Published:Updated:

ஷேருச்சாமி பராக்... பராக்...

ஷேருச்சாமி பராக்... பராக்...

ஷேருச்சாமி பராக்... பராக்...
##~##
'ஃ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாரின் போறேன் என்று சொல்லிச் சென்ற ஷேருச்சாமி ஒரு எஸ்.எம்.எஸ்., இ-மெயில்கூட போடாம மாயமா மறைஞ்சுட்டாரே! பிராந்தி குடிச்சவனாட்டம் சந்தை தள்ளாடிகிட்டிருக்கிற இந்த சமயத்துல சாமி இருந்தா, நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கலாமே!’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. 'கம்மிங் இன் ஷார்ட் விசிட் டு சென்னை.

கம் டு சென்னை ஏர்போர்ட்''. சாட்சாத் சாமியே எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். உடனே செல்லை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு ஓடினேன்.

ஏர்போர்ட்டில் இருந்து சாமி வெளியே வந்ததுமே அவருடைய டிரேட் மார்க் வெடிச்சிரிப்புடன் ''என்னடா கண்ணு (அறிவழகன்), செல்லு (செல்வம்), இந்த சாமியை சுத்தமா மறந்துட்டீங்களே!'' - என்று எகத்தாளமாக ஆரம்பிக்க ஏறயிறங்கப் பார்த்தோம். சட்டென்று புரிந்து கொண்டவர், ''கோவிச்சுக்காதீங்க கண்ணுங்களா! சும்மா கலாய்ச்சேன்'' என்று சொன்ன நேரத்தில் சாமியின் ஆடி கார் வந்து நின்றது.

காரில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏசியின் இதமான குளிர் வருடல். ''அப்புறம், என்ன பண்றீங்க?''  என்று ஆரம்பித்தார் சாமி. ''நீங்க ஃபாரின் போறப்ப நிஃப்டி 5190-ல இருந்துச்சு. பிற்பாடு 6300 வரையும் போச்சு. இப்ப 4760-ல இருக்குது. என்ன காரணமுன்னுதான் புரியலை. உங்க முதலீடு என்ன ஆச்சு? நீங்க மைனஸா, பிளஸ்-ஆ?'' என்று நான் கேட்டதும் முறைத்தார். பின்னர் கூலாகி, ''நான் போன வருஷம் நவம்பர் முதல் வாரத்திலேயே சந்தையைவிட்டு பெரிய அளவில வெளியில வந்துட்டேன். ரொம்பவுமே லாங் டேர்முக்குன்னு சில சூப்பர் கம்பெனிகள் குறைஞ்ச விலையில வாங்கிப் போட்டது இன்னும் கிடக்குது. அது கெடந்துட்டு போகட்டும்னு விட்டுட்டேன்'' என்று மீண்டும் வெறுப்பேற்றினார்.

''அப்ப, சாமி சந்தை பக்கமே போறதில்லையோ!'' என்று கேட்டேன் நான். ''சந்தைதானேடா நம்ம மடம். அதைத் தேடி போகாம இருக்க முடியுமா? முன்னாடி நான் முதலீடு செஞ்சேன். இப்ப வெறும் டிரேடிங் மட்டுமே செய்றேன்'' என்றார் குறுந்தாடியைத் தடவியபடி.

ஷேருச்சாமி பராக்... பராக்...

''என்னது டிரேடிங்கா?'' என்று காருக்குள்ளேயே எகிறிக் குதித்தேன் நான். ''ஏன், சாமி டிரேடிங் செய்யப்படாதா? அடேய்! சந்தையோட நிலைமை அப்படியிருக்குடா! முதலீடு செய்ய வேண்டியது ஒரு காலம். டிரேட் செய்ய வேண்டியது ஒரு காலம். சந்தை சும்மா ரப்பர் பந்து கணக்கா குதிக்கும்போது டிரேட் பண்ணினாத்தானே நாலு காசு சம்பாதிக்க முடியும். அதனால நான் டிரேடிங்கிலே இறங்கிட்டேன். சிங்கப்பூரில இருந்து உலக சந்தையில எங்க வேணுமின்னாலும் டிரேட் பண்ணிக்க முடியுது. அதனால அக்கடான்னு அங்கேயே கொஞ்ச நாள் இருந்துட்டேன்'' என்றார் சாமி.

''சாமி, சக்ஸஸ்ஃபுல்லா டிரேட் பண்றது எப்படி சாமி?'' என்று கேட்டான் செல். ''டிரேடிங்கிங்குறது சைக்கிள் ஓட்ற மாதிரி. நீயாத்தான் கத்துக்கணும்'' என்று சாமி கறாராகச் சொன்னாலும், ''சாமி, லைட்டா வாவது சொல்லித்தாங்க சாமி?'' என்று நச்சரித்தான் செல்.

''டிரேடிங்கறது எல்லாராலயும் முடியற விஷயம்தான். ஆனா, முயற்சியை முழுசா எடுக்காம, முழுசா அதைப்பத்தி தெரிஞ்சுக்காம இருக்கறதனாலதான் அதைப் பார்த்து பயப்படறாங்க. ஒரு ஷேரோட விலை என்னைக்குமே சரியான விலையில டிரேட் ஆகுறதே இல்லை. ஒண்ணு அதோட மதிப்பைவிட குறைவா டிரேட் ஆகிட்டிருக்கும்; இல்லாட்டி அதோட மதிப்பைவிட அதிகமா டிரேட் ஆகிட்டிருக்கும். சுருக்கமாச் சொன்னா, ஷேரோட உண்மை மதிப்புக்கு மேலும் கீழுமா விலை அலைஞ்சுக்கிட்டேயிருக்கும். மதிப்பைவிட கீழே போறப்ப வாங்கி மதிப்புக்கு அருகேயோ, மதிப்பைவிட மேலேயோ போகும்போது விற்று லாபம் பார்க்கிறதுதான் டிரேடரோட வேலை.

ஒரு ஷேரோட மதிப்பு பல காரணிகளைச் சார்ந்தது. இன்னைக்கு வர்ற நியூஸ், நேத்து வந்த  நியூஸ், நாளைக்கு வரப்போற நியூஸ் இதெல்லாம் சேர்ந்துதான் ஷேரோட மதிப்பை மாத்திகிட்டே போகுது. ஒரு ஷேர் 100 ரூபாய்க்கு இன்னைக்கு விக்குது. ஒரு கெட்ட நியூஸ் வந்து அதனோட பாதிப்புல அதோட மதிப்பு 50 ரூபாயா மாற வாய்ப்பிருக்கும் போது என்னவாகும்? 100-லிருந்து இறங்க ஆரம்பிச்சு 80-க்கு வந்து சின்ன புல்பேக்கா 85-க்கு போய் மீண்டும் 65-க்கு வந்து 70-க்கு போய் கொஞ்சம் கொஞ்சமா 40 வரைக்கும் போய் 55-ல வந்து செட்டிலாயிடும் இல்லையா?'' என்றார். ''ஆமாம்'' என்று தலையாட்டினான் செல்.

ஷேருச்சாமி பராக்... பராக்...

எம். அமர்நாத், சி.இ.ஓ, பேட்டர்சன்

''நாணயம் விகடனை ஒரு சராசரி பத்திரிகையாக பார்ப்பதைவிட, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் சேவையாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு அதன் கட்டுரைகள் அனைத்தும் முதலீட்டாளர்கள் நலன் கருதி வெளியிடப்பட்டு வருகிறது.''

''இதுல நீ 80-ல வாங்கி 85-ல விக்கலாம். அதைச் செய்யாம 80-ல வாங்கியிருக்கோம். 100-ல இருந்து இறங்கிவரும் போது 85ல வாங்கியிருக்கோம். எப்படியும் 105-க்கு போயிடுமுன்னு நினைச்சேன்னா அதுக்கு பேர் என்ன? அதுவுமில்லாம 85-க்கு போயிட்டு மீண்டும் இறங்குறப்ப (மதிப்பு 50 ரூபாய்தான் என்பதைக் கொஞ்சமும் கண்டுக்காம) 75-ல கொஞ்சம் வாங்கி ஆவரேஜ் பண்ணா அதுக்கு பேர் என்ன தெரியுமா? எஸ்.எல்.எம்.பி.!''

''எஸ்.எல்.எம்.பி.யா? எஸ்.ஐ.பி. கேள்விப்பட்டிருக்கேன். இது புதுசா இருக்கே சாமி?'' என்று நானும் செல்லும் முழிக்க, ''சிஸ்டமேட்டிக் லாஸ் மேக்கிங் பிளான்! லாபத்தை உடனுக்குடன் சிறிசா இருக்கறப்பவே புக் பண்ணிட்டு நஷ்டத்தை மட்டும் பாக்கெட்டுல வச்சு பால் உத்தி வளர்ப்பாங்க. அப்புறம் டிரேடிங்கே மாயம், மார்க்கெட்டே மாயமுன்னு பாட்டு பாடுவாங்க. நல்லாத் தெரிஞ்சுக்க, நஷ்டத்தை வளரவிடறதுக்குப் பேரு டிரேடிங் இல்லை, கேம்ஃப்ளிங்! சூதாட்டம்!'' என்று ஆட்காட்டி விரலைக் காட்டி ஆணித்தரமாகச் சொன்னார் சாமி.

''அதுக்காக, நஷ்டமே படக்கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும்'' என்று ஆதங்கப்பட்டான் செல். இதைக் கேட்டு கடுப்பானார் சாமி. ''நஷ்டமே பண்ணக்கூடாதுன்னு சொல்லலை!  டிரேடர்ங்கறவன் முதல்ல நஷ்டத்தோட வாழப் பழகிக்கணும். நஷ்டங்கறது வாங்கின ஷேர் இறங்கினதுனால வர்றது மட்டுமில்லை, 100 ரூபாய்க்கு வாங்கி, அது 150-க்கு போய் விக்காம வேடிக்கைப் பார்த்துட்டு இருந்துட்டு அது வேகமா இறங்குறப்ப 100 ரூபாய்க்கே திரும்பி விக்கறதும் நஷ்டம்தான்'' என்றார் சாமி.

''சாமி, இந்த தப்பை நான் நெறைய முறை செஞ்சிருக்கேன்'' ஓப்பனாக ஒப்புக் கொண்டான் செல். ''அப்ப நீ ஸ்டாப் லாஸே போடறதில்லை'' என்றார் சாமி. ''போடுவேன், ஆனா அப்பப்ப மாத்துவேன்'' என்றான் மண்டையைச் சொறிந்தபடி.

''ஸ்டாப் லாஸ் அப்படீங்கிறது லாபத்தைக் காப்பாத்திக்கிறதுக்கும் உபயோகப்படுத்தலாம். மேலே சொன்ன, உதாரணத்துல 150 போகும்போது 135 வந்தா வித்துடுன்னு ஒரு ஸ்டாப் லாஸ் ஆர்டரைப் போடலாமில்லே! ஆனா நீ என்ன செய்வ? 100-ல இருந்து 150 போய் திரும்பவும் 100க்கு வந்து 80-க்கு போகும் போது பொசிஷனை டபுளாக்கி திரும்பி மேல 125 வரைக்கும் போனாலே கிட்டத்தட்ட போன தடவை புக் பண்ணாம விட்ட லாபத்தைப் புடிச்சுடலாமுன்னு நினைப்பே, இல்லையா?'' என்றார்.

''சாமி, நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க'' - சாமியின் கையைப் பிடித்து கும்பிட்டான் செல். ''விலை இறங்கும்போது பொசிஷனை டபுள் பண்றதுங்கறது ஃபைனான்ஷியல் சூசைட்! அதாவது, தற்கொலைக்குச் சமானம்!'' என்று அடித்துச் சொன்னார் சாமி.

''பல சமயம் சார்ட்டு, பண்டமென்டல், அமெரிக்கா, ஆப்பிரிக்கா எல்லாம் சரியா இருந்தும் நாம எதிர்பார்க்குற விலை வரமாட்டேங்குதே சாமி, ஏன்?'' என்று கேட்டேன் நான்.

''ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்க. நீ பார்க்குற அதே சார்ட்டையும் நியூஸையும்தான் அத்தனை பேரும் பாக்குறான். அது உனக்கு மட்டுமே தெரியுற ரகசியமா என்ன? நான் சொன்ன மாதிரி, சரியான மதிப்புக்கு கீழேயும் மேலேயுமாய்த்தான் விலை ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு பேச்சுக்கு ஒரு பங்கோட மதிப்பு எல்லாருக்கும் தெளிவாத் தெரியுதுன்னு வச்சுக்க, என்னவாகும்? எவனும் எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டான். ஒரு ஷேர் 80 ரூபாய்க்கு விக்குது.

ஷேருச்சாமி பராக்... பராக்...

கே.வெங்கடராமன், எம்.டி- சி.இ.ஓ., கரூர் வைஸ்யா பேங்க்:

''அனைத்து நிதிச் சேவை மற்றும் வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எளிமையாகப் புரிய வைப்பதில் நாணயம் விகடனின் பங்கு மகத்தானது. தமிழில் நாணயம் செய்து வரும்  இந்த அரிய சேவை வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துக்கள்!''

100 ரூபாய் மதிப்பிருக்கு அப்படிங்கிறது பாதிப் பேருக்கு தெரிஞ்சு பாதிப் பேருக்கு தெரியாம இருக்கறதுதான் த்ரில்லே'' என்றவர், இன்னும் சில நிமிடங்களுக்குள் வீடு வந்துவிடும் என்பதால் வேகமாக பேச ஆரம்பித்தார்.

''டிரேடிங்கில ஒரு முக்கியமான விஷயம், நீ ஒரேயடியா வாரிச்சுருட்டிட்டு போயிடலாம்னு நினைக்கக்கூடாது. தொடர்ச்சியா அளவா பணம் பண்ணிக்கிட்டே இருக்கணும். அளவா தொடர்ந்து பணம் பண்ண முயற்சிக்கிறப்ப உன் கையில் டிரேடிங் இருக்கு. அளவில்லாம ஒரே முட்டா பணம் பண்ணனுமுன்னு நெனைக்கிறப்ப நீ டிரேடிங்கின் கையில போயிடற'' என்றார் சாமி.

''இந்த ஆசையை எப்படி சாமி கன்ட்ரோல் பண்றது?'' என்றேன் நான். ''டிசிப்ளின்தான் டிரேடிங்கிற்கு முக்கியம். டிசிப்ளினுடன் டிரேட் செய்யறவன் தொடர்ந்து சந்தையில் இருந்து சம்பாதிச்சுட்டிருக்கான். எப்பவுமே ஒரு டிரேடருக்கு மிகப் பெரிய லாஸ் எப்ப வந்ததுன்னு கேட்டுப் பாரு. அந்த டிரேடிற்கு முன்னாடி ஒரு பெரிய லாபம் பார்த்திருப்பாரு. பெரிய லாபம் வரும்போது மனசை கடிவாளம் போட்டு கன்ட்ரோல் பண்ற டிரேடர்தான் தொடர்ந்து சந்தையில நிக்கிறான்'' என்றார் சாமி.

சாமியின் வீட்டிற்குத் திரும்ப வேண்டிய சிக்னலில் கார் நின்றது. ''சாமி, டிரேடிங் சம்பந்தமா உங்க ஃபைனல் அட்வைஸ் பிளீஸ்'' - பவ்யமாக கேட்டான் செல்.

''டிரேடிங்கை சிஸ்டமேட்டிக்காய் அணுகு! ஒண்ணுமே தெரியாம டிரேடிங்கில் இறங்கி நாலு காசு பாத்துட்டா உடனே எக்ஸைட் ஆகி இன்னும் தீவிரமா போனியோ, செம அடி வாங்க வேண்டியிருக்கும். பொசிஷன் எடுத்த பின்னால நீ எதிர்பார்த்ததுக்கு எதிரா விலை பெரிசா மாறி, உனக்கு வேர்த்து ஒழுகிச்சுன்னா, நீ அளவுக்கு மீறி பொசிஷன் வச்சுருக்கே அல்லது உனக்கு ஒண்ணுமே தெரியாம வியாபாரத்தைப் பண்ணிகிட்டிருக்கேன்னு அர்த்தம். ஏசி ரூம்ல வியர்க்கிற வியர்வை போதாதா உன்கிட்ட சரக்கில்லைன்னு ஃப்ரூப் பண்ண!'' என்று சாமி முடிக்கவும் சாமியின் பங்களா கேட் திறக்கவும் சரியாக இருந்தது.

''பசங்களா, நான் டயர்டாய் இருக்கேன். இரண்டு நாள்ல சிங்கப்பூருக்குப் பறந்துடுவேன். எதுக்கும் என் செல்போன் நம்பரை எழுதிக்க'' என்று சொல்லி நம்பரை தந்தார். அந்த நம்பர் டாப் சீக்ரட் என்பதால் அதை மட்டும் சொல்ல முடியாது!