Published:Updated:

ஷேர்லக்: தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

ஷேர்லக்: தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

நேரம் கடந்துவிட்டது. ஷேர்லக்கிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. போன் செய்தாலும் கிடைக்கவில்லை. நாம் டென்ஷனாக அவர் வருகையையே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சரியாக ஆறு மணிக்கு அவரிடமிருந்து போன் வந்தது. “அவசர வேலையாக மும்பை வந்துவிட் டேன். இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு மீட்டிங் இருக்கிறது. அதற்குள் உமக்குச் சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லிவிடுகிறேனே’’ என்றார் கெஞ்சலாக.  நாமும் ஓகே சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.   

ஷேர்லக்: தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

“வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாத ரிசர்வ் வங்கி, நாட்டின் வளர்ச்சிக் குறையும் எனக் கணித்துள்ளதே?

‘‘ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் நடந்தது. நாட்டின் பொருளாதாரச் சூழல் மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. 2017- ம் ஆண்டின் இரண்டாவது  காலாண்டில், பணவீக்கமானது தற்போது இருப்பதைவிட கொஞ்சம் அதிகரித்து 4.2 - 4.6 சதவிகிதமாக இருக்கும். பொருளாதார வளர்ச்சியானது முன்பு  கணிக்கப்பட்ட 7.3 சதவிதத்தைவிட 6.7 சதவிகிதமாகக் குறையும் என்று சொல்லி யிருக்கிறது ரிசர்வ் வங்கி. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதையே ரிசர்வ் வங்கியும் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது.’’
 
‘‘பெரும்பாலான பங்குகள் 52 வார அதிகபட்ச விலையிலிருந்து இறக்கம் கண்டுள்ளன. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?’’

‘‘சந்தை கடந்த சில வாரங்களாக இறக்கத்தின் போக்கிலேயே வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கிறது. இதனால் பெரும்பாலான பங்குகள் தங்களின் 52 வார அதிகபட்ச விலையிலிருந்து 20% இறங்கி யுள்ளன. இந்த நிலையில் அனலிஸ்ட்டுகள் சொல்வது என்னவென்றால், சந்தைக் குறியீடுகள் ஏற்ற இறக்கத்தையும் அதன் தாக்கத்தையும் தங்களுக்குள் மறைத்துக்கொண்டு, பெரிய இறக்கத்துக்குள்ளாகாமல் தக்கவைத்துக் கொள்ளவே முயற்சி செய்கின்றன. ஆனாலும், ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளை இப்போதைக்குத் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். லார்ஜ்கேப் நிறுவனங்களின் செயல்பாடுகளால் தான் தற்போது சந்தை ஓரளவுக்கு  தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் மற்றும் ஐ.டி.சி போன்றவற்றைச் சொல்லலாம்.”

“இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.21 லட்சம் கோடியை நெருங்குகிறதே?”

“மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப் பட்டுள்ள முதலீடு ரூ.21 லட்சம் கோடி மதிப்பை நெருங்கியுள்ளது. இந்த வருடத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம், முதலீட்டாளர் களிடையே சந்தையின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற வங்கி, அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள் , ரியல் எஸ்டேட் போன்றவையெல்லாம் கவர்ச்சி இழந்ததால், மியூச்சுவல் ஃபண்டுதான் ஒரே வழியாக மாறியது. ஃபண்ட் நிறுவனங்களும் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தி நாடு முழுவதும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்கின்றன. இதனால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் அதிகரித்தது. எஸ்.ஐ.பி கணக்குகள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டுமே எஸ்.ஐ.பி மூலம் ரூ.23,750 கோடி முதலீடு குவிந்தது. செப்டம்பர் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டின் மொத்தச் சொத்து மதிப்பு 7.56% உயர்ந்து, ரூ.20.95  லட்சம் கோடியாக உள்ளது.” 

“எஸ்.பி.ஐ லைஃப் பங்கின் முதல் நாள் வர்த்தகம் எப்படி?”

“எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சமீபத்தில், பொதுப் பங்கு விற்பனை வெளியிட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஐ.பி.ஓ வெளியீட்டு விலை ரூ.700-லிருந்து 5% உயர்த்தப்பட்டு, ரூ.735-க்குப் பட்டியலானது. அன்றைய வர்த்தகத்தில் ரூ.738 வரை உயர்ந்த இந்தப் பங்கு, பின்னர் இறக்கம் கண்டு ரூ.708-ல் வர்த்தகம் நிறைவுற்றது. ஐ.பி.ஓ வெளியீட்டு விலையைக் காட்டிலும் 1 சதவிகிதமே ஏற்றம் கண்டது.”

“அரசுத் துறை சார்பில் மெகா ஐ.பி.ஓ வருகிறதே?”

“அரசுத் துறை நிறுவனமான ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ரீ (GIC Re), வரும் அக்டோபர் 11-ம் தேதி பொதுப் பங்கு விற்பனை வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ.11,372 கோடி நிதி திரட்டவுள்ளது. கோல் இந்தியா, ரிலையன்ஸ் பவர் ஆகிய நிறுவனங்களின் ஐ.பி.ஓ-வுக்குப் பிறகு வெளியிடப்படும் மூன்றாவது பெரிய ஐ.பி.ஓ இதுதான். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.855-912 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பங்கு விற்பனை, அக்டோபர் 13 வரை நடக்கிறது. இதன் ஊழியர்களுக்கும், சிறு முதலீட்டாளர்களுக்கும் ரூ.45 தள்ளுபடி விலையில் பங்குகளை ஒதுக்குவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன், தனது தொழிலை விரிவுபடுத்த பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. 2016-17-ம் நிதியாண்டில் மட்டுமே 82 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது.”

“பி/இ விகிதம் குறைவாக உள்ள பங்குகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறதே, ஏன்?”

“இந்தியப் பங்குச் சந்தை, கடந்த மாதங்களில் அடைந்த உச்சங்களால் பல பங்குகளின் மதிப்பு பிரீமியத்துக்கு உயர்ந்தது. ஆனால், அந்த மதிப்புக்கு நிகரான வருமான வளர்ச்சியை நிறுவனங்கள் அடையவில்லை. அதனால் பி/இ விகிதம் குறைவாக உள்ள நிறுவனப் பங்குகள் பக்கம் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி யுள்ளது. ஏனெனில் பி/இ விகிதம் குறைவாக உள்ள நிறுவனங்கள் நிலையான வருமான வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. மேலும், பிஎஸ்இ 100 குறியீட்டில் உள்ள பி/இ விகிதம் குறைவாக உள்ள நிறுவனப் பங்குகள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. பி/இ விகிதம் குறைவாக உள்ள நிறுவனப் பங்குகள், கிட்டத்தட்ட 9 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், இந்தக் காலத்தில் பி/இ விகிதம் அதிகமுள்ள  நிறுவனப் பங்குகள் அவ்வளவாக  முதலீட்டாளர் களின் கவனத்தை ஈர்க்கவில்லை. வெறும் 2 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கின்றன. தற்போது துறைவாரியாகப் பார்க்கும்போது, எனர்ஜி, ஐ.டி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் மெட்டல் நிறுவனப் பங்குகள் முறையே 14.39, 15.54, 12.32 மற்றும் 17.03 என்ற சராசரி பி/இ விகிதங்களுடன்  செயலாற்றி வருகின்றன. இதன் காரணமாகவே, முதலீட்டாளர்கள் பி/இ விகிதம் குறைவாக உள்ள பங்குகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.” 

“தரக்குறியீட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் ரேட்டிங்கை அதிகப்படுத்தியுள்ளதே?’’ 


“க்ரைசில் நிறுவனம், 817 நிறுவனங்களுக்கு பாசிட்டிவான ரேட்டிங்கும்  434 நிறுவனங்களுக்கு நெகட்டிவ் ரேட்டிங்கும் வழங்கியிருக்கிறது. இக்ரா நிறுவனம், 304 நிறுவனங்களுக்கு பாசிட்டிவான ரேட்டிங்கும் 261 நிறுவனங்களுக்கு நெகட்டிவ் ரேட்டிங்கும் வழங்கியிருக்கிறது. செலவினங்களைக் குறைத்து,  உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நிறுவனங்களுக்கு பாசிட்டிவ் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடன் அதிகரித்துள்ள நிறுவனங்களுக்கு ரேட்டிங் குறைக்கப்பட்டுள்ளது என இக்ரா விளக்கம் கொடுத்துள்ளது.” 

“வெளிநாட்டு நிறுவனங்கள், பங்குகளை விற்பது எப்போது நிற்கும்?”

“வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர்.  ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை   ரூ.24 ஆயிரம் கோடி முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர். ஆகஸ்ட்டிலிருந்து இதுவரை  சென்செக்ஸ் 2.6% இறக்கம் கண்டுள்ளது. நிறுவனங் களின் வருமான வளர்ச்சியானது மீண்டும் ஏற்றமடையும் வரை, வெளிநாட்டு முதலீட்டாளர் கள் பங்குகளை விற்பது தொடரலாம் என்கிறது, சி.எல்.எஸ்.ஏ நிறுவனம். இதனால் இந்தியப் பங்குச் சந்தைகள் இந்த வருட இறுதி வரைக்கும் சற்று மந்தமான நிலையிலேயே இருக்கும். செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டுகளில், நிறுவனங்களின் நிதிநிலை எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த சில மாதங்களுக்குச் சந்தை இருக்கும்” என்றவர்,  ‘‘மீட்டிங் போகிறேன்’’ என்று சொல்லி, போனை கட் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism