Published:Updated:

ஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை!

ஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை!

‘‘புத்தாண்டு வாழ்த்துகள்’’ - கணீர் குரலில் வாழ்த்துச் சொன்னபடி பூங்கொத்தை நம்மிடம் நீட்டினார் ஷேர்லக். அவருக்கு நன்றி சொல்லி விட்டு கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.   

ஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை!

2017 ஐபிஓ வருடமாகவே அமைந்தாலும், என்.எஸ்.இ ஐ.பி.ஓ சாத்தியமாகவில்லையே, ஏன்?

‘‘2017-ல் தேசியப் பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சுமார் 160 ஐ.பி.ஓ-க்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த ஐ.பி.ஓ-க்கள் மூலம் 1,200 கோடி டாலர் நிதி திரட்டப்பட்டிருக்கிறது. ஆனால், என்.எஸ்.இ., தனது ஐ.பி.ஓ கனவை இந்த வருடத்தில் நிறைவேற்ற முடியவில்லை. என்.எஸ்.இ., தனது ப்ளாட்ஃபார்மை சில பெரிய வர்த்தர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டு விசாரணையும் நடந்தது. இப்படிச் சில தடைகளால், என்.எஸ்.இ-யால் இந்த வருடத்தில் ஐ.பி.ஓ வெளியிட முடியாமல் போனது. 2018-ல் ஐ.பி.ஓ வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.’’

வரலாற்று உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை,  2018-லும் ஏற்றம் காணுமா? 

‘‘டிசம்பர் 27-ம் தேதி அன்று இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டன. அன்றைய வர்த்தகம் சரிவில்தான் தொடங்கியது, சீராக இறக்கத்திலேயே வர்த்தகமாகி வந்த சந்தைகள், வர்த்தகத்தின் கடைசி 30 நிமிடங்களில் சரசரவென்று ஏற்றமடைந்து சென்செக்ஸ் 130 புள்ளிகள் வரையும், நிஃப்டி 50 புள்ளிகள் வரையிலும் ஏற்றம் கண்டன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் ஏற்றத்துடன் 34010 புள்ளியிலும், நிஃப்டி 38.50 புள்ளிகள் ஏற்றத்துடன் 10531 புள்ளியிலும் வர்த்தகமாகி முடிந்தன. வர்த்தக இறுதியில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றத்தில் இருந்தன.’’

இந்த ஆண்டின் கடைசி எஃப் அண்ட் ஓ எக்ஸ்ஃபைரியில் என்ன விசேஷம்?

‘‘ஒட்டுமொத்த சந்தையின் எஃப் அண்ட் ஓ ரோலோவர் விகிதம், கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக 80 சதவிகிதமாக இருந்தது,  இப்போது 83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஓப்பன் இன்ட்ரஸ்ட், டிசம்பரில் 1.36 லட்சமாக இருந்தது. ஜனவரி சீரிஸுக்கு 1.47 லட்சமாக அதிகரித்துள்ளது. நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் ரோலோவர் 73 சதவிகிதமாக  (கடந்த 3 மாத சராசரி 69%) அதிகரித்துள்ளது. மேலும், நிஃப்டி கால் மற்றும் புட் ஆப்ஷன்களை வைத்துப் பார்க்கும்போது, ஜனவரியில் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்’’.

ஆர்.காம் நிறுவனப் பங்கு விலை குறுகிய காலத்தில் 160% உயர்ந்திருக்கிறதே?

‘‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடன் சுமையினாலும் பிசினஸ் வளர்ச்சியில்லாத தாலும் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.  வாங்கிய கடனை அடைக்கும் கட்டாயத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஒரு வார வர்த்தகத்தில் 160% உயர்ந்து, பங்குச் சந்தை செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு காரணம், அடுத்த மூன்று மாதங்களில் ரூ.39,000 கோடி கடனை திருப்பி செலுத்த திட்டமிட்டிருப்பதாக ஆர்.காம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்ததுதான்.

வரும் மார்ச் மாதத்துக்குள் கடனை முழுமை யாக அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடனுக்காகப் பங்குகளை மாற்றும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். மேலும், கடனை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் (எஸ்டிஆர்) இருந்தும் வெளியேறுவதாகத் தெரிவித்தார்.

ஆர். காம் அதன் ஸ்பெக்ட்ரம், டவர் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகள் ஆகியவற்றை விற்பதன் மூலம் ரூ.25,000 கோடி திரட்ட இருக்கிறது. தற்போது ரூ.45,000 கோடி கடன் இருக்கிறது. கடனை அடைத்தபின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் புதிய நிறுவனமாக மாறும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

ஆர்.காம் நிறுவனத்துக்கு இவையெல்லாம பாசிட்டிவ் செய்திகளாக அமைந்ததால், அந்தப் பங்கு திடீரென்று உயர ஆரம்பித்தது. அன்றைய ஒரே நாளில் மட்டும் 40 சதவிகிதத்துக்கும் மேல் ஏற்றம் கண்டது. கடந்த ஒரு வாரத்தில் 12 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் விலை, தற்போது ரூ. 36ஐத் தாண்டியிருக்கிறது.’’

2017-யைவிட 2018 சிறப்பாக இருக்கும் என்கிறதே கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம்?


‘‘2017-ல் எவ்வளவோ தடைகள் இருந்தும் சந்தை நன்றாகவே செயல்பட்டு, அடுத்தடுத்து புதிய உச்சங்களை அடைந்தது. ஆனால், 2017 - ஐக் காட்டிலும் 2018 மிகச் சிறப்பாக இருக்கும் என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் கூறியிருக்கிறது. காரணம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கம் குறைந்து, பாசிட்டிவான வளர்ச்சி ஆரம்பித்திருக்கிறது என்பதுதான்.மேலும், கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமான விஷயங்கள் சாதகமாக இருக்கின்றன. நிறுவனங்களின் வருமான வளர்ச்சியிலும் முன்னேற்றம் தெரிகிறது. உள்நாட்டு முதலீடுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2018-ல் சந்தை இன்னும் சிறப்பாகச் செயலாற்றும் என்கிறது.  அதன் கணிப்புப்படி நிஃப்டி 2018-ல் 11 சதவிகித வளர்ச்சியடையும் என்று சொல்கிறது.

துறைகள் வாரியாகப் பார்க்கும்போது பேங்கிங், இன்ஷூரன்ஸ், ஹவுசிங் ஃபைனான்ஸ், வாகன உதிரிப் பாகங்கள், கட்டுமானம், பிராண்டட்  ஆடைகள், பார்மா மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகள் காளையின் போக்கில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, பணவீக்க உயர்வு, அரசு முதலீடுகளில் தொய்வு மற்றும் ஏமாற்ற மளிக்கும் நிறுவன வருமான வளர்ச்சி ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை’’. 
 
2018-ல் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

‘‘ மூன்றாம் காலாண்டு முடிவுகள், பட்ஜெட் தாக்கல் வரும் ஆண்டின் தொடக்கத்தில் வரவிருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பில் சந்தை ஏற்றமடைய வாய்ப்புள்ளது.  2018-ல் எட்டு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க விருக்கின்றன. 2019 பொதுத் தேர்தல் வரும் வரையிலும் இந்தத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகள் இருப்பதைப் பொறுத்து சந்தை நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், மேக்ரோ அளவில் ரிஸ்க் அதிகமாகும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பிருக்கிறது. அந்தச் சமயங்களில் சந்தை இறக்கத்தைச் சந்திக்க நேரலாம்.

மேக்ரோ அளவிலான காரணிகள் அவ்வப் போது சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சந்தையின் போக்கைத் தீர்மானிப்பவையாக நிறுவனப் பங்குகளே உள்ளன.  சீனாவில் நிதித் துறையின் நிலை தற்போது நெருக்கடியில் இருக்கிறது. இதனால் பெரிய அளவில் ஏதேனும் பிரச்னை வந்தால் இந்தியச் சந்தைகள் இறங்கலாம்’’  என்றவர், புறப்படும்முன் தந்த துண்டுச் சீட்டில் இருந்தது. நீண்ட கால முதலீட்டுக்கு...

ஏசியன் பெயின்ட்ஸ், டிஸ் டிவி இந்தியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism