Published:Updated:

“எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற மியூச்சுவல் ஃபண்டுதான் பெஸ்ட்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற மியூச்சுவல் ஃபண்டுதான் பெஸ்ட்!”
“எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற மியூச்சுவல் ஃபண்டுதான் பெஸ்ட்!”

வழிகாட்டும் கோவை வக்கீல்

பிரீமியம் ஸ்டோரி

‘‘மாதச் சம்பளம் வாங்குகிறவர்கள் பிராவிடன்ட் ஃபண்ட் மூலம், ஓய்வுக் காலத்துக்குத்  தேவையான பணத்தில் ஒரு பகுதியையாவது சேர்த்துவிடுகிறார்கள். ஆனால், சுயதொழில் செய்கிறவர்கள்..? கைநிறைய சம்பாதிக்கிற காலத்தில் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற யாரும் சேமிக்க நினைப்பதில்லை. அல்லது ஏதோதோ திட்டங்களில் பணத்தைப் போடு கிறோம். அந்தத் திட்டங்கள் மூலம் கிடைக்கிற லாபம், எதிர்காலத்துக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இந்த உண்மையை நான் சற்று காலதாமதமாகவே  தெரிந்துகொண்டேன். ஆனால், இன்றைக்குச் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி’’ என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் உதயகுமார். 

“எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற மியூச்சுவல் ஃபண்டுதான் பெஸ்ட்!”

இவர், கோவை அன்னூரைச் சேர்ந்த வழக்கறிஞர். மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தன் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, தொடர்ந்து முதலீடு செய்து வருகிறவர். சுய தொழில் செய்கிறவர்கள், குறிப்பாக வழக்கறிஞர்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் தங்கள் எதிர்காலத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“நாம் நன்றாக உழைக்கும்போதே நம் பிற்காலத் தேவைக்கான பொருள்களைச் சேமிப்பது அவசியம் என்பதை எனது இளமைப் பருவத்திலேயே நான் உணர்ந்தேன். ஆனால், எல்லோரைப் போலவே, நானும் தவறான திட்டங்களையே தேர்வு செய்தேன். சம்பாத்தியம் நிறைய இருக்கும்போது, மனை வாங்குவதும், தங்கம் வாங்குவதுமே எனக்குப் பிரதானமான விஷயமாகப்பட்டது. பிறகுதான் தெரிந்தது, இதன் மூலம் கிடைக்கும் லாபம் நீண்ட காலத்தில் பெரிய அளவில் இருக்காது என்று.

கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் மனைகளின் விலையும், தங்கத்தின் விலையும் மிக  அதிகமாக உயர்ந்துவிட்டதாகவே நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால், கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்த இரண்டும் தந்த லாபத்தைப் பார்த்தால், பெரிய அளவில் இல்லை என்பது தெளிவாகத் தெரியும். இதற்காக மனையோ அல்லது தங்க நகைகளையோ வாங்கவே வேண்டாம் என்று நான் சொல்லமாட்டேன். நமக்கென ஒரு வீட்டை உருவாக்கிக் கொள்வதில் தவறில்லை. கொஞ்சம் நகைகளையும் வாங்கி வைப்பது  சரிதான். ஆனால், எல்லாப் பணத்தையும் அதில் போட்டு முடக்குவதுதான் தவறு.

இளம் வயதில் நான் செய்த இன்னொரு தவறு, டிரடிஷனல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தது. ரூ.25  ஆயிரம் இழப்பீடு கிடைக்கக்கூடிய மாதிரி ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தேன். அந்த சமயத்தில் என்னால் அவ்வளவுதான் பிரிமீயம் கட்ட முடியும் என்பதால், கவரேஜ் தொகையானது  குறைவாகவே எனக்குக் கிடைத்தது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு பிரீமியம் கட்டிய பின்பு எனக்குத் திரும்ப கிடைத்தது ரூ.40 ஆயிரம்தான். அதிக பிரிமீயம் கட்டி குறைந்த இழப்பீட்டினைப் பெறும் டிரடிஷன்ல் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பதைவிட, குறைந்த பிரிமீயத்தில் அதிக இழப்பீடு தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிதான் பெஸ்ட் என்பதைப் பிறகுதான் உணர்ந்தேன்.
 
ஆனால், அந்த வயதில் நான் எடுத்த ஒரு சரியான முடிவு என்றால், அது பங்குச் சந்தையில் முதலீடு செய்தது. 2004-ம் ஆண்டுவாக்கில் எம்.ஆர்.எஃப் பங்கு ஒன்றை சுமார் 500 ரூபாய்க்கு வாங்கினேன். இன்று அதன் விலை ரூ.65,000-த்துக்கு மேல் இருக்கிறது. நல்ல பங்கில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு, லூபின், ரிலையன்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திர உள்பட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பிற்பாடு வாங்கினேன். இந்தப் பங்கு போர்ட்ஃபோலியோ மூலம் எனக்கு 18% லாபம் கிடைத்துள்ளது. இந்தப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கவே எனக்கு விருப்பம். 

பங்குச் சந்தையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே நான் முதலீடு செய்தாலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கவே இல்லை. திடீரென ஒருநாள், நாம் ஏன் மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செய்யக்கூடாது என்று நினைத்தேன். காரணம், அதில் இருக்கும் இரண்டு முக்கியமான விஷயங்கள் என்னை மிகவும்  கவர்ந்தன. ஒன்று, வரியில்லாத வருமானம். அதாவது, பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால், ஒரு வருடத்துக்குப் பிறகு எடுக்கும் பணத்தில் கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. மற்றொன்று, நமது முதலீடு கூட்டு வளர்ச்சியில் லாபம் அடைவது. வெறும் ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்பதுதான் கூட்டு வளர்ச்சியின் மகத்துவம். மியூச்சுவல் ஃபண்டில் கடந்த காலத்தில் கிடைத்த லாபம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை என்றாலும், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உதாரணமாக, எனது ஃபண்ட் போர்ட் ஃபோலியோ 17% லாபம் தந்துள்ளது. பணவீக்கம் 7% என்று வைத்துக் கொண்டாலும், 10% கூடுதல் வருமானம் கிடைத்தது பெரிய விஷயம் தானே. தவிர, மியூச்சுவல் ஃபண்டில் நாம் செய்துள்ள முதலீட்டின் வளர்ச்சியை நாமே தினமும் பார்க்க முடியும்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, ஃபண்ட் நிபுணர்களின் ஆலோசனைப்படி தேர்வு செய்வது பெரிய அளவில் நஷ்டப்படாமல் இருப்பதற்கு உதவும். தவிர, நல்ல ஃபண்டுகளில் செய்த முதலீட்டினைக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். குறுகிய காலத்தில் இந்த முதலீட்டின் மூலம் லாபம் பார்க்க நினைத்தால், நஷ்டமே மிஞ்சும். 

நம் மக்களிடையே பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் போய் சேர்ந்த அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட்  முதலீடு போய்ச் சேராததற்குக் காரணம், அறியாமைதான். முதலீடு செய்யும் பணம் காணாமல் போய்விடுமோ என்று பயப்படு கிறார்கள். இது நியாயமான பயம்தான். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணம் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்கு உட்பட்டதே ஒழிய, எந்த நிறுவனமும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட முடியாதபடிக்கு ‘செபி’ அதனை வடிவமைத்து, கண்காணித்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி எல்லோரும் சரியாகப் புரிந்துகொள்ளும்பட்சத்தில், கூடிய விரைவில் எல்லோருமே அதில் முதலீடு செய்வார்கள்’’ என்றவர், இப்போது மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயை ஒன்பது ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்!

கீ.இரா.கார்த்திகேயன்,

படங்கள்: ல.அகிலன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு