Published:Updated:

ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா?
ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா?

ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா?

பிரீமியம் ஸ்டோரி
ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா?

தி.ரா.அருள்ராஜன்,
பங்குச் சந்தை நிபுணர், ectra.in

‘‘நான் ஷேர் மார்க்கெட்டுக்குப் புதுசு.  கையில 20,000  ரூபா இருக்கு.  இதை வெச்சி குயிக்கா எப்படிப் பணம் சம்பாதிக்கலாம்?’’ - இப்படியொரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு புரோக்கிங் ஆபீஸுக்கு வருகிறவர்கள் பலர்.  இப்படிபட்டவர்களுக்குச் சந்தையில் உடனடியாக கிடைக்கும் ஆலோசனை, ‘‘வாங்க... வாங்க, நிஃப்டி-ல ஒரு லாட்டு வாங்குங்க. தினமும் ரெண்டாயிரம்கூட சம்பாதிக்கலாம்’’ என்று ஆசை காட்டுகிறார்கள் சில புரோக்கிங் அலுவலக ஊழியர்கள்.

பங்குச் சந்தை முதலீடு பற்றி எந்தவொரு அனுபவமும் இல்லாத முதலீட்டாளர்கள், புரோக்கிங் அலுவலக ஊழியர்கள் சொல்வதை அப்படியே நம்பி, ‘‘அப்படின்னா, ஒரு மாசத்துல பணத்தை டபுள் பண்ணிடலாமா?’’ என வியக்கிறார்கள்.
ஆனால், ஒரு நாள் வரும் ஆயிரம்,  இரண்டாயிரம், இன்னொரு நாள் போய்விடும். பிறகு, விட்டதைப் பிடிக்கணும் என்று மேலும் பணத்தைப் போட்டு அதையும் இழந்து, கடைசியில் ‘‘அய்யோ சாமி, இந்த ஆட்டமே வேண்டாம்’’ என்று ஒதுங்கி நிற்பவர்கள் பலர். அப்போதும் ஒரு கூட்டம் அவர்களைத் தேடி வந்து, ‘‘அட, என்ன சார், இந்த சின்ன நஷ்டத்தைப் பார்த்துட்டு தள்ளி நிக்கிறீங்களே... முன்னாடி ஃப்யூச்சர்ஸ்ல நிஃப்டி வாங்க ரூ.20,000 தேவைட்டது இல்லையா?   இப்ப அவ்வளவு வேண்டாம். சும்மா ரூ.5,000 இருந்தா போதும். 5,000 ரூபா எடுத்துக்கிட்டு வாங்க, ஒரு லாட் கால் ஆப்ஷன் வாங்கினா,  ஒரு வாரத்தில் டபுள் பண்ணிடலாம்’’ என்று ஆசை காட்டுவார்கள்.

ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா?

‘‘அட, இப்ப நிலைமை மாறிடுச்சு போல... 5,000 ரூபாதான... கடைசியா ஒருமுறை முயற்சி செஞ்சு பார்த்துடுவோமே...’’ என்று மீண்டும் 5,000 ரூபாயைக் கொடுப்பார்கள் அப்பாவி முதலீட்டாளர்கள். அந்த புரோக்கர் கம்பெனி ஊழியர் சொன்ன மாதிரி, 5,000 ரூபாய் 10,000 ரூபாயாகும் அடுத்த சில நாட்களில். பிற்பாடு சில தினங்களிலேயே 10,000 ரூபாய் மொத்தமாக பறிபோய், மீண்டும் ஜீரோவானதுதான் மிச்சம். ஒரு சாமான்யனைப் பொறுத்தமட்டில்,  ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் திரும்பத் திரும்ப நிகழும் அனுபவம் இதுதான். அதிவேகத்தில் லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வருவதும், உள்ளே வந்தபின் ‘உள்ளதும் போச்சுடா’ என்கிற நிலை ஏற்படவும் யார் காரணம்? 

இந்தியாவில் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (சுருக்கமாக, எஃப் அண்ட் ஓ) என்ற டெரிவேட்டிவ் வகை வியாபார முறை, 2000-ம் வருடத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. முதலில் இண்டெக்ஸ்களில் அறிமுகமான இந்த எஃப் அண்ட் ஓ, பிற்பாடு பங்குகளிலும் அறிமுகமானது. இந்த எஃப் அண்ட் ஓ வர்த்தக முறை கொண்டு வரப்பட்டதன் நோக்கம், ரொக்கச் சந்தையில் (Cash Market) பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள்,  அந்த முதலீட்டின் மூலம்  நஷ்டம் வரும் சூழ்நிலை வந்தால், அந்த நஷ்டத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஃப்யூச்சர்ஸ் வகையில் ‘ஷாட்’ (Short - கையில் இல்லாத பங்குகளை முதலில் விற்றுவிட்டு, பிற்பாடு வாங்குவது) போகலாம் என்பதே. இதை ‘ஹெட்ஜிங்’ (Hedging) என்று சொல்வார்கள்.

பொதுவாக, பெரிய முதலீட்டாளர்கள், தாங்கள் செய்துள்ள பெரிய அளவிலான  முதலீட்டினைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், முதலீட்டைக் காப்பாற்றிக் கொள்ள இந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டவர்களைவிட, எளிதாகப் பணம் சம்பாதிக்க நினைத்த பலரும் இதில் புகுந்து பணம் பார்க்க முயற்சி செய்தார்கள். இதனால் இந்த யூக வணிகம் (Speculation)  சூடு பிடித்தது. காலையில் 20,000 போட்டால், மாலையில் ஒரு சில ஆயிரங்களை லாபமாக எடுக்கலாம் என்ற ஆசையில் பல அப்பாவி முதலீட்டாளர்கள் இதில் பணத்தைப் போட ஆரம்பித்தார்கள். 

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி, 2000-ம் வருடம் இந்த டெரிவேட்டிவ் வகை வியாபாரத்தை அறிமுகப்படுத்தியபோது, ஒரு கான்ட்ராக்ட்டின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று நிர்ணயம் செய்தது.  இந்த மதிப்பை அடிப்படையாக வைத்து,  பங்கின் விலையை வகுத்து, லாட் அளவு கணக்கிடப்பட்டது. அப்போது, நிஃப்டியின் ஒரு லாட் அளவு 25 ஆக இருந்தது.  மேலும், மார்ஜின் என்று பார்க்கும்போது, ரூ.2 லட்சம் கான்ட்ராக்ட் மதிப்பில் சுமார் 10% மார்ஜின் பணம் கட்டினால் போதும் என்று இருந்தது. அப்போது, இண்டெக்ஸ் அல்லது ஸ்டாக்கின் விலை ஏற்ற இறக்கத்துக்கேற்ப, கான்ட்ராக்ட்டின் மதிப்பும் ரூ.2 லட்சத்தைவிடக் கொஞ்சம் கூடும் அல்லது குறையும். இதனால்தான், பல முதலீட்டாளர்கள் ரூ.20,000 எடுத்துக்கொண்டு வந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள கான்ட்ராக்ட்டை வாங்கினார்.  

இதுமாதிரியான முதலீட்டாளர்களின் டிரேடிங் நடவடிக்கைகளை செபி தொடர்ந்து கண்காணித்ததில்,  குறுகிய காலத்தில் குறைந்த முதலீட்டில், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு டிரேடிங் செய்ய வரும் இந்த அப்பாவி முதலீட்டாளர்கள்,  ஃப்யூச்சர்ஸில்  அதிக நஷ்டம் அடைவதைக் கண்டது. இது மாதிரியான சிறு முதலீட்டாளர்களை, இத்தகைய வியாபாரத்தில் இருந்து தள்ளிவைக்க விரும்பியது.  அக்டோபர் 2015 -ல் ஒரு ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன் கான்ட்ராக்டின் மதிப்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது.   இதனால்,  ரூ.5 லட்சம் மதிப்புள்ள கான்ட்ராக்ட்டை ஒருவர் வாங்க விரும்பினால், 10% மார்ஜின் பணமாக  ரூ.50,000 ஆக கட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்கேற்றவாறு லாட் அளவும் கூட்டப்பட்டது.  நிஃப்டியின் லாட் அளவு 25 எண்ணிக்கை என்ற அளவில் இருந்து 75 என்று உயர்த்தப்பட்டது.

ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா?

இது போதாதென்று, சந்தையின் வேகமான ஏற்ற இறக்கத்துக்கேற்ப மார்ஜின் தொகையின்  சதவிகிதம் உயர்த்தப்பட்டது. சராசரியாக 10% அளவில் இருந்த இந்த மார்ஜின் தொகை, சில பங்குகளுக்கு 15 - 20% அதிகமாகி, தற்போது 30 சதவிகிதத்துக்கும் அதிகமாகக்கூட வசூலிக்கப் படுகிறது. அப்படிப் பார்க்கும்போது, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கான்ட்ராக்டுக்கான மார்ஜின் 30% என்று எடுத்துக்கொண்டால், அதற்கு ரூ.1.5 லட்சம் மார்ஜின் தொகை தேவைப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை அதிகரிக்க அதிகரிக்க, இந்த மார்ஜின் தொகையும் உயர்கிறது.  எடுத்துக்காட்டாக,  சன் டிவி பங்கின் லாட் அளவு 2000 ஆகும்.  சன் டிவி பங்கின் விலை ரூ.300 என்றிருந்தபோது, இந்த கான்ட்ராக்ட் மதிப்பு (2000 X 300) ரூ.6 லட்சமாக இருந்தது.  தற்போது சன் டிவியின் பங்கு 800 ரூபாயை எட்டிய நிலையில், கான்ட்ராக்ட் மதிப்பு ரூ.16 லட்சமாக மாறியுள்ளது.   இதற்கு 10% மார்ஜின் என்று வைத்தாலே ரூ.1.6 லட்சம் கட்டவேண்டும்.  மார்ஜின் சதவிகிதம் 20% என்ற அளவுக்கு உயர்ந்தால், ரூ.3.2 லட்சம் மார்ஜினாகக்  கட்டவேண்டும்.   பங்கின் விலையின் வேகமான அல்லது மிதமான விலை நகர்வுக்கேற்ப,  மார்ஜின் சதவிகிதமும்  தினசரி கூடலாம் குறையலாம். 

இதேபோல, விலை நன்கு குறைந்த நிறுவனத்துக்கு மார்ஜின் தொகை குறையலாம்.  எடுத்துக்காட்டாக, டிவிஸ் லேப் பங்கின் விலை 1,000 ரூபாயாக இருந்தபோது, அதன் லாட் அளவான 600-ல் பெருக்கினால் ஆறு லட்சம் ஆகும்.  ஆனால், டிவிஸ் லேப் பங்கின் விலை சுமார் ரூ.600 என்ற அளவுக்கு தற்போது வீழ்ச்சி அடைந்ததால்,    கான்ட்ராக்ட் மதிப்பு ரூ.3.6 லட்சமாக குறைந்துள்ளது.  இதனால் மார்ஜின் தொகையும் குறைந்துள்ளது.

இப்படி மார்ஜின் தொகை உயர்ந்துகொண்டே போனால், சிறுமுதலீட்டாளர்கள் இனி எஃப் அண்ட் ஓ-வில் டிரேட் செய்ய முடியாது. நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி எஃப் அண்ட் ஓ வர்த்தகம் என்கிற நிலை உருவாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு