Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீங்களும் அனலிஸ்ட்தான்!

ஆர்.ஓ.சி. எனும் டூலை எப்படி உபயோகிப்பது என்று இந்த வாரம் சொல்வதாக கடந்த இதழில் சொல்லி இருந்தேன். இதற்கிடையில் பல புதிய வாசகர்கள், 'இந்தத் தொடரில் இதுவரை நீங்கள் சொன்ன விஷயங்களைக் கொஞ்சம் தொகுத்துத் தந்தால் நன்றாக இருக்குமே!’என போன் மூலம் கேட்டனர். இந்தத் தொடர் ஆரம்பித்து இதுவரை 33 அத்தியாயம் முடிந்து விட்டதால், வாசகர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற முடிவு செய்தோம்.  எனவே, ஆர்.ஓ.சி. பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் ஒருவார காலம் பொறுத்தருள்க. இனி, டெக்னிக்கல் அனாலிசிஸிஸ் இதுவரை சொன்ன விஷயங்களை மீண்டும் சொல்கிறேன்.

சிம்பிளாக விலையை மட்டுமே கொண்டு போடப்பட்ட சார்ட்கள் (பேட்டர்ன்கள்), விலையிலிருந்து பல கணக்குகளை போட்டுவரும் விடைகளால் போடப்பட்ட சார்ட்டுகள் (இண்டிகேட்டர்கள்) என்ற இரு பிரிவுகளைக் கொண்டது டெக்னிக்கல் அனாலிசிஸ்.

சார்ட்டுகள்!

டெக்னிக்கல் அனாலிசிஸில் முக்கிய இடத்தைப் பெறுகிறவை சார்ட்டுகள். இந்த சார்ட்டுகள் விலைகளை வைத்தே போடப்படுகின்றன. ஓப்பனிங், குளோஸிங், அன்றைய ஹை மற்றும் அன்றைய லோ ஆகிய விலைகளைக் கொண்டு போடப்படுவதுதான் பார் சார்ட். அன்றைய ஹை மற்றும் லோவைப் பற்றி உங்களுக்கே தெரியும். இந்த ஓப்பனிங் விலை மற்றும் குளோஸிங் விலை என்பவற்றின் உள்ளர்த்தம் என்ன என்று பார்ப்போம்.

##~##
ஓப்பனிங் விலையென்பது பெரும்பாலும் புரொபஷனல் டிரேடர்களோ / முதலீட்டாளர் களோ கலந்து கொள்ளாத அமெச்சூர் டிரேடர்கள் நிர்ணயம் செய்யும் விலையாகும். இந்திய சந்தைகளில் ப்ரீ ஓப்பனிங் செஷன் இருப்பதால் இது சிறிதளவு மாறுபடலாம்.

ஓப்பனிங் மற்றும் குளோஸிங் விலைகளை வைத்து ஆராய்ந்தால் வரும் முடிவுதான் என்ன? குளோஸிங் விலை ஓப்பனிங் விலையைவிட அதிகமாக இருந்தால் புரொபஷனல் முதலீட்டா ளர்கள் அமெச்சூர்களைவிட அதிகமாக புல்லிஷ்-ஆக இருக்கிறார்கள் என்றும், மாறாக குளோஸிங் விலை ஓப்பனிங்கைவிட குறைவாக இருந்தால் புரொபஷனல்கள் அமெச்சூர்களைவிட பியரிஷ்-ஆக இருக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

நீங்கள் நல்ல லாபம் பார்க்க விரும்பினீர்கள் என்றால் புரொபஷனல்களுடன்தானே சேர்ந்து போவீர்கள்.  குளோஸிங் என்பது புல்பியர்களின் போரில் அன்றைய தேதியில் இறுதி வெற்றி யாருக்கு (எந்த லெவலில்) என்று காண்பிப்பதாக அமைவதால் மிக மிக முக்கியமான ஒன்றாகிறது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், அன்றைய தினத்தின் ஹை விலைக்கு அருகே குளோஸிங் அமைந்தால் புல்கள் அன்றைய தினத்தில் வெற்றி பெற்றதாகவும், அன்றைய தினத்தின் லோ விலைக்கு அருகே அமைந்தால் பியர்கள் அன்றைய தினத்தில் வெற்றி பெற்றதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சப்போர்ட்/ரெசிஸ்டன்ஸ்!

காற்று நிரம்பிய பந்தை நீங்கள் தரையில் அடித்து விளையாடும்போது அது தரையில் பட்டு எழும்பி கீழேயும் மேலேயும் போவதைப் போல்தான் ஷேர்களின் விலையும் கீழேயும் மேலேயும் போகிறது. உங்கள் பந்து விளையாட்டில் கீழே செல்லும் பந்தை தாங்கி மேலே அனுப்பும் தரைதான் சப்போர்ட். மேலே வரும் பந்தை ஓரளவுக்குமேல் மேலே செல்லவிடாமல் அமுக்கும் உங்கள் கைதான் ரெசிஸ்டன்ஸ். சந்தையில் பல கைகள் ஷேரின் விலையை அழுத்தியும் உயர்த்தியும் விளையாடும்போது எத்தனை தடவை சரியாக அடிக்கவும், எத்தனை முறை தவறவும் வாய்ப்பிருக்கிறது?

ஒரு ஷேரின் விலையில் பல கைகள் இருப்பதால் சப்போர்ட், ரெசிஸ்டன்ஸை கணிப்பது சிரமம். ஆனாலும், சந்தையில் மந்தை குணம் (ஆட்டு மந்தை - ஒரு ஆடு போகும் திசையில் எல்லா ஆடுகளும் ஓடுவது) அளவுக்கதிகமாக இருப்பதால், எல்லா கைகளும் பெரும்பாலான சமயங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான போர்ஸிலேயே பந்தை அடிக்க முயற்சி செய்வதால் டெக்னிக்கல் அனாலிசிஸ் பலிக்கிறது.

சந்தையின் டிரெண்டை பெரும்பாலான சமயங்களில் முடிவு செய்வதே இந்த சப்போர்ட்டும் ரெசிஸ்டன்ஸும்தான் என்பதால் இதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் 'செல்ஃப் ஃபுல்ஃபில்லிங் புரொபசியினால் (Self fulfilling Prophecy) உண்டாகிறது. 'செல்ஃப் ஃபுல்ஃபில்லிங் புரொபசி’ என்றால் என்ன?

இந்த விலையில் இந்த பங்கு காஸ்ட்லி, அல்லது சீப் என நீங்களாகவே மனதில் ஒரு முடிவை எடுப்பது போல்தான் சந்தையில் இருக்கும் மற்றவர்களும் எடுக்கிறார்கள். அனைவர் மனதிலும் அதிக விலை என்று நினைக்கப்படும் ரேட்தான் ரெசிஸ்டன்ஸ் ஆகிறது. அந்த விலையைத் தாண்டி ஏற முற்படும்போது ஷேரை விற்க ஆரம்பிக்கிறீர்கள். சீப் என்று நினைக்கப்படும் ரேட்தான் சப்போர்ட் ஆகிறது. அந்த விலையைத் தாண்டி இறங்கும்போது ஷேரை வாங்க ஆரம்பிக்கின்றீர்கள். இப்படி இந்த விலை வரை இறங்கி வந்த பின்னர் ஏற ஆரம்பித்து இந்த லெவல் வரை சென்றடையும் என்று நீங்களாகவே மனதில் நினைத்துக் கொண்டு செயல்பட்டு, அதை அந்தந்த விலையை அடைந்துவிடச் செய்வதுதான் 'செல்ஃப் ஃபுல்ஃபில்லிங் புரொபசி’ என்பதாகும்.

சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸின் பலம் இரண்டு விதமான விஷயங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒன்று - ஒரு சப்போர்ட் லெவலை எத்தனை முறை அந்த ஷேரின் விலை வந்து வந்து முட்டிச் சென்றது என்பதைப் பொறுத்து அந்த லெவல் பலம் பெறுகிறது என்பது. இரண்டாவதாக, ஒரு சப்போர்ட் லெவலில் எவ்வளவு நாள் இந்த முட்டி மோதுதல் நடந்தது, தோல்வியில் முடிந்தது என்பது.

ஷேரின் விலை எவ்வளவு நாட்களுக்கு ஒரு லெவலில் முட்டி மோதி தோல்வியுற்றது என்பதை வைத்து ரெசிஸ்டன்ஸின் ஸ்ட்ரெங்த்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ரெசிஸ்டன்ஸ் லெவலை உடைத்து செல்லும்போது ஏற்றமும், சப்போர்ட்டை உடைத்து கீழே போகும்போது இறக்கமும், உண்மையானதுதானா என்று அறிந்து கொள்ள வால்யூம் முக்கியமான ஒரு இண்டிகேட்டராக அமைகின்றது.  ஒரு ஷேரில் சாதாரணமாக நடக்கும் வால்யூமைவிட குறைந்த வால்யூமில் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸ் உடைக்கப் பட்டால், அது பொய்யான ஒரு விலை எல்லைதாண்டும் நிகழ்வு என்று உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இப்படி சப்போர்ட்டையும் ரெசிஸ்டன்ஸையும் தாண்டி விலைகள் செல்வதை ஆங்கிலத்தில் 'பிரேக் அவுட்’ என்று சொல்வார்கள்.

டிரெண்ட்!

பொதுவாக சந்தை ஏற்றம், இறக்கம், குறிப்பிட்ட விலை எல்லை வரம்பிற்குள் இருத்தல் (ரேஞ்ச் பவுண்ட்) என மூன்று விதமான டிரெண்ட்களில் இருக்கும். சந்தை எந்த டிரெண்டில் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் திட்டவட்டமாக கணிக்க முடிந்தால் லாபம் பார்ப்பது மிகவும் சுலபம். அதற்குப் பெருமளவில் உதவுவதுதான் டிரெண்ட் டெக்னிக்கல் அனாலிசிஸில் வரும் டிரெண்ட் லைன்கள்.

விலை திடீரென இறங்கி டிரெண்ட்லைனை விட்டு வெகுவாக கீழ்நோக்கி விலகிச் செல்லும்போதும், திடீரென்று விலை வேகமாக ஏறி டிரெண்ட்லைனைத் தாண்டி மேல் நோக்கிச் செல்லும்போதும் டிரேட் செய்யாமல் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டியது மிகமிக அவசியம். சிலசமயம் சந்தையில் பொறுமை நஷ்டத்தை தவிர்க்க மிகவும் உதவும்.  

டிரெண்ட் லைன்தான் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் லெவலாக இருக்கிறது. டிரெண்ட் ஏறுமுகமாக இருக்கும்போது டிரெண்ட் லைனிற்கு சிறிது மேலே உள்ள விலையில் வாங்கி விற்க முயலுங்கள். உங்களுடைய ஸ்டாப் லாஸ் விலையை டிரெண்ட் லைனிற்கு சிறிது கீழே வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் டிரெண்ட் இறங்குமுகமாக இருக்கும்போது டிரெண்ட்லைனிற்கு சிறிது கீழே உள்ள விலையில் விற்று, நன்றாக கீழே போகும்போது வாங்கி லாபம் பார்க்கலாம். கீழே போகும் டிரெண்ட்லைனிற்கு சற்று மேலே உள்ள விலையை ஸ்டாப்லாஸாக வைத்துக் கொள்ளுங்கள். (ஏ.டி.-ஏறும் டிரெண்ட்லைன். இ.டி.-இறங்கும் டிரெண்ட் லைன்)

நீங்களும் அனலிஸ்ட்தான்!

கேப் (விலை இடைவெளிகள்)!

சந்தையில் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் நடுவே பெரியதொரு திடீர் தடுமாற்றம் ஏற்படும் போதுதான் விலை இடைவெளிகள் (கேப்கள்) உருவாகிறது. சந்தையில் இந்தத் தடுமாற்றம் என்பது நல்ல செய்திகளாலும், கெட்ட செய்திகளாலும் உண்டாகலாம். இதுபோன்ற செய்திகள் சந்தை நடந்து கொண்டிருக்கும்போது வந்தால் உண்டாகும் கேப்புகள் இன்ட்ரா-டே சார்ட்டில் (5/10/15/30 நிமிடம் போன்ற சார்ட்டுகள்) தெரியவரும். ஒருநாள் சந்தை முடிந்து அடுத்த நாள் சந்தை ஆரம்பிக்கும்முன் வெளிவருகிற செய்தியால் வரும் கேப்புகள் தினசரி சார்ட்டில் தெரியவரும். என்ன மாதிரியான இடைவெளி அது (கேப்) என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் டிரேடர்கள் செயல்பட வேண்டும். கேப்புகள் சந்தையில் உள்ள மெஜாரிட்டி நபர்கள் எந்த திசையில் (புல்லாகவோ/பியராகவோ) தங்கள் மூவ்களை செய்கிறார்கள் என்று காண்பிப்பதாக அமையும். சந்தையில் உள்ள சூழல், செய்தி மற்றும் ஆக்டிவ்வாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஃபோர்ஸ்கள் என பல விஷயங்களையும் உள்ளடக்கியது இந்த கேப்கள். இன்ட்ரா-டே சார்ட்டில் உருவாகிற கேப்பினால் அந்தநாளிலும், தினசரி சார்ட்டில் வரும் கேப்புகளால் எதிர்வரும் சில நாட்களிலும் நடக்கும் விலை மாற்றங்கள் கட்டுக்கு மீறியதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டிரெண்ட் ரிவர்ஸல் பேட்டர்ன்!

ஏறும் டிரெண்டிலிருக்கும் சந்தையில் உண்டாகும் டிரெண்ட் ரிவர்ஸல்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் டூலான ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் எனப்படும் டூல் (பேட்டர்ன்) மிக முக்கியமானதாக அனலிஸ்ட்டுகளால் கருதப்படுகிறது.

அடுத்த பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள நிஃப்டியின் 2011 ஜனவரி முதல் ஆகஸ்ட் 5 வரையிலான தினசரி லைன் சார்ட்டை பாருங்கள். ஒரு தலையும், இடது மற்றும் வலது தோள்களைக் கொண்ட ஒரு உருவம் தெரிகிறதில்லையா?

நீங்களும் அனலிஸ்ட்தான்!

பெயரில் உள்ளதைப் போன்றே இந்த பேட்டர்ன் ஃபார்மாக இரண்டு தோள்கள் (இடது மற்றும் வலது ஷோல்டர்கள்) மற்றும் ஒரு தலை (ஹெட்) சார்ட்டில் உருவாக வேண்டும். இந்த பேட்டர்ன் ஃபார்ம் ஆனபின்னால் முக்கியமாக பார்க்க வேண்டியது வால்யூம் மாற்றங்கள், நெக்லைன்/டிரெண்ட் லைனின் விலை எல்லைகள் மற்றும் சப்போர்ட்டாக இருந்து ரெசிஸ்டன்ஸாக மாறும் லெவல்களாகும்.

ஹெட் அண்ட் ஷோல்டர் என்ற டூல் ஏறுகின்ற சந்தையின் டிரெண்ட் ரிவர்ஸல் பேட்டர்ன்களை அறிய உதவும் ஒன்று. சார்ட்டில் வரும் இந்த ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன், ஏறும் டிரெண்ட் மாறி இறங்க ஆயத்தமாகிறது என்று காட்டுவதற்காக வரும் ஒரு பேட்டர்னேயாகும். எனவே, இந்த பேட்டர்னை பார்த்தவுடன் சந்தை இறங்கப் போகிறது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். சந்தையின் டிரெண்ட் மாறி இறங்கப் போகிறது என்பதைக் காட்ட வருகிற இந்த பேட்டர்ன், சார்ட்டில் வந்தால் முதலில் சந்தை ஏறும் டிரெண்டில் இருக்கிறதா என்று பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சார்ட்டில் இதே ஹெட் அண்ட் ஷோல்டர் தலைகீழாக வந்தால், அப்போது சந்தை இறங்கும் டிரெண்டிலிருந்து ஏறப் போகிறது என்று அர்த்தம். இதுபோன்றதொரு பேட்டர்ன் வந்தால் அதற்கு ரிவர்ஸ் (அல்லது இன்வர்ட்டட்) ஹெட் அண்ட் ஷோல்டர் என்று பெயர்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

மூவிங் ஆவரேஜ்!

தினசரி விலைகளின் சார்ட்டை மட்டும் வைத்துக் கொண்டு சந்தையின் போக்கை கணித்துச் சொல்வதைவிட, அவற்றில் சில மாறுதல்களைச் செய்து பார்த்தால் கணிப்புகளின் வெற்றி இன்னும் அதிகமாவதற்கு வாய்ப்புகள் கூடும். அந்த வகையில் உதவுவதுதான் மூவிங் ஆவரேஜ்கள்.

மூவிங் ஆவரேஜ் என்பது சந்தையில் பெரும் திரளான கூட்டத்தின் போக்கு எப்படி இருக்கிறது என்பதைக் கணிக்க பெருமளவில் உதவியாக இருக்கும். தினசரி விலை சார்ட்டின் ஸ்லோப்பை (சாய்வளவு) வைத்து கணிப்புகளைச் சொல்வதைவிட, மூவிங் ஆவரேஜின் சாய்வளவு செல்லும் திசையை வைத்து சொல்லப்படும் கணிப்புகள் மிக முக்கியமானதாக திகழ்கின்றன. மூவிங் ஆவரேஜின் சாய்வளவு ஏற ஆரம்பித்தால் சந்தையில் பெரும்பான்மையானவர்கள் நம்பிக்கையோடு கூடிய ஆர்வத்தில் புல்லிஷாகவும், அதே மூவிங் ஆவரேஜின் சாய்வளவு இறங்க ஆரம்பித்தால் பெரும்பான்மை யானவர்கள் நம்பிக்கையற்றுப் போய் பியரிஷாகவும் செயல்பட ஆரம்பித் திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கூட்டத்தின் ஆப்டிமிஸம் ஏற்கெனவே இருந்ததைவிட அதிகரித்துக் கொண்டே போகும் போது தற்போது நடக்கும் விலை மூவிங் ஆவரேஜை தாண்டி மேலேவும், கூட்டத்தின் பெசிமிஸம் ஏற்கெனவே இருந்ததைவிட அதிகரித்துக் கொண்டே போகும்போது மூவிங் ஆவரேஜை தாண்டி கீழேவும் போகிறது.

சந்தை என்பது புல் மற்றும் பியர்களின் நடுவே நடக்கும் போர்க்களம். விலை என்பது சந்தையில் இருக்கும் புல்/பியர் கூட்டத்தின் அப்போதைக்கப்போது ஏற்படும் கருத்தொற்றுமையை காட்டுகின்ற விஷயம். மூவிங் ஆவரேஜ் என்பது நாட்கணக்கில் அந்த கூட்டத்தின் போக்கு எந்த திசையில் இருக்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடி. நன்றாக கவனியுங்கள், கூட்டத்தின் போக்கை மட்டுமே மூவிங் ஆவரேஜ் காட்டுகிறது. இதை வைத்துக் கொண்டு கூட்டம் எப்படி போகிறது என்பதை மட்டுமே அறியலாம். இந்தக் கூட்டம் புல் மற்றும் பியர் இவை இரண்டையும் உள்ளடக்கியது இல்லையா?

வெற்றிகரமாக டிரேடிங் செய்து சம்பாதிக்க எப்போது சந்தை ஏறும்? எப்போது சந்தை இறங்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தால் சுலபமாக இருக்கும் இல்லையா? எப்போது ஏறும் அல்லது எப்போது இறங்கும் என்பதைத் தெரிந்துகொள்ள கூட்டத்தில் இருக்கும் புல்/பியர் என்ற இரண்டு வேறுபட்ட நபர்களின் பலம் எப்போது கூடுகிறது அல்லது குறைகிறது என்பதைக் கண்டுபிடித்தால் உதவியாக இருக்கும். இந்த பலம் கூடுதல் குறைவினை கண்டுபிடிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் டெக்னிக்தான் எம்.ஏ.சி.டி.

சந்தையில் ஒரு டிரெண்ட் வருவதற்கு முன்னரே கண்டுபிடித்தால் 'நாலு காசு வேகமாகப் பார்க்கலாமே!’ என்று நினைக்கிறவர்களுக்கு உதவும் ஒரு டூல்தான் ஆஸிலேட்டர். சந்தையில் வரும் திருப்புமுனைகளை (டர்னிங் பாயின்ட்கள்) அறிந்துகொள்ள ஆஸிலேட்டர்களாக உதவுகிறது. பொதுவாக, சந்தையில் மூன்று விதமான டிரெண்ட்கள்தான் இருக்கும்: 1) ஏற்றத்தில் இருக்கும் டிரெண்ட் 2) இறக்கத்தில் இருக்கும் டிரெண்ட்  3) சைட் வேய்ஸில் இருக்கும் டிரெண்ட் என்பவைதான் அவை.

இன்னும் குறிப்பாகச் சொன்னால், பெரும்பாலான ஆஸிலேட்டர்கள் அளவுக்கதிகமான மற்றும் தொடர்ந்து தாக்குபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும் உற்சாகத்தையும் பயத்தையும் கண்டுபிடிக்க உதவுகிறது என்று சொல்லலாம்.  இவற்றைக் கொண்டு சந்தை விலைதனை நிர்ணயம் செய்து கொண்டிருக்கும் போதுதான் திருப்புமுனைகள் உருவாகின்றன. இன்னும் தெளிவாக உதாரணத்துடன் சொல்ல வேண்டுமென்றால், ஒரு கெட்ட செய்தி வந்த பின்னர் ஒரு ஷேரின் விலை இரண்டு, மூன்று, நான்கு நாட்களுக்கு அதீத பயத்தில் தினசரி 10% வரை இறங்குகிறது. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது நாள் இறக்கம் தணிந்து மறுபடியும் ஏற ஆரம்பிக்கிறது. இந்த இறக்கம் இரண்டாவது நாள் நின்று, மூன்றாம் நாள் ஏறுமா? மூன்றாம் நாள் நின்று, நாலாம் நாள் ஏறுமா என்பதைக் கண்டுபிடிக்க உதவுவதுதான் ஆஸிலேட்டர்களின் பணி.

ஆஸிலேட்டர்கள் என்பது சந்தையில் தற்சமயம் நடைமுறையில் உள்ள டிரெண்டின் வேகத்தை அளக்க உதவுகிறது. மேலே போகும் வேகம், விலை உச்சத்தில் சென்ற பின்னர் சற்றே சோர்வடையும்போது  அதை 'ஓவர் பாட்’ என்கிறோம். கீழே செல்லும் விலை தாறுமாறாய் இறங்கி, இறங்கும் வேகம் உச்சத்தை அடைந்து சோர்வடையும்போது அதை 'ஓவர் சோல்டு’ என்கிறோம். 'ஓவர் பாட்’ என்றால் அதிகமாக வாங்கிவிட்டார்கள், 'ஓவர் சோல்டு’ என்றால் அதிகமாக விற்று விட்டார்கள் என்ற அர்த்தமில்லை. அந்த ஷேர்

ரொம்ப சீக்கிரமாகவே அதிகமான விலையை எட்டிவிட்டது. அதேபோல ரொம்ப சீக்கிரமாகவே குறைந்த விலையை அடைந்து விட்டது என்றுதான் அர்த்தம். இதில் சீக்கிரம் என்பதற்கு உதாரணமாக இரண்டு நாளில் 24% இறங்குவதையும் ஏறுவதையும் சொல்லலாம்.

இவைதான் இந்தத் தொடரில் இதுவரை நான் சொன்னதன் சுருக்கம். அடுத்த வாரத்தில் ஆர்.ஓ.சி. பற்றி மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்.

(வளரும்)