நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

ஷேர்லக்: 2018 இறுதிக்குள் சென்செக்ஸ் 35700

ஷேர்லக்: 2018 இறுதிக்குள் சென்செக்ஸ் 35700
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: 2018 இறுதிக்குள் சென்செக்ஸ் 35700

ஓவியம்: அரஸ்

ரவில் மழை வந்துவிட்டால் சிரமமாகி விடும் என நினைத்தாரோ என்னவோ மாலை 5 மணிக்கே நம்முன் ஆஜராகிவிட்டார் ஷேர்லக். “20 நிமிடங்களுக்குள் பேசி முடிப்போம்” என அவசரப்படுத்தவே நாம் நேரடியாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். 

ஷேர்லக்: 2018 இறுதிக்குள் சென்செக்ஸ் 35700

“இந்திய ஜி.டி.பி  வளர்ச்சி 2019-ல் 8 சதவிகிதமாக இருக்கும் என்கிறதே கோல்டுமேன்?”

“அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இனி சிறப்பாக இருக்கும் என்றும், 2019-ல் இந்திய ஜி.டி.பி வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் செய்யப் பட்டுள்ள சீர்திருத்தங்களான ஜி.எஸ்.டி அமல், திவால் சட்டம், பினாமி சட்டம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ரெரா சட்டம் போன்ற வற்றின் பலன்களும், டிஜிட்டலைசேஷன் போன்ற வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வங்கிகளுக்கு ரீகேபிட்டலைஸ் செய்யும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் பலன்களும் இனிவரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சியில் எதிரொலிக்கும் என்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிமீது சர்வதேச அரங்கில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 2018-2019-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எட்டு சதவிகிதமாக இருக்கும் என்று கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.

ஆனால், வேளாண் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நிலத்தடி மற்றும் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவதாலும், பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுவதாலும் உணவுப் பொருள்களின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. அப்படி உற்பத்தி குறைந்தால் அவற்றின் விலை உயர ஆரம்பிக்கும். எனவே, நுகர்வோர் பணவீக்கம் தற்போதிருக்கும் 3.4 சதவிகிதத்திலிருந்து 2019-ல் 5.3 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளது. மேலும், பெரும்பாலான கமாடிட்டிகளின் விலையும் உயரலாம். முக்கியமாக ஆயில், நிலக்கரி போன்றவற்றின் விலையும் உயரலாம் என்கிறது. பணவீக்கம் உயர்ந்தால் அது ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம்தான். ரெப்போ விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அப்படி உயர்த்தினால் அது சற்று வங்கிகளுக்குப் பாதகமாக மாறலாம்.”

“ஏற்றத்தில் இருக்கும் தேநீர் உற்பத்தி நிறுவனப் பங்குகள் குறித்து அனலிஸ்ட்டுகள் எச்சரிக்கை செய்வது ஏன்?”

“தேநீர் உற்பத்தி நிறுவனப் பங்குகளில் டெக்னிக்கல் விவரங்களும் ஃபண்டமென்டல் விவரங்களும் முரண்பாடாக இருப்பதுதான் அதற்குக் காரணம். கடந்த சில வர்த்தக நாள்களில் தேநீர் உற்பத்தி நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டிருக்கின்றன. வாரன் டீ, குட்ரிக்கி குரூப் மற்றும் அஸ்ஸாம் கம்பெனி நிறுவனப் பங்குகள் போன்றவை 25 சதவிகிதம் ஏற்றம் கண்டன. ஹாரிசன்ஸ் மலையாளம், ஜெய்ஸ்ரீ டீ போன்றவை 22 சதவிகிதம் ஏற்றம் கண்டன. காரணம் அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் உற்பத்தி குறைந்ததால் தேநீர் விலை உயர்ந்திருக்கிறது. இதனால், அதன் நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருக்கின்றன. மேலும், அவற்றின் பங்கு விலை 10 சதவிகிதம் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் டெக்னிக்கல் சார்ட்டில் தெரிகின்றன. ஆனால், நீண்டகால அடிப்படையில் தேநீர் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் ஃபண்ட்மென்டல் காரணிகள் அவற்றின் பங்கு விலைக்கேற்ப சிறப்பாக இருக்காது என்பதுதான் அனாலிஸ்ட்டுகளின் எச்சரிக்கையாக இருக்கிறது. எனவே, தேநீர் நிறுவனப் பங்குகளில் கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.”

“அல்காரிதம் டிரேடிங்கின் விதிமுறைகளை சிறு முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்க செபி திட்டமிட்டிருக்கிறதே?”  

“அல்காரிதம் டிரேடிங் என்பது கணினி மயப்படுத்தப்பட்ட ஆட்டோமேட்டட் டிரேடிங் சிஸ்டம் ஆகும். நிறுவன முதலீட்டாளர்களைப் போலவே தனிநபர் முதலீட்டாளர்களுக்கும் அல்காரிதம் டிரேடிங்கின் பலன் கிடைக்க வேண்டும் என்று செபி முடிவு செய்துள்ளது. ஆனால், முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, அல்காரிதம் டிரேடிங்கில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களுக்கு  விதிமுறைகளை வகுக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த முறை, டிரேடிங் உத்திகளில் சிறு முதலீட்டாளர்கள் நலன் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுக்க இருக்கிறது. ஏனெனில், இந்த முறை டிரேடிங்கில் முடிவுகள் நொடிகளில் எடுத்துச் செயல்படுத்த வேண்டியிருக்கும். எனவே, இந்த அல்காரிதம் டிரேடிங்கில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விதிமுறைகளை வகுத்து வெளியிட இருக்கிறது.”

“2018 இறுதிக்குள் சென்செக்ஸ்     35700-ஐ  தொட்டுவிடுமாமே?”

“மார்கன் ஸ்டான்லி என்ற ஆய்வு நிறுவனம், அடுத்த டிசம்பர் 2018-க்குள் சென்செக்ஸ் 35700 புள்ளிகளை எட்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த புதன்கிழமை, சந்தை அடைந்த உச்சநிலையான 33602.76 நிலையிலிருந்து 6 சதவிகித வளர்ச்சியாகும். இந்த இலக்கை சென்செக்ஸ் அடைவதற்கான அனைத்துச் சாத்தியங்களும் நன்றாகவே உள்ளன. நிறுவனங்களில் நிதி நிலைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், அரசு எடுத்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் இந்திய உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளும், உள்நாட்டு முதலீடுகளும் சந்தையில் குவிந்தபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இதுவரை அழுத்தத்தில் இருந்துவந்த வங்கித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பார்மா துறை அனைத்திலும் முன்னேற்றம் காணப்படுகிறது. அவற்றின் குறியீடுகளிலும் ஏற்றத்தைப் பார்க்க முடிகிறது.

மேலும் நுகர்வும் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்பதால் தொழில்துறையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இதனால் மார்கன் ஸ்டான்லி கணித்துள்ள இலக்கு நம்முடைய சந்தையால் அடையக்கூடிய இலக்குதான். இன்னும் சந்தைக்குச் சாதகமான விஷயங்கள் வருமானால் சந்தை டிசம்பர் 2018க்குள் 41500 என்ற நிலையைக்கூட அடைய வாய்ப்புள்ள தாகவும் மார்கன் ஸ்டான்லி கூறுகிறது. ஏனெனில், சென்செக்ஸ் இந்த ஒரு வருடத்தில் 26 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

2019-ல் தேர்தலும், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கையும் சந்தைக்குச் சாதகமாக இருந்தால் நிச்சயம் இந்த இலக்குகளை நம்முடைய சந்தை அடையலாம்.”

“சந்தை திடீர் இறக்கம் கண்டிருக்கிறதே?”

“ செப்டம்பர் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி குறைவாக இருக்கலாம் என்பதால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் கவனமாகவே இருந்தார்கள். தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாகக் குறைந்துவந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி), 2017-18-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மேம்பட்டுள்ளது. இந்தக் காலாண்டில் வளர்ச்சி 6.3% ஆக உள்ளது. இது பாசிட்டிவாக இருக்கும் அதேநேரத்தில், 2017-18-ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பில் 96 சதவிகிதத்தை அக்டோபர் மாத முடிவிலேயே தாண்டிவிட்டது என்பது நெகட்டிவாக இருக்கிறது. இன்னொரு நெகட்டிவ் செய்தி, முக்கிய எட்டுத் துறைகளின் வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 4.7% ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 7.1% ஆக இருந்தது. இந்த நெகட்டிவ் செய்திகளால் சென்செக்ஸ் வியாழக்கிழமை 453 புள்ளிகள், வெள்ளிக்கிழமை 316 புள்ளிகள் வீழ்ச்சிகண்டன. இந்த இறக்கத்தைப் பயன்படுத்தி நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கிச் சேர்ப்பது அவசியம்” என்றபடி நடையைக் கட்டினார் ஷேர்லக்.    

பாரத் 22 இ.டி.எஃப்: முதல் நாள் வர்த்தகம்

ஓ.
என்.ஜி.சி, ஐ.ஓ.சி, எஸ்.பி.ஐ, பி.பி.சி.எல், கோல் இந்தியா மற்றும் நால்கோ உள்ளிட்ட பல்வேறு ப்ளூசிப் நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட இந்த பாரத் 22 இடிஎஃப் ஃபண்ட், சமீபத்தில் பொது விற்பனைக்கு விடப்பட்டுக் கடந்த வாரம் சந்தையில் பட்டியலானது.  பட்டியலானதும் நிலையான வர்த்தகப் போக்கு இதில் காணப்பட்டது. மேலும், அன்றைய வர்த்தக முடிவில் இந்த இ.டி.எஃப் ஃபண்ட் அதன் வெளியீட்டு விலையை விட 3.8 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமாகியிருக்கிறது. இந்த ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தினால் செயல்படுத்தப்படுகிறது.