Published:Updated:

பங்குச் சந்தை மூலம் லாபம் தருவதாக ரூ.4.65 கோடி மோசடி

காரைக்குடி: பங்குச் சந்தை மூலம் லாபம் பெற்று தருவதாக கூறி 4.65 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் காரைக்குடியி்ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி, வள்ளுவர் நகரில் "அல்மைட்டி கேப்பிடல் மேனேஜ்மென்ட் சர்வீஸ்' என்ற நிறுவனம் இயங்கி வந்தது. அதன் சார்பில் காரைக்காலில், கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் தனியார் ஓட்டல் ஒன்றில், கும்பகோணத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மூலம், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியது. இதில், காரைக்காலின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

##~~##
கூட்டத்தில், அந்த நிறுவன தலைவர் எஸ்.ஆர்.எம்.முத்துராமலிங்கம், அவர் மனைவி மங்கையர்கரசி, மகன் விஜய் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். தங்கள் நிறுவனத்தில், 25,000 ரூபாய் முதலீடு செய்தால், அதைப் பங்கு சந்தையில் முதலீடு செய்து, மாதம் தோறும் முதலீட்டாளர்களுக்கு, ரூ. 2,150 தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இதை நம்பி, காரைக்காலைச் சேர்ந்த 43 பேர் பணம் தந்தனர். முத்துராமலிங்கம், அவர் மனைவி மங்கையர்கரசி ஆகியோர் பெயரில் வங்கி மூலமாக 4.65 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த, 2010ம் ஆண்டு முதல் 2012 மே மாதம் வரை முதலீடு செய்த நபர்களுக்கு, அவர்களது முதலீடு தொகைக்கு ஏற்ப லாபத் தொகை, முதலீட்டாளர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், 2012 மே மாதத்திற்கு பின், முதலீட்டாளர்களுக்குப் பணம் வரவில்லை.
இந்த நிலையில் நிறுவன உரிமையாளர், அவரது மனைவியை, தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. காரைக்குடியில் உள்ள அலுவலகத்திற்கு,நேரில் சென்றபோது, அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததைக் கண்டு முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, முதலீட்டாளர்களிடம் விபரங்களை சேகரித்து, 4.65 கோடி ரூபாய் மோசடி செய்து  மாயமான தம்பதியை, தேடி வருகிறார்கள்.