Published:Updated:

கோல்டு இ.டி.எஃப் முதலீட்டை லாபகரமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?!

கோல்டு இடிஎஃப் முதலீட்டு லாபகரமாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

கோல்டு  இ.டி.எஃப் முதலீட்டை லாபகரமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?!
கோல்டு இ.டி.எஃப் முதலீட்டை லாபகரமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?!

தங்க நகை வாங்குவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், அதுவே முதலீட்டு நோக்கத்திலான காகித தங்கம் என்கிற கோல்டு இடிஎஃப்களில் அண்மைக் காலத்தில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். கூடவே, போட்ட முதலீட்டையும் வெளியே எடுத்து வருகிறார்கள். இந்தியாவில் 14 கோல்டு இ.டிஎஃப்கள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.45 கோடி  கோல்டு  ஃபண்ட்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு 2018-19 ம் நிதி ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் கோல்டு இ.டிஎஃப்களிலிருந்து 7.5% தொகை வெளியே எடுக்கப்பட்டு ஆக மாத இறுதியில் நிர்வகிக்கப்படும் தொகை ரூ. 4450 கோடியாகக் குறைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம், இந்தக் கால கட்டத்தில் தங்கம் விலை உயரவில்லை. தங்கத்தின் விலை இன்னும் குறையக் கூடும் என்கிற பயத்தில் பல முதலீட்டாளர்கள் அதிலிருந்து பணத்தை எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் கோல்டு இடிஎஃப் ஃபண்ட்களில் ரூ. 45 கோடி வெளியேறி உள்ள நிலையில், ஈக்விட்டி ஃபண்ட்கள் மற்றும் இஎல்எஸ்எஸ் ஃபண்ட்களில் ரூ.7,700 கோடி முதலீடு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, முதலீட்டு ஆலோசகர் வ. நாகப்பனிடம் பேசினோம். ‛‛முதலீட்டாளர்களிடையே  இந்த மாற்றம் மிகவும் தாமதமாக தற்போது  வந்துள்ளது. முன்பே வந்திருக்க வேண்டும். ஒரு திட்டம் அல்லது ஃபண்ட் சிறப்பாக செயல்படும்போது, அதில் அதிகமாக முதலீடு மேற்கொள்கின்றனர். அதன் வருமானம் சற்று சுணக்கம் அடையும்போது, முதலீடுகளை திரும்ப எடுக்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளாகத் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது,  விலையில் நிலைத்தன்மை காணப்படுகிறது. 

மேலும், பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு அதிக முதலீடு வர ஆரம்பித்துள்ளது. இது பொதுவான அணுகுமுறையாக இருக்கிறது. இந்த பொதுவான அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு முதலீடு செய்பவர்களே, ஓரளவிற்கு பணம் ஈட்டுகிறார்கள். தங்கம் மற்றும் பங்குகளில் விலை எப்போது ஏறும், எப்போது இறங்கும் என்று யாராலும் சரியாக இயலாது. எனவே, நாம் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது.

முதலீட்டுக்கு என்று தனியாக திட்டமிட வேண்டும். முதலீட்டு தொகையை பிரித்து  கோல்டு  சார்ந்த ஃபண்டில் கொஞ்சம், பங்குச் சார்ந்த ஃஃபண்டில் கொஞ்சம் என்று முதலீடு  செய்ய வேண்டும். அப்போதுதான்,  தங்கம் இறங்கியிருக்கும் போது, பங்குகள் விலை எவ்வளவு ஏறியிருக்கிறது என்று பார்த்து பங்குகளை விற்று தங்கத்தில் முதலீடு செய்யலாம். இல்லையென்றால் இறங்கியுள்ளதை விற்பதால்  நஷ்டம்தான் ஏற்படும்.  பங்குகளின் விலை ஏறாமல் இருந்து அதை  விற்றால், அதில் இருந்து கிடைக்க கூடிய வருவாயும் பாதிக்கப்படும்.  இது சரியான அணுகுமுறையாக இருக்காது.

முதலீடு தொடர்பான விஷயங்களில்  மக்களின் மனநிலை  மாற வேண்டும். ஒவ்வொரு முதலீட்டு திட்டத்திற்கும் தனித்தனியாக ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும். அப்படிப்  பிரித்து முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு திட்டத்தில் இருந்தும் கிடைக்கும் நன்மைகளைப்  பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம், ஒரு சொத்தின் விலை ஏறும் போது, அதை விற்று இறங்கியுள்ளதை வாங்கலாம். பின்னர், இறங்கியுள்ள சொத்து மதிப்பு ஏறும் போது அதை விற்று வேறு ஒரு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதுதான் சிறந்த முதலீட்டு அணுகுமுறையாக இருக்கும்’’ என்றார்.