்தை இப்போது உச்சத்தில் இருந்தாலும் இனிவரும் நாள்களில் ஏற்ற இறக்கம் வரலாம் என்பதால், சந்தை 10000 புள்ளிகளைத் தொட ஓராண்டு காலம் ஆகலாம் என்று அந்த நிறுவனம் சொல்லியிருக்கலாம்’’ என்றார். 

ஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!

‘‘எல்லோரும் பங்குகளை வாங்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பங்குகளை விற்க என்ன காரணம்?’’ என்று வினவினோம்.

‘‘கடந்த ஒரு வருட காலமாகவே சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து பங்குகளை வாங்கி, சந்தையில் முதலீடுசெய்து வருகிறார்கள். இந்த சமயத்தில், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறியுள்ளது விசித்திரமாகவே இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் சார்பில் ரூ.53,000 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் ரூ.22,823 கோடி மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. லாபம் பார்க்கும் ஆர்வம், யூலிப் முதலீடுகள் திரும்பப் பெறப்படுவது மற்றும் இன்ஷூரன்ஸ் அல்லாதவற்றில் கிடைக்கும் வரவு ஆகியவை இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் இன்ஷூரன்ஸ் பிரீமியம் 20% உயர்ந்திருக்கிறது. இதனால் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பிரீமியம் 25 சதவிகிதமும், எல்ஐசி-யின் பிரீமியம் 16 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது. ஆனாலும், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால்,  குறைவாகவே பங்குகளில் முதலீடு செய்துள்ளன’’ எனப் புள்ளிவிவரங்களை அள்ளிக் குவித்தார்.

‘‘சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது. ஏதேனும் உஷார் தகவல்கள் இருக்கிறதா?’’ என்று ஷேர்லக்கின் காதில் கிசுகிசுத்தோம்.

‘‘ஜிஎஸ்டி, பாஜகவின் அமோக வெற்றி ஆகியவை மேக்ரோ எகனாமிக் அளவில் சந்தைக்குச் சாதகமாக மாறியதைத் தொடர்ந்து, கடந்த பல வாரங்களாகவே சந்தை நல்ல ஏற்றம்  அடைந்து வருகிறது. மேலும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்திருக்கிறது. இதனால் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் அதிகரித்திருக்கிறது. நமது நிதிநிலையும், நாணயக் கொள்கையும்கூட சாதகமாக இருக்கிறது.

இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் சந்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது லாப நோக்கில் சில முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவருகிறபோதிலும், புதிய முதலீட்டாளர்களின் வருகையாலும், வெளிநாட்டினர் தங்கள்  முதலீடுகளை அதிகரிப்பதாலும் சந்தை இறக்கமடைவது குறைந்து, காளையின் போக்கிலேயே தொடர்கிறது.

குறியீடுகள் புதிய உச்சத்தைக் கடந்த வாரத்தில் எட்டியுள்ளன. சந்தையைப் பாதிக்கக்கூடிய சூழல்கள் எதுவும் தற்போது வரை இல்லை என்பதால், இந்த ஏற்றம் தொடரும் என்றே அனலிஸ்ட்டுகள் கருதுகிறார்கள். எனவே, இடையிடையே இறக்கங்கள் ஏற்பட்டால் அதனை முதலீடு செய்யும் வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார்.

‘‘இன்று சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தை இறங்கியிருக்கிறதே!’’ என்றோம்.

‘‘குறுகிய காலத்தில் சந்தை இறங்குவதற்கு வாய்ப்புண்டு என்பது தெரிந்த விஷயம்தானே. இன்று நிகழ்ந்த இறக்கம் அடுத்த வாரத்தில்கூட தொடரலாம்.

அப்படி நடந்தால், நல்ல பங்குகள் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும். அவற்றைத் தாராளமாக வாங்கலாம்’’ என்றவர், புறப்படுவதற்குமுன், ‘‘அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று  சந்தை விடுமுறை என்பதை மறக்காதீர்கள்’’ என்று உஷார் படுத்திவிட்டுக் கிளம்பினார்.