நம்மில் பெரும்பாலானோர் எஸ்ஐபி என்ற மாத முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்கக்கூடிய பலன்களை நன்கு அறிந்திருக்கிறோம். மொத்தமாக முதலீடு செய்வதைக் காட்டிலும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வது எளிமையாகவும் நீண்டகால அடிப்படையில் மிகச் சிறப்பான ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் மொத்த முதலீடுகளும் அவசியமாக உள்ளன.
உதாரணத்துக்கு, உங்களுக்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து பெரிய தொகை போனஸாகக் கிடைக்கும்போது அல்லது நிலமோ, சொத்துகளோ விற்பதன்மூலம் கணிசமான தொகை கிடைக்கும்போது மொத்த முதலீடுகளைச் செய்யலாம். மொத்த முதலீடுகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு ஐந்து விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

1. சந்தை மதிப்புகள் குறித்த அடிப்படை அறிவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சந்தையின் போக்கைத் தீர்மானிப்பது என்பது கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில், நாம் என்னதான் புத்திசாலியாக யோசித்தாலும் சந்தை இறங்கும்போது வாங்குவதும், ஏறும்போது விற்பதும் எல்லோருக்கும் கைவந்து விடுவதில்லை. ஆனால், பி/இ விகிதத்தைப் பயன்படுத்தி நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். பி/இ விகிதத்தைக் கணக்கிடும்போது குறைந்த பட்சம் 4 காலாண்டுகளின் வருவாய் விவரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த20 வருடங் களில் நிஃப்டி நீண்டகாலத்தில் பி/இ விகிதத்தில் 10-12 மடங்கு இறக்கத்தையும், நீண்டகாலத்தில் பி/இ கணக்கில் 25-28 மடங்கு ஏற்றத்தையும் அடைந்திருக்கின்றன. உங்களுடைய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மொத்த முதலீடு என்பது நிஃப்டி பி/இ குறைவாக இருக்கும்போதா அல்லது அதிகமாக இருக்கும்போதா என்பதைப் பொறுத்து தான் முடிவு செய்ய வேண்டும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டை பி/இ 14 ஆக இருக்கும்போது வாங்கினால், பி/இ 22-ல் வாங்குவதைக் காட்டிலும் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டிலுமே நீண்டகால முதலீடு என்பது அவசியம் (குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள்).
2. மொத்த முதலீடு்: நீண்டகாலம் வைத்திருப்பது அவசியம்
ஜனவரி 2008-ல் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்திருந்தால், நல்ல வருமானத்துக்கு 6-7 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ஜனவரி 2008-ல் மொத்தமாக முதலீடு செய்திருக்கக் கூடாது. ஏனெனில், மதிப்புகள் ஏற்கெனவே பி/இ மதிப்பைவிட 22 மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. அதே முதலீட்டை சந்தை பெரும் இறக்கத்தைச் சந்தித்திருந்த நிலையில் செப்டம்பர் 2008-ல் செய்திருந்தாலும், உங்களுடைய முதலீடு குறுகிய காலத்துக்கு இறக்க நிலையிலேதான் இருந்திருக்கும். ஏனெனில், மார்ச் 2009-க்குப் பிறகுதான் சந்தை இறக்கத்திலிருந்து மீண்டு வந்தது. எனவே, மொத்த முதலீடு எனில், குறுகிய கால இலக்கைத் தவிர்க்கவும்.
3. மொத்த முதலீடும் பணத்தேவையும்

இது மிகமிக முக்கியமான விஷயம். உங்களுடைய கையிலிருக்கும் தொகை ஒரு வருடத்துக்குள் வீட்டுக் கடனுக்கான ஒரு பகுதியை அடைக்கத் தேவையாக இருக்கும்பட்சத்தில் உங்களுடைய பணத்தைக் கடன் ஃபண்டுகள் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஏனெனில், ஒரு வருட கால அடிப்படையில் பார்க்கும்போது ஈக்விட்டி ஃபண்டுகளைக் காட்டிலும் கணிக்கக்கூடிய மற்றும் பாதுகாப்பான முதலீடுகளாக இவை உள்ளன. அதேபோல் ஈக்விட்டி ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் பெரிதாக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது தேவைப்படும்.
4. பொறுமையும் சமநிலையும்
இவை இரண்டும் மொத்த முதலீட்டுக்கு மிக மிக அவசியமான குணநலன்கள். முக்கியமாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது பொறுமையாகவும் சமநிலையிலும் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, 2002-ல் டெக் ஃபண்டுகளின் என்ஏவி 70 சதவிகிதத்துக்குக்கீழ் விழுந்தபோது வாங்கிய முதலீட்டாளர்கள், என்ஏவி-யில் மேலும் 30 சதவிகிதம் இறக்கம் வரும்வரை காத்திருந்திருக்கலாம். ஏனெனில், அடுத்த ஐந்து வருடங்களில் அனைத்து டெக் ஃபண்டுகளும் பல மடங்கு லாபத்தைக் கொடுத்தன. ஆனால், சந்தை ஏற்ற இறக்கங்களில் பொறுமையுடனும் சமநிலையிலும் இருக்க வேண்டும் என்று சொல்வது எளிது, செய்வதுதான் கடினம். ஆனால், மொத்த முதலீடுகளின்போது ரிஸ்க் அதிகம் என்பதால் பொறுமையுடனும் சமநிலையிலும் இருக்க வேண்டியது அவசியம்.
5. மொத்த முதலீட்டை வேறு திட்டத்துக்கு மாற்றுதல்
மொத்த முதலீடு செய்யத் தயாராக இருக்கும் போது, உங்களுக்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிப்பதில் குழப்பம் இருக்கும்பட்சத்தில் இந்த வழியில் முதலீடு செய்யலாம். உங்களுடைய பணத்தை ஒரு அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டில் அல்லது லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து, பிறகு அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றப்படும் வகையிலான எஸ்டிபி (STP -Systematic Transfer Plan) முறையைச் செய்துவிடுங்கள்.
இப்படி செய்வதன்மூலம் சந்தையின் போக்கு குறித்த கவலையிலிருந்து விடுபடலாம். மேலும், லிக்விட் ஃபண்டில் உள்ள பணம் வங்கிக் கணக்கைக் காட்டிலும் அதிக வருமானத்தைத் தரும். உங்களுக்காக உங்களுடைய பணம் வேலை செய்ய வேண்டுமென்றால் இதுதான் சிறந்த வழி.
தொகுப்பு: ஜெ.சரவணன்