Published:Updated:

ஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்!
ஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்!

ஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ம் கேபினுக்குள் ஷேர்லக் நுழைந்ததும், ‘‘இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகள் எப்படி?’’ என்று கேட்டோம்.

“எதிர்பார்த்தபடியே வந்திருக்கிறது. தற்போது ஐ.டி நிறுவனங்களுக்கான சந்தை மோசமாகத்தான் இருக்கிறது. அந்தவகையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸின், நான்காவது காலாண்டு நிகர லாபம், 2.8%  குறைந்துள்ளது. அதாவது 2017, மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.3,603 கோடியாகும். இதன் வருமானம் 0.9% குறைந்து, ரூ.17,120 கோடியாக உள்ளது.

காலாண்டு முடிவு வெளியானதும் இன்ஃபோசிஸ் பங்கு விலையும் இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது. ரூ.970 ஆக இருந்த அந்த நிறுவனப் பங்கின் விலை சரிந்து ரூ.940 -950 என்ற நிலையில் வர்த்தகமானது. அதேசமயம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செலவுகளும் குறைந்துள்ளன. ஆனாலும், நிகர லாபம் வளர்ச்சி அடையாதது, அந்நிறுவனத்தின் செயல்பாட்டின் மீது ஒரு சந்தேகப் பார்வையை முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஹெச் 1பி விசா கெடுபிடி, ஆட்டோமேஷன், கடுமையான போட்டி ஆகியவையும் கூடுதல் காரணங்களாக உள்ளன.

ஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்!

இந்தக் காலாண்டில், இதன் செயல்பாட்டு லாப வரம்பு 24.6 சதவிகிதமாக உள்ளது. முடிந்த நிதியாண்டில் (2016-17) இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 6.4% அதிகரித்து, ரூ.14,353 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்கா, ‘’நிறுவனத்தில் எனது வளர்ச்சி உத்திகளை அமல்படுத்துவதில் இப்போதும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது’’ என்றவருக்கு சூடான டீ தந்தோம்.

‘‘16 நிறுவனப் பங்குகளுக்கான சர்க்யூட் லிமிட்டை பிஎஸ்இ மாற்றி அமைத்திருக்கிறதே’’ என்றோம் சற்று வியப்புடன்.

‘‘புதும்ஜீ இண்டஸ்ட்ரீஸ் (Pudumjee Industries), ராஜ் ராயன் இண்டஸ்ட்ரீஸ் (Raj Rayon Industries), நெஹா இன்டர்நேஷனல் (Neha International) ஆகிய நிறுவனப் பங்குகளின் சர்க்யூட் லிமிட் 10% ஆக உள்ளது. கால்ஸ் ரிஃபைனரீஸ் (Cals Refineries),  சிபார் ஆட்டோ பார்ட்ஸ் (Sibar Auto Parts), அடோர் மல்டி புராடக்ட்ஸ், இன்ட் பேங்க் ஹவுஸிங் (Ind Bank Housing), ரதி கிராபிக் டெக்னாலஜிஸ் (Rathi Graphic Technologies), அக்மி ரிசோர்ஸ் (Acme      Resources), ஏஸ் சாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் (ACE Software Exports), இந்தியன் மெட்டல்ஸ் அண்ட் ஃபெரோ அலாய்ஸ் (Indian Metals & Ferro Alloys), அக்ரி-டெக் இந்தியா (Agri-Tech India), ராஜஸ்தான் சிலிண்டர்ஸ் அண்ட் கன்டெய்னர்ஸ்  (Rajasthan Cylinders &    Containers), அபினவ் லீசிங் அண்ட் ஃபைனான்ஸ் (Abhinav Leasing & Finance), இசிஎஸ் பிஸ்டெக் (ECS Biztech), இந்்துஸ்தான் மில்ஸ் (Hindoostan Mills) ஆகிய நிறுவனப் பங்குகளின் சர்க்யூட் லிமிட் 5 சதவிகிதமாகவே உள்ளது’’ எனப் பெரிய பட்டியலையே வாசித்தார்.

‘‘எஸ்பிஐ பங்குகளில் இருந்து சிறு முதலீட்டாளர்கள் வெளியேற என்ன காரணம்?’’ என்று கிசுகிசுத்தோம்.

‘’கடந்த நிதியாண்டில் மட்டும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பங்குகளில் இருந்து 90,540 சிறு முதலீட்டாளர்கள் வெளியேறியிருக்கிறார்கள். 2016 மார்ச் முடிவில் 6.93 சதவிகிதமாக இருந்த சிறு முதலீட்டாளர்கள் பங்களிப்பு, 2017 மார்ச் முடிவில் 6.08 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எஸ்பிஐ பங்கு 2016-17-ம் நிதியாண்டில் நன்றாகவே ஏற்றமடைந்தது. 24 ஏப்ரல் 2016-ல் ரூ.166 ஆக இருந்த எஸ்பிஐ பங்கின் விலை 5 ஏப்ரல்  2017-ல் ரூ.298 ஆக உயர்ந்துள்ளது. இதனால் லாப நோக்கில் சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

அனலிஸ்ட்டுகளின் கணிப்புப்படி, தற்போது எஸ்பிஐ பங்கு சற்று அழுத்தமான கட்டத்தில்தான் உள்ளது. ஏனெனில் இந்த வங்கியின் வாராக் கடன், ஏறக்குறைய 7.5 சதவிகித உச்சத்தில் இருக்கிறது.  இதன் துணை வங்கிகளின் வாராக் கடன் இதனைவிட அதிகமாக இருப்பதால், அதிலிருந்து மீள்வது தற்போதைய நிலையில் சற்று சிரமம் என்பதால், அது நிர்வகிக்கும் சொத்துகளின் தரம் சற்று சிக்கலில்தான் இருக்கிறது. இந்தப் பங்குகளில் எல்ஐசி நிறுவனம் வைத்திருந்த ரூ.75.87 கோடி முதலீட்டை ரூ.70.31 கோடியாகக் குறைத்திருக்கிறது’’ என்று விளக்கம் தந்தார். 

ஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்!

‘‘எல்ஐசி, பங்குச் சந்தையில் இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ளதே?’’ என்று மீண்டும் ஆச்சர்யப்பட்டோம்.

‘‘எல்ஐசி, கடந்த நிதியாண்டில் பங்குச் சந்தையில் இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ளது. 2015-16-ம் நிதியாண்டில் பங்குச் சந்தையில் ரூ.11,000 கோடி லாபம் பார்த்திருந்த நிலையில், 2016-17-ம் நிதியாண்டில் ரூ.21,000 கோடி லாபம் பார்த்துள்ளது. கடந்த நிதியாண்டில் பங்குச் சந்தை கணிசமான வளர்ச்சி அடைந்ததைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு எல்ஐசி  தனது முதலீட்டில், கணிசமான சதவிகிதத்தை விற்று வெளியேறியது. கடந்த நிதியாண்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருக்கிறது. இதன் மூலம் எல்ஐசிக்கு ரூ.21,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. மேலும் எல்ஐசி, பங்குகளில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொண்டு, ஆன்யுட்டி மற்றும் பென்ஷன் திட்டங்கள் போன்றவற்றின் பிசினஸில் அதிகமாகக் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதும் பங்குகளை விற்று வெளியேற ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் தொகையில் முதலீடு செய்யும் நிறுவனமான எல்ஐசி, பங்குச் சந்தையில் தனது முதலீட்டைக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்திருப்பது சற்று விநோதமானதுதான்’’ என்றார்.

‘‘டிவிஸ் லேப்ஸ் பங்கு விலை ஒரே நாளில் 5.5%  உயர்ந்ததே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘மருந்துத் தயாரிப்பு நிறுவனமான டிவிஸ் லேப்ஸ், அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தயாரிப்பு மற்றும் தர நிர்ணயங்களைப் பின்பற்றாமல், விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கடந்த மார்ச் மாதம் குற்றம் சாட்டப்பட்டது. அந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதால், இந்தப் பங்கின் விலை உயர்ந்தது’’ என்றார். 

‘‘வெளிநாட்டினர், பங்குகளைத் தொடர்ந்து வாங்கிக் குவிக்கின்றனரே?’’ என்றோம்.

‘‘இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டினர் முதலீட்டைக் குவித்து வருகின்றனர். இந்தியச் சந்தை மீது உள்ள நம்பிக்கைதான் இதற்குக் காரணம். அடுத்து வரும் வாரங்களில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைப் பொறுத்து சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நல்ல நிறுவனப் பங்குகளின் விலை மலிவாகக் கிடைத்தால், நீண்ட கால நோக்கில் வாங்கிக் கொள்ளலாம்” என்றபடி, வீட்டுக்குப் புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு