Published:Updated:

ஷேர்லக்: ஃபண்ட் மேனேஜர்களைக் கவர்ந்த பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: ஃபண்ட் மேனேஜர்களைக் கவர்ந்த பங்குகள்!
ஷேர்லக்: ஃபண்ட் மேனேஜர்களைக் கவர்ந்த பங்குகள்!

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

ழை கோட், குடை சகிதமாக வந்து இறங்கிய ஷேர்லக்கைப் பார்த்து நாம் புன்னகைத்ததும், “மாலை வந்தாலே மழையும் வந்துவிடுகிறதே... அதான் முன்னெச்சரிக்கையாக...” என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார். சபாஷ் சொல்லிவிட்டு, நம் கேள்விகளைக் கேட்க, அதற்கு பளிச்செனப் பதிலளித்தார்.

ஷேர்லக்: ஃபண்ட் மேனேஜர்களைக் கவர்ந்த பங்குகள்!

“இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கின் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கிறதே?”

“வெள்ளிக்கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட  இயக்குநர் குழு கூட்டத்தில், ரூ.13,000 கோடிக்குப் பங்குகளைத் திரும்ப வாங்கும் (பைபேக்) அறிவிப்பு கடந்த வியாழன் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. இதனையடுத்து பங்கின் விலை 4.54% உயர்ந்து ரூ.1021.15-க்கு அதிகரித்தது. இந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ விஷால் சிக்கா திடீர் ராஜினாமா செய்ததை அடுத்து கடந்த வெள்ளி அன்று மட்டும் பங்கின் விலை சுமார் 10% (ரூ.98) இறக்கம் கண்டது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக இறங்கியிருப்பதால், புதிய முதலீட்டாளர்கள் இந்தப் பங்கினை வாங்கலாமா என்று கேட்கிறார்கள். ஐ.டி துறையானது பெரிய முன்னேற்றத்தை நோக்கிச் சென்ற மாதிரி தெரியவில்லை. எனவே, இந்தச் சமயத்தில் இந்தப் பங்கில் பெரிய அளவில் முதலீடு செய்யாமல், சிறிய அளவில் முதலீடு செய்துவிட்டு, நிர்வாக அளவில் அடுத்து என்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பதைக் கண்காணிக்கலாம். அதற்கேற்ப நமது முதலீடுகளை அதிகப்படுத்தலாமா எனப் பிற்பாடு முடிவெடுக்கலாம்.’’    
 
“இந்திய பங்குச் சந்தையில் முறைகேடான செயல்பாடுகள் அதிகரித்திருக்கின்றனவாமே?”


“சந்தையில் முதலீடுகள் குவிந்து வருவது ஒருபக்கம் இருந்தாலும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையும் ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கலாம்.எனினும், உள்நபர் வர்த்தகம், செயற்கை வர்த்தகம் மற்றும் பங்கு விலையில் மோசடி போன்றவையும் இந்தியச் சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக மொத்தம் 219 புதிய வழக்குகள் கடந்த 2016-17-ம் நிதியாண்டில் பதிவாகியுள்ளன. இது 2015-16-ம் நிதியாண்டைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும்.  இவற்றில் 34 வழக்குகள் உள்நபர் வர்த்தக முறைகேட்டைச் சார்ந்ததாகும். சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முதலீட்டாளர்கள் நலனுக்காக எடுத்து வந்தாலும், இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. வருமான வரித் துறையின் உதவியால் இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய செபி முயற்சி செய்து வருகிறது.”

“பங்கு வர்த்தகம் ரத்து செய்யப்பட்ட 331 ஷெல் கம்பெனிகள் குறித்த நிலை என்ன?”

“பங்கு வர்த்தகம் செய்ய செபி-யினால் நிறுத்தப்பட்ட 331 நிறுவனங்களில், 100 நிறுவனங்களில் தணிக்கை நடவடிக்கையைத் தொடங்குமாறு பங்குச் சந்தைகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனங்களில் தணிக்கை ஆய்வு முடியும் வரை புரமோட்டர் வசம் உள்ள பங்குகளை முடக்கத் திட்டமிட்டு உள்ளது.”

“ஜூலை மாதத்தில் ஃபண்ட் மேனேஜர்களைக் கவர்ந்த பங்குகள் எவை?”

“மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் பொறுத்தவரை, சிறப்பாகச் செயல்படும் நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவே விரும்புகின்றன. சந்தை உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் பங்குகளின் மதிப்புகள் உயர்ந்திருப்பதால், சற்று பொறுமை காத்து வந்தாலும், சில பங்குகளில் முதலீடு செய்யத் தவறவில்லை. காரணம், எதிர்பார்த்ததற்கு மேல் அந்தப் பங்குகள் அதிக வருமானம் ஈட்டியதுதான். ஹெச்.டி.எஃப்.சி, ஐ.டி.சி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், டி.என்.பி.எல், சுஸ்லான் எனர்ஜி, டைட்டன், டாடா பீவரேஜஸ், ராமகிருஷ்ணா ஃபார்கிங்ஸ், அப்போலோ டயர்ஸ் மற்றும் டி.சி.பி பேங்க் ஆகிய பங்குகள் முதன்மையாக உள்ளன.”  

“வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு  செய்துள்ள நம்மூர் பங்கு நிறுவனங்கள் பல  பாசிட்டிவ் ரிட்டர்ன் கொடுத்திருக்கின்றனவே?”


“இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏறக்குறைய 350 நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன.  அவற்றில் 63 நிறுவனங்கள் மட்டுமே கடந்த ஓராண்டில் முதலீட்டாளர் களுக்கு நெகட்டிவ் ரிட்டர்ன் தந்துள்ளன. மற்றவை, நல்ல வருமானம் தந்துள்ளன. சில பங்குகள் ஒரு வருடத்தில் 550% வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ் கடந்த ஆண்டு ஜூலை இறுதியில் ரூ.29.55-ஆக இருந்தது, கடந்த  ஜூலை முடிவில், ரூ.190.90-ஆக உயர்ந்திருக்கிறது. ஜுண்டால் வோர்ல்ட்வைட் 373% வளர்ச்சியடைந்துள்ளது. இவை போக, மிண்டா இண்டஸ்ட்ரிஸ், இந்தியன் மெட்டல்ஸ், கேப்ளின் பாயின்ட் லேப்ஸ், அவந்தி ஃபீட்ஸ், நாசில், ஃப்யூச்சர் லைஃப் ஸ்டைல், ஜே.பி. அசோசியேட்ஸ், ரானே ஹோல்டிங்ஸ், ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ், பி.என்.பி கில்ட்ஸ், நேஷனல் ஃபெர்டிலைசர், சியாரம் சில்க் மற்றும் எம்.ஆர்.எஃப் ஆகியவற்றில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. 

சந்தையின் போக்கு தற்காலிகமாக இறக்கத்தில் இருந்தாலும், அதன் அடிப்படை பெரிய அளவில் மாறிவிடவில்லை. சந்தை குறுகிய காலத்தில் மீண்டும் ஏற்றமடைந்து, அடுத்த 12 மாதங்களில் நிஃப்டியானது 11000 புள்ளிகள் என்கிற நிலைக்கு  செல்லும் என்று பெரும்பாலான கணிப்புகள் சொல்கின்றன. அடுத்த 12 மாதங்களில் நிஃப்டியானது 10 - 12% வருமானம் தரும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இப்போதைக்கு முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்வதே நல்லது என்கிறார்கள் என் அனலிஸ்ட் நண்பர்கள்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது சந்தையை இறக்கத்திலிருந்து கட்டுப்படுத்துவதாக அமையும். எனவே, ஃபண்ட் மேனேஜர்களின் கையிருப்பு  அதிகமாக இருந்தபோதிலும் பொறுமை காத்து வருவதைப்போல, கவனமாகச் செயல்பட வேண்டும்.”

“இந்திய பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?”

“இந்தியப் பங்குச் சந்தை இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து ஜூலை மாதம் வரையில் 23 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. பல வரலாற்று உச்சங்களை அடுத்தடுத்து சந்தை கண்டுவந்தது. ஆனால், இதுவரை வேக வேகமாக ஏறிவந்த சந்தை இப்போது சற்று சோர்ந்து போயிருக்கிறது என்றே சொல்லலாம். சந்தையின் ஏற்றப் போக்கில் பங்குகள் அனைத்தும் அதன் பிரீமியம் விலைக்கு உயர்ந்தன. பங்குகள் உச்சகட்ட மதிப்பை அடைந்ததால், நிறுவனங்களின் வருமானமானது பங்குகளின் தற்போதைய மதிப்புக்கு நியாயம் செய்யாத நிலையில் இருக்கிறது. இதனால்   சந்தையானது தொடர் ஏற்றத்தின் போக்கிலிருந்து விலக ஆரம்பித்தது.  இதனால் கடந்த 2-ம் தேதி 10137 என்கிற புதிய உச்சத்தை எட்டிய நிஃப்டி, அதன்பிறகு 2 சதவிகிதத்துக்கு மேல் இறக்கத்தைக் கண்டது.  மேலும் வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பார்மா உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியும் அவ்வளவு சிறப்பாக இல்லை. மொத்தமாகவே இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சற்று தடுமாற்றத்தில்தான் இருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளும் இதனை உணர்த்தியிருக்கின்றன.

2017-18-ம் நிதியாண்டில் நிஃப்டி 50-யில் உள்ள நிறுவனங்களின் வருமானம் 1.5% உயரும் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் காலாண்டில் 8.4 சதவிகித வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. குறைவான நிறுவனங்களே சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன.  மூலதனத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதிலும் நிறுவனங்கள் சிறப்பாகப் செயலாற்றவில்லை. எனவே, வருமானம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தற்போதைய நிலையில், அரசு செலவினங்களும் குறைவாகவே உள்ளன. இதுபோன்ற காரணங்களால் சந்தை  தற்போது அழுத்தத்தில்தான் இருக்கிறது. எனவே, குறுகிய காலத்துக்குச் சந்தை இறக்கங்களையே சந்திக்க நேரிடும்” என்றவர், புறப்படத் தயாரானார்.

‘‘சந்தை சிறிது ஏற்ற இறக்கத்தில் இருக்கும் சமயம் இது. நீண்ட காலத்தில் நல்ல பங்குகளை வாங்க வேண்டும் என்கிறவர்கள் இப்போது துணிந்து முதலீடு செய்யலாம்’’ என முத்தாய்ப்பாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஐ.பி.ஓ  - அபெக்ஸ் ஃப்ரோசன் ஃபுட்ஸ் 

திரட்டப்படும் நிதி : ரூ. 152.25 கோடி

விலை எல்லை வரம்பு : ரூ.171-175

பங்கு விற்பனை காலம் : ஆகஸ்ட் 22 - 24

குறைந்தபட்ச விண்ணப்பம் :
80 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில்

ஷேர்லக்: ஃபண்ட் மேனேஜர்களைக் கவர்ந்த பங்குகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு